த்ரிப்ரஸாதம்

அந்தப் பனிமலையின் உச்சியில் அவர்கள் நான்கு பேர் நின்றிருந்தார்கள். அரக்கு வண்ண உடையணிந்து தலைகளை முழுக்க மழித்து மங்கோலிய முகங்களுடன் மிகச்சிறிய புன்னகை கலந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆம் துறவிகளேதான். நான் அவர்களை நெருங்கியதையோ என் உடல் அளவிற்கு மீறி குளிரில் நடுங்கியதையோ அவர்கள்  பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் சற்று நெருங்கியபோது அவர்கள் நின்றிருப்பது அந்த மலையின் விளிம்பு என உணர்ந்தேன். அந்தப்பக்கம் புவியை இரண்டாகப் பிளந்தது போன்ற முடிவற்ற பாதாளம். நான் அவர்கள் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

முதல் துறவி பேசினார்…

“ ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நம் முன்னோர் வரிசையின் புனிதமான வாழ்வும், வகுத்துக்கொண்ட நெறிகளும், சேகரமான அறிவும், தேடலும் இன்றோடு முடிவுக்கு வருகின்றன. அத்துனை குருமார்களுக்கும் நாம் பெருமை சேர்க்கப் போகிறோம். இனி துன்பம் என்பது இப்பிரபஞ்சத்தில் ஒரு சொல்லாகக்கூட எஞ்சப் போவது இல்லை. அனைத்து உயிர்களுக்குமான விடுதலையை நாம் தரப்போகிறோம்..கால வரிசையும் நிகழ்வுகளும் இனி எப்படி இருக்கப் போகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். நம்மில் ஒருவர் அதனைச் சாத்தியமாக்க மூல குருவின் அனைத்து அவதாரங்களையும் வணங்கிப் பணிகிறேன். இதோ நம்முன் மிதந்து கொண்டிருக்கும் முற்றுண்மையின் கனியை நம்மில் எவர் கைப்பற்றினாலும் அனைத்து உலகங்களின் இருப்பின் ஒற்றைச் சூத்திரத்தை நாம் சொந்தமாக்கிக் கொள்ளலாம்”.

“இந்தக்கனி நம் முன்னோர்களின் தேடல் விளைவாக நமக்கு முன் வந்திருக்கிறது. உலக நன்மைக்காக நம் உடலை அர்ப்ணிப்போம்..என் முயற்சி தோல்வியுற்றாலும் உங்களில் ஒருவர் அதனைச் செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது”

துறவி புன்னகைத்தவாறே எல்லோரையும் வணங்கிவிட்டு பாதாளம் நோக்கி பாய்ந்தார். எனக்கு நெஞ்சு படபடத்து ஓடிச் சென்று அவர் குதித்த இடத்தை எட்டிப் பார்த்தேன். துறவி ஒரு புள்ளியாக கீழ் நோக்கி போய்க் கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன், அவர் குறிப்பிட்ட முற்றுண்மையின் கனி     மலைவிளிம்பின் பக்கவாட்டில் சற்று தூரமாய் தள்ளி அந்தரத்தில் ஒரு பவளமாக மிதந்து கொண்டிருந்தது..

அனந்தபுரி விரைவு வண்டி ராஜகம்பீரமாக நின்றிருந்தது. நான் மூச்சிறைக்க நடைமேடையில் நடந்து கொண்டிருந்தேன்.என்னைத் தாண்டி நான்கைந்து இளைஞர்கள் வேகமாக சிரிப்புச் சத்தத்துடன் ஓடினார்கள்..காற்றில் மதுவாடை வீசியது. எனக்கான பெட்டியில் ஏறி இருக்கையில் உட்கார்ந்தேன். மூச்சு வாங்கிக்கொண்டேயிருந்தது. இப்போதெல்லாம் அதிகமும் மூச்சிரைக்கிறது. எதிரில் ஒருவர் சத்தமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

