கல் முகை

 

பொழுது பன்னிரெண்டைத் தாண்டியிருக்கும். பௌர்ணமி நிலவினை ஏறிட்டுப் பார்த்தான். பளீரென்ற வெண்மை கண்களைக் கூசச் செய்தது. நிலவினைச் சுற்றி ஒளி வட்டம் வேறு.  மேகங்கள் அற்ற ஒளிர் வானம். தென்னை மரம் அவனிடம் எதையோ கேட்க ஏங்குவதைப்போலத் தோன்றியது. செண்பகத்தை எங்கே என்று அதுவும் கேட்க விரும்புகிறதோ?

சதுரவடிவ அங்கணக் குழி. தென்பகுதியில் ஆளுயுர சிமிண்ட் தொட்டி. பச்சை படிந்த நீரிலும் நிலா மிதந்தது. நீர்த்தாரை செல்லும் வழியில் தென்னைமரம். புடைத்து அகலித்த வேர்கள் கொண்ட வட்ட மண்மேடு. சுவரை அடுத்து தோட்டம். பப்பாளி, செம்பருத்தி, கத்திரி, தக்காளி, துாதுவளை, அவரைப்பந்தல் என. அப்பா அவருக்குத் தோன்றியதையெல்லாம் வாங்கி விதைத்திருந்தார். ஒன்றுக்கொன்று சம்பந்த மில்லாமல். அவை பராமரிக்கப்படாமல் தான்தோன்றித்தனமாக கிளைத்திருந்தன. பகலில் உள்ளே செல்லவே அச்சமாக இருக்கும். நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள வீட்டுத்தோட்டம் என்பதால் பாம்புகளை எண்ணிப் பயங்கொள்ளத் தேவையில்லை. ஆனால் தெண்டில்கள், பூரான்கள், பாம்புராணிகள், குளவிகள், தேனீக்கள் இருக்கும். தோட்டத்திற்குள் இருந்து சில்வண்டுகள் ரீங்கரித்தன.

தார்சா இருண்டிருந்தது.  அழி மரக்கம்புகளுக்கு இடையே சதுர வடிவச் சன்னல்கள் பௌர்ணமி ஒளியில் தெரிந்தன. ஐந்து அறைகளைக் கொண்ட மட்டப்பா வீடு. முன்னும் பின்னுமாக அவை பிரிந்திருந்தன. மத்தியில் சமையல்கட்டு. குத்தாலிங்கத்திற்கு திருமணம் நடந்து முடிந்த பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட ஏற்பாடு. அப்பாவும் அம்மாவும் முன்னறைகளில். குத்தாலிங்கமும் செண்பகமும் பின்கட்டுகளில். பொதுவாக சமையல் அறை. செண்பகம் இருந்த வரை அம்மா சமையல்கட்டிற்குள் அவளை அனுமதிக்கவில்லை. செண்பகத்திற்கு அசைவம் மட்டுமே நன்றாக சமைக்கவரும். அவள் வைத்த மீன்குழம்பு ஊரெல்லாம் மணக்கும். மீன் இல்லாமல் அவளுக்கு உணவு இறங்குவதில்லை. குறைந்த பட்சம் சாளையோ, அயிரையோ,நெத்திலியோ வேண்டும். அம்மாவிற்கு அசைவம் சமையல்கட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாத அசம்பாவிதம். அதுவே பின்னர் எல்லாவற்றிற்கும் காரணம் என்றானது. வந்த நாளில் இருந்து செண்பகம் அழுதுகொண்டே இருந்தாள். அறைக்குள் மட்டுமே தோன்றி இருளுக்குள் கரைந்து சுவருக்குள் புதையும் அழுகைகள். நெய்யாற்றின்கரையில் இருந்து வேரோடு பிடுங்கி நடப்பட்டாலும் மண் பாவாத இருப்பு. குத்தாலிங்கத்திற்கு அதையெல்லாம் பொருட்படுத்த நேரமே இருப்பதில்லை.

 காலையில் ஏழுமணிக்கு எழுந்திருப்பான். கரித்துாளை உள்ளங்கைக்குள் கொட்டி தேய்த்தபடியே நாராயணப்பேரிக்குச் செல்வான். குளத்தின் கரையில் அமர்ந்தவாறே பல்லைத்தேய்த்து காலைக்கடன்களை முடித்து விட்டு, குளித்து வீடு திரும்புவான். கும்பா நிறைய பழைய சோறு தளும்பி நிற்கும். முந்திய நாளைய சுண்டக்கறியோ, பொட்டுக்கடலைத் தேங்காய்த் துவையலோ கிண்ணத்தில். சாப்பிட்டு பித்தளைத் துாக்குச்சட்டியை கையில் எடுத்துக்கொண்டு முந்தல் மலையை நோக்கி நடையைப் போடுவான். சாயங்காலம் தலை நிறைய விறகுக்கட்டோடு திரும்புவான். வரும்போதே தேரடிக்குச் சென்று வந்திருப்பான். இரவு உணவிற்கு முன்னர் தோட்டத்திற்குள் சென்று கஞ்சாவை இழுப்பான். வீடெல்லாம் அந்த நாற்றம் நிறையும். செண்பகத்தின் முகம் அப்போதே பேயைக் கண்டது போல கோணிக்கொள்ளும். துக்காரம் பிள்ளை வளசல் மழுக்க புகை மூளும். அவர் இரண்டு கைகளிலும் பீடியைப் பற்றி மாறி மாறி இழுப்பார். “தாயோளி..இவனுக்கு ஒரு போக்காலம் வரமாட்டேங்கே”. தரை குலுங்க குத்தாலிங்கம் கெக்கெலிச் சிரிப்போடு அறைக்குள் நுழைவான். சிம்னி விளக்கினை ஊதி அணைப்பான். அறை இருளுக்குள் இருந்து கைகள் முளைத்து அவனைக் கிளர்ச்சி ஊட்டும். ஓராயிரம் விழிகளும் உதடுகளும் அவனைக் கண்சிமிட்டி அழைக்கும். மல்லிகையும் சாமந்தியும் மணக்கும்.  இருட்டிலும் ஒளிரும் தொடைகளும், மயிரடர்ந்த புழையும், கைகள் நிறைந்த முலைகளும் கொண்டவளாக மட்டுமே செண்பகத்தை அவன் அறியத் தொடங்கினான். விடிய விடிய அழுதுகொண்டே அருகில் படுத்திருப்பாள். அவனுக்கு அவ்வழுகை எங்கோ வெகுதொலைவில் இருந்து கேட்பதாகத் தோன்றும்.

மாப்பிள்ளை வீடு பார்க்க நெய்யாற்றின்கரையில் இருந்து செண்பகத்தின் அப்பாவும் மாமாவும் வந்திருந்தனர். செண்பகத்தின் அம்மா இரண்டு பெத்த பின்னர் ஜவுளி விற்க வந்த பாண்டிக்காரனோடு ஓடிப்போனாள். செண்பகத்தை அவளின் பாட்டியே வளர்த்தாள். குத்தாலிங்கத்திற்கு பாதித் தெரு சொந்தமாக இருந்தது. அவன் அப்பா நாற்பத்தெட்டு தறிகளை நெய்து கொண்டிருந்தார். கைத்தறிச் சேலைகளும், வேட்டிகளும், கைலிகளும் மாறி மாறி நெய்யப்பட்டன. ஊடுபாவுகளுக்குள் பெருச்சாளிகளைப்போல நாடாக்கள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. தறிகள் ஓடும் சப்தம் தெருமுழுக்க கேட்டுக்கொண்டே இருக்கும். காந்திபஜாரில் அவருக்கு ஒரு ஜவுளிக்கடையும் இருந்தது குத்தாலிங்கத்தின் அம்மா வழியில் தோட்டம்துரவுகளுக்கு குறைவில்லை. அரிசியும் காய்கறிகளும் வெளியே வாங்க வேண்டிய தேவையே இல்லை. செண்பகம் “உன்னோட அம்ம வெலிய தம்புராட்டி போல” என்றாள் வந்த முதல்நாளே. நிமிர்ந்த நெஞ்சும் பின்னால் கட்டிய கைகளுமாக குத்தாலிங்கத்தின் அம்மை தெருவில் சாதாரணமாக நடந்து வருவாள்.

சொத்திற்கு ஆசைப்பட்டே மகளைக்கொடுக்கத் துணிந்தனர். குத்தாலிங்கத்தின் சேட்டைகள் ஊர் அறிந்தது. செண்பகத்தின் அப்பா காதிற்கும் அவை சென்றன. எல்லாம் ஒரு கால்கட்டைப் போட்டால் சரியாகிவிடும் என்று அவரும் நம்பினார். இரண்டு தலைமுறைக்கு இருந்து தின்ன சொத்திருக்கே என்றும் கணக்குப்போட்டார். பதினெட்டு வயதில் இருந்து குத்தாலிங்கம் கஞ்சாக்குடிக்கு அடிமையானான். எந்த வேலைக்கும் போவதில்லை. வீட்டில் ஓடும் தறிகளுக்கு பாவெடுத்துக்கொடுத்தல், நெய்த உருப்படிகளை சிட்டையில் ஏற்றி கூலி பட்டுவாடா செய்தல் போன்ற எந்தச் செயல்களிலும் அவனுக்கு ஆர்வம் இருந்ததில்லை. கஞ்சாக்குடிக்கு பணத்தட்டு ஏற்பட்ட நாட்களில் தறிகளில் இருந்த பாவினை குறுக்கே நறுக்கி காந்திபஜாருக்குக் கொண்டு சென்று அணாக்கணக்கிற்கு விற்றுவிடுவான். கஞ்சாவெறியில் அவன் போடும் கூச்சல்களுக்கு அஞ்சியே அவன் வீட்டுத் தறிகளுக்கு நெய்துகொடுக்க வந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. பாவோடும் வீதிகளில் குத்தாலிங்கத்தின் கால்கள் பாய்ந்தோடி அலைந்தன.

அம்மா செண்பகத்தின் கூந்தலைப் பிடித்து ஆட்டினாள். செண்பகம் இறுகிய முகமும் நிலைத்த விழிகளும் கொண்டு கற்சிலை போல அசைய மறுத்தாள். நெஞ்சில் எற்றி தரையில் விழத்தட்டினாள் அம்மா. அந்நிலையிலும் செண்பகத்தின் முகம் மாறாதிருந்தது.

“சம்பாதிக்கத் துப்பத்தவனுக்கு கொழந்த ஒரு கேடா…அதான் கலைச்சேன்…என்னை என்ன செய்தாலும் சரி..உனக்கு ஒரு வாரிசு என் வயித்தில வளர விடமாட்டேன்”

செண்பகம் உறுதியாக இருந்தாள். அந்தச் சண்டையின் போதுதான் குத்தாலிங்கத்திற்கு அவள் உண்டாகி கலைத்த விஷயமே தெரியவந்தது. அப்பாவைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றவள் இரண்டு மாதங்கள் கழிந்த பின்னும் ஊர் திரும்பவில்லை. பலமுறை இங்கிருந்து ஆள் அனுப்பியும் பார்த்தாயிற்று. செண்பகம் திரும்ப வருவதற்கான அறிகுறிகளே இல்லை.குத்தலிங்கம் நெய்யாற்றின்கரைக்குச் செண்பகத்தை தேடிச்சென்றான். அவளின் உறவுக்காரர்கள் அவனை பஸ் நிறுத்தத்திலேயே அடையாளம் கண்டு கொண்டு நையப் புடைத்தனர். வீங்கிய முகமும் கிழிந்த உதடுகளுமாக வீடு திரும்பியவனை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் அன்றிரவு அவன் கஞ்சாவைத் தொடவில்லை. செண்பகத்தை நிரந்தரமாக இழந்துவிட்டோமா என்ற துயரம். கேவிக் கேவி அழுதான். இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. விறகுவெட்டவும் போகவில்லை. பீடை பிடித்தவன் போல அறைக்குள் அடைந்து கிடந்தான்.

செண்பகத்தின் மாமா வந்திருந்தார். வாசலைத் தாண்டி வீட்டிற்குள் வரமறுத்தார். தெருவில் ஆட்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். தெருவை நிறைத்து தெருக்காரர்கள் பாவாற்றிக்கொண்டிருந்தனர். தெருவை இரண்டாகப் பிளந்தவாறு கிடந்த பாவினை கஞ்சியால் நனைத்து கம்பு கொண்டி தட்டிக் காயவைத்தனர்.

“உள்ளே வாங்க..அத்தான்..சண்டைக்காரஹ மாறி வெளியே நின்னா எப்பிடி?”

ஊர்த்தலைவரை கூட்டி வந்தார் செண்பகத்தின் மாமா. அம்மா அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என் மகனுக்கு அவ இல்லாட்டி ஆயிரம் பேரு இருக்காளுக என்று எண்ணிக்கொண்டாள். அப்பாதான் இருவரையும் மர நாற்காலிகளில் அமரச்செய்தார். பித்தளை தம்ளர்களில் மண்டோலக் காப்பிகள் புகைந்தன.

“முடிவா என்ன சொல்லுதீக..”

“ என் மருமகளுக்கு ஒரு பிடிமானம் வேணும். இத்தனை சொத்துல ஒரு வீட்டை மட்டும் அவ பேருக்கு நீங்க எழுதித்தரணும்…உங்க மகனோட நிலைமை என்னென்னு உங்களுக்கு நல்லாத்தெரியும். நாளப்பின்ன பிள்ள குட்டிகனு ஆயிட்டா அதுகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் பாத்துக்கிடுங்க..நீங்க சம்மதிச்சா நாளைக்கே செண்பகத்தை நான் இங்க  கூட்டிட்டு வர்றேன்”

சமையல் கட்டிற்குள் நின்று தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த அம்மா வெறியேறி வெளியே வந்தாள்.

“நல்லாருக்குவே..உங்க ஞாயம். நாங்க உயிரோட இருக்கற வரைக்கும் அது நடக்கற காரியம் கிடையாது…..சொத்த எழுதிக்கொடுத்தாத்தான் வாழ வருவேன்னு சொல்லுறது நல்ல குடும்பத்துப் பொண்ணுக்கு அழகல்ல.. அவிசாரித்தனம்..இதுக்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்.”

குலுக்கைக்கு நடுவே அம்மாவைத்தள்ளி, விறகுக்கட்டையால் குத்தாலிங்கம் படீர் படீரென சாத்தும் போதெல்லாம் இதையே நினைத்துக்கொள்வான். ஒரு வீட்டைத்தானே எழுதித்தரக் கேட்டாள். எழுதிக்கொடுத்திருக்கலாம் தானே..என்ற ஆதங்கம் பொங்கும். செண்பகம் விட்டுப்  போன் பிறகு குத்தாலிங்கம் மேலும் சீரழிந்தான். கஞ்சா அதிகரித்தது நாள்பட நாள்பட மனச்சிதைவிற்கு அவனைக் கொண்டு சேர்த்தது. தேரடித் தெரு மீனாட்சியைத் தேடிப்போனான். குறி வாய் நிரந்தரமாக காந்த ஆரம்பித்தது. சிறுநீரோடு குருதியும் கலந்து வந்தது. குத்தாலிங்கம் கைகளுக்குத் திரும்பினான்.

கால்களை ஆட்டிக்கொண்டே படுத்திருந்தவன் எழுந்தான். ஆட்கள் நடமாட்டம் குறைந்து தெரு சடைந்திருந்தது. வேட்டியை உதறிக்கட்டிக்கொண்டான். செண்பகத்தை கனவில் கண்டு பதறி விழித்திருந்தான். தலைவிரி கோலமாக அழுது சிவந்த முகத்தோடு செண்பகம் அவன் மாரில் ஏறி அமர்ந்திருந்தாள். எப்போதாவது செண்பகம் அவன் கனவுகளில் இவ்விதம் வருவதுண்டு. செண்பகத்தின் சாயலில் உள்ள ஒருத்தியை வாசுதேவநல்லுாரில் மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழாவில் ஒருமுறைக் கண்டான். அவளைப் பின்தொடர்ந்து அவள் வீடு வரைச்சென்றான். மளிக்கைக்கடைக்காரரின் மனைவி அவள். செண்பகத்தின் நினைவுகள் அவனை நிலைகொள்ள விடாமல் அலைக்கழிக்கும் நாட்களில் அவன் வாசுதேவநல்லுாருக்கு தேடிச் செல்வான். மளிகைக்கடையை தெரு முக்கில் இருந்து நோட்டம் விடுவான். செண்பகம் வீட்டு வாசலில் அமர்ந்து சொலவில் பீடி சுற்றிக்கொண்டிருப்பாள்.

அன்றும் குத்தாலிங்கம் கிளம்பிச் சென்றான். அவன் செல்லும் வழியெல்லாம் செண்பகத்தின் வாசனை நிறைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *