கமலி பள்ளிப் படிப்பை முடித்து, புதுப் பருவத்தின் வாசலில் நின்றாள். அவளின் முகத்தில் இன்னும் சிறுமித்தனம் துள்ளிக் கொண்டே இருந்தது. ஆனால், கண்களில் மட்டும் புதிதாய் மலரத் தொடங்கியது ஒரு ரகசியத் தோட்டம்.

மாலையில் மழைபெய்து முடிந்த பின்னும் மண்ணின் வாசனை காற்றில் கலந்தேயிருந்தது. அந்த நேரத்தில்தான் கமலி, தன் வீட்டின் பின்புறம் இருக்கும் பழைய கூடத்துக்குள் சென்றாள். அங்கே மண்ணில் பாதி புதைந்து கிடந்தது சிறிய கண்ணாடிச் சில்.

அதை எடுத்தாள். அதில் மங்கலான ஒளி உள்வாங்கிச் சென்றது. அவளே அறியாமல் அவள் அதை “மாயா…” என்று அழைத்தாள். தன் முகத்தை அதில் பார்த்தாள். அந்தச் சில் அவள் முகத்தை மட்டும் காட்டவில்லை. அவள் உள்ளத்தையும் திறந்து காட்டியது.

அந்தக் கண்ணாடியில், கமலி சிறுமியாக இல்லை, மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு மொட்டாகத்தான் தோன்றினாள்.

அவளது கன்னங்கள் மாலை சூரியன் தொட்ட ரோஜாப்பூவின் ஓரங்கள் போல சிவந்தன. அவள் தன்னையே பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் வெட்கம் கலந்திருந்தது.

மாயா அவளிடம், “நீ இப்போது வேறொரு பருவம்… உன் இதயத்தில் புதிதாய்த் திறக்கப்படும் கதவுகளை நீயே இன்னும் அறியவில்லை…” என்று கிசுகிசுத்தது

கமலி திடுக்கிட்டாள்.

அவள் மார்புகளுக்குள் மெதுவான அதிர்வு. அது அச்சமில்லை ஆனால் அது அமைதியும் இல்லை. 

அந்தக் கண்ணாடியில் அவள் கண்கள் இன்னும் ஆழமாகத் தெரிந்தன. அந்தக் கண்களில் முதல் காதல் மழையைப் பொழியத் தொடங்கும் மேகங்கள் போல எவையோ படர்ந்திருந்தன.

அவள் தன் தலைமுடியைத் தொட்டாள். தன் கன்னங்களை மெதுவாக விரல்களால் தடவினாள். 

அவளுக்கே தெரியாமல் அவள் தன்னையே உணரத் தொடங்கினாள்.

“இது நான் தானா…?” எனத் தன்னிடமே கேட்டுக்கொண்டாள்.

மாயா அமைதியாக இருந்தது. ஆனால், அதன் அமைதி ஒரு கவிதை போல அவளுக்குள் ஒலித்தது. அவள் திடீரென்று வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

அந்தச் சில் அவள் மனத்தில் மறைத்து வைத்திருந்த சிறு கனவுகளைத் தோண்டியெடுத்து ஒளியில் நிறுத்தியது.

அவள் கண்களை மூடினாள். மீண்டும் திறந்தாள். அந்தப் பார்வையில் ஒரு புதுப் பெண் பிறந்திருந்தாள். 

“வேண்டாம்…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள்.

அந்த உணர்வு அவளுக்குப் புதிது.

அதை எப்படிச் சமாளிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஒரு நிமிடம் அவள் மாயாவைத் தன் நெஞ்சோடு அணைத்தாள்.

அடுத்த நிமிடம் அதைத் தூக்கி எறிந்துவிட்டாள்.

சில் மண்ணில் விழுந்தது. ஆனால் அதன் ஒளியோ கமலியின் உள்ளத்தில் தங்கி விட்டது.

அவள் மெதுவாக நடந்தாள். ஆனால் அவள் நடந்தது அந்த கூடத்திலிருந்து அல்ல… ஒரு குழந்தைத் தனத்திலிருந்து ஒரு புதிய பருவத்திற்குள். 

அன்றிரவு கமலிக்குத் தூக்கம் சரியாக வரவில்லை. வீட்டின் மேல்மாடி ஜன்னலில் இருந்து நிலவொளி உள்ளே வந்து அவள் படுக்கையின் ஓரத்தில் வெள்ளி நிழல்களை வரைந்தது.

அவள் கண்களை மூடினாள்… ஆனாலும் அவள் மனம் விழித்திருந்தது.

அவள் அந்தச் சில்லை அப்போதே தூக்கி எறிந்துவிட்டாலும் இப்போது அவரை அவளுக்கு அதை விடுத்துவிட்ட உணர்வு இல்லை. 

அது இன்னும் அவளுக்குள் அவள் மூச்சின் நடுவே, இதயத்தின் இடைவெளிகளில், மெல்ல ஒளிந்து கொண்டுதானிருந்தது.

“நான் ஏன் அப்படிச் செய்தேன்…?” என அவள் தன்னிடமே கேட்டாள்.

அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால், அந்தக் கேள்வி அவள் உள்ளத்தில் ஒரு கதவைத் திறந்தது. அவள் திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டாள். 

திடீரென்று அவளது விரல்கள் தன் கன்னங்களைத் தொட்டன. மாலையில் ‘மாயா’ காட்டிய அந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்த முகம்… அவளுடையதேதான். ஆனால், அது இப்போதுதான் பிறந்த ஒரு ரகசியம் போலிருந்தது. அந்த ரகசியம் ஒரு மெல்லிய தீப்பொறி. தெரியாமல் அது அவள் மனத்தின் உலர்ந்த இலைகளைத் தொடத் தொட மெல்ல எரியத் தொடங்கியது. இரவு முழுவதும் அவள் அந்த ரகசியத் தீயில் எரிந்துகொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலையில் கமலி வழக்கம்போல் எழுந்தாள். ஆனால், அவளது நடை வேறுபட்டது.

அவள் கண்ணாடி முன் நின்றாள். இந்த முறை வீட்டுக்கண்ணாடி அது அவளை அப்படியே காட்டியது. ஆனால், மாயா காட்டிய அந்த ஆழம் இதில் இல்லை.

“இது நான் இல்லை…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள். அந்தச் சொல் அவளுக்கே புதிதாக இருந்தது.

மாலை வந்தது. மழை மீண்டும் மேகங்களில்கூடி நின்றது.  அவள் மனமும் அதுபோல எதையோ எதிர்பார்த்து நிறைந்தது.

திடீரென, அவளின் கால்கள் தானாகவே அந்தக் கூடத்துக்குச் சென்றன.

“இல்லை… போகக்கூடாது…” என்று மனம் சொன்னது.

ஆனால்… அவள் ஏற்கனவே அங்கே இருந்தாள். மண்ணில் மெதுவாகத் தேடினாள். அந்தச் சில் கிடந்த இடம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவள் வலக்கால் கட்டை விரலால் மண்ணை ஓரமாக நகர்த்தினாள். மண்ணின் கீழே மங்கலாக ஒளிந்திருந்தது அந்த ‘மாயா’. அதை எடுத்தாள். 

இந்த முறை அவள் கை நடுங்கவில்லை. அதை மெதுவாகத் தன் கண்களுக்கு முன் கொண்டுவந்தாள். மீண்டும்… அதே உலகம். ஆனால் இப்போது அது இன்னும் ஆழமாக இருந்தது.

அந்தக் கண்ணாடியில், கமலி மட்டும் இல்லை. அவளுக்கு அருகில் ஒரு நிழலும் இருந்தது. ஆனால் அது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அது இருந்தது. அவள் சற்றுத் திடுக்கிட்டாள்.

“யார்…?” என அவள் மெதுவாகக் கேட்டாள்.

மாயா பதில் சொல்லவில்லை.

ஆனால் அந்த நிழல் அவளது பார்வையைத் தொட முயன்றது போல இருந்தது.

அவள் மூச்சு சற்று வேகமானது.

அந்த நிழல் ஒரு மனித உருவமா…? அல்லது அவள் மனத்தில் இன்னும் பெயரிடப்படாத ஓர் உணர்வா…?

அவள் தன் மார்பில் ஒரு புதுமையான துடிப்பை உணர்ந்தாள்.

அது பயமா…? அல்லது… எதிர்பார்ப்பா…?

மாயா மீண்டும் அவளிடம், “நீயே உன்னை அறிந்துகொள்ளும் முன் யாரோ உன் உள்ளத்தில் வந்து நிற்பார்கள்…” என்று கிசுகிசுத்தது.

கமலி கண்களை மூடினாள். அந்த நிழல் அவள் மனத்தில் தெளிவாகத் தோன்றத் தொடங்கியது. முகம் இல்லை. ஆனால் ஓர் உணர்வு இருந்தது.

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் பயமும் இருந்தது, ஆனால் அதைவிட அதிகமாக ஓர் இனிய குழப்பமும் இருந்தது.

“நான் மாறுகிறேனா…?” என அவள் தன்னிடம் கேட்டாள்.

மாயா இந்த முறை மௌனமாக இல்லை. அதன் ஒளி அவள் கண்களில் பிரதிபலித்தது. அவள் அந்தச் சில்லைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

இந்த முறை அவள் அதை எறிந்துவிடவில்லை.

மழை தொடங்கியது. மண்ணில் விழும் துளிகள் அவள் இதயத்தின் துடிப்பைப் போல ஒலித்தடங்கின.

அந்த மழையில் ஒரு புதிய கமலி மெதுவாக உருவாகிக் கொண்டிருந்தாள்.

அவள் இன்னும் குழந்தை இல்லை. ஆனால், இன்னும் முழுமையான பெண்ணும் இல்லை.

ஓர் இடைவெளி. ஒரு பாலம். மலர்கின்ற ரகசியம். அந்த ரகசியத்தின் பெயர் இன்னும் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அது மாயாவுக்குத் தெரியும்.

மழை அந்த மாலை முழுவதும் பொழிந்தது. துளிகள் மண்ணில் விழுந்து உடைந்து,

மீண்டும் வாசனையாக ஆகாயத்துக்கே ஏறின.  அந்த வாசனை கமலியின் உள்ளத்தில் எழுந்த புதிய உணர்வுகளைப் போல இருந்தது. தொட்டால் உடையும்… ஆனால் மறந்தால் மறையாதது.

அவள் கூடத்தின் ஓரத்தில் நின்றாள். கையில் மாயா. இந்த முறை அதைப் பார்க்கும் அவளது கண்களில் துணிவு இருந்தது.

“நான் யாரை பார்க்கப் போகிறேன்…?” என்று அவள் தன்னிடமே மெல்லக் கேட்டுக் கொண்டாள்.

மாயா அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்குள் ஓர் அழைப்பு இருந்தது.

அவள் மீண்டும் தன் முகத்தை அதில் பார்த்தாள்.

முதலில் அதே கமலி. மழைத் துளிகள் தொட்ட மல்லிகைப்பூ போல மென்மையான முகம். ஆனால்… அதற்குப் பின்— மெல்ல… அந்த நிழல் தெளிவாகத் தோன்றத் தொடங்கியது. இப்போது அது வெறும் நிழல் இல்லை. ஓர் உருவம்.

அவளுக்கு அருகில் நின்றது போல. கமலியின் மூச்சு தடுக்கியது. அவள் கண்களை அகலத் திறந்தாள்.

“யார் நீ…?” எனக் கேட்டாள்.

அந்த உருவம் பேசவில்லை.

ஆனால் அதன் அருகண்மை வெப்பம் போல அவளுக்குள் பரவியது. குளிர்ந்த மழையில் திடீரென்று கைகளைச் சூடாக்கும் நெருப்பைப் போல. அவள் தன் விரல்களை மெதுவாகச் சுருக்கினாள்.

அந்த உருவம் அவள் கையைப் பிடிக்கப் போகிறதா…? அல்லது அவளே அதைத் தொட விரும்புகிறாளா…? அவள் புரியாமல் நின்றாள். ஆனால்… அவள் உள்ளம் ஏற்கனவே பதில் சொல்லத் தொடங்கியது.

மாயா அவளிடம், “அவன் வெளியுலகில் இல்லை… முதலில் அவன் உன் உள்ளத்தில் பிறக்கிறான்…” என்று கிசுகிசுத்தது.

கமலி கண்களை மூடினாள். அந்த உருவம் இப்போது அவள் மனத்தில் தெளிவான அலைபோல அசைந்தது. அது இன்னும் ஒருமுகமாகவே இல்லை. ஆனால் ஓர் உணர்வு அவள் இதயத்தின் வாசலில் நின்று, மனக்கதவினைத் தட்டியது. 

அந்த உணர்வு மழைத்துளி மண்ணில் விழும் அந்த நொடி போல இருந்தது. மீச்சிறியது. ஆனால் அதற்குள் ஓர் உலகம் இருந்தது. அவள் மெதுவாகச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் வெட்கம் பூத்து மலர்ந்தது. அவள் கன்னங்கள் மீண்டும் சிவந்தன.

“இது… காதலா…?” என அவள் தன்னிடமே கேட்டாள்.

அந்த வார்த்தை அவள் இதயத்தில் ஒரு பறவையாக வந்திறங்கியது. அந்த உருவம் அவள் அருகில் இன்னும் நெருக்கமாக வந்தது போல இருந்தது.

அவள் அதை உணர்ந்தாள். கண்ணால் பார்க்கவில்லை. ஆனால்… அவள் உள்ளம் பார்த்தது. அவள் தன் நெஞ்சுக்குள் ஓர் அலை எழுந்ததை உணர்ந்தாள். அது ஓர் அழைப்பு. ஓர் இழுப்பு. மழை வலுத்தது.

அந்த மழையோசை அவள் இதயத்தின் ஓசையோடு கலந்தது. அவள் திடீரென்று மாயாவைக் கீழே நழுவவிட்டாள்.

அவள் முகம் இப்போது மழையால் நனைந்திருந்தது. அவள் உள்ளத்தில் எழுந்த அந்த உணர்வுகளால் துளிர்த்தது. அவள் கைகளைத் தன் மார்புகளின் மீது வைத்துக்கொண்டாள்.

அந்தக்கணம் ஒரு புதிய உலகம் அவளுக்காகவே திறந்தது.

தரையில் விழுந்திருந்த மாயா ஒளிர்ந்தது. இந்த முறை அது ஒரு கண்ணாடி இல்லை. ஒரு கதவு. அந்தக் கதவின் மறுபுறம் யார் இருக்கிறார்கள்? அவளா…? அல்லது அவள் எதிர்பார்க்கும் யாரோவா…?

அவள் மெதுவாகக் குனிந்து ஒரு பூவை எடுப்பதைப்போல அந்தச் சில்லை எடுத்துத் தன் செவ்விய உதடுகளுக்கு அருகில் கொண்டுவந்தாள். ஒரு நொடி அதைத் தொட்டாள். அது ஒரு முத்தம் அல்ல. அது ஒரு சிறு தொடுகை. விரல்களால் தொடுவதைப் போல உதடுகளால் தொடுவதுதான் அது. அது முத்தமல்ல.

மழை நின்றது. கமலியின் உள்ளத்தில் ஒரு புதிய பருவம் ஆரம்பித்துவிட்டது. அந்த உருவம் இப்போது மறைந்தது. ஆனால் அது போகவில்லை. அது அவள் இதயத்தில் ஒரு விதையாகப் புதைந்தது. அந்த விதை எப்போது வளரும், மலரும்…?  அதை யார் பார்க்கப் போகிறார்கள்…? அல்லது அதை முதலில் உணரப் போவது கமலிதானா…? 

‘மாயா’ அமைதியாக இருந்தது. அதற்கு எல்லாம் தெரியும்.

மழை நின்ற பின் வானம் கழுவிய நீலத்தில் பிரகாசித்தது. கமலி வீட்டின் முன் நின்றாள். மரங்களின் இலைகள் துளி துளியாக ஒளியைத் தாங்கின. இலைகளில் படர்ந்திருந்த மழைமுத்துக்கள் மாலை ஒளியை உள்வாங்கிச் சுடரத் தொடங்கின. 

அவள் உள்ளமும் அப்படித்தான் ஒவ்வொரு நினைவும் ஒரு துளி, ஒவ்வொரு துளியும் ஓர் ஒளி.

அவள் மாயாவை மறைத்து வைக்கவில்லை. அதை விட்டுவிடவும் இல்லை. அது அவளது ரகசியம். அந்த நாள் அவள் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே சென்றாள். ஒரு புதிய உணர்வுடன். சாதாரணமாக நடந்த பாதைகூட இன்று வேறுபட்டது.

சாலை ஓரத்தில் இளைஞன் நின்றிருந்தான். அவள் கண்கள் அவனைத் தொட்ட அந்த நொடி அவள் இதயம் திடுக்கிட்டது. அவன் அந்த மாயாவில் கண்ட உருவத்தைப் போலவே இல்லை. ஆனால், அவனைப் பார்த்தவுடன் அந்த உணர்வு திரும்பி வந்தது. அவன் எளிய இளைஞன்தான்.

மெல்லிய புன்னகை. சாதாரண உடை. ஆனால் அவன் கண்களில் ஓர் அமைதி இருந்தது.  அந்த அமைதி கமலியின் உள்ளத்தில் ஏற்கனவே இருந்த அந்த அறியாத உருவத்துடன் இணைந்தது. அவள் பார்வையைத் திருப்பினாள். ஆனால், அவள் மனம் திரும்பவில்லை.

“இவர் யார்…?” என அவள் தன்னிடமே கேட்டாள்.

பதில் இல்லை.

ஆனால் அவள் இதயம் அவனை ஏற்கனவே அறிந்தது போலத் துடித்தது. அவள் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவள் கைகள் சற்று நடுங்கின. 

மாயாவை எடுத்தாள். பார்த்தாள். அதில் இப்போது அந்த உருவம் இல்லை. ஆனால், 

அந்த இளைஞனின் நிழல் மெல்ல அவள் அருகில் நின்றது. 

கமலி மெல்லச் சிரித்தாள்.

“அவரா…?” எனக் கேட்டாள்.

மாயா பதில் சொல்லவில்லை. ஆனால், அதன் ஒளி அவள் முகத்தில் விழுந்தது.

அவள் கன்னங்கள் மீண்டும் சிவந்தன. அவள் தன் உதடுகளை மெதுவாகக் கடித்தாள். 

அந்த உணர்வு இப்போது தெளிவாக இருந்தது. அது வெறும் ஆர்வம் மட்டுமில்லை.

மாலையில் அவள் மீண்டும் அந்தச் சாலையில் அவனைக் கண்டாள்.

இந்த முறை அவன் அவளைப் பார்த்தான். ஒரு நொடி. ஆனால், அந்த நொடியோ

ஒரு முழு பருவம் போல நீண்டது.

அவன் சிரித்தான். அது சாதாரண புன்னகைதான். ஆனால், கமலிக்கு அது அவள் உள்ளத்தின் கதவைத் தள்ளித் திறந்தது போல இருந்தது. 

அவள் தரையைப் பார்த்தாள்.  அவள் கால்கள் நகர்ந்தன. ஆனால், அவள் உள்ளமோ நகர மறுத்தது.

அந்த இரவு அவள் மாயாவைப் பார்த்தாள். அதில் அந்த இளைஞன் தெளிவாக இருந்தான். அவள் உற்றுப் பார்த்தாள். மெல்ல இமைகளைத் தாழ்த்திக் கண்களை மூடினாள். 

அவள் உள்ளத்தில் அவன் அருகில் வந்தான். அவன் பேசவில்லை. ஆனால், அவள் இதயம் அவனுடன் பேசத் தொடங்கியது. 

“நான் உன்னை ஏற்கனவே பார்த்திருக்கிறேனா…?” எனக் கேட்டாள்.

“நீ என்னை முதலில் உன் உள்ளத்தில்தான் பார்த்தாய்…” என்றான்.

கமலி தன் நெஞ்சுக்குழியின் மீது வலது உள்ளங்கையை மெல்ல வைத்தாள். அங்கே இரண்டு இதயத் துடிப்புகளை உணர்ந்தாள். 

மாயா அவள் கையில் ஒளிர்ந்தது. இப்போது அது கண்ணாடி இல்லை. ஒரு பாலம். 

உள்ளத்தையும் வெளியையும் இணைக்கும் பாலம். அந்தப் பாலத்தில் கமலி மெதுவாக நடக்கத் தொடங்கினாள். ஒரு பக்கம் அவள் பழைய உலகம். மற்றொரு பக்கம் அவள் இன்னும் அறியாத காதல்.

அந்தக் காதல் இப்போது பெயருடன் வந்தது. ஆனால், அது இன்னும் சொல்லப்பட வில்லை. அவள் உதடுகள் அந்தப் பெயரைச் சொல்லத் தயங்கின. ஆனால், அவள் இதயம் அதை ஏற்கனவே அழைத்துக் கொண்டிருந்தது. 

அடுத்த நாள் மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்தில் உருகியது. கமலி அந்தச் சாலையை நோக்கி நடந்தாள். அவன் அங்கேயே இருந்தான். இந்த முறை அவள் பார்வை தாழவில்லை. அவள் நேராக அவனைப் பார்த்தாள். அவன் சிரித்தான்.

“நீங்க… இந்த வழியாத்தான் தினமும் வர்றீங்களா?” என்று கேட்டான்.

கமலி சற்றுத் திணறினாள்.

“ஆம்…” என மெதுவாகச் சொன்னாள்.

“நான் அரவிந்த்…” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“கமலி…” என அவன் கேட்காமலேயே தன் பெயரைச் சொல்லிவிட்டாள்.

அவன் சிரித்தான். அவள் மெல்லச் சிரித்தாள். பின்னர் இருவரும் மெல்லச் சிரித்துக் கொண்டனர்.  அந்தச் சிரிப்பு ஒரு புதிய மொழி. வார்த்தைகள் இல்லாமல் பேசும் மொழி.

மாலை காற்று வீசியது. அவள் தலைமுடி சற்று விலகி அலைந்த. அவன் அதைக் கவனித்தான்.

அந்த ஒரு பார்வை கமலியின் உள்ளத்தில் மெல்லிய ஆசையலை எழுப்பியது. 

“நீங்க… படிப்பு முடிச்சிட்டீங்களா?” என அவன் கேட்டான்.

“ஆம்…” என்றாள்.

“அடுத்து என்ன பண்ணப் போறீங்க?”

அவள் பதில் சொல்லவில்லை.

“சரி… நாளைக்குப் பார்க்கலாமா?”

கமலி மெதுவாகத் தலையசைத்தாள்.

அவன் நகரத் தொடங்கினான். அவன் செல்ல செல்ல அவள் உள்ளம் அவனை இன்னும் இன்னும் நெருக்கமாக உணரத் தொடங்கியது.

அன்றைய இரவில் அவள் மீண்டும் மாயாவைக் கையில் எடுத்தாள். அதில் இப்போது அவர்கள் இருவரும் தெரிந்தனர். அவள் அருகில் அரவிந்த். அவன் அவளைப் பார்த்தான். 

இந்த முறை அவன் கண்களில் இருந்தது சிரிப்பு மட்டும் இல்லை. ஈர்ப்பும்தான்.

மென்மையான நெருக்கம். கமலி சற்றுத் தலைகுனிந்தாள். அவள் கன்னங்கள் வெட்கத்தில் மலர்ந்தன. 

மாயா மெதுவாக அவளிடம், “இப்போது நீ தனியாக இல்லை…” என்று கிசுகிசுத்தது.

அவள் கண்களை மூடினாள். அவள் உள்ளத்தில் அவன் அருகில் நின்றான்.  அவன் கையை நீட்டினான். அவள் அதை உணர்ந்தாள். அவள் தன் விரல்களை மெதுவாகச் சுருக்கினாள்.

உணர்வு மெல்லிய மின்சாரம் போல அவள் உடலெங்கும் ஓடி உடலையே விதிர்க்கச் செய்தது. அவளுக்கு மூச்சு முட்டியது.

“இது சரியா…?” என மாயாவிடம் கேட்டாள்.

மாயா மெல்லச் சிரித்துவிட்டு அவளிடம், “உணர்வுகள் சரி, தவறு தெரியாதவை. அவை மலர்வதை மட்டுமே அறியும்” என்று உரக்கக் கூறியது.

கமலி மெதுவாக மாயாவைத் தன் நெஞ்சோடு வைத்து, இறுக்கி அழுத்திக் கொண்டாள்.

அவள் இதயம் இப்போது வேகமாகத் துடித்தது.  அவளுக்கு இன்னும் முழுமையாகப் புரியாத ஓர் இனிய தீ அவளைப் பற்றிக்கொண்டது.

இன்று அவள் அங்குச் சென்றபோது அரவிந்த் அங்கேயேதான் இருந்தான். அவளைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒளி பரவியது. 

“நீங்க வந்துட்டீங்களே!…” என்றான்.

“வரணும்னு தோணிச்சு…” என்றாள்.

இருவரும் ஒன்றாக நடந்தனர். அந்தச் சாலையைப் போலவே அவர்களும்  அமைதியாகவே இருந்தனர். அவர்களுக்குள் மௌனம் பேசிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு மழை பிடிக்குமா?” எனக் கேட்டான்.

கமலி சற்றுத் தயங்கி, “முன்னாடி… தெரியாது… இப்போ… பிடிக்கும் போல…” என்றாள்.

அவன் சிரித்தான்.

“எனக்கும் அப்படித்தான்…” என்றான்.

அவர்கள் நடந்து நடந்து ஒரு மரத்தின் கீழ் வந்து நின்றனர். நேற்றைய மழைச் சரங்களைத் தாங்கிப் பிடித்திருந்த இலைகள் ஒவ்வொரு துளியாக நழுவ விட்டுக்கொண்டிருந்தன.

ஒரு துளி கமலியின் கையில் விழுந்தது. அதைப் பார்த்தாள். அந்தத் துளி சிறியதுதான். ஆனால், அதில் முழு வானமும் பிரதிபலித்தது. அரவிந்த் அவள் கையைப் பார்த்து, “குளிரா இருக்கா?” எனக் கேட்டான்.

அந்த அக்கறையான கேள்வி கமலிக்கு மென்மையான தொடுதல் போலவே இருந்தது.

‘ ‘ஆமாம்’ என்றால் கட்டியணைத்து வெப்பம் தருவானோ?’ என நினைத்துக் கொண்டே “இல்லை…” என்றாள்.

அப்போது அவள் உள்ளத்தில் வெப்பம் பரவத் தொடங்கியது. உடனே, ‘ ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கலாமோ?’ என நினைத்துக்கொண்டாள்.

ஒரு நொடிப் பொழுதில் அவன் கை அவள் கைக்கு அருகில் வந்தது. அந்த இடைவெளி மிகச் சிறியது. ஆனால், அந்தச் சிறிய இடைவெளிக்குள் பெரிய அலை எழுந்தது. கமலி தன் மூச்சை நன்றாக உணர்ந்தாள். 

அவன் மெதுவாக, “நம்ம இருவருக்கும்… ஏதோ ஒரே மாதிரி உணர்வு இருக்கு போல…” என்றான்.

அவள் மெல்லத் தயங்கி, “எனக்கும் அப்படிதான் தோணுது…” என்றாள்.

அவள் அதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த

அந்தத் தெரியாத கோடு மெல்ல அழிந்தது. காற்று சற்று பலமாக வீசியது. அவள் தலைமுடி அவன் கன்னத்தைத் தொட்டது.

“உள்ளத்தில் தொடங்குவதுதான் ஒருநாள் நிஜமாகிறது” என எங்கோ வெகு தொலைவிலிருந்து மாயா உரக்கக் கூறுவதைக் கமலி செவிமடுத்தாள்.

கமலி கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் உள்ளத்தில் அவன் அருகில் வந்தான். அவள் தன் கைகளை மெதுவாகச் சுருக்கிக் கொண்டாகள். அவள் இதயம் இப்போது வேகமாகத் துடித்தது. அந்தத் துடிப்பு ஓர் அழைப்பு. ஓர் ஒப்புதல். அவள் தன் நினைவால் மாயாவைத் தன் உதடுகளுக்கு அருகில் கொண்டுவந்தாள். இந்த முறை அது வெறும் தொடுதல் இல்லை. மெல்லிய முத்தம். அந்த முத்தம் கண்ணாடிக்கா…? அல்லது அவள் உள்ளத்தில் நின்றிருக்கும் அந்த உருவத்துக்கா…? என அது அவளுக்கே தெரியவுமில்லை, புரியவுமில்லை. ஆனால் அவள் உள்ளத்தில் ஒரு புதிய கதவு திறந்துகொண்டது. அந்தக் கதவின் மறுபுறம் காதல் மட்டும் இல்லை. 

மாயா அமைதியாக இருந்தது. அது இன்னும் ஆழமான பயணத்துக்கு அவளை அழைக்கத் தயாராக இருந்தது. அடுத்த சில நாட்கள் கமலியின் வாழ்க்கை ஒரு புதிய இசையைப் போல மாறியது.

ஒவ்வொரு மாலையும் அதே சாலை, அதே மரம். ஆனால், ஒவ்வொரு சந்திப்பும் வேறுபட்டது.

வானம் மேகமின்றி அமைதியாக இருந்தது. 

அவன் “கமலி…” என அழைத்தான். அவள் அவனைப் பார்த்தாள்.

“நான் உன்னைப் பார்க்காத நாளே இல்ல…”

“எனக்கும் அப்படித்தான்…”

அவர்கள் இருவரும் மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளி மௌனத்தால் நிரம்பவில்லை, உணர்வுகளால் நிரம்பியது.

“நீ என்ன நினைக்கிறேன்ணு எனக்குத் தெரியும்?” என்றான்.

“எப்படித் தெரியும்…?” எனக் கேட்டாள்.

“நம்ம இருவருக்கும் நடக்குறது… சாதாரணமில்லைன்னு நினைக்கிறேன்…” என்றான்.

“அது… பயமா இருக்கு?” என்றாள்.

“ஆனா… நான் இதை விட்டுவிட விரும்பலை…” என்றான்.

“நானுந்தான்” என்றாள்.

அந்த நொடியில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த அந்தத் தெரியாத உலகம் ஒரு பெயரைப் பெற்றது. அது ‘காதல்’.

அந்தக் காட்சியை எங்கோ வெகு தொலைவிலிருந்தபடியே மாயா பார்த்துக் கொண்டிருந்தது. அது கமலியின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக, “நீ இப்போது உன்னை அறிந்துகொள்கிறாய்… இன்னும் அறியாததை நோக்கி நகர்கிறாய்…” என்றது.

அதைக் கேட்டுப் புரிந்துகொண்ட கமலி மெல்லத் தலையசைத்துவிட்டுத் தன்னுடைய அடுத்த கதவைத் திறக்கத் துணிந்தாள்.

“கமலி…” என அவன் மெதுவாக அழைத்தான்.

இந்த முறை அவர்களுக்கு இடையே இடைவெளியே இல்லை.

“நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான்.

“என்ன…?” எனக் கேட்டாள்.

“நான்… உன்னைக் காதலிக்கிறேன்…” என்றான்.

“தெரியுமே!” என்றாள்.

“ஓ! அப்ப நீ” என்று பதற்றத்துடன் கேட்டான். 

“நானுந்தான்” என்றாள். 

அவன் பதற்றம் தணிந்து, “கமலி…” என்று அழைத்தான்.

“அரவிந்த்…” என அவள் அழைத்தாள்.

அந்த மாலையில் வானம் முழுவதும் தங்க நிறத்தில் மூழ்கியது. அவர்கள் பிரிந்து தம் வழியில் நடக்கத் தொடங்கியபோது மர இலைகள் காற்றில் அசைந்து ஒலித்தன – ஓர் இசையனுபவமாக. இருவரும் ஒருவரையொருவர் தம் உள்ளத்தில் சுமந்துகொண்டு வீடுதிரும்பினர். 

கமலி கூடத்துக்குச் சென்றாள். அங்கு மாயா மண்ணில் அமைதியாகக் கிடந்தது. அது ஒளிரவில்லை.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *