பல்சான்றீரே

‌‌புத்தேரி தாணப்பனுக்கு வயது அறுபத்து நான்கு . நாகர்கோவிலில் பிரபல ஜவுளிக்கடையில் நாற்பது ஆண்டுகள் ஊழியம். பிடிவாதமான பிரம்மச்சாரி. சொற்ப உறவினர்கள் இருந்தாலும் போக்குவரத்து கிடையாது. இரு வேளை உணவு மட்டுமே. அதிலும் ஒருவேளை சொந்த சமையல். அதாவது இரவு மட்டும். முதலாளியின் உறவினர் ஒருவர் அவரது வீட்டு மாடியில் ஒற்றை அறை கொடுத்திருந்தார், குளியலறை இணைப்புடன். சும்மாவெல்லாம் இல்லை. மாதா மாதம் சம்பளத்தில் பிடித்தம்

தாணப்பன் வேலைக்குப்போகும் அழகே தனி. குள்ளமான அவரது உருவத்திற்கு கச்சிதமான கதர் வேட்டி சட்டை. நெற்றியில் பட்டையான விபூதிப் பூச்சு. மிக மெதுவாகவே நடப்பார். பஸ் பிடித்து நாகர்கோவில் வரும் வரை யாருடனும் பேசுவதில்லை. வாயில் எச்சிலைக் கூட்டி வைத்துக் கொள்வார். பஸ்சை விட்டு இறங்கிய பிறகும் துப்புவதில்லை.

நேராக நடந்து கடையை அடைந்து அங்கே முதல் ஆளாக வந்திருக்கும் கேஷியர் பெருமாளுக்கு சைகையிலேயே வணக்கம் சொல்வார். பின்பு முப்பது பேர் வரை வேலை செய்வதால் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குடங்கள் உள்ள பகுதிக்கு செல்வார். மூடிகளைத்திறந்து வாயில் கூட்டி வைத்திருக்கும் எச்சிலை நான்கைந்து குடங்களில் துப்புவார். தான் துப்பாத ஒரு குடத்திலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவார். இருக்கைக்கு திரும்புவார். பணியாட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிப்பார்கள்.

கடையில் அவருடைய வேலை, கணக்கு விவரம் பார்ப்பது , இருப்பு மற்றும் விற்பனை மதிப்பு பதிவு செய்வது. பதினொரு மணிவாக்கில் முதலாளி வருவார். பவ்யமாக அவரருகே குனிந்து கொண்டு கடை நிலவரங்களை விவரிப்பார். இடையிடையே பணியாளர்கள் பற்றிய பிராதுகளையும் திணிப்பார். அதன் விளைவு இந்த நாற்பது வருடங்களாக வேலை. இழந்தவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களை தொடும்

இரவு வீடு திரும்ப எட்டு மணியாகிவிடும். தரையைப் பார்த்துக்கொண்டேதான் நடப்பார். தப்பித்தவறி ஏதாவது அடுப்புக்கரித்துண்டு கிடைத்துவிட்டால் கொண்டாட்டம்தான். ஆளரவமற்ற சந்துகளில் வீட்டுச் சுவர்களில் எதிர் சாதியினர் பற்றியோ மதம் பற்றியோ அந்தந்த வீட்டு பெண்களைப் பற்றியோ  அசிங்கமாக எழுதி வைப்பார். விடியும் போது சந்தோஷத்திற்கு உத்தரவாதம். எரிக்கப்பட்ட சைக்கிள் டயர் கம்பிகள் கிடைத்தாலோ இன்னும் உற்சாகம். அப்படியே மேலாக காற்றில் சுழற்றி மின் வயர்களில் வீசுவார். பொறிகள் பறக்க  அந்த பகுதி முழுவதும் இருளாகும். உடனடி மற்றும் இரட்டிப்பு சந்தோஷம்

மாடி அறை என்பதால் மெதுவாகவே ஏறுவார். அறையைத் திறந்ததும் முதல் வேலையாக குளிப்பார். தவறியும் ஏதாவது பல்லி கண்ணில் பட்டு விட்டால் குறித்து வைத்துக் கொள்வார். தலை துவட்டி சுவாமி படங்கள் முன் நின்று மெதுவாக சிவஞான போதம் முணுப்பார். பின்பு அடுப்பை மூட்டி சமையலை ஆரம்பிப்பார். பாத்திரத்தில் தண்ணீர் கொதித்து குமிழிகள் வந்து வெடிக்கும் போது மறக்காமல் ஒரு துணியின் உதவியோடு தூக்கிப்போய் குளியலறை சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லிக்கு அபிஷேகிப்பார். அது தரையில் விழுந்து அடங்கும் வரை பார்ப்பார்

சமையலை முடித்து சாப்பிட்ட பின் சிறிது நேரம் சன்னல் பக்கமாக நின்று தெருவிளக்கில் தெரியும் வீடுகளை பார்ப்பார். அப்படியே ஒரு நீண்ட குசு விட்டு அன்றைய நாளை முடித்து வைத்து படுப்பார்.

தெருவில் யாருடனும் பேசுவதில்லை. ஆனாலும் மரியாதை உண்டு. அரிதாகவே யாராவது கல்யாண பத்திரிக்கை வைப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டில் மலம் கழிக்காமல் திருமண மண்டபம் போய் விடுவார். அங்கே கழிப்பறை கோப்பையில் கழிக்காமல் கால் வைக்குமிடத்தில் கழித்து விட்டு தண்ணீர் ஊற்றாமல் வந்து விடுவார். அடுத்து அங்கு வரப்போகும் மனிதனை நினைத்து மூளையில் குளிர் பரவும்

செவ்வாய் கிழமை விடுமுறை என்பதால் திங்கள் மாலையே ஏதாவது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாங்கி வைத்துக் கொள்வார். நிதானமாக செவ்வாயன்று எங்காவது குளத்திலோ கிணற்றிலோ உடைத்து போடுவார். அன்று மாலையே அங்கே சென்று மீன்கள் தவளைகள் சமயத்தில் ஆடுகள் செத்து மிதக்கும் தரிசனம் அனுபவிப்பார்

உடல்நலம் சரியில்லாத நாள்களிலும் வீட்டில் சும்மா இருந்ததில்லை. தெருக்காரர்களுக்கோ பொதுவான முகவரிகளுக்கோ படு ஆபாசமாக ஒரு மொட்டைக்கடிதம் உறுதி. சமயத்தில் பள்ளிக்கூடங்களுக்கான வெடிகுண்டு மிரட்டல்களும் அடங்கும். இத்தனைக்கும் மேலே அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு கண்ணாடி பாட்டிலை நொறுக்கி துண்டுகளை வாழைப்பழத்தில் பக்குவமாக திணித்து மாடுகளின் முன்னால் போடுவதுதான். அவை வாய் கிழிந்து வயிறு உப்பி கதறிக்கொண்டு இரண்டு நாள் திரியும். பின்பு மாயும். அவரது தெருவில் போகும் ஊர்வலங்களின் மீது மாடியில் மறைவாக நின்று கொண்டு சிறுநீர் தெளிப்பதும் உண்டு.

