உயரமாகவும் குள்ளமாகவும் இல்லாத அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து பார்த்தால், தெருக்கள் அரைகுறையாகத்தான் தெரியும். வடக்கு மேலாக இருக்கும்படி அந்தப் பகுதியை ஒரு கூட்டல் குறியாகக் கற்பனை செய்தால், அதன் கீழ் இடப்பகுதியில் அந்தக் கட்டிடம் இருக்கும். அதன் முன்னேயும் வலதுபுறமும் தெருக்கள். அந்தத் தெருக்கோடுகளில், ஆங்காங்கே இடைவெளிவிட்டுப் புள்ளிகள் வைத்ததுபோல் சிறிய தனிவீடுகள். அவற்றில் சில ஓட்டுவீடுகள். இரண்டு தெருக்கள் தள்ளி வயல்வெளிகூட உண்டு. மக்கள் இன்னும் அதிகமாக இந்தப் பகுதிக்குக் குடியேறாததால், நிறைய காட்டுமரங்கள் தெருக்களையே மறைத்தவாறு வளர்ந்து நிற்கும். மாடியில் நின்று நோக்கினால், ஆட்டோ போவது மரச்செறிவின் இடைவெளிகளின் வழியே மஞ்சளாக ஏதோ ஓடுவது போலத்தான் தெரியும். மக்கள் நடந்து போனாலோ பொதுவாக ஒன்றும் பார்க்க முடியாது. தண்ணீர்த் தொட்டியின் ஏணிப்படிகளில் அமர்ந்தால், மரங்களுக்கிடையே ஒரு திறப்பு கிடைக்கும். சராசரி வேகத்தில் யாராவது நடந்துபோனால், அந்தத் திறப்பில் அவரைப் பத்து நொடிகள் வரை பார்க்கலாம்.

பத்து குடியிருப்புகள் கொண்ட அந்தக் கட்டிடத்தில் நால்வர் குழு; பள்ளி நண்பர்கள். ராஜாவும் கலைச்செல்வியும் ஒன்பதாம் வகுப்பு; எட்டாம் வகுப்பில் இருந்த அழகுசுந்தரம் கிட்டத்தட்ட செழியனின் வயதுடையவன். செழியன் ஆறு மாதங்களே மூத்தவன் என்றாலும், அவன் ஒன்பதாம் வகுப்பு. சிறுவயதிலிருந்தே ஒரே இடத்தில் சேர்ந்து வளர்ந்தவர்கள்; படிப்பும் பேச்சும் விளையாட்டும் எப்போதும் ஒன்றாகத்தான்.

‘ப’ வடிவ மாடியின் ஒரு புறம் சற்றே பெரியது. சிறிய பகுதியில் அருள்மொழி தன் குழந்தையை இரு கைகளால் பிடித்துத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். மெலிந்து ஒட்டிய முகத்தில் தாடி இருந்தாலும் மிக இளமையாகத் தெரிவான். முகச்சவரம் செய்தால் கல்லூரி செல்லும் மாணவன் போல்தான் இருப்பான் என்று அழகுசுந்தரம் கற்பனை செய்துகொள்வான். கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடனேயே தன் பள்ளிக்காலக் காதலியைத் திருமணம் செய்துகொண்டவன்; இப்போது ஒரு குழந்தை. அவனைப் பார்த்தால் தந்தை என்ற பட்டம் ஏற்றப்பட்டதாகவே தெரியாது. புதிதாகக் குடிவந்த காலத்தில், குழந்தை பிறப்பதற்கு முன்பு, இந்தக் குழுவோடு எப்போதும் இணைந்தே இருப்பான். வேலைநாள்களில்கூட இவர்களுடன் பொழுதைப் போக்கி, கிரிக்கெட்டும் விளையாடுவான். தற்போது குழந்தையோடு மாடிக்கு வந்தால், குழுவிலிருந்து தள்ளி மாடியின் எதிர்ப்புறத்தில் நடக்கிறான். தனக்குத் தோன்றும் போது மட்டும் குழுவில் சில நிமிடங்கள் பேசுவான். ராஜாவும் செழியனும் ‘அப்படியா அண்ணா, அப்படியா அண்ணா’ என்று கேட்டுக்கொள்வார்கள். ஏனோ, அருள்மொழி இப்போது குழுவோடு வந்து சேர்ந்தால் அழகுசுந்தரத்துக்கு வேறொரு நாட்டு ஜீவன்போல் தெரிந்தது. மேலும் அருள்மொழி சிகரெட் பிடித்துவிட்டு வந்தால், அழகுசுந்தரத்துக்கு அவன்மீது ஒரு வெறுப்பு உண்டாகிவிடும். 

ஒரு வயதுதான் வேறுபாடு என்றாலும், ராஜாவையும் செழியனையும் ஒப்பிட்டால் அழகுசுந்தரம் இன்னும் முகத்தில் ஒன்றும் வளராதவனாகவே இருந்தான். சிரிப்பு மட்டும் தாராளமாக முகத்திலிருந்து கொட்டும். தேவையில்லாததற்கெல்லாம் ஏன்டா சிரிக்கிறாய் என்று மூவரிடமும் திட்டு வாங்கிக்கொள்வான். அழகுசுந்தரம் ஏழாம் வகுப்புக்கு வந்தபோது, செழியன் ஒருமுறை அவன் சிரிப்பைக் கலைச்செல்வியின் சிரிப்போடு ஒப்பிட்டான்; அதன்பின் அழகுசுந்தரம் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டான். அவனுடைய பட்டம் அறுந்து பறந்து விலகிப்போகும்போது அவன் முகத்தைக் கண்டால், இன்னும் இரண்டு ஆண்டுகள் நூற்கண்டை மட்டும் பிடித்துக்கொண்டிரு என்று அவனிடம் சொல்லத் தோன்றும். 

மாடியில் பெரியோரும் சிறியோரும் தரிசனம் தருவதுண்டு. அவ்வப்போது வரும் பொடிச் சிறுவர்களை இந்தக் குழுவினர் தட்டி வேறொரு பக்கம் அனுப்பிவிடுவார்கள். தங்கள் குடும்பங்களைச் சேராத பெரியவர்கள் வந்தால் சத்தம் குறைந்துவிடும். கலைச்செல்வி தள்ளி அமர்ந்துகொள்வாள். மற்ற சமயங்களில் நால்வருக்குள்ளும் சிரிப்பும் கும்மாளமும் கொப்பளிக்கும். 

கலைச்செல்வியும் சிறு வயதிலிருந்தே பையன்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவாள். நால்வரும் மொட்டைமாடியில்தான் ஆடுவார்கள். மழைக்காலத்தில் ஒருமுறை மற்ற மூவரும் மாடியில் நின்றுகொண்டு கலைச்செல்வியை விளையாட அழைக்க, அவள் தன் வீட்டினுள்ளிலிருந்து சன்னலின் வழி தன்னால் இப்போது வர முடியாது என்று சொல்லிவிட்டாள். கையில் பம்பரம் வைத்துக்கொண்டு போடுவதுபோல் டென்னிஸ் பந்தை மிக அழகாகச் சுழற்றுவாள். தெருவில் விளையாடும்போது மற்றத் தெருப்பையன்களும் சேர்ந்துகொள்வதால், எட்டாம் வகுப்பிலிருந்து அவள் விளையாட வருவதில்லை. இருப்பினும், மேல்தளத்தில் வசிப்பவர்களின் திட்டுகளை வாங்கிக்கொண்டே மொட்டைமாடியில்  நால்வரும் அவ்வபோது விளையாடுவார்கள். பந்து மாடியை விட்டு வெளியில் அடிக்கப்பட்டால் அவுட். ராஜாவுக்கும் செழியனுக்கும் விளையாட்டின்போதோ வேறு சமயங்களிலோ கைகலப்பு ஏற்படும். கழுத்தைச் சுற்றிக் கையை வளைப்பது, எதிராளியின் இரு கைகளையும் பின்னால் பிடித்துக்கொள்வது, சில சமயம் கட்டிப்பிடித்து உருள்வது வரைகூடச் செல்லும். அப்போது கலைச்செல்வி மாடியை விட்டு இறங்கிச் சென்றுவிடுவாள். அழகுசுந்தரம் சண்டையில் பங்கெடுக்கமாட்டான்; ஆனால் அதை விலக்கும் தைரியமோ எண்ணமோ அவனுக்கு வராது. ராஜாவும் செழியனும் ஒருவரின் உடலை மற்றொருவர் திமிறி அடக்க முயல்வதைத் தள்ளி நின்று பார்ப்பான்.

மொட்டைமாடியின் தரை முழுவதும் சதுர சதுரமாக சிகப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும். சிமெண்ட் தண்ணீர்த் தொட்டியின் சுவரை ஒட்டி குழாய்கள் வரிசையாகக் கீழிறங்கும். அதன் அருகே மெலிந்த இரும்புக் கோடுகளைப் போன்ற படிகளைக் கொண்ட ஓர் ஏணி இருக்கும். மாடியிலிருந்து தெருக்களைப் பார்க்கச் சற்று உயரம் தேவையாயிருக்கும்; அல்லது அவ்வாறுதான் செழியனும் ராஜாவும் எண்ணினார்கள். அவர்கள் இருவரும் மேலிருந்து மூன்றாவது படியில் அமர்ந்துகொள்வார்கள். நெருக்கியடித்துத்தான் அருகருகே உட்கார வேண்டியிருக்கும். கீழேயிருக்கும் போது என்ன பேசினாலும் அது மேலே ஏறி அமரும்போது பெண்களைப் பற்றிய பேச்சாக மாறிவிடும். அழகுசுந்தரம் அவ்வளவாக இந்தப் பேச்சில் கலந்துகொள்ள மாட்டான். ஆனாலும் இரண்டு படி கீழே அமர்ந்திருப்பான். ‘ஏண்டா உனக்குள்ளேயே வைத்திருக்கிறாய்’ என்ற கிண்டல்களை வாங்கிக்கொள்வான். ‘இப்படி இருந்தாத்தாண்டா அழகான பெண்கள் கிடைப்பார்கள்’ என்று ராஜா கூறுவான். ‘ஆமாமா, நீ சொல்கிறது சரிதான், கலைச்செல்வியைத் தவிர யார் நம்மிடம் பேசுகிறார்கள் பார், இவன்கிட்ட மற்ற பிரிவுப் பெண்கள் கூட வந்து பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்’ என்று செழியன் ஒருமுறை ஆமோதித்தான். அழகுசுந்தரம் அமைதியாக இருப்பதைப் பார்த்ததும், ராஜா உச்சுக்கொட்டி, ‘எத்தனை காதலிகள் இவனுக்குக் கல்லூரியில் இருக்கப் போகிறார்களோ’ என்று தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல் உரக்கச் சொன்னான்.

முதன்முதலில் அந்த மூன்றாவது படியிலிருந்து அவளைப் பார்த்தது ராஜாதான். அவளுடைய குடும்பம் பக்கத்துத் தெருக்களில் ஒன்றில் புதிதாகக் குடிவந்திருக்கவேண்டும். மரங்களுக்கிடையே அவள் தெருவில் நடந்துபோவதை அவன் பார்த்தான். செழியன் அன்று தாமதமாக வந்தது குறித்துத் தன்னையே நொந்துகொண்டான். ‘பூமியில் நட்சத்திரமே ஒன்று நடந்து வந்து, கடக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் ஒளி கொடுத்ததுபோல் இருந்தது’ என்று ராஜா கவிதைத்தனமாகச் சொல்ல முயன்றது செழியனுக்கு மேலும் எரிச்சல் ஊட்டியது. அடுத்தநாள் செழியன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே வந்துவிட்டான். ‘இன்றும் அவள் வருவாள் என்பது என்ன நிச்சயம்’ என்று கலைச்செல்வி கேட்டாள். ‘உனக்கு இதெல்லாம் புரியாது’ என்று ராஜா அவளை நிராகரித்தான். கலைச்செல்வியும் அழகுசுந்தரமும் மாடியின் தரையிலேயே பேசிக்கொண்டிருக்க, படியில் மற்ற இருவரும் தங்களின் இடத்தை எடுத்துக்கொண்டார்கள். ‘நீ சொன்னது ரொம்ப சரிதான்டா’ என்று செழியன் வியப்புடன் ஆமோதித்தான். அவள் இன்றும் வந்தாள். பள்ளிச் சீருடைதான் அணிந்திருந்தாள். அவள் வேறொரு பள்ளியில் படிப்பவள் என்று நிச்சயித்துக்கொண்டார்கள். சீருடையின் நிறத்தை வைத்து, அவள் பதினொன்றாம் அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பவளாக இருக்கவேண்டும் என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள். ராஜாவும் செழியனும் பத்தாம் வகுப்புத் தொடங்கவிருந்தார்கள். நேற்றுத் தன் மனத்தில் உருவாக்கியிருந்த  மங்கலான முக வடிவை, இன்று தெளிவாகக் கிரகித்து ராஜா சரிசெய்துகொண்டான்.

மறுநாளிலிருந்து முகத்தை நன்றாகக் கழுவி எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் இல்லாத மாதிரி ராஜாவும் செழியனும் பார்த்துக்கொண்டார்கள். ‘ஒளி நேராகத்தானே செல்லும், இங்கிருந்து அங்கு என்ன என்பது தெரிகிறது, அதனால் அங்கிருந்தும் இங்கு என்ன என்று தெரியுமே’ என்று செழியன் இயற்பியல் பாடத்தை அள்ளித் தெளித்தான். தினமும் காலரில்லாத டி-ஷர்ட் மட்டுமே அணிந்தனர். காலர் இருந்தால் அதில் மடிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இனிமேல் ஒருவருடைய டி-ஷர்ட்டை மற்றவர் மாற்றிப் போட்டுக்கொள்ளக்கூடாது என்று ராஜாவும் செழியனும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். பிறகு ஒருநாள், வாசனைத் திரவியங்களையும் பூசத் தொடங்கினார்கள். கலைச்செல்வி, அதுவரை வாசனைத் துகள்களும் நேர்க்கோட்டில் செல்லுமா என்று கேட்க ஆசைப்பட்டாள்; ஆனால் கேட்கவில்லை. அன்று மாலை, டென்னிஸ் பந்தைக் கையில் சுழற்றியபடி அவள் சற்று நேரம் நின்றாள். ராஜாவும் செழியனும் தெருவை நோக்கியே முகம் திருப்பியிருந்தனர். பந்தை மெல்லக் கீழே வைத்துவிட்டு, படிகளில் இறங்கி மாடியை விட்டுச்சென்றாள். அன்றிலிருந்து, மொட்டைமாடியில் அவர்களோடு நேரம் கழிப்பதை அவள் குறைத்துக்கொண்டாள்.

அருள்மொழியின் குழந்தை ஒரு வயது ஆவதற்குச் சற்று முன்னரே நடக்கத் தொடங்கிவிட்டது. முதல் பிறந்தநாள் விழாவுக்காக ஆறு காலணிகளாவது வாங்கியிருப்பான். ஒலி எழுப்பும் ஒன்று, ஒளிரும் ஒன்று, இரண்டும் சேர்ந்து மற்றொன்று என பலவிதங்கள். அவர்கள் வீட்டில் இதற்காக ஒரு சிறிய விழாவே ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்காகவெல்லாம் போக வேண்டுமா என்றுதான் நால்வருக்கும் தோன்றியது. இருந்தாலும் ஒரு மாலை கேக் கிடைக்கிறதே என்று சென்றுவந்தார்கள். டிசம்பரிலிருந்து ஒன்பது மாதம் கழிக்க வேண்டுமா பத்து மாதம் கழிக்க வேண்டுமா என்று ராஜாவும் செழியனும் கணக்கிட்டார்கள். அருள்மொழியின் சுட்டுவிரலைப் பிடித்துக் குழந்தை நடந்தபோது, நால்வருக்கும் அவன் வேறுவிதமாகத் தெரிந்தான். முன்புபோல் நண்பர்களாகப் பேசாமல், நால்வரிடமும் தேர்வைப் பற்றி விசாரித்தான். சில நிமிடங்களுக்கு ஒருமுறை வயிற்றுப் பகுதியில் சட்டையை மெல்ல நீவிவிட்டு, உடலை நிமிர்த்திக்கொண்டான்.

அருள்மொழியும் அவன் மனைவியும் வேறொரு இடத்திற்கு மாறப்போவதாகச் செழியனின் தந்தையிடம் பேசுவதை நால்வரும் கேட்டனர். பெரிய வீடாகவும் வேலையிடத்துக்கு அருகிலும் கிடைத்துவிட்டது என்று கூறியபடி, அருள்மொழியின் மனைவி புன்னகையோடு அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். அழகுசுந்தரம் அதை விநோதமாகப் பார்த்தான். கலைச்செல்வி அருள்மொழியின் மனைவியிடம் வாழ்த்துகள் என்று சொன்னாள். அருள்மொழி பையன்களைப் பார்க்க, அவர்களும் ‘வாழ்த்துகள் அங்கிள்’ என்று சொன்னார்கள்.

கலைச்செல்வி பல நாள்கள் வராததால் அழகுசுந்தரம் தனியே இருந்தான். ஒருநாள் மாலை, சரியென்று அவனும் ஏணியேறி அவர்களுக்கு இரண்டு படி கீழே அமர்ந்து, வரப்போகும் பெண்ணைப் பார்க்க முற்பட்டான். ஆனால் அவனுக்கு ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. முகமே சரியாகத் தெரியவில்லை என்று இருவரிடமும் குழப்பமாகச் சொன்னான். ‘அதற்கெல்லாம் ஞானக்கண் வேண்டும்’ என்று ராஜா சொன்னது அழகுசுந்தரத்துக்குக் கேட்டதா தெரியவில்லை; செழியன் மட்டும் சற்றே சிரித்தான். அழகுசுந்தரத்தின் வயிற்றில் எந்தப் பட்டாம்பூச்சியும் பறக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கென ஒரு சிறப்புப் பெயரைத் தாங்களே வைத்துவிட்டதாக ராஜாவும் செழியனும் அவனிடம் கூறினார்கள். அது என்ன பெயர் என்று அவர்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.

அவள் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறாள் என்பது பொதுத்தேர்வு நாள்கள் முடிந்தபின் நிச்சயமானது. அவள் அத்தெருவில் இப்போதெல்லாம் நடந்து வருவதில்லை. இதுவரை தெரியாதிருந்த வெயில் இப்போது ராஜாவையும் செழியனையும் சுட்டெரிக்கத் தொடங்கியது. கோடை விடுமுறையில் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, முகத்துக்கு நேராக வந்த சுலபமான கேட்சை அழகுசுந்தரம் நழுவவிட்டான். இரு கைகளையும் குவித்துப் பிடிக்கத் தயாரானவன் தவறான நேரத்தில் தலையைத் திருப்பினான். பந்து அவனை முந்திக்கொண்டு கன்னத்தில் அடித்துச் சென்றது. செழியன் அவனைத் திட்டும்போது ‘தென்னை மரத்தில் ஏதோ அசைந்த மாதிரி இருந்தது’ என்று கூறி எதிர்ப்பக்க மாடியைப் பராக்குப் பார்த்தான். பேட் பிடித்திருந்த ராஜா என்னவென்று அழகுசுந்தரத்தின் பார்வை சென்ற திசையை நோக்கினான். எதிர்மாடியில் நட்சத்திரம் ஜொலிப்பதைக் கண்டான். அங்கிருந்த கலைச்செல்வி இவர்களை அழைத்து பத்மப்ரியாவை அறிமுகம் செய்தாள். விளையாடியதால் நெற்றியில் வழிந்த வியர்வையை செழியன் கட்டைவிரலால் நீவி விலக்கிவிட்டான். ராஜா வாய்திறந்து பேசுவதற்கு முன்னேயே கலைச்செல்வி, ‘இங்கதான் புதுசா வந்திருக்காங்க,’ என்றாள். ‘ஆமா பக்கத்துத் தெருல ஒரு வீட்டுல இருந்தோம். இப்போதான் எனக்கு ஸ்கூல் முடிஞ்சு இங்க குடிவந்தோம், இன்னும் காலேஜுக்கு இரண்டு மாசம் இருக்கு,’ என்று பத்மப்ரியா மிக வேகமாகப் பேசினாள். மனத்தில் உருவாக்கி வைத்திருந்த அவளுடைய குரலை நிஜக் குரலோடு ராஜாவும் செழியனும் அமைதியாக ஒப்பிட்டுக்கொண்டனர். அழகுசுந்தரம் கண்களை விலக்காமல் அருகில் நின்றுகொண்டிருந்த பையனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனைச் சுட்டிக்காட்டி, ‘இது என் தம்பி,’ என்று பத்மப்ரியா அதே வேகத்தில் சொன்னது ராஜாவுக்கும் செழியனுக்கும் காதில் விழவேயில்லை.

நால்வர் குழு மூவராகச் சுருங்கியது. அவ்வப்போது பையன்களோடு மொட்டைமாடிக்கு வந்துகொண்டிருந்த கலைச்செல்வி இப்போதெல்லாம் வருவதேயில்லை. முதலில், கோடை விடுமுறையில் பத்மப்ரியாவோடு பேசிக்கொண்டிருந்தாள்; பின்னர் அவள் கல்லூரிக்குச் சென்றதும் தன் பள்ளித் தோழியர் கூட்டத்தோடே நேரம் கழித்தாள். பத்மப்ரியாவும் இந்தப் பையன்களோடு விடுமுறையில் எதுவும் பேசவில்லை. அவளை முதன்முறையாக அருகில் சந்தித்த மறுநாள், ராஜாவும் செழியனும் மாடித்தரையில் இருந்த சிறுசிறு கற்களை ஓரமாகத் தள்ளுவதை அழகுசுந்தரம் வேடிக்கை பார்த்தான். செழியனோ இப்போதெல்லாம் தன் கால்களை முழுவதும் மறைக்கும் நீள பேன்ட் அணிந்தே மாடிக்கு வந்தான்.

பத்மப்ரியா வாரயிறுதி விடுமுறைக்குத் தன் வீட்டிற்கு வந்தபோது அவளைச் சந்தித்துவிட்டு வரலாம் என்று கலைச்செல்வி பையன்கள் ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினாள். அழகுசுந்தரத்தைத் தவிர ராஜா, செழியன், கலைச்செல்வி மூவரும் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் படித்ததால், பத்மப்ரியாவிடம் நேரில் சென்று கல்லூரிகளைப் பற்றியும் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றியும் கேட்கலாம் என்றாள். ‘நட்சத்திரப் பூங்காவுக்கா போகப்போறோம்?’ என்று தன் குளிரால் அடைத்த மூக்குடன் சொல்லிக்கொண்டே ராஜா வந்துசேர்ந்தான். கலைச்செல்வியே ஆச்சரியப்படும்படி, செழியன் கேட்கவேண்டிய கேள்விகளையெல்லாம் ஒரு தாளில் மும்முரமாக எழுதி வைத்திருந்தான். பத்மப்ரியா அவர்களை வரவேற்று சோபாவிலும் நாற்காலிகளிலும் அமரச் சொன்னாள். ஜனவரிக் குளிரால் உடல்நலம் சரியில்லாத ராஜா, ஸ்வெட்டர் அணிந்து தனி நாற்காலியில் அமர்ந்துகொண்டான். 

தன் அருகில் சோபாவில் அமர்ந்த செழியனின் புதிய வாசனைத் திரவியம் அழகுசுந்தரத்தைச் சூழ்ந்துகொண்டது. தான் இன்னும் பதினொன்றாம் வகுப்பில்தான் படித்ததால், அந்த உரையாடலில் அழகுசுந்தரத்துக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. பத்து நிமிடங்கள்தான் மற்றவர்கள் பேசியிருப்பார்கள்; அவனுக்கோ அந்த வாசனைக் கடலில் அரை மணிநேரத்துக்கும் மேலாக மூழ்கியிருப்பதுபோல் தோன்றியது. பத்மப்ரியா எந்த விசேஷ உடையும் அணிந்திருக்கவில்லை. வீட்டில் அணியும் சாதாரண உடையில், கலைச்செல்வியைப் போலவே இருந்தாள் என்று செழியன் எண்ணினான். பத்மப்ரியாவின் தலைமுடி தாறுமாறாக நெற்றியில் விழுந்திருந்தது. செழியன் முதலாண்டு மார்க்கைக் கேட்டபோது, அவள் சாதாரண ஓர் எண்ணை வேகமாகச் சொல்லிவிட்டு, தான் இசைக்குழுவில் சேர்ந்திருப்பதாகவும் முதல் ஆண்டிலேயே ஒரு நிகழ்ச்சி நடத்தியதாகவும் சொன்னாள். ‘அப்படியா? என்னிடம் சொல்லவேயில்லை,’ என்று கலைச்செல்வி செல்லமாகக் கடிந்துகொண்டாள். கிளம்பும்போது ராஜா செழியனின் காதில், ‘நட்சத்திரம் அருகே வந்தால் ஜொலிப்பதில்லை தெரியுமா’ என்று ரகசியமாகச் சொன்னான். ஆனால் ராஜா, தான் எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் முதலில் இசைக்குழுவில் சேரவேண்டும் என்று மனத்துக்குள் முடிவெடுத்துக்கொண்டான்.

ஆடி மாத இரவின் காற்று சற்றுக் குளிர்ச்சியாக வீசி, கட்டிடத்தை முத்தமிட்டுக்கொண்டிருந்த தென்னைமரங்களை அசைத்தது. நிலவில்லாத வானத்தில் ஒளிப்புள்ளிகள் மட்டுமே இருந்தன. அழகுசுந்தரம் பள்ளிச் சீருடையை இன்னும் மாற்றாமல், சட்டையைப் பேன்ட்டுக்கு வெளியே தளர்வாக விட்டுக்கொண்டு, யாருமில்லாத ஏணிப்படியில் அமர்ந்து இருட்டை நோக்கிக்கொண்டிருந்தான். ஆங்காங்கே வீடுகளின் ஒளித்துணுக்குகள் தெரிந்தன. ஏணியில் இருந்து இறங்கி மாடித் தரையில் அங்குமிங்கும் நடந்து, தென்னைக் கீற்றொன்றை எடுத்தான். நடுவில் ஈர்க்குச்சியும் இருபுறமும் ஒட்டிய பச்சை இலைப்பட்டைகளுமாக, இரவில் அது கரும்பச்சையாகத் தெரிந்தது. வலப்புற இலைப்பட்டையை மேலிருந்து கால் பங்கு நீளத்துக்குக் கிழித்து, அதை வலக்கை விரல்களால் பிடித்துக்கொண்டு, இடக்கைச் சுட்டுவிரலை மூக்கைப்போல் வளைத்துக் கொக்குபோல் ஆக்கி, வலப்புறப் பட்டையின் வளைவை அந்த விரலால் தாங்கி, அந்த வளைவைச் சட்டெனக் கீழ் நோக்கி இழுக்க, இடப்புறப் பட்டை ஏவுகணைபோல் யாரும் காணாத இருளில் உயரமெய்திச் சென்றது.

கல்லூரியின் முதலாண்டிலேயே ராஜா குறுஞ்செய்திக் குழு தொடங்கி நால்வரையும் இணைத்துக்கொண்டான்; அதற்கு மொட்டைமாடி என்று பெயரிட்டார்கள். செழியன் விடுதி உணவகத்தின் மோசமான உணவுப் படங்களைப் பகிர, அதுவே ஒரு விளையாட்டானது. யார் மோசமான உணவுப் படத்தைப் பகிர்கிறார் என்பதே போட்டி; ஆனால் மிக மோசமாக இருந்தால், பந்து மாடிக்கு வெளியே போனதுபோல் அவுட். ‘பீஸ் இல்லாத சிக்கன் பிரியாணி’யை ராஜா காண்பிக்க, ‘மாஸ்டர்பீஸ்’ என்று எல்லாரும் பாராட்டினார்கள். கலைச்செல்வியும் சில நாள்கள் கலந்துகொண்டாள். மூன்று மாதத்திற்குப் பின் எல்லோரும் இதை நிறுத்திக்கொண்டார்கள்.

அழகுசுந்தரம் பள்ளியின் கடைசி ஆண்டில் இருந்தபோது, வீட்டுணவைப் பகிர்ந்து எல்லோரிடமும் திட்டு வாங்கிக்கொண்டான். பின்னர் மூவரின் விளையாட்டிற்கேற்ப அவர்கள் பகிரும் உணவுகளுக்கு மிகைபெயரிட்டு அந்த விளையாட்டில் பங்கேற்றான். அந்தப் பங்கேற்பும் குறைந்து, ஒரு கட்டத்தில் குழுவில் எதுவுமே கூறாமல் இருந்தான். கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டின் பொங்கல் காலத்தில், விடியற்காலையில் விடுதியில் நடந்துகொண்டிருக்கும்போது எடுத்த தற்படத்தை அவன் பகிர்ந்தான்; காலைப்பனி போர்த்தியிருந்த அந்தப் படத்துக்கு ‘புகைப்பொங்கல்’ என்று எழுதி, ஆனந்தக்கண்ணீர் எமோஜியையும் சேர்த்திருந்தான். பின்னர் அவன் பகிர்ந்த தற்படங்களில், வாராமல் தாறுமாறாகப் படர்ந்த தலைமுடி முகத்தின் ஒரு பகுதியை மறைத்திருக்கும்; அதன் இடையே சிவந்த கண்களும் கருமை படர்ந்த உதடுகளும் தெரியும்; சுற்றிலும் புகைமூட்டம் சூழ்ந்திருக்கும். ஒளி குறைந்த இடங்களில் எடுத்ததால் புள்ளிகள் படிந்த படங்களாகவோ, கைநடுங்கி எடுத்த கூர்மையற்ற படங்களாகவோ இருந்தன. குழுச்செய்திகளிலேயே கலைச்செல்வி முழு உரிமையோடு கோபமாக அவனைத் திட்டித் தீர்த்தாள். அதற்குப் பதிலாக, எதிலும் பிடிப்பில்லாதவனின் புன்னகையோடு இன்னொரு படம் வந்துவிடும். செழியனும் ராஜாவும் முதலில் தங்களுக்குள் தனியாகப் பேசிக்கொண்டு, பிறகு அழகுசுந்தரத்திடம் தனித்தனியாகச் செய்தி அனுப்பினர். அழகுசுந்தரத்தின் புகைப்படப் பகிர்வுகள் குறைந்தன. ஆனால் பழக்கம் தொடர்ந்துகொண்டிருந்தது. 

சிறுகாணொளிகளின் போக்கு நிலவிய காலத்தில், ராஜா தான் தங்கியிருந்த ஒற்றையறையிலிருந்து கல்லூரிக்கு நடந்துசெல்வதைப் படம்பிடித்துப் பகிரத் தொடங்கினான்; சிலவற்றை இணைய பொதுவெளியிலும் பகிர்ந்தான். முதலில் நடந்து செல்லும் தன் முகத்தை மட்டுமே படம்பிடித்துப் பகிர்ந்தான். யாரும் அதற்குச் சரியாகப் பதிலளிக்காததால், வழியிலுள்ள கடைகளையும் வாகனங்களையும் ஆட்களையும் படம்பிடிக்கத் தொடங்கினான். குழுவில் பகிரும் பத்துநொடி நேரலைக் காணொளிகளில், வழியில் தென்படும் பெண்களைப் பற்றி ராஜா கருத்துச் சொல்லத் தொடங்கினான். செழியன் அதற்கு ஆமோதிப்பு, நிராகரிப்பு, நாக்கைத் தொங்கப்போடும் எமோஜிகள் என பதிலளித்தான். அழகுசுந்தரம் வெகு நாள்களாய் எந்தப் பதிலோ பகிர்வோ செய்யவில்லை. நிறைய தன்னூக்க வாசகங்களையும் கட்டுரைகளையும் பகிர்ந்துவந்த கலைச்செல்வி, கொஞ்சம் கொஞ்சமாக அக்குழுவில் தன் பங்கேற்பை நிறுத்தினாள். சன்னல் இருக்கையைப் பிடிக்க முந்தியோடி நெருக்கியமரும் குழந்தைகளைப் போல, எந்தப் பதிவுக்கும் அடுத்த நொடியே ராஜாவும் செழியனும் மாறிமாறிப் பதிலளித்தனர். அதைக் கண்டு, ‘எக்கேடோ கெட்டுப்போங்கள்; எனக்குப் பெண்களின் குழுவே போதும்,’ என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்து தடதடவென்று இறங்கிச் செல்வதுபோல், கலைச்செல்வி அந்தக் குழுவைவிட்டு நீங்கினாள். ராஜாவும் செழியனும் மேலும் இலகுவாக உணர்ந்தார்கள்.

இருள் பந்துக்குள் ஒளிர்ந்திருப்பதுபோல், செல்பேசித் திரையின் ஒளியில் மட்டும் முகம் தெரிந்த ஓர் இரவில் அழகுசுந்தரம் நீண்ட செய்தியொன்றைக் குழுவில் அனுப்பினான். அனுப்பியபின்னும் செல்பேசியைக் கீழே வைக்காமல், ஒளிரும் திரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதை வாசித்தபின் செழியனும் ராஜாவும் உடனேயே தங்களுக்குள் அழைத்துப் பேசிக்கொண்டார்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து, அந்தச் செய்தியை அழகுசுந்தரமே அழித்துவிட்டதைக் கண்டார்கள். பல இடங்களில் இருந்த நண்பர்களின் தொடர்புகள் வழியாக, அழகுசுந்தரம் தங்கியிருந்த கல்லூரி விடுதியிலிருந்த ஒரு பையனைத் தொடர்புகொண்டனர். அழகுசுந்தரத்தின் அறைக்கு உடனேயே சென்று அவனைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார்கள். பாதி உறக்கத்திலிருந்து எழுந்து கதவைத் திறந்த அழகுசுந்தரம் முதலில் குழம்பினான்; பின்னர் உள்ளூர மகிழ்ந்தான். எல்லாம் சரியாக இருப்பதாகவும், இப்போது தொலைபேசியில் அழைக்க வேண்டாம் என்றும் இருவருக்கும் செய்தி அனுப்பினான்.

சில நாள்கள் கழித்து ராஜாவும் செழியனும் அவனோடு தனித்தனியாகவும் சேர்ந்தும் பேசினார்கள். ராஜா வழக்கத்தைவிடவும் அதிகமாகப் பேசினான்; இடையிடையே தேவையில்லாமல் சிரித்தான். செழியன் பெரும்பாலும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ‘இதுக்காகவா இத்தனை நாளா எங்களிடம் சொல்லாமல் இருந்தாய்?’ என்று மட்டும் இறுதியில் கேட்டான். அந்தக் கேள்வி தன்னைக் குற்றம் சாட்டுகிறதா, தங்கள்மீது வருத்தப்படுகிறதா என்று அழகுசுந்தரத்துக்குப் புரியவில்லை. ஆனால் அழைப்புகள் முடிந்தபின், அவர்களை இழந்துவிடவில்லை என்ற நிம்மதி அவனுக்குள் இருந்தது. கலைச்செல்வியிடமும் அழகுசுந்தரமே சொன்னான். பின்னர் ஒருநாள், தனியாகச் சந்தித்தபோது, ‘எனக்கு எப்பவோ தோணுச்சு’ என்று அவள் சொன்னாள்; ஆனால் அன்று அவர்களுடைய பேச்சு பழையபடி எளிதாக ஓடவில்லை. அந்தத் தயக்கம் கரைய சில வாரங்கள் ஆயின; கரைந்தபின், மொட்டைமாடிக் காலத்தைவிடவும் அவர்கள் நெருங்கினர்.

வேலை தேடும் கடைசிக் கல்லூரி ஆண்டில் செழியனும் ராஜாவும் பதற்றமானார்கள். ராஜா கேட்டுக்கொண்டதற்கிணங்கக் கலைச்செல்வி மீண்டும் குழுவில் இணைந்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஏற்கனவே அணி நிர்வகிக்கும் பத்மப்ரியாவையும் இணைத்தாள். புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது; நிரலாக்கக் காணொளிகள், நேர்காணல் கேள்விகள் என்று பத்மப்ரியா பகிர்ந்தாள். கலைச்செல்விக்கு நிதி நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் ‘வெல்றோம்’ என்று தன் சிரிக்கும் படத்தைப் பகிர்ந்தாள். ராஜாவும் செழியனும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தயாராகி, சென்னையிலும் பெங்களூருவிலும் வேலைக்குச் சேர்ந்தனர்.

சில ஆண்டுகள் கழித்து, பத்மப்ரியாவின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு மொட்டைமாடி குழு அழைக்கப்பட்டிருந்தது. வார இறுதி என்பதால் எல்லாராலும் வர முடிந்தது. பத்மப்ரியாவின் கணவனை இணையப் புகைப்படங்களில் பார்த்திருந்தாலும், நேரில் கண்டதும் ராஜாவின் முகத்தில் ஒருவித ஏமாற்றம் படர்ந்தது; அதைச் செழியனிடம் தெரிவித்தான். ‘நானும் வேறு மாதிரி எதிர்பார்த்திருந்தேன்,’ என்றான் செழியன். கலைச்செல்வியும்கூட அதை ஆமோதித்தாள். ‘பத்மப்ரியாவுக்கு இதைவிட நல்லதாக ஒருவன் அமைந்திருக்கலாமோ,’ என்று அங்கலாய்த்தாள். 

கல்லூரிக் காலத்தில் புகைப்படம் எடுக்கும்போதெல்லாம் தன் சிறிய தொப்பையை முதலில் கவனமாகவும் பின்னர் பழக்கமாகவும் உள்ளிழுத்துக்கொண்ட செழியன், இப்போது கட்டம் போட்ட சட்டையைப் பேன்ட்டுக்குள் செருகி, தொப்பை தாராளமாக வழிய, மனைவியுடன் மூணாற்றில் எடுத்த பயணப் படங்களைப் பத்மப்ரியாவிடம் பகிர்ந்தான். ஏற்கனவே ஒரு செயலியில் இவற்றைப் பார்த்தபோதே ‘யார் இந்த அங்கிள்’ என்று அழகுசுந்தரத்துக்குத் தோன்றியிருந்தது; அந்தச் செயலியோ, இளம் கணவன்-மனைவியர் சுற்றுலா செல்லும் அதேபோன்ற படங்களை அவனுக்குத் தொடர்ந்து பரிந்துரைத்துக் கடுப்பேற்றியது. தொப்பையைக் குறைக்கச் சுரைக்காய்ச் சாறு குடிக்கச் சொன்ன ராஜாவிடம், ‘தொப்பை குறைகிறதோ என்னவோ, தலைமுடிதான் குறைகிறது’ என்று அவன் மனைவி சொன்னாள். மூன்று குடும்பங்களும் சேர்ந்து வெளியூர் சென்று பல மாதங்களாகிவிட்டதாகவும், சீக்கிரமே ஒரு மலையேற்றப் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்றும் அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டது அழகுசுந்தரத்தின் காதில் விழுந்தது. பத்மப்ரியாவின் குழந்தையோடு ஒவ்வொரு கணவன்-மனைவி இணையரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மூவரிடமும் பேசுவதில் தன் பழைய இயல்பின் சுதந்திரம் ஓரளவு திரும்பியது என்று அழகுசுந்தரம் நினைத்தான். ராஜா அவ்வப்போது அவனுக்குப் பிடித்தவர்கள் பற்றிக் கேட்பான்; செழியன் கேட்டதைவிடக் கேட்காமல் விட்டதே அதிகம். கலைச்செல்வி கருவுற்றிருந்தபோது, ‘குழந்தை அசையறது வயிற்றுக்கு மேலேயே தெரியுமா?’ என்று அழகுசுந்தரம் கேட்டான். ‘சில நேரம் கை காலால உதைக்கிற போது வயிற்றுல உப்பித் தெரியும். எல்லாருக்கும் இதெல்லாம் தெரியும்னு நினைச்சேன். இதுகூடத் தெரியாதா உனக்கு?’ என்று அவள் ஆச்சரியப்பட்டுச் சிரித்தாள். அவர்களுடைய திருமணங்கள், குழந்தைகள், குடும்பப் பயணங்கள் பற்றிய பேச்சுகளுக்கிடையே அழகுசுந்தரத்தின் வாழ்க்கையும் இடம் பெற்றது; ஆனால் அதற்கான மொழியை ஒவ்வொருமுறையும் அவனே எடுத்துக்கொண்டு வரவேண்டியிருந்தது.

அழகுசுந்தரம் செயலியில் மொட்டைமாடி குழுவின் அறிவிப்புகளை அமைதிப்படுத்திவைத்தான். இருந்தும் இரவு படுக்கும் முன் அதைத் திறந்து, தன்னைத் தவிர்த்து ஏதாவது முக்கியமான உரையாடல் தொடங்கியிருக்கிறதா என்று பார்த்துவிடுவான். குழுவிலுள்ளோர் இப்போது எல்லாரும் தங்கள் பிள்ளைகளுடன் சுற்றுலா செல்லத் தொடங்கினர். அவர்களுடைய பிள்ளைகள் ஐந்தாம் ஆறாம் வகுப்புகளுக்கு உயர்ந்தனர். உத்தராகண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்குக்குக் கோடை விடுமுறையில் செல்லத் திட்டமிடத் தொடங்கினர். தங்கள் பிள்ளைகளுக்குள்ளும் ஒரு தனிக்குழு இருப்பதாக மற்றவர்கள் சொன்னதை அழகுசுந்தரம் கேட்டுக்கொண்டான். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டவன், கடைசி வாரத்தில் ‘இந்தச் சுற்றுலாவுக்கு நான் வர முடியாது,’ என்று குழுவில் செய்தி அனுப்பினான். தொடர்ந்து குழுவில் குறைவாகப் பங்கேற்றான். ஒரு கட்டத்தில் அதுவும் நின்றுபோனது.

அழகுசுந்தரம் இணையம் வழியாகத் தொடர்புகொண்டு சென்னையில் உள்ள ஒரு தன்னார்வலர் குழுவில் சேர்ந்தான். சில மாதங்கள் கழித்து அவர்கள் நடத்தும் மாதாந்திர கூட்டத்துக்கு நேரில் சென்று பங்கேற்றான். இருபது முதல் அறுபது வரை எல்லா வயதினரும் இருந்தனர். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல் கூட்டத்திலேயே வந்து ‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்’ என்று சொல்லி கைகுலுக்கினார். அழகுசுந்தரம் உடனே சிரிக்கவில்லை; அவர் தன்னைக் கிண்டல் செய்கிறாரா என்று ஒரு நொடி பார்த்தான். கூட்டம் முடிந்ததும் எல்லாரும் அருகிலிருந்த பூங்காவில் நடக்கச் சென்றனர். பலவகைப் பூக்களின் கலவை மணம் அங்கு கமழ்ந்தது. அழகுசுந்தரத்துக்கு அருகில் நடந்த ஓர் இளம்பெண், தூரத்தில் சென்ற பெண்ணின் புடவை எவ்வளவு அழகாக இருந்தது என்றும், அவளுடைய உதட்டுச்சாயம் எப்படி எடுப்பாக இருந்தது என்றும் தன் ஆண் நண்பனிடம் உற்சாகமாகக் கூறிக்கொண்டிருந்தாள். ‘அந்தக் கடைக்கார இளைஞனையும் பார்’ என்று அவள் நண்பன் மறுதிசையில் சிரித்தபடி சுட்டினான். அந்த இருவரோடு மேலும் ஒருவர் இணைந்ததும், அவர்கள் சென்னையில் நடக்கவிருந்த பேரணி குறித்த திட்டத்தைப் பேசத் தொடங்கினர். அழகுசுந்தரம் தனியாக நடப்பதைக் கண்டு வேறிருவர் அவன் அருகில் வந்து, ‘உன்னுடைய வலைப்பூக் கட்டுரைகள் கூர்மையாக இருக்கின்றன,’ என்று பாராட்டித் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். 

அந்தச் சந்திப்பு நடந்து ஓராண்டு கழித்து, தன் நாற்பதாவது பிறந்த நாளன்று, முதல் சந்திப்பிலேயே அந்த இருவருடன் இயல்பாகச் சிரித்துப் பேசி கிண்டலடிக்கத் தொடங்கியிருந்ததை நினைத்து வியந்தான். அடுத்த இரண்டு ஆண்டுகள், அழகுசுந்தரம் தனக்கான பாணியில் மீசையையும் தாடியையும் செதுக்க நேரம் ஒதுக்கினான். புருவங்களின் கூர்மையைத் தீட்டினான். கன்ன மூலையில் புதிதாக முளைத்த வெள்ளை முடிகள் கூறும் ரகசிய மொழிகளைக் கவனிக்கத் தொடங்கினான். முன்தலை முடியை நன்றாக ஷாம்ப்பூ போட்டு அலசி, பொங்கி வழியும் நுரைபோல் வைத்துக்கொள்ளத் தொடங்கினான். அலுவலகநாள் மாலையில் ஒரு காபிச்சந்திப்பு நிச்சயிக்கப்பட்டிருந்தால், அலுவலகத்திலிருந்து நேராகச் செல்லமாட்டான். வீட்டுக்குச் சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு, பார்க்கப்படப்போகும் தன் முகத்தைச் சீராக்கியபின் கிளம்புவான்.

மொட்டைமாடி குழுவில் அழகுசுந்தரம் மீண்டும் உயிர்த்தபோது எல்லாரும் தங்கள் பெற்றோர்களைக் காணப் பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் செல்ல முடிவெடுத்திருந்தனர். அழகுசுந்தரம் தன் கணவன் வர முடியாதென்றும், தான் கண்டிப்பாக வந்துவிடுவதாகவும் செய்தியனுப்பினான்.

மாலை வெயிலில், ஏணிக்குக் கீழே தென்னைமர நிழலில், ராஜா, செழியன், கலைச்செல்வி மூவரும் வட்டமாக அமர்ந்திருந்தனர். சாலை அகலமாகி, பல புதுவீடுகள் வந்துவிட்டதைப் பற்றி பேசிக்கொண்டார்கள். அழகுசுந்தரம் தன் ஒரு வயது குழந்தையை இடது மார்பில் சாய்த்துக்கொண்டு, அவர்களைச் சுற்றி மெதுவாக நடந்தபடி பேச்சில் பங்குபெற்றான். மற்ற மூவரின் வளர்ந்த பிள்ளைகள் பதினைந்து, பதினாறு வயதினராக இருந்தனர்: மூன்று பையன்கள், இரண்டு இளம்பெண்கள். அந்த ஐவரும் பெரியவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிர்மூலையில், மாடிச்சுவரின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் ஒருவன் இருசக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அந்தப் பையனுக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். மாடியில் இருப்பவர்களின் கவனத்தை உணர்ந்ததுபோல், வேகத்தைக் குறைத்து வண்டியைச் சாவகாசமாகச் செலுத்தி வந்தான். காற்றில் அவன் தலைமுடி பின்புறமாகப் பறந்துகொண்டிருந்தது. ஐவரில் ஒரு பெண், அவன் சாலையில் ஆங்கில எஸ் வடிவங்களை வரைவதுபோல் வண்டியை வளைத்து வந்ததைப் பற்றி மற்றொரு பெண்ணிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள். இரு பையன்கள் அதைக் கேட்டு எந்த முகச் சுளிப்புமின்றி அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது மாடிப் பையன்களில் ஒருவன் மற்றவனை வலது முழங்கையால் இடித்தான். ‘ப’ வடிவ மாடியின் மறுபக்கத்தைப் பார்வையால் சுட்டி, ‘டேய், அங்க பாருடா,’ என்று தாழ்ந்த குரலில் சொன்னான். எதிர்மாடியில் ஒரு இளம்பெண் துணியை எடுக்க வந்திருந்தாள். அப்போது மூன்றாவது பையனின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது. அவள் அருகில், வெள்ளை பனியனும் குட்டை ஷார்ட்ஸும் அணிந்து கொடியிலிருந்த துணிகளைச் சேகரித்துக்கொண்டிருந்த இளைஞனிடம் அந்தப் பார்வை நின்றது.

ஒரு பெண், ‘இங்கப் பாருங்க, இந்த திவாகரின் வாய் ஏன் இப்படித் திறந்து கிடக்கு?’ என்று அந்த மூன்றாவது பையனைக் குறித்துக் கேட்டாள்.

மற்ற இரு பையன்களும் திவாகருடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒரு நொடி திவாகருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. குழுவிலிருந்த மற்ற நால்வரும் தன்னைப் பார்த்துச் சிரிப்பதை உணர்ந்ததும் முகம் சூடேறியது; வெட்கத்தில் கண்களைத் தாழ்த்தினான். 

அதை நான்கு பெரியவர்களும் பார்க்காததுபோல் பார்த்துப் புன்னகைத்தனர். செழியனின் முகம் ஒரு நொடி இறுகியது; பிறகு அவனும் மற்றவர்களோடு புன்னகைத்தான்.

‘அந்தப் பையனோட தாடை எவ்ளோ கூர்மையா இருக்கு, பார்த்தியா?’ என்று மற்றொரு பெண் சொன்னாள். சிகப்புத் தரையோடுகளில் மெதுவாக நடந்து வந்து, திவாகருக்கு அருகே ஒட்டி நின்றாள்.

திவாகர் தலையைத் தூக்கி எதிர்மாடிப் பையனை மறுமுறை பார்ப்பதை அழகுசுந்தரம் நடந்துகொண்டே நோக்கினான்; தன் குழந்தையின் முதுகைத் தட்டி உறங்கவைப்பதைத் தொடர்ந்தான்.

——————————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *