சமையல் கேஸ் இணைப்பு வாங்க அவர்கள் ‘ஆதார் முகவரியும் குடியிருப்பு வீட்டு முகவரியும் ஒன்றாக இருந்தால் புகைப்படம் ஒட்டி ஆதார் ஜெராக்ஸ் வைத்து பார்ம்மைக் கொடுங்கள். கனெக்சன் வருவருவதற்கு ஒரு மாதம் ஆகும்’ என்றார்கள்.
நான் தான் சாருக்கு ஆதார் முகவரி மாற்றினேன். இந்த நகரம் எனக்குப் பெரிதாக பரிச்சயப்பட்டதல்ல. பேருந்து நிலையத்தில் பேருந்து மாறும்போது உணவு சாப்பிட்டது உண்டு. இரயிலில் இறங்கி அதிகாலையில் ஆட்டோவில் பஸ் பிடித்திருக்கிறேன். இந்த ஊரில் குடியக்கார நண்பன் ஒருவன் இருக்கிறான். கல்லூரி குழுவில் போதையின் உச்சத்தில் ‘என் கல்லூரி வாழ்க்கையைச் சொல்லி என் தற்போதைய நிலையோடு ஒப்பிட்டு ஆடியோ போட்டு இருக்கிறான். நான் போன் செய்து
“ஏன்டா மாப்பிள்ளை.. ஏற்கனவே நிக்சன் மேட்டர்ல பசங்க உன் மேலக் கொலை வெறியில இருக்காங்க. இந்த ஆடியோவைக் கேட்டாங்க. வீட்டுக்கே கெளம்பி வந்துருவாங்கடா.”
“மாப்பிள்ளை போதையில ஏதோ போட்டுட்டேன். இதோ டெலிட் பண்ணிற்றேன்டா. வேணா நான் குழுவை விட்டு வெளியேறிவிடவாடா.”
“அதெல்லாம்… வேணாம். நான் பேசிக்கிறேன். ” என்றேன். இதுபோல் இரண்டு முறை நடந்து விட்டதால் அவன் உண்மையிலையேப் பயம்தான். அவன் குடிகாரனாக மாறியக் கதை கொடுமையானது. ஆனால் வினோதம் என்னவென்றால் அவன் மகன் திருமணத்திற்கு ஜாதகம் மகனின் புகைப்படம் எல்லாம் எனக்கு வந்து அதை நான் தெரிந்த பலருக்கு அனுப்பி இருக்கிறேன் என்பதுதான். அதில் ஒரு நண்பர் மூலமாக வந்தப் பெண் சென்னையில் ஆர்க்கிடெக் முடித்து வேலை பார்க்கிறது. ஆனால் இவன் குடும்பத்திற்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கவில்லை. கொஞ்சம் மாநிறமான பெண்தான். கலையாக சிரித்த முகமாக இருந்தது. பட்டுச்சேலைக் கட்டி புகைப்படம் எடுத்து இருந்ததால் அதை மெச்சூரிட்டியாக காட்டியது. ஆள் பாதி ஆடை பாதி என்பதை பலமுறை நினைப்பதுண்டு. இப்போதும் அதைத்தான் நினைத்தேன். அது சுடிதார் போட்டு புகைப்படம் எடுத்து இருந்தால் இவர்களுக்கு பிடித்திருக்குமோ என்னவோ. நான் ஏன் பிடிக்கவில்லை என்று நண்பர் கேட்டதற்கு தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். அந்தப் பெண்ணிற்காக நான் வருந்தினேன்.
இந்த நகரம் தமிழ்நாடு அறிந்த பிரபலமான ஒன்றுதான். இங்கு உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேருடனும் அந்நியோன்யப் பழக்கமுடையவர்கள் என் உறவினர்கள். அரசியல் ஏரியா நமக்கு ஒவ்வாது என்பதால் அது பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
நான் சாரிடம் இங்குள்ள வேலைகளைச் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லும்போது அதன் அத்தனை அசௌகரியங்களையும் நான் நன்கு அறிந்து இருந்தேன்.
அவர் ஊருக்கு கிளம்பும்போது ‘எத்தனை நாளைக்கு நான் ஒரிஜினல் இடப் பத்திரத்தை தூக்கிக்கொண்டு அலையுறது. ஆதார் முகவரியை மாற்றுங்கள்’ என்று அவரது ஊழியர்களிடம் குறைபட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நகரத்தில் நான் செய்ய ஆரம்பித்த முதல் வேலை இதுதான். கிளாசிக் கம்ப்யூட்டர் வின்சென்ட் ஆன் லைனில் அப்லோடு செய்யும் பார்மைக்கொடுத்து அந்த ஊரிலேயே அட்டெஸ்டேஷன் வாங்கச் சொன்னார்.அதற்கு நான் சாரின் பழைய ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க வேண்டியதாக இருந்தது. அப்போது தான் எனக்கு சோழன் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது.
அதன் உரிமையாளர் அமைதியாகவும் அழகாகவும் அதற்கு ஏற்றார் போல பொறுமையாவும் இருந்தார். அவர் வார்த்தைகளை அவசியமற்று செலவிட மறுத்தார். நான் பணத்தை செலவழிப்பது போல வார்த்தைகளையும் செலவழிப்பேன். என்னால் பக்கத்தில் இருக்கும் எவருடனும் பேசாமல் இருக்க முடியாது. அவரால் மௌனமாக இருப்பதைத் தவிர பேச முடியாது.
அவர் ஜெராக்ஸ் எடுக்கும்போதே சி எஸ் சி சென்டராக மாற்றினால் ஒரே இடத்தில் எல்லாமே செய்யலாமே என்றேன்.
அவர் சிரித்தபடியே அது வேண்டாம் சார் என்றார். பிறகு நகராட்சி வேலை, பட்டா சிட்டா,அக்கவுண்ட்ஸ் பிரிண்ட் எடுக்க என்று அவருடன் பழகிவிட்டேன். மன்னிக்கவும் அவரைப் பழக வைத்துவிட்டேன்.
ஒரு நாள் ஜெராக்ஸ் கடை தொடர்பாக எல்லாவற்றையும் இங்கு நீங்கள் வைக்கலாமே என்றபோது அவர் அப்போதும் அது எல்லாம் வேண்டாம் என்றார்.
ஒரு முறை நான் சென்ற வேலைகளுக்கு இடையில் பேசும் போது தான் சொன்னார். முகப்பில் கடையும் அதன் பின் இருக்கும் இவர் வைத்திருக்கும் கடையும் அதற்கு பின் வீடுமாக கட்டப்பட்டிருக்கும் இந்த பில்டிங் தன்னுடையது என்றார். அவர் கடைக்கு முன்பிருந்த மின்வாரியத்திற்கான பேனல் போர்டைப் பார்த்தபோது மாடியிலும் கடைகள் அல்லது வீடுகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பைக்கை நிறுத்தும் போது மேலே நான் ஒரு நாளும் கவனித்ததில்லை.
அவருக்கு வாட் ஆஃப்பில் ஆதாரை அனுப்பி பத்து காபி பிரிண்ட் போடச் சொன்னேன். போனில் என்னை அறிமுகப்படுத்த சிரமப்பட்டேன். அதை அவர் சிரித்தபடியே ரசித்தார்.
மணி 1:01 என்று கைபேசியில் காட்டியது. மதிய உணவிற்கு 1:30-க்குச் சென்று மூன்று மணிக்கு வருவதாக சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியுமா என்று பதட்டம் வந்தது. நகரத்தை விட்டுக் கொஞ்சம் தூரமாக கேஸ் ஏஜன்சி அலுவலகம் இருந்தது.
படிவத்தைப் பூர்த்தி செய்து சாரின் புகைப்படத்தை எடுத்து ஒட்டலாமென நினைக்கும்போது ஒட்டுவதற்கு பசை இல்லை. ஜெராக்ஸ் கடையில் ஒட்டலாமென நினைத்து கிளம்பியபோது சாலிட் பிளாக் டாட்டா ஏசில் இறங்கிக் கொண்டு இருந்தது.
சாரிடம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இங்கு இல்லாததால் அவர் நண்பரிடம் இருக்கிறது அனுப்புவார் என்றார். நான் டிபியில் பெண் குழந்தை ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்தை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமாக மாற்ற ஸ்டேட் பேங்கிற்கு எதிரில் உள்ள கடையில் செய்யச் சொன்னேன். எனது அலுவலகத்திற்கு அனுப்பி போட்டோஷாப்பில் செய்து அனுப்பச் சொல்லி இருக்கலாம் தான். பர்சனல் வேலைகள் ஸ்டாப்களிடம் வாங்கிப் பழகாததால் அவர்களைச் செய்யச் சொல்லாமல் இங்கு வந்தேன்.
அவர்கள் சரியாக செய்து முடித்து நான் கேட்டிருந்தப் புகைப்படங்களை கொடுத்தபோது நான் வாட்ஸ் ஆஃப்பில் அனுப்பச் சொன்னேன். அவர் கோவத்தை அடக்கி முகம் மாறியவராக ஐம்பது ரூபாய் ஆகும் என்றார். நான் சரி என்று சொல்லமாட்டேன் என்று அவர் நினைத்தார். ‘நான் தருகிறேன். அனுப்புங்கள் சார்’ என்றேன்.
நான் கல்லூரி முடித்து கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் தங்கி இருந்து வேலை தேடினேன். அப்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க பவர் ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் காம்ளக்சில் மாடியில் ஒரு ஸ்டுடியோ இருந்தது. அநேகமாக அந்தக் காம்ப்ளக்ஸ் அரசாங்கத்தினுடைதாக இருக்கலாம். பழைய பில்டிங் காக இருந்தது. கே. கே. நகர் போகும் பேருந்து ஆற்காடு சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பும் இடத்தில் அந்தக் கட்டிடம் இருந்தது.
நான் புகைப்படம் எடுத்து முடித்த பிறகு நெகட்டிவ் தர மறுத்து விட்டார். அப்போது பாஸ்போர்ட் போட்டோவுடன் நெகட்டிவ்வும் தருவார்கள். அவர் தரவே முடியாது. உங்களுக்கு போட்டோ வேண்டுமானால் என்னிடம் வாருங்கள் போட்டுத் தருகிறேன் என்றார். அது எனக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக இதை நான் கருதினேன்.
எனது சின்னம்மா மகன் உஸ்மான் ரோட்டில் ராகவேந்திரா டிராவல்ஸ் வைத்து இருந்தார். கல்லூரியில் டானாக இருந்தார். இங்கும் அப்படித்தான் இருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் அக்கா வீட்டில் தான் அந்த டிராவல்ஸை வைத்து இருந்தார். ஒரு சின்னப் பையன் மாடியில் துரு துரு என்று ஓடி விளையாடிக் கொண்டு இருப்பான். இவன் தான் ‘குச்சி குச்சி ராக்கம்மா’ பாட்டு பாடிய பையன் என்பார். அந்தப் பையன் துடிப்பானவன்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அண்ணனிடம் சொல்லலாமென இரண்டு முறை சென்றேன். அவர் ஊரில் இல்லை.
யாரிடமோ எங்கோப் பேசிக்கொண்டு இருக்கும் போது ‘யாரு… கிருஷ்ணர் சிலை வைத்து பக்கத்தில் உட்கார்ந்து இருப்பானே.அவன்தானே அவன் எல்லார்க்கிட்டையும் அப்படித்தான் பண்ணுவான்.ஏன் அவன்கிட்டேப் போனீங்க.’ என்றார். அதன் பிறகு தான் எனக்கு கோவம் அடங்கியது. அண்ணன் பிறகு நான் சந்தித்தபோது ‘என்னைத் தேடி வந்தியாமே. என்ன விசயம். ‘ என்றார். நான் ‘இந்தப் பக்கம் வேலையாக வந்தேன். சும்மா பார்க்கலாம்ன்னு வந்தேன்’ என்றேன். இப்போது அவர் சிங்கப்பூரில் லாட்ஜை லீசுக்கு எடுத்து கேசினோ மாதிரி ஏதோ செய்வதாகச் சொன்னார்கள். பாஸ்போர்ட் போட்டோவில் இதுபோல பல கதைகள் என் வாழ்க்கையில் இருக்கிறது.
நான் இருக்கும் தெருவிலிருந்து மெயின் சாலையைப் பிடித்து அந்த நகரத்தின் பிரதான கோயிலின் நுழைவாயில் பகுதிக்கு நேராக இருப்பதுதான் பெரிய கடை தெரு. அங்கு தான் நான் செல்லும் ஜெராக்ஸ் கடை உள்ளது. நான் இடது புறம் திரும்பி செல்லும்போது சாலையின் ஓரமாக நின்று கோயிலின் கோபுரத்தை நோக்கி தலையை குனிந்து வணங்கி தலையில் கொட்டிக் கொண்டார் ஒருவர்.தன்னைத் தானே சுற்றினார். மறுபடியும் பழையபடியே செய்தார். சிறு குழந்தையைப் போல குதித்தார். பிறகு கோபுரத்தை நோக்கி வணங்கினார். என்னைப்போல கடந்து போன பலரும் அவரைப் பார்த்துக் கொண்டே சென்றனர்.
மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பழக்கப்பட்டு இருந்தார்கள். சார் கூட இம்முறை வரும்போது வெங்கல விளக்கின் திரி எரியும் பகுதிக்கு மேலே உள்ள அன்னப்பறவையை கழட்டிக் கொண்டு வந்திருந்தார். கடையில்தான் விளக்கில் அன்னப் பறவை இருக்க வேண்டும் வீட்டில் விளக்கு இருந்தால் அதில் அன்னப் பறவை இருக்கக் கூடாது என்று வாஸ்த்து சோசியர் ஒருவர் சொன்னாராம். நல்ல வேலை சார் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கவில்லை.
ஆனால் அவர் காரில் சொன்ன விசயம் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ‘எல்லோருக்கும் நான் பண உதவிகள் செய்கிறேன். அவர்கள் என்னிடம் பணத்தைத் திருடுகிறார்கள். அது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறார்கள். நான் என்ன இளிச்சவாயனா. எப்படியோ என் பணம் யாருக்காவது உதவினால் சரி என்று கண்டும் காணாமல் இருக்கிறேன்’ என்றார். அவரது ஊழியர்கள் மௌனமாக இருந்தார்கள்.
கார் அவரது நண்பர் வீட்டிற்கு வந்து நின்றது. அவரது நண்பர் வீட்டில் இருக்கும் போது ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார். அப்போது அங்கு அவரது ஊழியர்கள் அந்த வீட்டுக்கார குடும்பம் இருந்தது. நான் மட்டும் தான் அவர்களுக்கு புது ஆள்.
“பூஜை புணஸ்காரம் என்று இருந்த எனது நண்பர். அதோ அவருக்கும் நண்பர் தான். எந்தத் தப்பு பண்ணாதவர். சுகர் பிரச்சினை. ஹார்ட்ல ஸ்டட்டு வச்சிருக்கு. நேரம் தவறாம கோயிலுக்குப் போறவர்.போன மாசம் இறந்து போயிட்டார். அவர் தம்பி நல்ல குடிகாரன். ஆரோக்கியமா இன்னும் குடிச்சிக்கிட்டு திரியறார். “
“அதெல்லாம் முன் ஜென்ம கர்மா” என்றார் அவரின் வீட்டுக்கார நண்பர்.
அப்போது வீட்டுக்கார நண்பரின் மனைவி வடை கொண்டு வந்து கொடுத்தார். ஒவ்வொருவரும் எடுப்பதில் கவனம் சிதறிய போது நான் கொஞ்சம் ஆசுவாசங் கொண்டேன். எனக்கு பேசுவதற்கு தயக்கமில்லை. புதியவர்களுடன் பேசுவதில் கொஞ்சம் யோசித்தேன். பொதுவாக சாரின் வேலைகள் முடியும் வரை எதுபற்றியும் யாரிடமும் பேசக்கூடாது என்று நான் முன்பு எடுத்த முடிவும் ஒரு காரணம்.
வடை நல்ல சுவையில் இருந்தது. கொண்டு வந்த காபியை முழுவதும் குடிக்க முடியாது என்று டம்ளர் ஒன்று கேட்டபோது அந்த வீட்டுப் பெண் பிள்ளையிடம் விளையாடிக் கொண்டு தான் எடுத்து வந்த மிட்டாயைக் கொடுத்துவிட்டு சார் என் பக்கம் திரும்பி
“நான் கேட்டதற்கு பதில் சொல்லலையே நீங்கள்.” என்றார்.
எல்லோரும் என்னையேப் பார்த்தார்கள்.
“நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு ஒரு வேளை உபயோகப்படலாம்.”
“சொல்லுங்கள்.”
“வறுமையும் நோயும் இறைவனுடைய கிப்ட்ன்னு ஒரு வேதத்தில் படித்தேன். அதைப் புரிய முற்பட்டால் இதற்கானப் பதில் ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கலாம். “
அவர்கள் புரிய முற்படவில்லை என்பது இதைக் கடந்து அவர்கள் வேறு விசயங்களை பேசியதில் தெளிவாக தெரிந்தது.
சாரின் சிறப்பு குணமே பிறருக்கு உணவளிப்பது.காலையில் அவர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நாற்பது ஐம்பது பார்சல் டிபன் கட்டச் சொல்லி வழியில் தென்படும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வாட்டர் பாட்டிலுடன் கொடுப்பார். இதுபோல பல இடங்களில் உணவு கொடுக்கும் பழக்க முடையவர்.
ஒரு முறை சாரிடம்
‘உணவு அளிப்பது இறைவனுடைய வேலை.அந்த வேலையை நீங்கள் ஏற்பதால் இறைவன் உங்கள் வேலையை ஏற்கிறான்.’என்றேன்.நான் இதுபோல பேசுவதால் தான் சார் அந்த வீட்டில் அப்படிக் கேட்டார் என்பதும் எனக்குத் தெரியும்.
ஜெராக்ஸ் கடை ஓனர் கம்ப்யூட்டரில் பிரிண்ட் கொடுத்துக் கொண்டு இருந்தார். நான் ஒட்டும் பசை வாங்கி போட்டோவை ஒட்டி ஜெராக்ஸ் எடுக்கச் சொன்னேன். மணி 1:10 ஆனது.
அரை மணி நேரத்திற்கு முன்பு தான் மின்சார வாரிய அலுவலகம் எங்கே இருக்கிறது. பணம் கட்ட வேண்டும் என்று இவரிடம் முகவரி கேட்டு சென்றேன். ‘இங்கே கட்டலாமே சார்’ என்றார். ‘ ஈபி ஆபீஸ் பில் வேண்டும் என்று வேலை ஆட்கள் சொன்னார்கள் சார்.’ என்று சொல்லி விட்டு அங்கு சென்றேன். அங்கு நான்காயிரத்துக்கு உட்பட்ட தொகை மட்டுமே கட்ட முடியுமாம். அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால் செக் அல்லது டிடி வழியாகத்தான் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து ஜெராக்ஸ் கடைக்காரரிடம் விவரங்கள் சொன்னேன்.
“எவ்வளவு அமௌவுண்ட் சார்.”
“இருபது ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி எட்டு. “
“சார்…கமிஷன் அதிகம் வரும் சார். “
“உங்களுக்கு பிஸ்னஸ் கொடுக்க வந்திருக்கிறேன். தொரத்திறீங்களே. எனக்கு அது தெரியும். நீங்கள் கட்டுங்கள் சார். “என்றேன்.
” சார்.. கேஸாக தரவா. ஜிபே பண்ணவா. உங்களுக்கு அக்கவுண்ட்டில் பணம் தேவைப்படலாம். “
“ஜிபே பண்ணிருங்க சார். “
நான் இருபதாயிரத்து என்னூற்றி அறுபத்தி எட்டை கமிசனோடு ஜிபே செய்தேன்.
நான் எடுத்து வைத்து இருந்த ஈபி பணத்திலிருந்து வீட்டில் ஐந்தாயிரத்து ஐநூறை மேல் பாக்கெட்டில் வைத்து இருந்தேன். அதை எடுத்துப் பர்ஸில் வைக்கலாமென கைபேசிக்கு அடியில் வைத்தேன். பணம் சிறியதாக மடங்கி இருந்தது.
கேஸ் டாக்குமெண்ட் பையிலை கைபேசிக்கு மேலே வைக்கும்போதுதான் கவனித்தேன் கடையின் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் சுருட்டிய காகிதம் வெளியேக் கிடந்தது. உள்ளே எடுத்துப் போடலாமா என நினைக்கும்போது கேஸ் ஏஜன்சி மூடி விடுவார்கள் என எடுத்துப் போடாமல் விட்டு விட்டேன்.
“ஒன்றரைக்குள்ள போகனும் சார். இல்லை என்றால் ஈவினிங் போகனும். மீதியைப் பிரிண்ட் போட்டு வையுங்கள். வந்து எடுத்துக் கொள்கிறேன். ” என்று சொன்னேன்.
“கொஞ்சம் இருங்கள் வாங்கிட்டுப் போயிறலாம்.” என்றார்.
அவரின் தயக்கம் பணம் கொடுக்காமல் செல்கிறேனே என்பதாலும் இருக்கலாம். என்னை அவர் நம்ப வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் அவருக்கு இல்லை. பிறகு அவர் சரி என்று சொன்னார்.
அப்போது யாரோ ஒரு பெண் மணி புகைப்படம் பிரிண்ட் போடச் சொல்லி அதற்கானப் பணத்தை ஜிபே செய்ய ஸ்கேன் செய்து கொண்டு இருந்தார்.
என்னிடம் பதினான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்தது. பைக்கை வேகமாக சென்றபோது டார்லிங் கடையைக் கடக்கும்போது கம்மாளத் தெருவிற்குள்ளிருந்து பைக்கில் தண்ணீர் கேனை ஏற்றி வந்த டிவிஎஸ் பிப்டிக்காரர் என்னை விபத்திற்குள்ளாக்காமல் போனது இறைவனின் மிகப்பெரிய கருணை.
கிராமங்களில் கூட சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர்கள் சப்ளை செய்யப்படுவது வேதனையான விசயம். என் ஒவ்வொரு அக்கா வீட்டிற்கு செல்லும் போதும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சுவையில் குடி தண்ணீர் இருக்கும். அதெல்லாம் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை. நான் இந்த நகரத்தில் பேரதிர்ச்சி கொண்ட விசயம். இங்கு போர்வெல்லில் வரும் தண்ணீர். மலம் போன பிறகு டாய்லெட் பேசினில் தண்ணீர் சரியாக போகாமல் மஞ்சள் நிறத்தில் கலங்கிய படி தெரியுமே. அது போல இருக்கிறது. இங்கு எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தேன். சுற்று வட்டாரப் பகுதி எல்லாவற்றிலும் இதே போல தான் தண்ணீராம். ஏதோவொரு கிராமத்தில் ஊரேக் காலி செய்து சென்றுவிட்டார்களாம்.
மீத்தேன் எதுவும் எங்கு எடுக்கிறார்களா. இல்லை அரசியல் தலைவரின் கெமிக்கல் பேக்டரியாலா என்று தெரியவில்லை. எது எப்படியோ பூமிக்கடியில் உள்ள குடி தண்ணீர் நாசமாகிவிட்டது.
அமெரிக்காவில் மீத்தேன் எடுத்த நகரம் என்ன ஆனது என்று ஒரு கட்டுரை ஆனந்த விகடனில் முன்பு படித்ததாக ஞாபகம். அதை மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. ஜென்ஜி தலைமுறை எத்தனை பேருக்கு அமெரிக்காவில் நிகழ்தேறிய அந்தக் கொடூரம் தெரியுமென்று தெரியவில்லை.
பைக்கை இடது பக்கம் திருப்பி கொஞ்சம் வேகத்தைக் கூட்டினேன். வாகனம் மற்றும் மக்கள் கூட்டத்தில் நான் நினைத்த வேகத்தில் செல்ல முடியவில்லை. நகராட்சியைக் கடந்ததும் பைக்கின் டிஸ்ப்ளேயில் நேரம் பார்த்தேன். இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. இடது பக்கம் நிறுத்தி இருந்த தள்ளு வண்டியில் வயதான மூதாட்டி கலர் குடித்துக் கொண்டு இருந்தார். கலர் குடித்தால் கலைப்பு தீரும். வயிற்று வலி நிற்கும் என்ற நம்பிக்கை இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. மஞ்சள் கலரில் ஜிஞ்சர் என்று ஒரு கலர் பாட்டில் வரும். அது இப்போது எல்லாம் வருகிறதா என்று தெரியவில்லை. அம்மா அதை ஊரில் வாங்கி வரச் சொல்லி குடிப்பார்கள். அதைக் குடித்தால் எனக்கு நாக்கு எரியும்.
விளையாட்டு மைதானத்தைக் கடக்கும்போது சாலையின் இருபுறமும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முடிந்து சென்று கொண்டிருந்தார்கள். கல்லூரி வாசலில் பெண் பிள்ளைகள் அதிகமாக நின்றார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும் போது எனது பள்ளித் தோழன் இந்தக் கல்லூரியில் படித்ததாக சொன்னான். பள்ளியில் பெயிலாகி ஒன்பதாவது வகுப்பில் என்னுடன் படித்தான். டி. ராஜேந்தர் பாணியில் காதல் கடிதம் எழுதுவான். சில பெண்கள் அவன் காதல் வலையில் விழுந்தார்கள். அவர்கள் அவனுக்கு எழுதிய கடிதங்களை என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்வான்.
கிராமங்களில் ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் இல்லாத காலகட்டம் அது.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் மின்சாரம் இருப்தால் இரவில் அங்கு விரும்பியவர்கள் வந்து படிக்க அனுமதித்தார்கள். தினம் ஒரு ஆசிரியர் இரவு ஒன்பது மணி வரை எங்களுடன் இருப்பார். நான் வகுப்பில் முதல் மார்க் வாங்குபவன்.வீட்டில் எட்டு மணி வரைப் படித்துவிட்டு அதன் பிறகு தான் இரவு பள்ளிக்கு வருவேன். நான் வந்த கொஞ்ச நேரத்தில் குடிக்காடு தங்கையன் வருவான். அவனும் பெயிலாகிப் படித்தவன். சாராயம் காய்ச்சி வித்தான். சார் சென்றதும் ஒரேக் கொண்டாட்டம் தான். சுருட்டி சுருளாக இருக்கும் பணத்தை அள்ளிப் போட்டு அடிக்கி எண்ணுவான். அப்போது சாமியப்பாவும் நானும் அன்று அவனுக்கு கிடைத்த காதல் கடிதத்தைப் படிப்போம். பிறகு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அதற்கு பதில் எழுதிக் கொண்டு இருப்பான். பள்ளியில் ஒருப் பிள்ளையை உருகி உருகி காதலித்தான். இவன் ஒரு தலையாக காதலிக்கிறான் என்று தான் நான் நினைத்தேன். ஒரு நாள் அந்தப் பிள்ளை எழுதிய கடிதத்தைக் கொடுத்தான். நான் உண்மையிலேயே அதிர்ச்சியாகிவிட்டேன். நான் வகுப்பு லீடர் என்பதால் எனக்கு ஒவ்வொருவருடைய கையெழுத்தும் தெரியும். இப்போதும் அவர்களின் கடிதங்கள் என் கண் முன்னே காட்சியாக வருகிறது. அப்போது பெண் பிள்ளைகளோடு யாரும் பேசக்கூடாது. காதலிப்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்பட்ட காலம்.
பள்ளியில் இல்லாமல் அவன் மாமா ஊர் மற்றும் பக்கத்து ஊரில் சில பேருடன் அவனுக்கு தொடர்பு இருந்தது. அந்தக் கதைகளை ஏனோ என்னிடம் விலாவாரியாக சொல்லுவான். அவனுக்கு கன்னி ராசி இருந்திருக்கும்போல. நான் கல்லூரி விடுமுறை நாளில் ஊருக்கு வந்தபோது இந்தக் கல்லூரியின் காரிடரில் ஒரு பெண்ணை முத்தம் கொடுத்துப் பெரிய பிரச்சினையாகிவிட்டதாக சொன்னான். அதன் பிறகு அவனை நான் பார்க்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து நான் ஊருக்கு வந்தபோது அவன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார்கள். ஆனால் ஊரில் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பேசிக்கொண்டார்கள். அந்தக் காலத்தில் கைபேசி வசதி இருந்திருந்தால் அவன் பிழைத்தாலும் பிழைத்திருக்கலாம்.துவளும் போது தோல்சாய தோழர்கள் அவசியம் வேண்டும்.
இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்த போது நான் வண்டியை ஓரமாக நிறுத்தி கடைக்காரர் ஒருவரிடம் கேட்டேன். அவர் எழுந்து நின்று எனக்கு பதில் சொன்னார்.
“கேஸ்க் கடை இங்க எங்க இருக்கு “
“சார் நீங்க ரொம்ப தூரம் வந்துட்டீங்க. திரும்பி வலதுபக்கம் பார்த்துக்கிட்டேப் போங்க பேங்குக்கு எதிர்த்த மாதிரி வரும்”
எனக்கு மஜ்னூனின் நினைவு வந்தது. அவன் லைலாவைப் பார்த்தும் அவளைக் கடந்து லைலா லைலா என்று தேடி ஓடினானாம்.தேடல் என்பது அப்படி இருக்க வேண்டும் என்று ஓஷோ சொல்வார். நான் பார்க்காமலையே நல்ல தூரம் தான் வந்து இருக்கிறேன்.
கடையில் வண்டி நிறுத்தும்போதேக் கவனித்தேன். நான்கு பெண்களும் இருந்தார்கள். உள்ளே நுழைந்ததும் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். நான் விவரம் கேட்டுச் சென்ற தென்பகுதி ஓரமாக அமர்ந்து இருந்தப் பெண்ணிடம் பார்மைக் கொடுத்தேன். ‘போன் நம்பரை எழுதுங்கள் சார்’ என்றார்கள். நான் சாரின் நம்பரை எழுதினேன்.
“மேடம்.கான்டாக்ட் நம்பர் தனியாக எழுதவா. எனக்குப் போன் செய்யுங்கள்.”
“பின்னாடி எழுதுங்கள். “
“அந்த நம்பருக்கு கீழே எழுதுகிறேன். மேடம். “
அவர் என்னை ஒரு முறை பார்த்துவிட்டு சரி என்றார். நான் எழுதிய பார்மை போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களிடம் பணம் எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன்.
“ஐந்தாயிரத்து ஐயிநூறு கட்ட வேண்டும் சார். நாங்கள் போன் செய்த பிறகு கட்டினால் போதும்” என்றார்.
நான் சட்டையின் மேல் பாக்கெட்டில் கை வைத்தேன். பணம் இல்லை. ஜெராக்ஸ் கடையில் போனுக்கு கீழே வைத்ததை எடுக்காமல் போனது நினைவுக்கு வந்தது. கடை ஓனருக்கு போன் செய்வது அநாகரிகமாக தோன்றியது. ஒரு வேளை அவர் கவனிக்காமல் வேறு யாராவது எடுத்து இருந்தால் தேவையற்ற சங்கடம் என நினைத்தாலும் மனம் நிலை கொள்ளாமைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
பைக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து முகத்தைக் கழுவலாமென அவர்கள் போட்டிருந்த பார்க்கிங் மேடையை விட்டு சற்று சாலையின் பக்கம் நகர்ந்த போது கேஸ்க் கடையின் ஓனர் வெளியே வந்தார். வயோதிகத்தின் தள்ளாமையில் மெதுவாக இடது கையில் கை பேசியும் அதில் கல்யாணப் பத்திரிக்கை ஒன்றையும் வைத்து கொண்டு மிகவும் மெதுவாக வெளியே வந்தார். ஏற்கனவே காரை நிறுத்தி வைத்திருந்த ட்ரைவர் பரபரப்பானார். ஓனர் பின் பக்கம் ஏறியதும் கல்யாணப் பத்திரிக்கையை ட்ரைவரிடம் கொடுத்தார். அப்போது சிலிண்டர் ஏற்றி வைத்திருந்த லாரி டிரைவர் ஏதோ கேட்டதற்கு ஓனர் ஏதோ பதில் சொன்னார்.
நான் முகத்தை கழுவலாமென நினைத்தபோது மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சென்டிமெண்ட்டில் வாழ்கிறார்கள். நான் முகம் கழுவுவதை அவர் ஏதாவது ஒன்றாக நினைக்கலாமென யோசித்து பாட்டிலைத் திறந்தபடியே கார் கிளம்பட்டும் எனக் காத்திருந்தேன். கார் நகர்ந்ததும் வேலை பார்க்கும் பெண்கள் ஷட்டரை மூடிவிட்டு கிளம்பி னார்கள். நான் நேரத்தைப் பார்த்தேன் 1:47 ஆனது. எனக்காகத்தான் அந்த ஓனர் தாமதப்படுத்தி சென்றிருப்பாரோ என்று நினைத்துக் கொண்டேன்.
என்னுடன் கல்லூரியில் படித்த வேல் முருகன் சித்தப்பா பாரதி அப்பாவும்(வேல் முருகன் இப்படிக் கூப்பிடுவதால் நாங்களும் அப்படியே கூப்பிட்டு பழகிவிட்டோம்.) எங்கள் ஊரில் இதே கேஸ் ஏஜென்சி வைத்து இருந்தார். என் கல்யாணத்தில் மேடைக்கு வந்து ‘எனக்கு இன்னைக்கு கல்யாண நாளுப்பா.கோயிலுக்கு போய்விட்டு நேராக இங்கதான் வர்றேன்.’ என்றார். வேல் முருகன் எனது திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும்போது இதை அவனிடம் சொல்லி இருக்கிறேன். வேல் முருகனால் மட்டும் தான் அவன் நண்பர்களின் பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து சரியாக வாழ்த்து சொல்லிவிட முடிகிறது. இப்போதெல்லாம் அவன் நண்பர்களின் பிள்ளைகளின் பிறந்த நாளையும் நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்வது நண்பர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
மத்தியான வெயில் கொடூரமாக அடித்தது. பணத்தைப் பற்றிய சிந்தனை வேகத்தை கூட்ட வைத்தது. அரசு மருத்துவமனை இருக்கும் சாலையில் வரிசையாக இளநீர் விற்பார்கள். அவர்களிடம் குடிக்கலாமென நினைத்தாலும் நமக்காக ஜெராக்ஸ் கடைக்காரர் காத்திருப்பாரே என்ற நினைவு இளநீர் குடக்கும் ஆசை காணாமல் போனது. அவர் கடையை வீட்டில் வைத்து இருப்பதே குறித்த நேரத்திற்கு உணவருந்தி குறித்த நேரத்திற்கு உறங்குவதற்காதவும் இருக்கலாம். ‘நான் வந்து வாங்கிக் கொள்கிறேன்’ என்றதும் அவர் கொஞ்சம் ஜெர்க்கானது இதற்காகவும் இருக்கலாம். மாத்திரைகள் ஏதாவது எடுக்கலாம். எனது நண்பர் ரஜினி ரவிச்சந்திரன் அட்டவணைப் போட்டு அதன்படி வாழக் கூடியவர். அது போல இவரும் இருப்பாரோ. நான் நான்கு மணிக்கு இந்த கேஸ் பார்மைக் கொடுத்திருக்கலாமென நினைத்தேன். மாலையில் வீட்டிற்கு கிளம்பும்போது வேலைகளைக் குவிப்பது பயண நேரத்தை தாமதமாக்குவதால் இதை இப்போது செய்தேன். பெரியக் கடைத் தெருவில் என்னை கவனமாக பைக்கை ஓட்டுவதற்கு எல்லாவிதக் குறுக்கீடுகளிலும் மக்கள் இருந்தார்கள். ‘கடைத் தெருவில் வேகமாக ஓட்டுவது தப்பு ப்ரோ’ என எனக்குள்ளே நான் சொல்லிக்கொண்டேன். சின்னச் சின்ன விசயங்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை கேட்கும் நான் ஏன் பணத்திற்காக எதுவுமே கேட்காமல் இருக்கிறேன் என்று நினைவு வரும்போது கடையை நெருங்கி விட்டேன். இடது பக்கம் இரவு நேர உணவுக் கடையாக செயல்படும் ரிக்சாவுக்குப் பக்கத்தில் வழக்கம்போலவே பைக்கை நிறுத்தினேன். யாரோ அரிசி வாங்கிச் சென்றவர்கள் பை கிழிந்து கீழே கொட்டி விட அதை அள்ள முடியாமல் அப்படியே விட்டுச் சென்று இருந்தார்கள். காக்கைகள் அதனைக் கொத்தித் தின்று கொண்டு இருந்தது. சில வாகனங்கள் வரும்போது மட்டும் அவைகள் பறந்தன. மற்றவைகளுக்கு அவைகள் பறக்காமல் தின்று கொண்டு இருந்தன.
அவரது கடை முகப்பில் மர மேஜை அடித்துப்போடபட்டு அதன் இரண்டு புறமும் கடைக்குள் நுழையும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. நான் இடது பக்கம் நின்று தான் என் வேலைகளை முடித்தேன். இதை கேட்கலாமா கேட்கக்கூடாதா என்று கேள்விக்கு விடை இதுவரைக் கிடைக்கவில்லை. சில முறை நான் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுவேன். இப்போது நான் அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறேன். இந்தப் பணம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று மனம் என்னை தொந்தரவு செய்தது. அதனைப் பிறகு யோசிக்கலாமென அந்தக் கட்டிடத்தின் சந்து மாதிரியான முகப்புக் கடையை ஒட்டியப் பகுதியில் நடந்து சென்றேன். இந்த வழியாகத்தான் அவர்கள் வீட்டிற்கும் செல்கிறார்கள். என்னைப் பார்த்ததும் அவர் சிரித்தார்.
“கொடுத்தாச்சா சார். “
“கொடுத்துட்டேன் சார். “
“ கடவுள் உங்களுக்கு உதவி செய்திருக்கிறார் சார்.”
அவரைப் போல நானும் சிரித்தேன்.
அப்போது கடையின் உள்ளே இருந்த வலது பக்கத்தில் குண்டாக வெள்ளை சட்டையில் கண்ணாடி அணிந்து ஒருவர் வெளியே வந்தார். அவர் என்னிடம் பிரிண்ட் பேப்பர்களைக் கொடுத்தபோது தொகையைக் கேட்டேன். ஐம்பத்தி நான்கு என்றார். அதற்கான மீதத்தொகையை அவர் எடுக்கத் திரும்பும்போது நான் முன்பு நின்ற இடத்திலேயே நிற்பதால் கீழேப் பார்த்தேன். ஜெராக்ஸ் மெஷின் பக்கத்தில் நுழையும் பகுதியின் சுவரை ஒட்டி இருந்த குப்பைக் கூடைக்குப் பக்கத்தில் பணக் கட்டு கிடந்தது.எனது பின்பக்கம் இருந்தப் பணம் பைக் ஓட்டும்போது அழுத்தி இருந்ததால் ரப்பர் பேண்ட் போட்ட ஐந்தாயிரத்தி ஐயிநூறு பணக்கட்டு அப்படியே மடித்துக் கிடந்தது. இறைவா…உன் கருணை மகத்தானது என நினைத்துக்கொண்டேன். நான் அதை எடுத்துக் கொண்டு பழையபடி நின்று கொண்டு இருக்கும் போது அவர் மீதத் தொகையைக் கொடுத்தார்.
கண்ணாடி அணிந்த நபர் மீண்டும் வந்துவிட்டார். அவர் இருப்பதால் ஜெராக்ஸ் கடைக்காரர் கொஞ்சம் இயல்பு நிலையில் இல்லாமல் இருந்தார். அவரை நான் யாரெனக் கேட்டேன். மாமா என்று சொன்னார்.
மன நிறைவில் நான் வெளியே வரும்போது அவருடைய பெயர் என்னவாக இருக்கும் என்று ஜிபே செய்ததில் பார்க்க கைபேசியை எடுத்தேன். பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நான்.பெயர் எதுவாக இருந்தால் நமக்கென்ன என்று கைபேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டேன். அந்த குப்பைத் தொட்டியில் நான் போகும்போது கிடந்த சுருட்டிய காகிதம் இப்போது அந்த குப்பைத் தொட்டிக்குள் கிடக்கிறது. இந்த சுருட்டியப் பேப்பரைப் போட்டவர் ஏன் பணத்தை எடுக்கவில்லை என்றக் கேள்வி என் முன் பிரதானமாக நிற்கிறது. அவர் கடையில் சிசிடிவி கேமரா இருக்கிறதா என்று நான் கவனிக்கவில்லை.
கேஸ் கனெக்சன் பார்மை சாருக்கு அனுப்பி இருந்ததால் அவர் போன் செய்தார். வேலைகளைப் பற்றிக் கேட்டார். வேறு விசயங்களைப் பற்றி பேசினார். இறுதியில் பேச்சு கடவுளைப் பற்றி வந்தது. நான் இப்படியாகச் சொன்னேன்.
“சார். கடவுள் இல்லை என்று நாள் முழுவதும் அவதூறு பேசினாலும் கடவுள் இருக்கிறார் என்று புகழ்பாடினாலும் அவர் இருவருக்காகவும் வரப்போவதில்லை. அவர் நடுநிலையானவர்” என்றேன். அவர் சிரித்தார். என் மேல் அவர் மேலதிக அன்பு கொள்வதை நான் தெளிவாக உணர்ந்தேன். அவர் கடவுள் யார் பக்கம் இருக்கிறார் என்று கேட்காத போது நான் எப்படி அதர்க்கான பதிலைச் சொல்ல முடியும்.
பணம் ஈட்டும் பிரயத்தனத்தில் சாண் ஏறினால் முழம் சறுக்கினாலும் மனிதர்களை நான் வெகு எளிதாக சம்பாதித்து விடுகிறேன். இதோ இந்த ஜெராக்ஸ் கடைக்காரர் என் கைபேசி எண்ணை சேமித்து வைத்துக் கொள்வதாக சொன்னார். இந்த நகரத்தின் பெயரில் அநேக எண்கள் தினம் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. பணத்தை வைத்து எதாவது செய்யலாம். மனிதர்களை வைத்து என்ன செய்வது. ஏதாவது செய்யலாம். இல்லை ஏதாவது நடக்கலாம்.
***