“யாம்ல உயிர எடுக்கீவோ, ருவாயத் தரலன்னா அவனுக்க அம்மகிட்டயோ பெண்டாட்டிகிட்டயோ வாங்குங்கல.கேக்கியாம் பாரு கேள்வி”

நான் சிறிது தண்ணீர் குடித்துக் கொண்டேன். முழங்காலில் இரண்டு நாட்களாக வலி. லேசாக தேய்த்துவிட்டுக் கொண்டேன். பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தை என்னைப் பார்ப்பதும் உணவை மெல்வதுமாக இருந்தது. நடைமேடையில் வியாபாரிகள் சத்தமாக ஒரே தொனியில் கத்தி விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். செல்போன் நபர் இன்னும் சத்தமாக போனில் ஊளையிட்டுக் கொண்டிருந்தார்..

“தங்கம் வெல மின்ன மாரியால, ராக்கெட்டு வேகத்தில போகு, இதுல கேரளா மாடல் கேக்குகான், பார்ட்டிய காணிச்சுட்டுதான் வாரேன் , புள்ளிக்காரன் வட்டன் , செறயாட்டு போச்சு”

நான் கைக்குட்டை எடுத்து கழுத்து முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து ஒரு மெலிதான இட்லி ஏப்பமிட்டேன்..பக்கவாட்டில் அந்தக் குழந்தை என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.

பனிமலையில் குளிர் இன்னும் கூடியிருந்தது. இப்போது இரண்டாவது துறவி பேசினார்..

“ நாம் சமவயதுடையவர்களாக இருந்தாலும் செயலைத் தொடங்கிவைத்தவர் என்ற வகையில் முதலாமவர் நமக்கு குருவும் ஆனவர். அவரை வணங்குகிறேன். இதோ இந்த முற்றுண்மையின் கனியை அடையும் பயணத்தில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறேன். கனியை அடைந்து விட்டால் இலக்கின் தரிசனத்தையும், அடையாவிட்டால் குருவின் பாதத்தையும் சென்று சேர்வேன்.  நன்மை உண்டாகட்டும்”  என்றவாறே பின்னோக்கி நடந்து புன்னகைத்தவாறே பள்ளத்தில் வீழ்ந்தார்..என்னுடைய சந்தேகமெல்லாம் இவர்கள் உண்மையிலேயே அந்தக் கனியை அடைய வந்திருக்கிறார்களா அல்லது தற்கொலை செய்ய வந்திருக்கிறார்களா என்பதுதான். மனம் கிடந்து அடிக்க ஆரம்பித்தது.

கம்பார்ட்மென்ட்டில் இப்போது கொஞ்சம் காற்று வீசியது. செல்போன் மனிதர் பேசுவதை முடித்துவிட்டு வேறு ஏதோ ஒன்றை திரையில் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். தம்பதிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தை என்னை நோக்கி கை நீட்டியது. அந்தப் பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே குழந்தையிடம் சொன்னாள்..

“ தாத்தாகிட்ட போணுமா செல்லம்”

நான் குழந்தையைப் பார்த்து சிரித்தேன். அது ஒருமுறை சிரித்து விட்டு பின் திரும்பிக் கொண்டது.

மீண்டும் கொஞ்சம் தண்ணீர் அருந்தி பேக்கைத் திறந்து எனக்கான பிரத்யேக குட்டிப் பையை எடுத்தேன். உள்ளே கை விட்டு கொஞ்சம் புகையிலை எடுத்து வாய்க்குள் அதக்கிக் கொண்டேன். துணையாக ஒரு வெற்றிலை சுண்ணாம்புத் தீற்றலுடன் மடித்து வாயில் போட்டேன். சற்றைக்கெல்லாம் புகையிலையின் சாறு கலைமானின் கொம்புகளாய் உடலெங்கும் பிரிந்து பரவி திண்மையாக்கியது. ஒரு மெலிந்த மயக்கமும் கிளர்ச்சியும் ஒருசேர உருவாகி லாகிரியின்பத்தை கூட்டியது. உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் மனதை லகுவாக்க ஹிந்தோளத்தில்  எனக்கு மட்டும் கேட்கும்படியாக முனகினேன்.                             ‘சாமஜ வரகமணா….’

மூன்றாவது துறவியின் முறை வந்தது.

“நண்பர்களே என் வாழ்நாளில் இதுபோன்றதொரு மகிழ்வை என் மனம் அனுபவித்ததில்லை. நிரம்ப உற்சாகமாயிருக்கிறது..நான் கற்றுக்கொண்டது குறைவாக இருப்பினும் இங்கு அடையப்போவது மிகுதி..நன்றி தெரிவிக்க மட்டும் இன்னுமொரு பிறவி தந்தால் நலம் பயக்கும். இவ்வாழ்வின் நாட்கள் அற்புதமாக அமைந்தன. நாம் நியதிப்படி மீண்டுமொருமுறை சந்திப்போம்”

என்றவாறு விளிம்பு நோக்கி நடக்கலானார். நான் அப்போதுதான் கவனித்தேன்.அவரது ஒரு கால் ஊனம் என்பதை. என்னையறியாமல் ‘வேண்டாம் ‘ என்று  கூவினேன். சத்தமாக சிரித்தபடி தன் முழு பலத்தையும் திரட்டி கனியை நோக்கி பாய்ந்தார்..தூரம் போதாமல் பாதாளத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார்.

வண்டி புறப்படுவதற்கான ஆயத்தங்களை நடைமேடையின் ஒலிபெருக்கி அறிவித்தது. மிகச் சரியாக அவள் வந்து சேர்ந்தாள். சந்தன நிறமும் நீலக் கண்களும், அளவான உடற்கட்டும், கூரிய நாசியும்,சிறிய உதடுகளும், ஒரு மாதிரி பச்சை வண்ணத்தில் சேலை அணிந்திருந்தாள். வரும்போதே புன்னகையுடன் வந்தவள் எங்களைப் பார்த்ததும் புன்னகையைப் பெரிதாக்கினாள். நான் திறந்த வாயை மூடவில்லை. லக்கேஜை சீட்டுக்கு அடியில் தள்ளியவள் சன்னல் வழியாக யாருக்கோ குனிந்து கையசைத்தாள். அந்த வனப்பின் பாதியைக் காணமுடிந்தது. உடல் முழுக்க வெண்ணெய் தேய்த்துவிட்டாற்போல ஒரு வழுவழுப்பு. மிகச் சிரத்தையுடன் எச்சில் விழுங்கினேன். ஒரு பார்வையில் இருக்கை எண்களை நோட்டமிட்டவள் என்னை நேருக்கு பார்த்து ‘உங்க சீட் நெம்பர் என்ன?’ என்றாள். நான் பதில் சொன்னேனா நினைவில்லை. அது என்ன ஒரு வாசனை…ஏதோ விஷேச வீட்டிற்கு போய்விட்டு அப்படியே வந்திருக்க வேண்டும்..ஐம்பது வயதிற்கு மேலிருக்கலாம். தெய்வங்களின் அநுக்ரகத்தால் என் பிராயவயதில் அவளைச் சந்திக்கவில்லை என எண்ணிக்கொண்டேன். மழலை கலந்த கீச்சொலியில் அந்தக் குழந்தையின் அம்மாவிடம் ஏதோ பேசினாள். பால் வெளிறிய அந்த முதுகு மட்டும் சற்று நேரம் முகம் உரசக் கிடைத்தால் போதும்..முக்தி உறுதி. என்னளவில் வில்லிபுத்தூர் ஆண்டாளாகட்டும், அழகான பெண்களாகட்டும் வயதாவதை ஜீரணிக்கவே முடியாது. நீளமான சுருள் கேசத்தில் மல்லிகை முடிந்திருந்தாள். நேர்த்தி என்பது அவள் இயல்பாக இருக்கக்கூடும். இந்த அறுபத்தெட்டாண்டு கால வாழ்வில் இம்மாதிரி நிறைய வசீகரங்களை கண்டிருக்கிறேன். கடந்துமிருக்கிறேன். ஆனால் இந்த அழகு வேறுபட்டதாய் உணர்கிறேன். நெஞ்சும் வயிறும் படபடத்தது. வண்டி புறப்பட்டது.

நான்காவது துறவியும் நானும் மட்டுமிருந்தோம். துறவி சிரித்தவாறே என்னருகில் நடந்துவந்தார். என்னவொரு கருணைமிகுந்த கண்கள்!. சீரான வெண்ணிறப் பல்வரிசை சிரிக்கும்போது மிகுதியும் ஈர்த்தது.

“இங்கு நடந்ததை எல்லாம் கண்டீர்கள்தானே?  ஆம் இந்த முற்றுண்மையின் கனி அந்தம் என்பதற்கே திறப்பாக இருக்கும். இப்போது என்னுடைய முறை வந்து விட்டது. எனக்கு நீங்கள் சாட்சியாக இருப்பீர்கள் அல்லது ஒருவேளை நான் அந்தக்கனியை அடைந்துவிட்டால் நாம் இந்தப் பரிமாணத்திலேயே தொடரலாம். என்னை விட வயதானவராக இருந்தாலும் இந்தக்கணம் என் துறவு வாழ்வில் நான் கற்ற எல்லா ஞானோபதேசங்களும் உங்களை வந்தடைய பிரார்த்திக்கிறேன்.”  தன் குளிர்ந்த கரங்களால் என் தலையைத் தொட்டார். எனக்குள் ஏதோ இறங்கியதை முழுவதுமாக உணர்ந்தேன்.

துறவி விரைவாக நடந்து கனியை நோக்கிப் பாய்ந்தார்..நான் அவர் பின்னால் ஓடிச் சென்று எட்டிப் பார்த்தேன். இளம் துறவி என்பதால் முழு வீச்சுடன் தாவியிருந்தார். அற்புதக் கனியின் பக்கம் வரை சென்றும் ஓரடி இடைவெளியில் அதனைத் தொடமுடியாமல் கைகளை நீட்டியவாறே பள்ளம் நோக்கிப் பயணமானார். நான் கண்ணீர்விட்டு அழுதேன்.

ரயில் வேகமெடுத்திருந்தது.அவள் இன்னும் அந்த குழந்தையின் தாயிடம் பேசிக்கொண்டிருந்தாள். நான் ஒரு உறைநிலையில் சகலமும் ஒடுங்கி அமர்ந்திருப்பதாகப்பட்டது. குழந்தையின் தாய் ஏதோ அரசு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்னாள்.இவள் அதிக ஆர்வம் கொண்டு அது சம்மந்தமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் கதைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு பெண்களின் அறிவும், பெண்களிடம் அறிவுப் பகிர்தலும் எப்போதும் எரிச்சலூட்டுபவை.. ஆனாலும் அந்த நாசி…வலது மூக்கில் மூக்குத்தி பதித்திருந்தாள். இதுவே வடக்கத்தி பெண்கள் இடது மூக்கில்..செழிப்பான ஆபரணங்கள் அணிந்திருந்தாள்.  குறிப்பாக நடுவிரலில் அவள் அணிந்திருந்த அந்த நீலமணிக்கல் மோதிரம் வேறு மூளையைப் பிசைந்து கொண்டிருந்தது.

நேரம் செல்லச்செல்ல  இடைவெளியில் ஒரு உலோக மூடியைத்திறந்து எதையோ முள் கரண்டியால் குத்தி சாப்பிட்டாள். அது என் இதயமாகப்பட்டது.. செல்போன் நபருக்கு மீண்டும் கால் வந்தது.

“ அவனுக்க உப்பு அவ்ளதாம்ல… டைம் சென்னாச்சு. காலயில விளிக்கேம்”

அவள் சாப்பிட்டு முடித்து ஒரு மாணிக்க வண்ணத்திலான தண்ணீர் பாட்டிலில் சிறு உதடுகள் பதிய நீரருந்தினாள். ஒரு புள்ளிமான் பருகுவது போலும் என்றிருந்தது. நான் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது திண்ணமாகத் தெரிந்தது..அவள் செல்போன் நபரிடம் பேசி மிடில் பர்த்திலிருந்து லோயர் பர்த்துக்கு மாற்றிக்கொண்டாள். வண்டி விரைவாகப் போய்க்கொண்டிருந்தது. இப்போது நானும் அவளும் அருகருகே. இந்த தேசத்தின் சட்டதிட்டங்களை மீறி அவளை பிழிந்துவிட வேண்டும் என்ற உடனடி விழைவு ஏனோ தோன்றியது.. அவள் செல்போனை இயக்கி ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள். பெட்டியில் விளக்குகளை அணைத்திருந்தார்கள். அந்த முகம் பெட்டியின் நீல வெளிச்சத்திலும், செல்போனின் வெள்ளொளியிலும், ரயிலின் ஓட்டத்திற்கேற்ப வெவ்வேறு வெளி வண்ணங்களிலும் ஜ்வலித்துக்கொண்டிருந்தது.நான் அவளை மட்டுமே நோக்கியிருந்தேன்.

நான் ஏன் இப்படி மாறிவிட்டேன் என்ற தத்துவார்த்தக் கேள்வியிலும், எதற்காக இந்தப் பயணம் செய்கிறேன் என்ற யதார்த்தக் கேள்வியிலும் யோசனையில் இருந்தபோது சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டது. கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு புகையிலை வஸ்துக்களையும் துப்பிவிட்டு இருக்கைக்குத் திரும்பியபோது அனைவரும் உறங்கியிருந்தனர்..என் நா வரள தண்ணீர்பாட்டிலைத் தேடியபோது  அவளின் அந்த மாணிக்க வண்ண பாட்டில் தலைமாட்டில் வேறு ஒரு நிறத்தில்  ரயிலின் ஓட்டத்தில் அசைந்து கொண்டிருந்தது. அவள் ஒரு அப்ஸரஸாக  துயில் கொண்டிருந்தாள்.

நான் கைகள் நடுங்க பாட்டிலின் மூடியை தொட்டேன். அவளின் உச்சந்தலையாகப் பட்டது..கழுத்தைத் தொட்டேன் , கடற்சங்கின் வாளிப்பை உணரந்தேன்..பாட்டிலின் நடுப்பகுதியைப் பிடித்து தூக்கும்போது என்னை முற்றிலுமாய் இழந்தேன். மூடியை திறக்கும்போதே அந்தச் சிறிய கொவ்வை இதழ்களின் வாசம் . இரண்டு மிடறுகள் குடித்தேன்…

“ திருப்பிரசாதம்”

“திருப்பிரசாதம்”

என் ஆன்மா சுத்திகரிக்கப்பட்டது. சிறிய உதடுகள் இப்போது என் வாய்க்குள் துழாவுகின்றன..என்ன சுவை..என்ன சுவை..இந்திரப்பெருஞ்சுவை..விப்ரநாராயணன் என்ற தொண்டரடிப் பொடியாழ்வானும் இச்சுவை பருகியிருந்தால் “அச்சுவை பெறினும் வேண்டேன்’  எனச் சொல்லியிருக்கமட்டான்..

அடி மனதில் நான் ஒரு கொம்புகள் பாவிய   கொழுத்த கலைமானாக மாறி  சிறு புற்களை மேய்ந்துகொண்டிருக்கும்  வெண்ணெய் மேவப்பட்ட தோலினையுடைய சிறு உதடுகள் கொண்ட அந்த புள்ளிமானின் பின்பகுதியில் என் முன்னங்கால்களைத்  தூக்கிப்போட்டு காலவரையற்ற புணர்ச்சியை  தொடர்ந்தேன்..

பனிமலைச் சிகரத்தில் இப்போது நான் மட்டுமே எஞ்சியிருந்தேன். கடந்த ஓராண்டு காலமாக என் வயது மூப்பு காரணமாக கடுமையான உடற்தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஒரு மலையேற்றக் குழுவோடு இங்கு வந்திருந்தேன். அவர்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விடிகாலையில் சிறுநீர் கழிக்கும் உந்துதல்  ஏற்பட்டு நான் இந்தப்பக்கமாக ஒதுங்கியிருந்தேன். அப்போதுதான் இந்த நால்வரையும் பார்க்க நேர்ந்தது. இங்கு வந்திருக்க வேண்டாமோ என்ற எண்ணம் உடனே தோன்றி மறைந்தது. அதுசரி ,இவர்களின் மொழி எனக்கு எப்படித் தெரிந்தது. பல கேள்விகளால் நிரப்பப்பட்டு ஒரு நிகழ்வுக்குள் திணிக்கப்பட்டவனானேன். ஏதோ வித்தியாசம் அந்த இடத்தில் ஏற்படுவதை உணர்ந்தேன்.ஒரு கரிய நாய் அமர்ந்து என்னை நோக்கிக்கொண்டிருந்தது. அந்த வெண்பனிப் பிரதேசத்தில் உரோமங்கள் அடர்ந்த அந்தக் கரிய நிறம் அதன் இருப்பை திண்மையாகப் பறை சாற்றியது. இதுதான் தர்மனின் பரலோக நாயா?

நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக விளிம்பிலிருந்து ஐம்பதடி தூரம் தள்ளி வந்தேன். என் எல்லா ஆடைகளையும் களைந்து முழு நிர்வாணமானேன். நாயைப்பார்த்து சிரித்தேன் , பனிக்காற்றில் அதன் உரோமங்கள்அலையாக அசைந்தன. கை கால்களை மீண்டும் மீண்டும் உதறிக் கொண்டேன். விளிம்பு நோக்கி ஓடினேன். விளிம்பை அடைந்தவுடன்  முற்றுண்மையின் கனி நோக்கி ஒரு துல்லியக் குறியுடன் அந்தரத்தில் பாய்ந்தேன்..நொடிக்கும் குறைவான நேரத்தில் அற்புதக்கனி என் கைகளில் சிக்கியது..சடுதியில் பலவித வண்ணக்கலவைகள் நிரம்பிய ஒளியில் இருபத்து நான்கு ஆரங்களுடன் கூடிய ஒரு சக்கரம் என்னைத் தாங்கிக்கொண்டது. நான் சக்கரத்தின் மையத்தில் இருந்தேன். ஒவ்வொரு ஆரத்திலும் முக்காலத்தின் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. சக்கரம் சுழலத்தொடங்கியது. அதோ என் தந்தையார் நடந்து செல்கிறார்..இதோ என் பிள்ளைகள் சிறு குழந்தைகளாக…அங்கே கல்லூரி மாணவனாக நான் யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். துறவிகள் நால்வரும் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. தொலைவில் ஒரு கரிய நாய்க்குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது..     நிகழ்வுகள் கோடானுகோடி ஜீவராசிகளுடனும் ஜடப்பொருள்களுடனும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. என்ன ஆச்சரியம்! என் பொலிவு ஏகமாய்க்கூடி என் தலை சுத்தமாய் மழிக்கப்பட்டு காதுகள் வளர்ந்து அரக்கு வண்ண ஆடையுடன் அமரந்திருந்தேன். முற்றுண்மையின் கனி கைகளில் குளிர்ந்திருந்தது. சுவைக்கத் தோன்றியது..ஒரு கடி கடித்து நாளையை உண்டேன்.

“த்ரிப்ரஸாதம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *