
கல்லூரிப் படிப்பை முடித்ததிலிருந்தே ஜனனிக்கு அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது பெரிய கனவு. குறிப்பாக UPSC தேர்வில் வெற்றிபெற்று, ஓர் உயரதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்காகப் பல ஆண்டுகள் படித்தாள். பலமுறை முயற்சி செய்தும் அவளால் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை.
ஒரு கட்டத்தில், பெரிய பதவிக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் போராடுவது என்று அவளுக்கே சலிப்பாகிவிட்டது. எப்படியாவது ஒரு நிரந்தரமான அரசுப் பணி கிடைத்தால் போதும் என்ற எண்ணம் வந்தது. அப்போது SSC அரசுப் பணியாளர் தேர்வு மூலம் இந்தியத் தொல்லியல் துறையான Archaeological Survey of India (ASI) கீழ் ஒரு பணிக்குத் தேர்வானாள். சென்னையில் உள்ள ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் அருங்காட்சியகத்தில் வரவேற்புப் பிரிவில் அவளுக்கு வேலை கிடைத்தது.
முதல்முறையாக வேலைக்குச் செல்லும் நாள். அவளுக்குள் ஆயிரம் கனவுகள். மாதம் தவறாமல் சம்பளம் வரும். தனக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். வீட்டிற்குப் பணம் கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் சேமிக்கலாம். இதுவரை ஆசைப்பட்ட சில விஷயங்களை இனிமேல் யாரையும் எதிர்பார்க்காமல் வாங்கிக்கொள்ளலாம். இப்படிப் பல எண்ணங்களுடன் உற்சாகமாக வேலைக்குச் சேர்ந்தாள்.
முதல் இரண்டு நாட்கள் அவளுக்கு அந்த அருங்காட்சியகமே மிகவும் புதிதாகவும் அழகாகவும் இருந்தது. பழைய காலத்து ஆயுதங்கள், ஓவியங்கள், நாணயங்கள், ஆவணங்கள் என ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
குறிப்பாக, அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் ராணுவச் சீருடைகளை அணிவிக்கப்பட்டிருந்த பல உருவப் பொம்மைகள் அவளுடைய கவனத்தை ஈர்த்தன. அவை அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருந்தன. அந்த காலத்து உடைகளை அணிந்து கம்பீரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு பொம்மை மட்டும் அவளுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அழகான முகம், கூர்மையான மூக்கு, தெளிவான கண்கள் என மிகவும் உயிரோட்டமாக இருந்தது. அந்தக் காலத்து ராணுவச் சீருடையில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த அந்தப் பொம்மையைப் பார்த்ததும், ‘அடடா! எவ்வளவு அழகாக இருக்கிறது! நல்ல ஹேண்ட்சம்!’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அந்தப் பொம்மையின் முகத்தில் இருந்த நிஜத்தன்மை அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘இதைப் பார்க்கும்போது உண்மையான மனிதரைப் போலவே இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தப் பொம்மை இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுமோ!’ என்று சிரித்துகொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன. வேலைக்குச் சேர்ந்த முதல் சில நாட்களிலேயே அந்த இடத்தின் சூழலைப் புரிந்துகொண்டாள். வார நாட்களில் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. விடுமுறை நாட்களில் மட்டும் ஓரளவு கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும்.
முதலில் இதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதுவே அவளுக்குப் பிடிக்க ஆரம்பித்தது.
‘நல்லவேளை! பெரிய அதிகாரி பதவிக்கெல்லாம் போயிருந்தால் இந்நேரம் எவ்வளவு வேலை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? எத்தனை அழுத்தங்கள், எத்தனை அரசியல் தலையீடுகள், எத்தனை அலுவலகப் பிரச்சினைகள்! இங்கே பாரேன், நிம்மதியாக இருக்கிறது.’
காலையில் வீட்டிலிருந்து உணவு கட்டிக்கொண்டு வருவாள். ரயிலில் பயணம் செய்து அருங்காட்சியகத்தை அடைவாள். தனது இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பாள். மதிய உணவு இடைவேளையில் நிதானமாகச் சாப்பிடுவாள். சில சமயங்களில் அருங்காட்சியகத்தின் மற்ற பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பாள்.
அருங்காட்சியகத்தின் வழக்கமான பணிகளில் பார்வையாளர்களை வரவேற்பது, அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது, நுழைவுச் சீட்டு தொடர்பான பணிகளைக் கவனிப்பது போன்றவை இருந்தன. ஏதேனும் குறை இருந்தால் அதைப் பொறுப்பானவர்களிடம் தெரிவிப்பதும் அவளுடைய அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது.
அருங்காட்சியகம் வெள்ளிக்கிழமை வார விடுமுறையில் மூடப்பட்டிருக்கும். மற்ற நாட்களில் வேலைக்குச் செல்ல வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பார்வையாளர்கள் வருவதால் பணிக்கு வர வேண்டியிருக்கும். இருப்பினும் அவளுக்கு அந்த வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல அதே வாழ்க்கை அவளுக்குச் சலிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. தினமும் காலையில் எழுந்து ரயிலில் பயணம் செய்வது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது. மதிய உணவு சாப்பிடுவது. மாலையில் வீடு திரும்புவது. அவ்வளவுதான்.
வாழ்க்கையில் எந்தப் புதிய அனுபவமும் இல்லை. எந்தச் சவாலும் இல்லை. எதையும் சாதித்துவிட்டோம் என்ற திருப்தியும் இல்லை. அவளுடன் கல்லூரியில் படித்தவர்கள் எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். சிலர் அதிகாரிகளாகவும், சிலர் வெளிநாடுகளிலும் இருந்தார்கள்.
அவர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது தனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவானது.
‘நானும் நன்றாகப் படித்தவள்தானே? நானும் எவ்வளவு கனவுகளுடன் படித்தேன்! கடைசியில் இப்படி ஒரு அருங்காட்சியகத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் என்ன சாதித்தேன்?’
தனக்குக் கிடைத்த அமைதியான வாழ்க்கையே இப்போது அவளுக்கு ஒரு சிறையாகத் தோன்றியது.
அன்றும் அப்படியொரு சலிப்பான நாள்தான். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, பார்வையாளர்கள் அதிகம் இல்லாததால் அருங்காட்சியகத்தின் மற்ற பகுதிகளைச் சுற்றிப் பார்க்கலாம் என்று கிளம்பினாள். அப்படிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்தப் பொம்மை இருந்த அறைக்குச் சென்றாள்.
அந்த அழகான பிரிட்டிஷ் ராணுவ வீரனின் பொம்மையைப் பார்த்ததும் சில நொடிகள் நின்றாள். அப்போது அந்தப் பொம்மை ஏதோ அசைந்தது போல இருந்தது.
அவள் மீண்டும் திரும்பிப் பார்த்தாள். இல்லை. அசையவில்லை.
‘ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தோன்றியிருக்குமோ?’ என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதைப் பார்த்தாள். மீண்டும் ஏதோ ஒரு சிறிய அசைவு!
அவளுக்கு லேசாகக் குழப்பமாக இருந்தது. ‘என்ன இது? உண்மையிலேயே அசைந்ததா? இல்லை வெளிச்சத்தினால் அப்படித் தெரிந்ததா?’ சில நொடிகள் அங்கேயே நின்று பார்த்துவிட்டு, எதுவும் நடக்காதது போலத் தனது இருக்கைக்குத் திரும்பினாள். ஆனால் அந்தப் பொம்மையின் நினைவு மட்டும் அவளை விட்டுப் போகவில்லை.
மறுநாள் மீண்டும் அதே அறைக்குச் சென்றாள். இந்த முறை அந்தப் பொம்மை அசைவது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பயத்தில் அவளுடைய இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
‘ஐயோ! இது என்ன?’
அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறியவள், அன்று வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் வேலைக்கு வந்தபோதும் அந்த அறைக்குச் செல்லத் தயங்கினாள். இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டாள். ஆனால் மனதிற்குள் அந்தப் பொம்மையைப் பற்றிய எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.
மூன்றாவது நாள் ஒருவழியாக வேலைக்குத் திரும்பினாள். அன்று மீண்டும் அந்த அறைக்குச் சென்றபோது, அந்தப் பொம்மை அவளைப் பார்த்தது! ஆம். அவளுடைய கண்களை நேரடியாகப் பார்த்தது. பிறகு மெதுவாகச் சிரித்தது.
“ஹாய்!”
அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“யார்… யார் பேசுறது?”
“நான்தான். உன்னைத்தான் பேசக் கூப்பிடுறேன்.”
அவளால் நம்பவே முடியவில்லை. அவள் முன்னால் நின்றுகொண்டிருந்தது ஒரு உயிரற்ற பொம்மை. ஆனால் அது அவளிடம் பேசிக்கொண்டிருந்தது!
“பயப்படாதே. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.”
அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட எனக்கு ஒரு உதவி வேணும். கொஞ்சம் அவசரமாப் பேசணும்.”
“என்ன… என்ன உதவி?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“இப்போ வேண்டாம். மத்தவங்க எல்லாரும் போகட்டும். இப்ப யாராவது பார்த்துட்டா உனக்கும் பிரச்சினை, எனக்கும் பிரச்சினை.”
அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படியோ அங்கிருந்து தனது இருக்கைக்குத் திரும்பினாள். ஆனால் மாலையில் கிளம்புவதற்கு முன்பு மீண்டும் அந்த அறைக்குச் சென்றாள்.
குளிர்காலம் என்பதால் மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் சென்ற பிறகு அவள் அந்தப் பொம்மையின் அருகே சென்றாள்.
“சரி, இப்போ சொல்லு. நீ யார்? எப்படி உயிரோடு பேசுற?”
அந்தப் பொம்மை பேச ஆரம்பித்தது.
“என் பெயர் வில்லியம் ஓ’கானல். நான் அயர்லாந்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு வீரனாகப் பணியாற்றுவதற்காக இந்தியாவுக்கு வந்தேன். அப்போது இந்தப் பகுதியில்தான் எனக்குப் பணி இருந்தது.”
“அப்படியா?”
“ஆம். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த உருவம் என்னுடையது. நான் உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உருவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். என்னுடைய முகத் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இதைச் செய்திருக்கிறார்கள்.”
“அப்போ நீ எப்போ இறந்த?”
“அது ஒரு நீண்ட கதை. நான் இறந்த பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் என் ஆன்மா இங்கேயே சிக்கிக்கொண்டது. இத்தனை ஆண்டுகளாக இந்த உருவத்திற்குள்ளேயே அடைபட்டிருக்கிறேன். என்னால் இந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை. எனக்கு இன்னும் சாந்தி கிடைக்கவில்லை.”
அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
“எனக்கு இந்தச் சிறையிலிருந்து விடுதலை வேண்டும். உன்னால் எனக்கு உதவி செய்ய முடியுமா?”
“நானா? என்னால் எப்படி உனக்கு உதவி செய்ய முடியும்? நீ ஒரு பேய்! உன்னைப் பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு!”
“என்னை நம்பு. பயப்படாதே. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு உன்னிடமிருந்து ஒரு உதவிதான் வேண்டும். தயவுசெய்து எனக்கு உதவி செய்.”
“என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டாள்.
“ஏதாவது ஒரு பாதிரியாரை அழைத்து வர முடியுமா? அவர் ஏதாவது பிரார்த்தனை செய்து என்னை இந்தப் பந்தத்திலிருந்து விடுவிக்கலாம்.”
“பாதிரியாரா? அதெல்லாம் என்னால் முடியாது. இங்கே யாரையாவது அழைத்து வந்தால் என் வேலைக்கே ஆபத்து வந்துவிடும். எனக்கிருக்கும் இந்த வேலையும் போய்விட்டால் நான் என்ன செய்வது?”
அவள் மறுத்துவிட்டாள். ஆனால் வில்லியம் தொடர்ந்து அவளிடம் கெஞ்சினான்.
“தயவுசெய்து. என்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்.”
அவனுடைய குரலில் இருந்த சோகத்தைப் பார்த்ததும் அவளுக்குக் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.
“சரி. இப்போதைக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறேன்.”
அன்றைக்கு அதுவே அவர்களுடைய முதல் உரையாடலாக முடிந்தது.
அதற்குப் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையிலான பயம் குறைய ஆரம்பித்தது. முதலில் அவள் அந்த அறைக்குச் செல்லும்போது மட்டும் பேசுவாள். பிறகு யாரும் இல்லாத நேரங்களில் அவனிடம் பேசுவதற்காகவே அங்கே செல்ல ஆரம்பித்தாள். சில சமயங்களில் தொலைவிலிருந்தே கண்ணால் பார்த்துப் புன்னகைப்பார்கள்.
அவள் தனது குடும்பத்தைப் பற்றிச் சொல்வாள். தன்னுடைய வாழ்க்கையில் இருக்கும் சின்னச் சின்ன ஆசைகளையும் ஏமாற்றங்களையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
அவனும் தனது காலத்து வாழ்க்கையைப் பற்றிப் பேசுவான். அந்தக் காலத்து மனிதர்களின் பழக்கவழக்கங்கள், ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறை, ராணுவத்தில் நடந்த சம்பவங்கள், ஆட்சியாளர்களைப் பற்றிய செய்திகள் எனப் பல விஷயங்களைச் சொல்வான்.
சில நேரங்களில் வரலாற்றுச் சம்பவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
“அப்போ அந்த கவர்னர் உண்மையிலேயே அப்படித்தானா இருந்தாரு?”
“அதைவிட மோசமாக இருந்தார்!”
“அடப்பாவமே! அப்போ நீங்க எல்லாம் எப்படி அவர்கூட வேலை பார்த்தீங்க?”
“வேலைதான் முக்கியம். உன்னைப் போலவே!”
அவள் சிரிப்பாள்.
அவள் மதிய உணவு சாப்பிடும்போது அவன் அவள் அருகில் கவனமாகப் பார்ப்பான்.
“இன்னைக்கு என்ன சாப்பிடுற?” என்று கேட்பான்.
“தயிர் சாதம்.”
“உனக்கு தயிர் சாதம் ரொம்பப் பிடிக்குமா?”
“ஆமாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும். உனக்கு என்ன சாப்பிடப் பிடிக்கும்?”
அதிலிருந்து அவர்களுடைய உரையாடல் வேறு விஷயங்களுக்குத் தாவும். அவளுக்குப் பிடித்த உணவுகள், அவனுடைய காலத்து உணவுப் பழக்கங்கள் எனச் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட ஆர்வமாகப் பேசிக்கொள்வார்கள்.
இப்படியாக, பயத்தில் தொடங்கிய அவர்களுடைய உறவு மெல்ல மெல்ல அழகான நட்பாக மாறியது. அவளுக்கு வேலைக்குச் செல்வதில் மீண்டும் ஆர்வம் வந்தது. முன்பெல்லாம் அலுவலகத்திற்குச் செல்வதே ஒரு கடமையாக இருந்தது. இப்போது வில்லியமிடம் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது. அவள் இல்லாத நாட்களில் வில்லியம் அவளுக்காகக் காத்திருப்பான். அவன் பேசாமல் இருந்தால் அவளுக்குப் பிடிக்காது.
அவளுடைய சின்னச் சின்ன கோபங்களையும் அவன் ரசித்தான். அவன் சொல்லும் பழைய காலத்துக் கதைகளை அவள் ரசித்துக் கேட்டாள். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள்.
அந்த நெருக்கம் எப்போது காதலாக மாறியது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குள்ளும் இயல்பாகவே வளர்ந்திருந்தது. தங்களுக்குள் ஏற்பட்டிருந்த அந்த உணர்வை அவர்கள் உணர்ந்திருந்தார்களா என்பதுகூடத் தெரியாது. ஆனால், முன்பிருந்த நட்பைக் காட்டிலும் அது ஆழமான ஓர் உறவாக மாறியிருந்தது.
ஒருநாள் வில்லியம் மீண்டும் தனது விடுதலையைப் பற்றிக் கேட்டான்.
“நீ ஏதாவது முயற்சி செய்தாயா?”
அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், யாரிடம் இதைப் பற்றிப் பேசுவது என்றே தெரியவில்லை. யாராவது சொன்னால் நம்புவார்களா என்றும் தெரியவில்லை.”
“அப்போ என்ன செய்வது?”
“எனக்குத் தெரிந்த ஒரு கோயில் பூசாரியிடம் பேசிப் பார்க்கிறேன். அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஏதாவது தெரிந்திருக்கலாம்.”
சில நாட்கள் கழித்து அவள் ஒரு கோயிலுக்குச் சென்றாள். அங்கிருந்த பூசாரியிடம் பேசுவதற்கே அவளுக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அருங்காட்சியகத்தில் நடக்கும் விசித்திரமான சம்பவத்தைப் பற்றிச் சொன்னாள்.
அவர் முதலில் அமைதியாகக் கேட்டார். பிறகு அவளை ஒருமுறை மேலிருந்து கீழ்வரை பார்த்தார்.
“இதெல்லாம் என்னம்மா கதை சொல்றீங்க? நாங்க இதெல்லாம் பண்ணுவதில்லை. நீங்க போங்க.”
அவருடைய பதிலும், அவர் பார்த்த பார்வையும் அவளுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
‘நம்மை ஏதோ பைத்தியம் என்று நினைத்துவிட்டாரோ!’ என்று வெட்கப்பட்டுக்கொண்டே அங்கிருந்து கிளம்பினாள்.
மீண்டும் வில்லியமிடம் வந்ததும் நடந்ததைச் சொன்னாள்.
“அவர் என்னை எப்படி பார்த்தார் தெரியுமா? நான் ஏதோ பைத்தியம் மாதிரி பேசுகிறேன் என்று நினைத்துவிட்டார். இனிமேல் யாரிடமும் இதைப் பற்றிப் பேச எனக்கு விருப்பமில்லை.”
வில்லியம் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“பரவாயில்லை. நீ முயற்சி செய்ததே எனக்குப் போதும்.”
“இல்லை. உனக்கு உதவி செய்ய வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.”
இப்படியே அவர்களுடைய நாட்கள் தொடர்ந்தன. ஒருநாள் வில்லியம் மீண்டும் தனது விடுதலையைப் பற்றிப் பேசினான். அப்போது அவளுக்கு வேறொரு யோசனை தோன்றியது.
“நான் ஒரு மசூதிக்குச் சென்று அங்கிருக்கும் இமாமிடம் பேசிப் பார்க்கிறேன். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம்.”
“நீ உறுதியாக இருக்கிறாயா?”
“எனக்கே தெரியவில்லை. ஆனாலும் முயற்சி செய்கிறேன்.”
அவளுக்குள் நிறைய தயக்கம் இருந்தது. யாராவது தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வார்களோ, ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயமும் இருந்தது. இருந்தாலும் வில்லியமுக்காக ஒருமுறை முயற்சி செய்ய முடிவெடுத்தாள்.
ஒரு நாள் மசூதிக்குச் சென்றாள். தொழுகை முடிந்து மக்கள் வெளியே வந்துகொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த இமாமிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டாள்.
தனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு பழைய அருங்காட்சியகத்தில் இருக்கும் உருவப் பொம்மைக்குள் ஓர் ஆன்மா சிக்கியிருப்பதாகவும், அது தன்னை விடுவிக்க உதவி கேட்பதாகவும் விளக்கினாள்.
அவர் அவள் சொல்வதைக் கவனமாகக் கேட்டார். அவள் பேசி முடித்ததும் சிறிது நேரம் யோசித்தார்.
“சரி. அந்த இடம் எங்கே இருக்கிறது?”
“ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் மியூசியம்.”
“நான் ஒருநாள் அங்கே வந்து பார்க்கிறேன். ஆனால் சாதாரணமாக என்னால் உள்ளே வர முடியுமா?”
“நீங்கள் பார்வையாளராக வரலாம். நான் அங்கே வேலை செய்கிறேன். மற்றவர்களைப் போலவே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே வாருங்கள். யாருக்கும் சந்தேகம் வராது.”
“சரி. ஒரு நாள் வருகிறேன்.”
அந்தப் பதிலைக் கேட்டதும் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அடுத்த நாள் வேலைக்கு வந்ததும் வில்லியமிடம் எல்லாவற்றையும் சொன்னாள்.
“உண்மையாகவா? அவர் வருகிறாரா?”
“ஆமாம்! இந்த முறை கண்டிப்பாக ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன்.”
வில்லியமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்களிலேயே சோகமாக மாறியது.
“அப்போ… அவர் என்னை விடுவித்துவிட்டால் நான் இங்கிருந்து போய்விடுவேனே?”
அவள் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“ஆமாம். நீ விடுதலை அடைந்துவிடுவாய்.”
“அதற்குப் பிறகு உன்னைப் பார்க்க முடியாதா?”
அவளுடைய கண்களில் கண்ணீர் திரண்டது.
“எனக்கும் தெரியவில்லை.”
“உன்னைப் பார்ப்பதற்கு முன்பு இந்த இடம் எனக்கு ஒரு சிறையாக இருந்தது. இங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை. ஆனால் இப்போது… உன்னை விட்டுப் போக எனக்கு மனமில்லை.”
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் அவளும் சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு அந்த இமாம் ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் அருங்காட்சியகத்திற்கு வந்தார். வரவேற்பு மேசையில் ஜனனிக்குப் பதிலாக வேறொரு பெண் இருப்பதைப் பார்த்தார்.
அவரிடம், “இதற்கு முன்பு இங்கே வேலை பார்த்த ஜனனி எங்கே?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், “அவருக்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. இரண்டு நாட்களுக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அவர் போய்விட்டார்” என்றார்.
அதைக் கேட்டுவிட்டு அந்த இமாம் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றார்.
ஜனனி சொன்ன அறையைத் தேடிக் கண்டுபிடித்தார். அங்கே பல உருவப் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு நடுவில் கம்பீரமான ராணுவச் சீருடையில் ஓர் ஆண் உருவம் நின்றுகொண்டிருந்தது.
அவர் அதன் அருகே சென்று உற்றுப் பார்த்தார்.
அந்தப் பொம்மை வழக்கம்போல அசைவின்றி நின்றுகொண்டிருந்தது.
அவர் சில நிமிடங்கள் அதையே பார்த்துவிட்டு, மெதுவாகத் திரும்பி வெளியேறினார்.