தாணப்பனின் சமீபத்திய உற்சாகம் கனக லட்சுமியால் வந்தது. சுருக்கமாக கனகு. கடைக்கு புது வரவு. பதினேழு வயதிருக்கும்வந்த நாள் முதலே அவரை ஆட்கொண்டாள். தாணப்பனின் இத்தனை வருட அனுபவத்தில் எந்தப் பெண்ணும் அவரை ஈர்த்ததில்லை. பெண்களை ஒரு பொருட்டாக மதியாதவர்.கனகு வின் அப்பிராணியான நடவடிக்கைகள், சிறிய உதடு மற்றும் பெரிய கண்கள் அவருக்குள்ளே கலந்து விட்டன. அவளை தன்னுடைய தேவியாகவே பாவிக்க துவங்கினார். கடையில் அவளுக்கு மட்டும் தனி கரிசனம். மிருதுவாக நடந்து கொள்வார். ஆனால் யாருமே உணரா வண்ணம் கனிவுடன். அது அவருக்கான பிரத்யேகம். இத்தனை ஆண்டு கால வாழ்வில் ஒருவர் முன்பு கூட குற்றவாளியாக நின்றதில்லை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே  தன்னை நிறுவியிருந்தார். ஒவ்வொன்றிலும் விஷேச கவனம் மற்றும் திட்டமிடல். அதற்கு தேவையான நேரம் அவரிடமிருந்தது. கனகுவிற்கு கடையில் தாணப்பனின் அனுபவமும் செல்வாக்கும் தெரிந்தேயிருந்தது. தனக்கு கிடைத்த சலுகைகளால் சிறிய அளவில் பெருமை கூட அவளுக்கு உண்டு.

ஒரு தீபாவளி நேரம். கடையில் எல்லோருடைய பணி நேரமும் நீட்டிக்கப்பட்டது. அந்த இரவுப் பொழுதில் கனகுவும் தாணப்பனும் ஒரே நேரத்தில் பணி முடிந்து வெளியே வந்தார்கள். தனக்கு வருடாவருடம் முதலாளி தீபாவளிக்காக கொடுக்கும் இரண்டு  வேட்டி சட்டைகளை கனகுவின் அப்பாவிற்கு கொடுக்குமாறு அவளிடம் தந்தார்.அவளோடு பேசியபடியே மெதுவாக நடந்தார் தாணப்பன். சாலையை கடக்கும்போது மட்டும் அவள் கைகளை பிடித்துக்கொண்டார். அந்த ஒரு கணம் அவரது வாழ்வின் நிரந்தர புகைப்படம்

வீட்டுக்கு வந்த பின்பும் கைகளை முகர்ந்து கொண்டேயிருந்தார். மல்லிகையும் பெண்வாசமும் கொண்ட கலவையது. ஆடைகளை களைந்து குளியலறைக்குள் நுழைந்தார். உள்ளத்தில் கனகு கொதித்துக் கொண்டிருந்தாள். மைதுனம் செய்ய ஆரம்பித்தார். வழக்கத்தைவிட அபார எழுச்சி. அணுவாக அவளை சிந்தைக்குள் செதுக்கி தன்னை மறந்து தேவியோடு ஆலிங்கனம் புரிந்தார். மைதுனத்தின் உச்சமாக பதறிக்கொண்டே உச்சரித்தார். ....கூஊஊஊஊமறு நொடி கோடி சில்லுகளாக குளியலறை சுவற்றில் கனகு வடிந்தாள். 

நிதானமாக ஒரு குளியல்பின்பு சுவாமி படங்களின் முன் நின்று  சத்தமாக கோளறு பதிகம் உச்சரித்தார். பருப்பு சாதம் சமைத்து சாப்பிட்டு சன்னலருகே நின்று தெருவிளக்கில் வீடுகளை பார்த்தார். ஒரு மிக நீண்ட குசு விட்டு அந்த நாளை முடித்து வைத்து படுத்தார்.

ஒரு நாள் கனகு விடுப்பு எடுத்தாலும் துடித்துப் போவார். நாற்பத்தைந்து வயது வித்தியாசமெல்லாம் தாணப்பன் என்ற அதி மனிதனுக்கு பொருட்டில்லையே. சில பொழுதுகளில் கனகு விடம் இடைவெளி விடுவார். அவள் பதறி நெருங்கி வருவாள். அப்போதெல்லாம் இயல்புக்கு மீறி கொஞ்சலாக கோபிப்பார். 

இயற்கையின் கணக்கு இப்படியே இருப்பதில்லையே. ஒரு நாள் செய்தி வந்தது. கனகுவை யாரோ பெண் பார்த்துப் போயிருப்பதாக. உலைக்களமான மனதுடன் அவளது வீட்டுக்கே போய் அவரது இயல்பில் பேசி  பேச்சுவார்த்தை யை முறித்தார். விதியின்படி மீண்டும் ஒரு வரன் அமைந்தது.கனகு இம்முறை உற்சாகமாக இருந்தாள்.

ஒரு வாரம் ஓடியிருக்கும். கனகு தூக்கு மாட்டி இறந்து விட்டதாக யாரோ வந்து கடையில் சொன்னார்கள்.

 தாணப்பன் இந்த உலகில் இருப்பதாக நம்பவில்லை. தளர்ந்து அமர்ந்தார். எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார் தெரியவில்லை. சட்டையைக் கூட கழட்டாமல் அப்படியே படுத்தார். யாரோ நெஞ்சுக்குள் ஆட்டுரலைப் போட்டு வேகமாக ஆட்டுவதாகப்பட்டது. இனிமேல் கனகு இல்லை. சுகந்தமான கனவுகள் இல்லை. சவுந்தர்யமான உலகம் இல்லை. கனகு அவரின் தேவி மட்டுமல்ல. அவரை அவரது வயதை வாழ்வை லட்சியத்தை உலகின் மீதான பிடிப்பை மீட்டெடுத்தவள்.

இடுப்பில் ஏதோ வருடியது.எடுத்துப் பார்த்தார். குண்டூசிப் பொட்டலம். காலையில் கடையில் எடுத்து வைத்தது. கிழங்கில் புதைத்து பன்றிகளுக்கு போடுவதற்காக. மூலையில் விட்டெறிந்தார்.

நாய்களின் குறைப்பொலி தொலைவில் கேட்டது. உடல் சூடாகி யிருந்தார் . மூக்கை லேசாக உறிஞ்சினார். தலை வலித்துக்கொண்டிருந்தது. 

நினைவுகள் முழுமையாக ஆட்கொள்ள ஆரம்பித்தன.ஒரு கணம் அந்த பெரிய கண்கள் அவருக்கு மிக அருகே வந்து சிறிய உதடுகளால் நெஞ்சு மயிர் கற்றைகளில் முத்தமிடுவதாக உணர்ந்தார்.

கனகு” “கனகு” “கனகு” “கனகு

கண்கள் பொங்கி கசிந்தன. அறை எங்கும் கனகுவின் வாசம் நிறைந்திருந்தது. மிக உயரமான ராட்சச ஊஞ்சலில் கனகுவை உட்கார வைத்து ஆட்டிவிட்டார். பின்பு இருவரும் சேர்ந்து ஆடினார்கள். ஒரு சமயம் கனகு இவரின் மடியில் படுத்திருந்தாள். பின்பு இவர் கனகுவின் மடியில் படுத்திருந்தார். நீரோடைகளின் பக்க வாட்டில் புல் தரைகளில் கைகோர்த்து நடந்தார்கள். காலம் அப்போது முடிவின்றி இருந்தது. அறையில் ஒரு குழந்தை இப்போது விளையாடிக்கொண்டிருந்தது. கனகு வின் குழந்தையா? இல்லையில்லை. எங்கள் குழந்தை. குழந்தை தவழ்ந்து இவரருகே வந்தது. நரைத்த புருவங்களை தொட்டது. ஒரு வெட்டொளியில் மூவரும் ‌சிரித்தார்கள்

பல்சான்றீரே! பல்சான்றீரே!

கயல்முள்  அன்ன நரைமுதிர் திரைகவுள்

பயனில் மூப்பின், பல்சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திரல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ!

நல்லது ‌செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்

எல்லாரும் உவப்பது; அன்றியும்,

நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *