மறுமுறை

குமார் கிளம்பிச் சென்றதும் வாசல் கதவைத் தாளிட்டாள். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் படர்ந்தது. காலில் சிக்கிய தலையணையை வெறிகொண்டு எத்தித் தள்ளினாள். சில்வர் செம்பொன்று நாற்காலியில் இருந்து தரையில் விழுந்து உருண்டது. விளக்கினைப்போட்டு கண்ணாடி முன்நின்று  பார்த்தாள். தன்முகம் ஏன் இவ்வளவு கிழடு தட்டி விட்டது. முப்பத்தைந்து வயதிற்குள் எல்லாம் முடிந்து போனதனாலா? உதடுகளைக் குவித்து பரிசோதித்தாள். ஐந்து வருட இடைவெளிக்குள் தனக்குப் பத்து வயது கூடிவிட்டது போல் உணர்ந்தாள். தொப்புளைச்சுற்றிய பிள்ளைப் பேற்றுத் தழும்புகளை வலது கை விரல்கள் அன்னிச்சையாகத் தடவிக்கொண்டிருந்தன.

ஒவ்வொருமுறையும் குமார் அறைக்குள் வந்து கதவைச்சாத்திய உடன் அவள் அடிவயிறு மெலிதாக அதிர்ந்து வியர்க்கத் தொடங்கும். அவனாக உதடுகளை விடுவித்துக் கொள்ளாதவரை அவள் விலகுவதில்லை. அதன்பின் நடப்பவை எல்லாம் அத்தனை மகிழ்ச்சி அளிப்பதில்லை. அவனோ பெரும்பசியைக் கொண்டிருப்பவன் போல வேகம் கொள்வான்.  அவள் முன் விளையாட்டோடு தன் எதிர்பார்ப்பை நிறுத்திக் கொள்வாள். மொத்த நேரத்தில் முன் விளையாட்டே முக்கால் பங்கு நேரத்தை எடுத்துக்கொள்ளும் விதமாக அமைத்துக் கொள்வாள். பலநாட்கள் அவனிடம் அதைப்பற்றி பேசிவிட நினைப்பாள். அவன் மூச்சு வாங்க மல்லாந்து மின்விசிறியின் காற்றுப் போதாமல் வியர்த்துக் கிடப்பான். அவன் கைகள் அப்போதும் வாஞ்சையோடு அவளின் தோள்களில் அலைந்து கொண்டிருக்கும். அவள் ஆசையாய் அவனின் மார்பு ரோமங்களை வருடிக்கொடுப்பாள்.

சுவரில் மாட்டியிருந்த கல்யாணப்போட்டாவில் இருந்து சுந்தர் அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவளும் அச்சம் சுற்றிய முகத்தோடு அப்போட்டாவில் அவன் அருகில் நின்று சிரிக்க முயன்று கொண்டிருந்தாள். கல்யாணத்திற்கு    முந்தினநாள் இரவெல்லாம் அவளுக்கு நல்ல காய்ச்சல். அம்மா ஒற்றை மனுசியாய் அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தாள். தண்ணீர் பிடித்து தொட்டிகளை நிரைத்து வைப்பதே பெரும்பாடாய் இருந்தது. புதுப்பெண்ணிற்குரிய எந்தச் சலுகைகளும் அவளுக்கு வழங்கப்பட வில்லை. எப்பவும்போல அவள்தான் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்ய வேண்டியதாயிற்று.

கல்யாணப்போட்டாவில் பட்டுச்சேலையில் அவள் மிக அழகாக இருந்தாள். அவளின் கழுத்தெலும்புகள் மெலிதாக துருத்தியிருந்தன. சுந்தர் தலை மட்டும் உடலைவிட பெரிதாகத் தெரிய மெலிந்து நன்கு வளர்ந்திருந்தான். சமீப நாட்களில் அந்தப்போட்டோவை குற்ற உணர்ச்சியற்று அவளால் பார்க்க முடியவில்லை. குமார் இருக்கும்போதாவது அதைக்கழட்டி கட்டிலுக்கு அடியில் வைத்து விடவேண்டும் என்று தோன்றும். சுந்தருக்கு மற்ற ஆண்களைப்பற்றி அவள் பெருமையாக பேசினாலே கோபம் வந்துவிடும். பலமுறை அதனாலே சண்டையும் அழுகையும் நடந்திருக்கிறது. பெரும்பாலான சண்டைகள் ஆவேசம் மிகுந்த இரவு விளையாட்டாக உருமாறி முடியும். அவ்விரவுகளை அவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். மறுநாள் காலையில் செய்கைகள் மூலம் பரிகாசம் செய்வான். அவனுக்கு அவளைப்போல அவன் சிவப்பாக இல்லாதது குறித்த ஒருவித அச்சம் இருந்தது.

அன்று வெய்யில் உடலை ஊசிகொண்டு குத்திக்கொண்டிருந்தது. வீட்டிற்குள் வியர்வை பிசுபிசுக்கும் எரிச்சல். கூடவே பட்டுச்சேலையின் இறுக்கம் வேறு. சுந்தர் பவுடர் போட்டு செண்டினை அறையில் நிரைத்து அவளுக்காக காத்திருந்தான். அவளுக்குப்பிடித்த கருப்புக்கலர் ஜீன்சும் ரோஜ்கலர் டி சர்டும். அவள் நித்தியை கைகளில் ஏந்தி மார்போடு அணைத்திருந்தாள். நித்தி கால்விரல்கள் நெளிய அவள் மார்புச்சேலையோடு விளையாடிக்கொண்டிருந்தாள்.

”நீங்க..போய்ட்டு வாங்களேன்..” என்றாள் தயக்கம்கொண்டு. வெயிலில் வெளியில் பயணிப்பது குறித்த சோர்வு அவளுக்கு. அவன் ஒருகணம் அவளைப்பார்த்து அர்த்தமற்று நின்றான்.

”சங்கரு நம்ம கல்யாணத்திற்கு குடும்பத்தோட வந்திருந்தான். சாப்பாடு பரிமாறி நம்மள முதலிரவு அறைக்கு அனுப்பற வரை ஒத்தாசையா இருந்தான். நான் மட்டும் போனா வருத்தப்படுவான்”

”சரி கிளம்புவோம்” என்று தயக்கத்தை மாற்றி பெருமூச்சுடன் எழுந்தாள். நித்தியை அவன் வாங்கிக்கொண்டான். இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்து குழந்தையை வாகாக அணைத்து அவன் தோளைப்பற்றினாள். எதிர்வீட்டு செல்வியக்கா அவளைப்பார்த்து கண்ணடித்து தலையை அசைத்தாள். வண்டி பதறி ஒலியெழுப்ப சாக்கடைக் கொதிப்பிலிருந்து பன்றியொன்று அதிர்ந்து ஓடியது.

துணிப்பொட்டலமாக உடற்கூறாய்வுக்குப்பின் ஆம்புலன்ஸ் வண்டியில் வந்திறங்கிய சுந்தரை அவள் பெரும் அழுகையோடு எதிர்கொண்டாள். அன்றோடு தன் வாழ்க்கை முடிந்தது தனக்கு இனி மீட்பே இல்லை என்று மீண்டும் மீண்டும் புலம்பிக்கொண்டாள்.  தற்கொலை குறித்து பலநுாறு முறை திட்டங்கள் வகுத்தாள். அவளைவிட்டுப்பிரியாமல் நிழலென திரிந்த நித்திதான் அவளை இம்மண்ணில் நிலைக்கச்செய்தாள். அன்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை வழியெங்கும் ஈரம் சொட்டிட பேய்வேகத்தில் வந்த டாரஸ் லாரி ஒன்று பின்னால் வந்து முட்டியது. நித்தியும் அவளும் கட்டிட வேலைக்காக குவித்துவைக்கப்பட்டிருந்த மணலில் சென்று விழுந்தார்கள். அவன் முள்வேலியிட்ட கல்துாணில் தலையால் மோதினான்.

ஆதரவற்ற விதவைச்சான்றின் சலுகையில் அவளுக்கு அலுவலக உதவியாளர் வேலை கிடைத்தது. நித்தியை அம்மாவிடம் விட்டுவிட்டு தனி அறை எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்தாள். வாரந்தோறும் அம்மாவீட்டிற்குச் சென்று நித்தியோடு இரண்டு நாட்கள் இருந்து வருவதொன்றே வாழ்வின் அர்த்தமாக இருந்தது. அப்பா இரண்டு மூன்று வரன்கள் பற்றி அவளிடம் அபிப்பிராயம் கேட்டார். எல்லாம் இரண்டாம்தார முயற்சிகள்.  ”சின்ன வயசுதானே..இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஆண் துணையில்லாம இருக்கப்போற..” அம்மாவும் வழிகாட்டினாள்.

அவளுக்குத்தான் சுந்தரை மறக்க முடியாமல் இருந்தது. எல்லா நாட்களிலும் யார் முகத்தின் மூலமாகவாவது அவன் வந்துகொண்டே இருந்தான். தினந்தோறும் எவரிடமிருந்தாவது அவனின் மீசையை, உதடுகளை, புருவங்களை, தலையாட்டி நடக்கும் நடையை அவள் பார்க்கத் தவறுவதில்லை. அவன் தன்னைவிட்டு போகவில்லை,  வெளியூர் சென்றவன் விடிந்ததும் வந்து விடுவான் என்று அபத்தமாக நம்பினாள். அது ஒரு அந்தரங்கமான ஏக்கம் அவளுக்கு.  அவனோடு பகிர்ந்துகொண்ட, குறைந்த ஒளியால் ஆன இருள் வெளியை பிறிதொருவருக்கு அனுமதிப்பது குறித்து அவளுக்கு அருவெருப்பு.

இரண்டாண்டுகள் கழிந்த பின்தான் அவளுக்குத் தன்முடிவின் மீது சந்தேகம் எழுந்தது. அவளைப் பின்தொடரும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்க அலுவலக மேலாளர் முதல் தினமும் அவளுடன் பஸ்சில் வரும் பாலிடெக்னிக் மாணவன் வரை அவளைத் தீண்டிக்கொண்டே, அவளின் சம்மதம் வேண்டிக்கொண்டே இருந்தார்கள். அவளுக்கும் அது மனதளவில் விருப்பமாகத்தான் இருந்தது. எத்தனை இரவுகள்தான் குளிர்ந்த நீரில் குளித்து,  உடலை ஏமாற்ற முடியும். அவளைச்சுற்றி நடந்துவரும் மீறல்களை அறியவரும்போதெல்லாம்  தான்மட்டும் வஞ்சிக்கப்படுவதாக அவளுக்குத்தோன்றும்.

2.

குமாரை முதன்முதலில் பார்த்தபோது அவளுக்கு அவனிடம் ஒன்றும் விசேசமாகத் தெரியவில்லை. குள்ளமான செல்லத்தொந்தி கொண்ட கருப்பான சுருள்முடி கொண்ட ஆண். அவன் நடையை பார்க்கும்போதெல்லாம் எதையோ தொலைத்துவிட்டு தேடிவருபவனின் பதற்றம் இருக்கும். துருதுருவென்ற இயல்பு.

மதிய உணவருந்தும் அறையில் அன்று அவள் மட்டும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். குமார் அதைத் தெரிந்தவன்போல விரைந்து வந்தான். அலுவலக மேலாளர் அதற்குள் இரண்டுமுறை அவளைப்பார்த்து கனைத்துவிட்டு சென்றிருந்தார். அன்று மாலையில் தன் வீட்டிற்கு கட்டாயம் வரவேண்டும் என்று அவளிடம் சொல்லியிருந்தார். அடுத்த ஆண்டோடு ஓய்வுபெறப்போகும் அவரிடம் வெளிப்பட்ட பாவனைகளை நினைத்தால் அவளுக்கு சிரிப்பாக வரும். நரையோடிய அவரின் மார்புரோமங்கள் ஒன்றே அவரை அவள் விலக்க போதுமானதாக இருந்தது.

”இந்தக்காட்டன் புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு” நடுங்கும் குரலில் சொல்லியபடி அவளுக்கு எதிரே அமர்ந்தான் குமார்.  அவள் எச்சில் பாத்திரங்களை சிங்கிற்கு எடுத்துச்சென்று கழுவத்தொடங்கினாள்.

கனத்த மௌனம் நிலவியது.

”எனக்கு உங்க போன் நம்பர் வேணும்…”

”எனக்கு இப்படி பேசறதெல்லாம் பிடிக்காது” சட்டென்று கோபத்தில் எரிந்தாள்.

”நான் உங்கள விரும்பறங்கே..வீட்டிலயும் கல்யாணம் பண்ணிக்கோடானு நச்சரிக்கறாங்க..”

”எனக்கு நாலு வயசுல ஒரு  பெண் குழந்தையிருக்கு”

”எனக்கு எல்லாம் தெரியுங்க..உங்களப்பத்தின அத்தனை விசயங்களையும் தெரிஞ்சுட்டுத்தான்  இந்த முடிவெடுத்ததே.”

”என் மகள வளர்த்து கரைசேக்கணும் அதுமட்டும்தான் என் ஆசை”

”நித்தி நம்ம மகள்..அதைப்பத்தி கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம்”

அவள் அவனிடம் தன் செல்போன் நம்பரைச் சொல்ல அவன் விரைந்து தன்னுடைய செல்போனில் ஒற்றிக்கொண்டு ஒரு அழைப்பையும் செலுத்தி உறுதி செய்து கொண்டான். அன்றிரவு அவன் அவளிடம் இரண்டுமணிநேரம் பேசினான். பேசிபேசித்தான் அவனை அவளுக்குப் பிடித்துப் போனது.

3.

கன்னியாகுமரிக்கு பஸ்சில் அருகருகே அமர்ந்து பயணம் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவள் வேறு ஒரு பெண்ணாக மாறியிருந்தாள். அதுவரை அவள் கொண்டிருந்த பயம் காணாமல் போயிருந்தது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் குறித்த எச்சரிக்கை இல்லாமல் ஆகி பறக்கத் தொடங்கியிருந்தாள்.  அவளுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் பொங்கிப் பெருகியது. தலையைக் குனிந்தபடி குமார் என்ன சொன்னாலும் வெடித்துச் சிரித்தாள். மொத்த உடலும் பூரிக்க குலுங்கினாள். அவன் விரல்களில் இருந்து பிறந்த பட்டாம்பூச்சிகள் அவள் உடல் முழுதும் ஊர்ந்தலைந்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி அவனை அணைத்து  அவன் மார்பில் சாய்ந்து, வியர்வை வாசனையை நன்றாக உள்ளிழுத்தாள். எதனாலோ அவளுக்கு ஓவென்று அங்கேயே அழுதுவிடவேண்டும் போல இருந்தது. பஸ்சின் சன்னலைப் பிளந்து வந்த காற்றில் இருந்த குளிர் வேறு ஒரு வித போதையை ஏற்றிற்று.

கன்னியாகுமரியில் பஸ்சை விட்டு இறங்கியதும் அழுக்கடைந்த வேட்டி சட்டை அணிந்த ஒருவர் ”ரூம் வேணுமா சார்..பேமிலி ரூம்..குறைந்த வாடகை” என்றபடி அவர்களின் பின்னால் வந்தார். குமார் அவரை அஞ்சியவனாக ”வேண்டாம்..நாங்க சாமி கும்பிட்டு போயிடுவோம்” என்று  சொன்னான். அவர் விடாமல் துரத்தி வந்தார். அவரிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கோவில் வாசல் வந்து சேர்ந்தார்கள். அவள் அவன் கைகளை கோர்த்துக்கொண்டாள். அத்தனை உறசாகத்தை அவள் சமீபத்தில் அடைந்ததே இல்லை. முகத்தில் அறைந்து கூந்தலோடு சண்டைபோடும் காற்றை வாங்கி, பொங்கி நுரைத்து வந்து மோதும் அலைகளை வெறித்து நின்றாள். அதற்குள் இரண்டு ஜோசியக்காரர்களும் நான்கு போட்டாக்காரர்களும் அவர்களை நிற்க விடாமல் செய்தனர்.

கன்னியாகுமரி அவளுக்கு வேறோரு நாடு போன்றே தோன்றிற்று. எவ்வளவு அழகான ஆண்கள் பெண்கள் குழந்தைகள். மலையாளிகளைப் பார்த்து மெல்ல பொறாமை கூட அவளுக்கு ஏற்பட்டது. இத்தனை வெண்மையும் இத்தனை நறுவிசும் கொண்டவர்களும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்களா? ஆரல்வாய் மொழி தாண்டியதும் தன் மனத்தில் எழுந்த ஆச்சரியம் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதைக் கவனித்தாள். கல்லுாரிப் பட்டாளம் ஒன்று கொந்தளிக்கும் அலைகடல் போல ஆனந்தத்தில் கும்மாளம் இட்டுக்கொண்டே கடந்து சென்றது. தான் வாழ்நாளில் ஒரு நாளாவது இப்படி மனம்விட்டு சுற்றுப்புறம் குறித்த கவலைகள் அற்று உற்சாகத்தோடு சிரித்திருக்கிறோமா? பணத்தை விடவும் வேறு சிலவும் பெண்களை முடக்கிப்போடுகிறது. அச்சம், மடம், நாணம் என்று அதை விதந்தோதுவதில் காரணங்கள் உள்ளது.  தேவதை என்றும் தெய்வம் என்றும் அன்னை என்றும் ஆண்கள் மண்டியிடுவதன் பின்னால் உள்ள சூட்சுமங்கள் அவை.

அவன் பேசிக்கொண்டே இருந்தான். இரண்டுமாதங்களில் அவனின் இருபத்தைந்து வருட வாழ்க்கையும் அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. பெற்றோர்கள் மறைவிற்குப்பின் அநாதை விடுதியில் தங்கிப் படித்து வளர்ந்த கதைதான் அதில் மிகுதியும். அவன் கதையைக் கேட்கும்போதெல்லாம்  அவளுக்கு அவன்மேல் விருப்பம் அதிகரித்து வந்தது. மணலில் கால்கள் புதைய அலைந்தார்கள். மாங்காய் பத்தைகளை மிளகாய்ப்பொடி துாவி வாங்கி உண்டார்கள். காந்தி மண்டபத்தின் மறைவிடமொன்றில் அவள் அவனை முதல் முதலாக முத்தமிட்டாள். முத்தம் அவளை தன்னிலை அழிக்கத் துாண்டிற்று.

மாலையில் அவன் கிளம்பலாமா என்று கேட்டபோது அவள்தான் ”ரூம்போடேன்” என்றாள். அதைக்கேட்டு அவன் நடுங்கினான். ”ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கக் கூடாது” என்றான். ”என்ன பிரச்சினை..ஒரு அரைமணி நேரம்..உடனே கிளம்பிரலாம்”

”அவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா”

”அதைப்பத்தி உனக்கென்ன”

”எனக்குப் பயமா இருக்கு”

அவன் போலியான முகவரியில் ஒரு அறையை எடுத்தான். நான்காம் தளத்திற்கு லிப்டில் சென்றார்கள். வரிசையாக இருந்த அறைகளில் கடைசி அறையை திறந்துகொடுத்தான் ரூம் பாய். ”எதுனா வேணும்னா 15க்கு போன் பண்ணுங்க”

எல்லாம் பத்தே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஏன் பெண்ணுடலைக் கண்டு இத்தனைப் பதறுகிறார்கள்? தாள் நீக்கி வரவேற்பறைத் தாண்டி படுக்கையறை வரை தாக்குப்பிடிக்க முடியாத பதற்றம்? நிறைவின்மை அவளைக் கடுமையாக சோர்விற்குள் தள்ளிற்று. அடிவயிற்று வலியோடு அவனை வியர்வை நனைக்க போர்வைக்குள் கட்டிக்கொண்டாள். ”எதுக்கு பயந்து நடுங்கற..நிதானமா இருந்தாத்தான் நல்லாருக்கும்“ என்று மட்டும் அவன் காதோடு கிசுகிசுத்தாள்.

”உன்னை மாதிரி எனக்கு நிறைய அனுபவம் இல்லையே..அதான்” என்றான் குமார்.

சட்டென்று அவள் சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருப்பதைப்போல திடுக்கிட்டாள். அவன் குரல் வேறு ஒருவனுடையதாக மாறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *