எர்னெஸ்ட் ஹெமிங்வே-யின் சிறுகதை – கிளிமாஞ்சாரோவின் பனி –

 

“அது வலியின்றி இருக்கிறது என்பதுதான் அற்புதமான விஷயம்,” அவன் சொன்னான்.

“அது தொடங்கும்போது அப்படித்தான் நீங்கள் அறியவருகிறீர்கள்.”

“உண்மையாகவா?”

“நிச்சயமாக. இருந்தாலும் அந்த துர்வாசனை குறித்துதான் பெரிதும் வருந்துகிறேன். அது நிச்சயம் உன்னை கவலைப்படச் செய்யும்.”

“வேண்டாம்! தயவுசெய்து வேண்டாம்.”

“அவைகளைக் கவனி, காட்சியா அல்லது அதன் வாசனையா எது அவைகளை இப்படிக் கொண்டுவருகிறது?”

அந்த மனிதன் படுத்திருந்த கட்டில் மிமோசா மரத்தின் அகன்ற நிழலில் இருந்தது, நிழலைத் தாண்டி கண்கூசவைக்கும் சமவெளியின் ஒளியை அவன் பார்த்தபோது, அங்கே மூன்று பெரிய பறவைகள் பிடிவாதமாக அமர்ந்திருந்தன, அதேவேளை வானில் இன்னும் ஒரு டஜன் பறவைகள், விரைந்து நகரும் நிழல்களை உருவாக்கியபடி வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தன.

“ட்ரக் பழுதான நாளிலிருந்து அவை அங்கேயிருக்கின்றன, இன்றுதான் முதல்முறையாக அவை தரையிறங்கியிருக்கின்றன. தொடக்கத்தில் அவை வந்திறங்கியதை, ஒருவேளை நான் அவற்றை எப்போதாவது கதையில் பயன்படுத்த விரும்புவேனோ என மிகக் கவனமாகக் கவனித்தேன். இப்போது அது வேடிக்கையாக இருக்கிறது.”

“நீ வேடிக்கையாக நினைக்கக்கூடாதென விரும்புகிறேன்,” அவள் சொன்னாள்.

“நான் பேச மட்டுமே செய்கிறேன், பேசுவது எனக்கு பெரிதும் எளிதாக இருக்கிறது. ஆனால் நான் உன்னைக் கவலைப்படுத்த விரும்பவில்லை.”

“அது என்னைக் கவலைப்படுத்தாதென்பதை நீ அறிவாய், நான் எதையும் செய்ய இயலவில்லை என்பதே என்னை மிகவும் கவலைகொள்ளச் செய்கிறது. விமானம் வரும் வரை நாம் முடிந்தளவு ஓய்வாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.”

“அல்லது விமானம் வராத வரைக்கும்.”

“தயவுசெய்து நான் என்ன செய்யலாம் என எனக்குச் சொல். நிச்சயம் நான் செய்ய எதுவாவது இருக்கும்.”

“நீ காலை எடுக்கலாம், அது நிச்சயம் உதவும். இருந்தாலும் நான் சந்தேகப்படுகிறேன். அல்லது நீ என்னைச் சுட்டுத்தள்ளலாம். தற்போது அதில் நீ தேர்ந்தவள். நான்தான் உனக்கு சுடுவதற்கு கற்றுத்தந்தேன். இல்லையா?”

“தயவுசெய்து அப்படிப் பேசாதீர்கள். நான் உங்களுக்காக வாசிக்கமுடியாதா?”

“என்ன வாசிக்கப்போகிறாய்?”

“புத்தகப் பையில் இருக்கும் நாம் வாசிக்காத எதுவானாலும்.”

“என்னால் அதனைக் கவனிக்க முடியாது,” அவன் சொன்னான். “பேசிக்கொண்டிருப்பதுதான் எளிதானது. நாம் சச்சரவிடுவோம், அது நேரத்தைக் கடத்திவிடும்.”

“நான் சச்சரவிடமாட்டேன். நான் ஒருபொழுதும் சச்சரவிட விரும்பவில்லை. இனியும் நாம் சச்சரவிடக்கூடாது. நாம் எத்தனை படபடப்பாக ஆனபோதும் பரவாயில்லை. ஒருவேளை இன்று மற்றொரு ட்ரக்குடன் அவர்கள் திரும்பிவரலாம். விமானம் வரக்கூடும்.”

“நான் இங்கிருந்து கிளம்பவிரும்பவில்லை,” என்றான் அவன். “உன்னை எளிதாக உணரச் செய்யும் என்பதையன்றி, தற்போது கிளம்புவதில் அர்த்தமில்லை.”

“அது கோழைத்தனமானது.”

“உன்னால் ஒரு மனிதனை, அவன் பெயர்களைக் கூவும்படி விடாமல் நிம்மதியாக சாகவிடமுடியாதா? என்னை கெட்ட வார்த்தைகள் பேசவிடுவதில் என்ன பயன்?”

“நீ சாகப்போவதில்லை.”

“முட்டாள்தனமாக இருக்காதே. நான் இப்போது இறந்துகொண்டிருக்கிறேன். அந்த மடையர்களைக் கேள்,” அவன் அந்தப் பெரிய அழுக்குப்பிடித்த பறவைகள் அமர்ந்திருந்த திசையில் நோக்கினான். அவைகளின் ரோமமற்ற தலைகள், வளைந்த இறகுக்குள் புதைந்திருந்தன. நான்காவது ஒன்று இறங்கிவந்து, விரைவாக அடியெடுத்துவைத்து ஓடி, பின் மற்றவைகளை நோக்கி மெதுவாக அசைந்தாடி நகர்ந்தது.

“அவை ஒவ்வொரு கூடாரத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன. நீ ஒருபொழுதும் அவற்றைக் கவனிக்கவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ளாதவரை, நீ சாகப்போவதில்லை.”

“எங்கே அதைப் படித்தாய்? நீ ஒரு வடிகட்டின முட்டாள்.”

“நீ அவசியம் வேறொருவரைப் பற்றி சிந்திக்கலாம்.”

“கிறிஸ்துவின் பெயரால் சொல்கிறேன்,” அவன் சொன்னான், “என் வேலையே அதுவாகத்தான் இருக்கிறது.”

பின் அவன் சற்று நேரம் அமைதியாகக் கிடந்தபடி சமவெளியிலிருந்து புதர்களின் ஓரம் வரை மின்னிய வெயிலைப் பார்த்தான். சில நிமிடங்களுக்கு அங்கே வெண்மையூடாக மஞ்சளாக, சில எடுபிடிப் பையன்களையும், தொலைவில், பசிய புதர்க்கூட்டங்களூடே வெண்மையாக வரிக்குதிரைக் கூட்டங்களையும் பார்த்தான். அது, நல்ல தண்ணீர் வசதியுடனான, குன்றுக்கெதிராக அமைந்த பெரிய மரங்களின் அடியில் உருவாக்கப்பட்ட அருமையான கூடாரம், அருகில், கிட்டத்தட்ட தூர்ந்த ஊற்றுத் துவாரம் காணப்பட, அங்கிருந்து சாண்ட் க்ரூஸ் பறவைகள் காலையில் பறந்தன.

“நான் வாசிப்பதை நீ விரும்பவில்லையா?” கேட்டாள். கட்டிலுக்கு அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் அவள் அமர்ந்திருந்தாள். “அங்கிருந்து தென்றல் வீசுகிறது.”

“நன்றி, வேண்டாம்.”

“ஒருவேளை ட்ரக் வரலாம்.”

“ட்ரக் குறித்து நான் கவலைப்படவில்லை.”

“நான் கவலைப்படுகிறேன்.”

“நான் பொருட்படுத்தாத பல விஷயங்களை நீ பொருட்படுத்துகிறாய்.”

“மிகப் பல அல்ல, ஹாரி.”

“கொஞ்சம் மது அருந்தலாமா?”

“அது ஒருவேளை உனக்கு மோசமானதாக அமையலாம். முற்றிலும் ஆல்ஹகாலைத் தவிர்க்கும்படி கூறப்பட்டுள்ளது. நீ மது அருந்தக்கூடாது.”

“மோலோ!” அவன் கத்தினான்.

“சொல்லுங்க எஜமான்.”

“விஸ்கி- சோடா கொண்டுவா.”

“சரிங்க எஜமான்.”

“நீ குடிக்கக்கூடாது,” அவள் சொன்னாள். “தோல்வியை ஒப்புக்கொள்ளாதே என்பதன் மூலம் நான் சொல்லவருவது அதுதான். உனக்கு நல்லதில்லை எனச் சொல்கிறது அது. உனக்கு நல்லதில்லை என எனக்குத் தெரியும்.”

“இல்லை,” அவன் சொன்னான். “அது எனக்கு நல்லது.”

ஆக இப்போது அனைத்தும் முடிந்தது, அவன் நினைத்தான். ஆக இப்போது, அதனை முடிப்பதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்புமில்லை. கொஞ்சம் மதுவின் மீதான சச்சரவில், இவ்விதமாக அது முடிந்தது. அவனது வலது காலில் அழுகல் தொடங்கியதிலிருந்து, அவனுக்கு எந்த வலியும் இல்லை. வலியிருந்திருந்தால் அச்சம் போயிருக்கும். தற்போது அவன் உணர்ந்ததெல்லாம் மாபெரும் சோர்வும், இதுதான் அதன் முடிவா என்ற கோபமும்தான். இதற்காக, அவன் மிகக் குறைவான ஆர்வமே கொண்டிருந்தான். பல ஆண்டுகளாக இது அவனை ஆட்டுவித்திருந்தது. ஆனால் இப்போது அது தன்னளவிலேயே அர்த்தமில்லாததாக ஆகியிருந்தது. போதுமான அளவு சோர்வாக இருப்பது மட்டுமே, விஷயத்தை இத்தனை எளிதாக முடிக்க உதவியாயிருந்தது விநோதமாயிருந்தது.

போதும், நன்றாக எழுதிவிடமுடியும் என அறியும்வரை, எழுதுவதற்காக சேகரித்து வந்த விஷயங்களை இனி அவன் ஒருபோதும் எழுதவே போவதில்லை. சரி, அவற்றை எழுதும் முயற்சியிலும் அவன் தோல்வியடைந்திருக்க வேண்டியதில்லை. ஒருவேளை நீங்கள் அவற்றை ஒருபோதும் எழுதாமலே போகலாம், என்பதனால்தான் நீங்கள் அவற்றைத் தொடங்காமலே தள்ளிவைத்தும் தாமதித்தும் வந்தீர்கள். இப்போதன்றி, அதை அவன் ஒருபோதும் அறியவில்லை.

“நாம் ஒருபோதும் வந்திருக்கக்கூடாதென விரும்புகிறேன்,” அந்தப் பெண் சொன்னாள். அவள் அவனைப் பார்த்தபடி, குவளையைப் பிடித்தபடி, தனது உதட்டைக் கடித்தபடியிருந்தாள். “பாரிஸில் உனக்கு இதுபோல் எதுவும் நேர்ந்திருக்காது. எப்போதும் பாரிஸை நேசித்ததாக நீ சொல்லிவந்திருக்கிறாய். நாம் பாரிஸிஸ் தங்கியிருக்கலாம் அல்லது வேறெங்காவது போயிருந்திருக்கலாம். நான் எங்குவேண்டுமானாலும் போயிருந்திருப்பேன். நீ விரும்பிய இடம் எதுவானாலும் நான் வருவேன் என நான் சொன்னேன். நீ சுடுவதை விரும்பியிருந்தால், நாம் ஹங்கேரிக்குப் போயிருந்திருக்கலாம் அது வசதியாயிருந்திருக்கும்.”

“உனது பாழாய்ப்போன பணம்,” என்றான் அவன்.

“அது நியாயமல்ல, அது எப்போதும் எனதாய் இருந்த அதேயளவு உன்னுடையதாகவும் இருந்தது. நான் அனைத்தையும் விட்டு, நீ எங்கேயெல்லாம் செல்ல விரும்பினாயோ அங்கெல்லாம் வந்தேன். நீ என்னவெல்லாம் செய்யவிரும்பினாயோ அதையெல்லாம் செய்திருக்கிறேன். ஆனால் நான் ஒருபொழுதும் இங்கே வந்திருக்கக்கூடாது”

“நீ இந்த இடத்தை நேசித்ததாகச் சொன்னாய்.”

“நான் நேசித்தேன், உனக்கு எதுவும் ஆகாதபோது. ஆனால் தற்போது இதை நான் வெறுக்கிறேன். உன் கால்களுக்கு அது ஏன் நடக்கவேண்டுமென்பதை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை அது நடக்க நாம் என்ன செய்தோம்?”

“முதலில் அது கீறியபோது நான் அதன்மேல் அயோடின் தடவ மறந்துவிட்டேன் என நினைக்கிறேன். நான் ஒருபோதும் தொற்றுக்கு உள்ளாகாதாதால், பின்பு அதன்மீது எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை. பின், தாமதமாக, அது மோசமாக ஆனதும் இதர ஆண்டிசெப்டிக்குகள் தீர்ந்துபோனதால் பலவீனமான கார்போலிக் சொல்யூஷனைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அந்த நிமிடத்தில் அது இரத்தக் குழாய்களை செயலிழக்கவைத்து அழுகத் தொடங்கிவிட்டது” அவளைப் பார்த்தபடி, “வேறென்ன?” என்றான்.

“நான் அதைச் சொல்ல வரவில்லை.”

“நாம் அரைவேக்காட்டு கிக்கியு ஓட்டுநருக்குப் பதில் நல்ல மெக்கானிக்கை வேலைக்கு எடுத்திருக்கவேண்டும், அவர் ஆயிலைச் சோதித்து ட்ரக்கிலுள்ள பேரிங்கை ஒருபோதும் கருகவிட்டிருக்கமாட்டார்”

“நான் அதைச் சொல்ல வரவில்லை.”

“எனக்காக, நீ உனது சொந்த ஆட்களை- உனது பாழாய்ப்போன ஓல்ட் வெஸ்ட்பரி, சரட்டோகா, பாம் பீச் ஆட்களை விட்டு வந்திருக்கவிட்டால்-,”

“ஏன், நான் உன்னை நேசித்தேன். அது நியாயமல்ல. நான் இப்போதும் உன்னை நேசிக்கிறேன். நான் எப்போதும் உன்னை நேசிப்பேன். நீ என்னை நேசிக்கவில்லையா?”

“இல்லை,” என்றான் அவன். “நான் அப்படி நினைக்கவில்லை. நான் ஒருபோதும் நேசிக்கவில்லை.”

“ஹாரி, நீ என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாய்? நீ சரியான மனநிலையில் இல்லை.”

“இல்லை. நான் எந்த மனநிலையிலும் இல்லை, அதிலிருந்து விலகிச்செல்ல.”

“அதைக் குடிக்காதே,” அவள் சொன்னாள். “அன்பே, தயவுசெய்து அதனைக் குடிக்காதே. நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்.”

“நீ செய்,” அவன் சொன்னான். “நான் களைத்திருக்கிறேன்.”

இப்போது அவன் தன் மனதில் கரகட்சிலுள்ள ஒரு புகைவண்டி நிலையத்தைப் பார்த்தான். அவன் தனது பேக்குடன் நிற்க, சிம்ப்ளான் ஓரியண்டின் முகப்புவிளக்கு இப்போது இருளைக் கிழித்தது. பின்வாங்கியதற்குப் பின் திரேஸைவிட்டு கிளம்பிக்கொண்டிருந்தான். பகலில் காலை உணவின்போது, ஜன்னலுக்கு வெளியே பல்கேரிய மலைகளின் பனியைப் பார்த்தபடி, நான்சேனின் செயலாளர் அந்த முதிய மனிதரிடம் அது பனியா எனக் கேட்க, அந்த முதிய மனிதர் அதைப் பார்த்துவிட்டு, இல்லை, அது பனியில்லை என்றார். பனி விழுவதற்கு இது வெகு சீக்கிரம் என்றார். அந்தச் செயலாளர் பிற பெண்களிடம் அதனையே கேட்க, இல்லை, நீங்களே பாருங்கள். அது பனியல்ல, நாம் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம் என அவர்கள் அனைவரும் சொன்னார்கள். ஆனால் அது பனிதான். மக்கள் தொகைப் பரிமாற்றத்தை அவர் செய்ய நினைத்தபோது, அவர்கள் அனைவரையும் அதனுள் அனுப்பினார். அது பனிதான், அந்தக் குளிர்காலத்தில் அவர்கள் இறக்கும்வரை பனியில் அடியெடுத்து வைத்தார்கள். அவன் எழுதுவதற்காக சேமித்திருந்த விஷயங்களில் இதுவும் ஒன்று,

அந்த வருடம் கார்டெல் பள்ளத்தாக்கில் கிறிஸ்துமஸ் வாரம் முழுவதும் அந்தப் பனி பொழிந்தது, அந்த வருடம் அவர்கள், அறையில் பாதியை நிறைத்த பெரிய கனசதுர போர்சிலியன் அடுப்புடனான மரவெட்டியின் வீட்டில் வசித்தார்கள், அவர்கள் பீச் இலைகளால் நிறைக்கப்பட்ட மெத்தைகளில் படுத்துறங்கினார்கள், அந்த நேரம் ராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் கால்களில் குருதிதோய பனியில் வந்தார். போலீஸ் அவருக்குப் பின்னால் வருவதாக அவர் சொல்ல, அவர்கள் அவருக்கு கம்பளிக் காலுறைகள் அளித்து, பாதையின் தடம் மறையும்வரை, காவலர்களைத் தடுத்துப் பேசியபடியிருந்தனர்

ஷ்ரூன்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தன்று, மதுச்சாலையிலிருந்து பார்க்கும்போது பனி உங்கள் கண்கள் வலிக்குமளவுக்கு மிகப் பிரகாசமாகக் காணப்பட்டது. தேவாலயத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் ஒவ்வொருவரையும் பார்க்கமுடிந்தது. அங்கே அவர்கள், ஆற்றையொட்டிய சிறுநீர் மஞ்சள்நிற சாலையில் பைன்மரங்கள் அடர்ந்த செங்குத்தான குன்றில் பனிச்சறுக்குப் பலகைகள் கனமாக தோளிலிருக்க மேலறிச் சென்றனர். மேட்லெனர் ஹாஸின் மேலிருந்த பனிப்பாறையிலிருந்து அவர்கள் கீழ்நோக்கி விரைகையில், பனிநுரை கேக் போல் மென்மையாகவும், தூளைப் போல் எடையற்றும் இருக்க, அந்த வேகம் தோற்றுவித்த ஓசையற்ற துரிதம், தங்களை ஒரு பறவையைப்போல கீழிறங்க வைத்ததை நினைவுகூர்ந்தான்.

மேட்லெனர் ஹாஸில் பனிப்புயலால் ஒரு வாரம் நகரமுடியாத அந்த நேரத்தில் அவர்கள் கணப்பருகே லாந்தர்ன் விளக்கொளியில் சீட்டு ஆடினர், பந்தயத் தொகை எப்போதைவிடவும் அதிகமிருந்தபோது ஹெர் லென்ட் அதிகமாக இழந்தார். கடைசியில் அவர் அனைத்தையும் இழந்தார். பனிச்சறுக்குப் பள்ளியில் வந்த பணம், அனைத்துப் பருவகால லாபம் மற்றும் அவரது மூலதனம் அனைத்தையும். தனது நீண்ட மூக்குடன் அவர் சீட்டுகளை எடுப்பதையும் திறப்பதையும், “பார்க்காதே.” என்று சொல்வதையும் அவனால் காணமுடிந்தது. அப்போது அங்கே எப்போதும் சூதாட்டமிருந்தது. பனியில்லாதபோதும் சூதாட்டம், அளவுக்கதிகமாக பனிபொழிந்தபோதும் சூதாட்டம். அவன், தனது வாழ்வில் சூதாடிக் கழித்துச் செலவிட்ட நேரமனைத்தையும் நினைத்துப் பார்த்தான்.

ஆனால் அதைப்பற்றியோ அல்லது அந்தக் குளிரைப் பற்றியோ, ஒளிமிகுந்த கிறிஸ்துமஸ் தினத்தைப் பற்றியோ, சமவெளியின் ஊடாக மலைகள் தெரிவதையோ, பார்க்கர் எல்லை தாண்டி, ஆஸ்ட்ரியன் ஆப் ஐஸர்ஸ் ட்ரெயினில் கிளம்பும் அதிகாரிகளின் மீது குண்டுவீசச் செல்வதையோ, அவர்கள் சிதறி ஓடும்படி எந்திரத் துப்பாக்கியால் சுடுவதையோ பற்றி அவன் ஒரு வரி எழுதியதில்லை. பிறகு பார்க்கர் அந்த குழப்பமான சூழலில் திரும்பிவந்ததையும், குண்டுவீச்சைப்பற்றி சொன்னதையும் நினைவுகூர்ந்தான். அந்த இடம் எத்தனை அமைதியாய் மாறியது, பின் யாரோ ஒருவர், “குருதிதோய்ந்த கொலைகார தேவடியாப் பையா” என்றார். பின்னால் அவர்கள் கொன்ற அதே ஆஸ்திரியர்களுடன்தான். அவன் பனிச்சறுக்கில் கலந்துகொண்டது. இல்லை, அதே ஆஸ்திரியர்கள் அல்ல.

அந்த வருடம் முழுவதும் கைஸர் ஜாகரில் வசித்த ஹான்ஸுடன் அவன் சறுக்கினான், அவர்கள் ஒன்றாக முயல் வேட்டைக்குப் போயிருந்தபோது, மர அறுவை ஆலைக்கு மேலிருந்த சிறு பள்ளத்தாக்கில் இருந்தவர்கள் பசுபியோவில் நடந்த சண்டை பற்றியும், பெர்ட்டிக்காரா, அசலோன் மீதான தாக்குதல் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். அவன் அதைப்பற்றி ஒருபோதும் ஒரு வரி எழுதியதில்லை. மான்டி கரோனா பற்றியோ செட்டி கம்யூனி பற்றியோ, அர்சிரியோ பற்றியோ எழுதவில்லை.

வோர்ல்பெர்க்கிலும் ஆர்ல்பெர்க்கிலும் எத்தனை குளிர்காலங்கள் வாழ்ந்திருப்பான்? நான்கு பருவம் இருக்கும். பின் அவர்கள் ப்ளூடென்ஸுக்குள் பரிசுகளையும் செர்ரிப் பழச் சுவையுடைய நல்ல கிர்ஸ்ட் பிராண்டியையும் வாங்குவதற்காக நடந்துசென்றபோது, விற்பதற்கு நரியை வைத்திருந்த மனிதனை, அவன் நினைவுகூர்ந்தான், “ஹாய்! ஹோ! ரோலி” எனப் பாடியபடி தூள் போன்ற பனிப் பொழிவின்மீது வேகமாகச் சறுக்குவது, செங்குத்தான சரிவின் கடைசி தூரத்தைக் கடந்தபின், பழத்தோட்டத்தை மூன்று திருப்பங்களினூடாக கடந்து, வடிகாலைக் குறுக்காகக் கடந்து, வழிப்போக்கர் தங்குமிடத்தின் பனியாலான பின்பகுதி சாலையை வந்தடையலாம். உங்கள் பிணைப்புகளைத் தளர்த்தி, பனிச்சறுக்குப் பலகையை உதறிக் கழற்றி, தங்கும் விடுதியின் மரச் சுவரில் சாய்த்து வைக்கும்போது, ஜன்னலிலிருந்து விளக்கின் வெளிச்சம் தெரிய, உட்பக்கமோ, அவர்கள் அக்கார்டின் வாசித்துக்கொண்டிருக்க, புகைமண்டிய, புதிய ஒயினின் கதகதப்பேற்றும் வாசனை வரும்.

தற்போது, ஆப்பிரிக்காவில் அவனருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவன் கேட்டான், “நாம் பாரிஸில் எங்கே தங்கியிருந்தோம்?”

“கிரில்லோனில். உனக்கே தெரியுமே.”

“ஏன் நான் அதை அறிந்திருக்கவேண்டும்?”

“அங்கேதான் நாம் எப்போதும் தங்குவது.”

“இல்லை. எப்போதும் அல்ல.”

“அங்கேயும் புனித செர்மய்னிலுள்ள ஹென்ரி-குவாட்டர் பெவிலியனிலும். அங்கே இருந்ததை விரும்பியதாக நீ சொல்லியிருக்கிறாய்.”

“ காதல் ஒரு சாணக்குவியல்,” என்றான் ஹாரி. “கூவுவதற்காக அதன்மேல் ஏறிய சேவல் நான்.”

“நீ வெளியேறிச் செல்லவேண்டும் எனில், பின்னால் விட்டுவந்த அனைத்தையும் அழிப்பது அவசியமா?” என்றாள் அவள். “நீ அனைத்தையும் எடுத்துச் செல்லவேண்டுமா. நீ உனது குதிரையையும் மனைவியையும் கொன்று, உனது சேணத்தையும் கேடயத்தையும் எரிக்கவேண்டுமா?”

“ஆமாம்,” என்றான் அவன். “உன்னுடைய பாழாய்ப்போன பணம்தான் எனது கவசம். எனது வேகம் மற்றும் கவசம்.”

“இல்லை.”

“சரி. நான் பேச்சை நிறுத்துவேன். உன்னைப் புண்படுத்த விரும்பவில்லை.”

“ஏற்கெனவே சற்று தாமதமாகிவிட்டது.”

“அப்போது சரி. நான் உன்னை புண்படுத்திக்கொண்டே போவேன். அது ரொம்ப வேடிக்கையாக இருக்கும். உன்னுடன் உண்மையிலே நான் எப்போதும் செய்ய விரும்பிய ஒரே விஷயத்தை, தற்போது என்னால் செய்யமுடியாது.”

“இல்லை, அது உண்மையில்லை. நீ பல விஷயங்களைச் செய்ய விரும்பினாய். மேலும் நீ செய்ய விரும்பிய அனைத்தையும் நான் செய்தேன்.”

“ஓ, கிறிஸ்துவின் பேரால் சொல்கிறேன் பெருமை பேசுவதை நிறுத்து, நிறுத்துவாயா?”

அவன் அவளைப் பார்க்க, அழுதுகொண்டிருந்தாள். “கவனி,” அவன் சொன்னான். “இதையெல்லாம் செய்வது மகிழ்ச்சியெனவா நீ நினைக்கிறாய்? நான் ஏன் இதைச் செய்கிறேனென எனக்குத் தெரியவில்லை. நம்மை உயிர்ப்பாக வைத்துக்கொள்வதை இது அழிக்க முயற்சிக்கிறதென, நான் நினைக்கிறேன். நாம் பேசத் தொடங்கியபோது சரியாகத்தான் இருந்தேன், இப்போது என்னால் ஆனமட்டும், மனநிலை பிசகிய வயோதிகன்போல் பித்தனாகவும், குரூரமானவனாகவும் உன்னிடம் நான் இருக்கிறேன். அன்பே, நான் என்ன சொன்னாலும், சற்றும் அதைக் கண்டுகொள்ளாதே. நான் உன்னை நேசிக்கிறேன். உண்மையாகவே. நான் உன்னை நேசிப்பதை அறிவாய். உன்னை நேசிப்பதுபோல் வேறெவரையும் ஒருபோதும் நான் நேசித்ததில்லை.”

அவன் பிழைப்புக்காகச் சொல்லும் வழக்கமான பொய்க்கு நழுவினான். “நீ எனக்கு மிக இனிமையானவள்.” “சிறுக்கி,” அவன் சொன்னான். “நீ பணக்காரச் சிறுக்கி. கவிதை. நான் இப்போது முழுக்க கவிதையால் நிறைந்திருக்கிறேன். அழுகலும் கவிதையும். அழுகிய கவிதை.”

“நிறுத்து. ஹாரி, நீ ஏன் இப்போது மோசமானவாக மாறவேண்டும்?”

“நான் எதையும் விட்டுச்செல்ல விரும்பவில்லை,” அந்த மனிதன் சொன்னான். “நான் விஷயம் எதுவானாலும் பின்னால் விட்டுச்செல்ல விரும்பவில்லை.”

இப்போது மாலையாகியிருந்தது. அவன் தூங்கிக்கொண்டிருந்தான். சூரியன் மலைக்குப் பின்னால் சென்றிருந்தது. சமவெளியெங்கும் நிழல் கவிந்திருக்க, சிறு விலங்குகள் கூடாரத்துக்கு அருகில் உணவெடுத்துக்கொண்டிருந்தன. விரைவாக தலையைக் கவிழ்ந்தபடியும் வாலை அசைத்தபடியும், அவை அந்த புதரிலிருந்து நன்கு விலகி வந்திருப்பதை அவன் கவனித்துக்கொண்டிருந்தான். பறவைகள் அப்போது தரையில் காணப்படவில்லை. அவை மரமொன்றில் கனமாக அமர்ந்திருந்தன. அங்கே அவை இன்னும் அதிகமாகக் காணப்பட்டன. அவனது தனிப்பட்ட தேவைகளைக் கவனிக்கும் பையன் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தான்.

“மேம் சாஹிப் சுடுவதற்குச் சென்றிருக்கிறார்,” பையன் சொன்னான். “எஜமானுக்கு எதுவும் தேவையா?”

“ஒன்றும் வேண்டாம்.”

இந்த ஆட்டத்தைப் பார்ப்பதை விரும்புகிறான் என அறிந்து அவள் இறைச்சிக்காக விலங்கொன்றைக் கொல்லப் போயிருக்கவேண்டும், அவன் காணக்கூடிய சமவெளியின் சிறு பகுதியை தொந்தரவு செய்யாதபடி, அவள் நன்கு தள்ளிச் சென்றிருக்கவேண்டும். எப்போதும் அவள் சிந்தனை வசப்பட்டவளாக இருந்தாள், என நினைத்தான். அவள் அறிந்த, வாசித்த, எப்போதாவது கேள்விப்பட்ட ஏதாவது ஒன்றின்மீதான சிந்தனையில்.

அவன் அவளிடம் சென்றபோது, ஏற்கெனவே முடிந்துபோயிருந்தான், அது அவளது தவறல்ல. நீங்கள் எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை, நீங்கள் உங்களது பழக்கம், நல்லவிதமாக உணர்வதற்காக மட்டுமே பேசினீர்கள் என ஒரு பெண் எப்படி அறிவாள்? அவன் சொன்னதை அந்தப் பொருளில் சொல்லவில்லை என்றானபிறகு, பெண்களிடம் அவன் உண்மைகளைச் சொன்ன பொழுதைவிட, பொய்களே மிக வெற்றிகரமானவையாக இருந்திருக்கின்றன.

சொல்லுவதற்கு உண்மை இல்லாமல், அவன் பொய் சொன்னதொன்றும் அத்தனை அதிகமில்லை. அவன் தனதேயான வாழ்க்கையைக் கொண்டிருந்தான், அது முடிந்ததும், அவன் அதை வெவ்வேறு நபர்களுடன், அதிகப் பணத்துடன், அதே சிறந்த இடங்களிலும், புதிய சில இடங்களிலும் வாழ்ந்தான்.

நீங்கள் சிந்திக்காமல் இருந்தீர்கள். எல்லாம் அற்புதமாக இருந்தன. பெரும்பாலோரைப் போலன்றி, நீங்கள் நொறுங்கிப் போய்விடாதபடி நல்ல மனங்களைக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் பழகிய வேலை, தற்போது இனிமேலும் செய்யமுடியாத அந்த வேலை குறித்து பொருட்படுத்தாதவர் என்ற மனநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள். ஆனால், உங்களுக்குள், நீங்கள் இந்த மக்களைப் பற்றி மிகவும் பணக்காரர்களைப் பற்றி எழுதவேண்டும் என சொல்லிக்கொண்டீர்கள். நீங்கள் உண்மையில் அவர்களது நாட்டில் ஒரு உளவாளியே அன்றி, அவர்களில் ஒருவரில்லை. அதை, சொல்லவேண்டியதை விட்டுவிட்டு நீங்கள் எழுதுவீர்கள். தான் என்ன எழுதுகிறார் என்பதைத் தெரிந்த ஒருவரால் அது எழுதப்படும். ஆனால் அவன் அதை ஒருபோதும் செய்யமாட்டான். வசதியைக் கருதி, தினமும் எழுதாததால், தனது நிலையை நிந்திப்பதால், அவனது திறமை மழுங்கி, வேலைசெய்ய வேண்டுமென்ற எண்ணம் வலுவிழந்து, கடைசியில், அவன் முழுக்கவே வேலைசெய்திருக்கமாட்டான். அவன் வேலைசெய்யாதபோது, அவன் அறிந்த நபர்கள் அனைவரும் இன்னும் வசதியாக இருப்பார்கள். அவனது வாழ்வின் மகிழ்ச்சியான நற்தருணம், ஆப்பிரிக்காவில் இருந்தது, எனவே அவன் மீண்டும் தொடங்குவதற்காக இங்கே வந்தான். அவர்கள் இந்த வேட்டைக் குழுவை குறைந்தபட்ச செளகரியமாக ஏற்பாடு செய்தார்கள். அங்கே எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் எந்த சொகுசும் இல்லை. இந்த விதத்தில் அவன் பயிற்சிக்குத் திரும்பிச்செல்லமுடியுமென நினைத்தான். ஒரு போராளி மலைக்குச் சென்று வேலைசெய்தும் பயிற்சி மேற்கொண்டும் தனது உடலிலிருந்து கொழுப்பை அகற்றுவதுபோல, தனது ஆன்மாவின் கொழுப்பை சில வழிகளில் பயின்று நீக்கமுடியுமென நினைத்தான்.

அவள் அதை விரும்பினாள். அதை நேசிப்பதாகச் சொன்னாள். அவளை உற்சாகமூட்டும், காட்சிமாற்றத்துடன் தொடர்புடைய, புதிய மனிதர்கள் நிறைந்த இடம், இனிமையான விஷயங்களுள்ள இடம் எதுவானாலும் அவள் நேசித்தாள். வேலை செய்வதற்கான மனோசக்தி திரும்பும் உணர்வை அவன் அடைந்தான். இப்போது இது எப்படி முடிந்ததென, அறிவான். தன் முதுகு முறிந்ததால் தன்னையே கொத்திக்கொள்ளும் பாம்புபோல அவன் திரும்பக்கூடாது. அது இந்தப் பெண்ணின் தவறல்ல. அவளின் தவறில்லையெனில், அது மற்றொருத்தியின் தவறாகவே இருக்கும். அவன் ஒரு பொய்யின் மூலம் வாழ்ந்தால், அதன் மூலமே இறக்க முயற்சித்திருக்கவேண்டும். குன்றைத் தாண்டி குண்டொன்றின் ஓசையைக் கேட்டான்.

கருணையான பராமரிப்பாளரும் அவனது திறமையின் அழிவுசக்தியுமான இந்தப் பணக்கார சிறுக்கி, நன்றாகவே சுட்டாள். மடத்தனம். அவன், தன் திறமையை தானே அழித்துக்கொண்டான். ஏன் அந்தப் பெண்மீது குற்றம்சாட்டவேண்டும், அவள் அவனை நன்றாகக் கவனித்துக் கொண்டதாலா?, தனக்குத்தானே செய்துகொண்ட துரோகத்தின்மூலம், அவன் நம்பிக்கை வைத்திருந்தவற்றின் மூலம், அளவுக்கதிமாக குடித்து தனது அறிதல் உணர்வின் முனையை மழுங்கச் செய்ததன்மூலம், சோம்பேறித்தனத்தின் மூலம், செயலில் இறங்க விருப்பமில்லாதிருந்ததன் மூலம், மூர்க்கத்தனத்தின் மூலம், பெருமிதம் மற்றும் பாராபட்சத்தின் மூலம். குறுக்குவழிகளின் மூலம் அவன் தனது திறமையை அழித்துக்கொண்டான். இதெல்லாம் என்ன? பழைய புத்தகங்களின் பெயர்ப் பட்டியலா? அவனது திறமைதான் என்ன? அது ஒரு திறமை சரி, ஆனால் அதைப் பயன்படுத்துவதை விட்டு, அவன் அதை விற்பனைசெய்தான். அது ஒருபோதும், என்ன செய்தான் என்பதல்ல, எப்போதும் அவனால் என்ன செய்யமுடியும் என்பதாகவே இருக்கும். பேனா அல்லது பென்சிலுக்குப் பதிலாக வேறொன்றைத் தேர்வுசெய்து தன் வாழ்க்கையை முடிவுசெய்தான். அது வினோதமானதும்கூட, இல்லையா. அவன் மற்றொரு பெண்ணின் மீது காதலில் விழுந்தபோது, அந்த பெண் எப்போதும் கடைசிப் பெண்ணை விடவும் கூடுதலாக பணம் கொண்டிருந்தாள் இல்லையா? ஆனால் அவன் இனியும் காதலில் இல்லாதபோது, தற்போது இந்தப் பெண்ணிடம், பொய் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தபோது, அனைவரிலும் அதிகப் பணத்தைக் கொண்டிருந்த அவள், கணவனும் குழந்தைகளையும் கொண்டிருந்த அவள், காதலர்களைக் கண்டடைந்து அவர்களிடம் அதிருப்தியடைந்துகொண்டிருந்த அவள், அவனை ஒரு எழுத்தாளராக மிகவும் நேசித்து, ஒரு ஆணாக, ஒரு தோழனாக, பெருமைமிக்க உடமையாக நினைத்துக்கொண்டிருந்தாள். அவன் உண்மையிலே நேசித்தபொழுதைவிட, சற்றும் நேசிக்காது பொய்சொல்லிக்கொண்டிருந்தபோது, அவளது பணத்துக்கு, கூடுதலாக அவளுக்குத் தரமுடிந்தது என்பது விநோதமாக இருந்தது அவனுக்கு.

நாம் என்ன செய்யவேண்டும் என்பதை நாம்தான் அவசியம் தீர்மானிக்கவேண்டுமென, அவன் நினைத்தான். இருந்தபோதும் உங்களது திறமைகளைப் பொருத்தே, நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கவேண்டும். ஒரு வடிவிலோ இல்லை வேறுவடிவிலோ, அவன் தனது உயிர்சக்தியை தன் வாழ்க்கை முழுதும் விற்றிருந்தான். உங்களது பாசங்கள் பெரிதும் ஈடுபாடன்றி இருக்கும்போது, நீங்கள் பணத்துக்கு இன்னும் கூடுதல் மதிப்பை அளித்துவிடுகிறீர்கள். அவன் அதைக் கண்டுபிடித்திருந்தபோதும், இப்போதும்கூட அதை எழுதமாட்டான். இல்லை, அது எழுதத் தகுதியானது என்றபோதும், அவன் அதை எழுதமாட்டான்,.

இப்போது அவள் கூடாரத்தினை நோக்கிய திறப்பின் ஊடாக நடந்தபடி பார்வைக்குத் தட்டுப்பட்டாள். அவள் ஜோத்பூர் காற்சட்டை அணிந்து தனது ரைஃபிளை ஏந்தியபடி காணப்பட்டாள். அந்த இரண்டு சிறுவர்கள் வட்டார வழக்கு மொழி பேசியபடி, அவளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தனர். அவள் இன்னும் அழகிய தோற்றமுடைய பெண்ணாக, அழகிய உடலைக் கொண்டவளாக இருந்ததாக நினைத்தான். அவள் படுக்கைக்கான மகத்தான திறமையும், புரிதலும் கொண்டிருந்தாள், அவள் அழகி இல்லை, ஆனால் அவளது முகத்தை விரும்பினான், அவள் நிறைய வாசித்தாள், சவாரி செய்யவும் சுடவும் விரும்பினாள், நிச்சயமாக அவள் அளவுக்கதிகமாகக் குடித்தாள். அவளது கணவன், ஒப்பீட்டளவில் அவள் இளம்பெண்ணாக இருக்கையிலே இறந்துபோனான், சில காலம் அவள் ஓரளவு வளர்ந்த தனது இரு குழந்தைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள், அவர்களுக்கு அவள் தேவைப்படாததால், அவர்கள் அவளைக் குறித்து, அவளது லாயம் மற்றும் குதிரைகள், புத்தகங்கள், மற்றும் பாட்டில்கள் குறித்து சங்கடப்பட்டார்கள். அவள் இரவுணவுக்கு முன்னால் மாலையில் வாசிப்பதையும் வாசிக்கும்போது ஸ்காட்சும் சோடாவும் குடிப்பதையும் விரும்பினாள். இரவுணவுவரை அவள் அளவாகக் குடித்திருப்பாள், இரவுணக்கு ஒரு வைன் பாட்டில் குடித்து, தூங்கப் போதுமான அளவு குடித்திருப்பது அவள் வழக்கம்.

அது காதலர்கள் அமைவதற்கு முன்னர். பின்பு அவளுக்கு காதலர்கள் அமைந்தபின் அவள் அதிகமாகக் குடிப்பதில்லை, ஏனெனில் தூங்குவதற்காக குடிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. ஆனால் காதலர்கள் அவளை சலிப்படையச் செய்தனர். அவள், தன்னை ஒருபோதும் சலிப்படையச் செய்யாத ஒருவனை மணந்திருந்தாள், இந்த நபர்களோ அவளை பெரிதும் சலிப்படையச் செய்தனர்.

பின் அவளது இரண்டு குழந்தைகளில் ஒன்று விமான விபத்தில் இறந்துபோக, அதன்பின் அவள் காதலர்களை விரும்பவில்லை, மது மயக்க மருந்தாக இல்லை. அவள் மற்றொரு வாழ்க்கையை அமைக்கவேண்டி வந்தது. திடீரென, அவள் தனியாக இருப்பது குறித்து பெரிதும் பீதியடைந்தாள். அவள் தன்னை மதிக்கும் ஒருவரை விரும்பினாள்.

அது மிக எளிதாகத் தொடங்கியது. அவள், அவன் எழுதியதை விரும்பினாள், அவன் வாழ்க்கை நடத்திய விதத்தில் எப்போதும் பெருமைகொண்டாள். விரும்பியது என்னவோ மிகச்சரியாக அதை அவன் செய்ததாக அவள் நினைத்தாள். அவள் அவனை அடைந்த வழிமுறைகளும் கடைசியில் அவன்மீது காதலில் விழுந்த வழிமுறைகளும் அனைத்தும் ஒழுங்கான வளர்ச்சிப் பாதையின் பகுதியாக அமைந்தன. அவள் தனக்கு புதிய வாழ்க்கையொன்றைக் கட்டியெழுப்பிக்கொண்டாள், அவனோ தனது பழைய வாழ்க்கையில் மீந்திருந்ததை விற்றுவிட்டான்.

அவன் அதை அவன் பாதுகாப்புக்காகவோ, வசதிக்காகவோ விற்றிருக்கலாம். அதில் மறுப்பில்லை, வேறெதற்காக என அறிந்திருக்கவில்லை. அவன் விரும்பிய எதையும் அவள் வாங்கியளித்திருக்கமுடியும். அதை அறிந்திருந்தான். அவள் பெரிதும் அருமையான பெண்ணும்கூட. எல்லாப் பெண்களையும்போலவே, அவளுடனும் விரைவிலே படுக்கைக்குப் போனான். தவிரவும், அவள் பணக்காரி, மிகவும் இனிமையானவளாகவும் பாராட்டும் குணமுடையவளாகவும் இருந்தாள், அவள் ஒருபோதும் மிகையாக நடந்துகொள்ளவில்லை. அவள் கட்டியெழுப்பிய இந்த வாழ்க்கை மீண்டும் ஒரு முடிவுக்குவரப்போகிறது, ஏனெனில், தங்கள் தலையை உயர்த்தியபடி, உற்றுநோக்கிய அதேவேளை மூக்குத்துளைகள் காற்றுக்காகத் தேடியபடியிருக்க, காதுகள் அகலத் திறந்து முதல் சத்தத்தைக் கேட்கவும், அந்தத் சத்தம் அவற்றை புதருக்கும் விரைந்தோடச் செய்யவும் தயாராயிருந்த, ஆப்பிரிக்க மறிமான் மந்தையை அவர்கள் இரு வாரங்களுக்கு முன் புகைப்படமெடுக்க முன்னகர்ந்தபோது, அவனது மூட்டில் முள்ளொன்று கீறியது, அவன் அதற்கு அயோடின் தடவாமல் விட்டுவிட்டான். அவன் படமெடுக்கும்முன் அவை ஓட்டமெடுக்கவும் செய்தன.

இப்போது அவள் வந்தாள்.

படுக்கையில் கிடந்தபடி அவளை நோக்கி தனது தலையைத் திருப்பினான்.

“ஹலோ,” அவன் அழைத்தான்.

“நான் ஆடொன்றைச் சுட்டேன், அவன் உனக்காக நல்ல சூப் தயாரிப்பான். நான் அதைச் சாப்பிட்டுவிட்டு, கிளிம்முடன் சேர்ந்து வேகவைத்த உருளைக்கிழங்கு பிசைவேன். நீ எப்படி உணர்கிறாய்?” என்றாள் அவள்.

“பெரிதும் நன்றாக.”

“அது அருமையாக இல்லை? நீ நன்றாக உணர்வாய் என நினைத்தேன் தெரியுமா. நான் கிளம்பிபோது நீ தூங்கிக்கொண்டிருந்தாய்.”

“நான் நன்றாக உறங்கினேன். நீ வெகுதூரம் நடந்துசென்றாயா?”

“இல்லை. மலைக்குப் பின்பகுதியைச் சுற்றி மட்டும்தான். நான் ஆட்டினை மிகச் சரியாக சுட்டேன்.”

“நீ அற்புதமாகச் சுடுவாய், உனக்கே தெரியும்.”

“நான் அதை நேசிக்கிறேன். ஆப்பிரி்க்காவை நேசிக்கிறேன். உண்மையிலே. நீ மட்டும் நன்றாக இருந்தால், நான் அனுபவப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்திருக்கும். உன்னுடன் சென்று சுடுவதிலுள்ள மகிழ்ச்சியை நீ அறியமாட்டாய். நான் இந்த நாட்டை நேசிக்கிறேன்.”

“நானும் கூட நேசிக்கிறேன்.”

“அன்பே, நீ நல்லவிதமாக உணர்வதைக் காண்பது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்பதை அறியமாட்டாய். நீ மோசமாக உணரும்போது என்னால் தாங்கமுடியவில்லை. நீ மீண்டும் அப்படி பேசமாட்டாய் அல்லவா, பேசுவாயா? எனக்கு சத்தியம் செய்”

“இல்லை,” அவன் சொன்னான். “நான் என்ன பேசினேன் என எனக்கு நினைவில்லை.”

“நீ என்னை பாழாக்கக்கூடாது. பண்ணுவாயா? நான் உன்னை நேசிக்கிற, ஒரு நடுத்தர வயதுடைய, நீ என்ன செய்ய விரும்புகிறாயோ, அதைச் செய்ய விரும்பும் பெண் மட்டுமே. ஏற்கெனவே நான் இரண்டு மூன்று முறை அழிவுக்குட்படுத்தப்பட்டவள். நீ என்னை மறுபடியும் அழிவுக்குட்படுத்த விரும்பமாட்டாய்தானே, விரும்புவாயா?”

“நான், உன்னை படுக்கையில் சிலமுறை அழிவுக்குட்படுத்துவதை வேண்டுமானால் விரும்புவேன்,” அவன் சொன்னான்.

“ஆமாம், அதுதான் சிறந்த அழிப்பு. அந்தவிதத்தில் அழிவுக்கு உட்படுத்தத்தான் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம். விமானம் நாளை இங்கிருக்கும்.”

“எப்படி உனக்குத் தெரியும்?”

“நான் உறுதியாய் இருக்கிறேன். அது வந்தாகவேண்டும். பையன்கள் சமிக்ஞை காட்ட விறகு, புற்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்கிறார்கள். இன்றும் அதைப் பார்த்தேன். தரையிறங்க தாராளமான இடமிருக்கிறது. இரு முனைகளிலும் புகை சமிக்ஞை தர ஆயத்தமாயிருக்கிறோம்.”

“எது உன்னை, நாளை அது வருமென நினைக்கச் செய்தது?”

“அது வரும் என்பதில் நிச்சயமாய் இருக்கிறேன். இப்போதே அது தாமதமாகிவிட்டது. பின், நகரில், அவர்கள் உனது காலை சரிசெய்வார்கள், பின் நாம் துயருண்டாக்கும் பேச்சுப்போல அல்லாமல், சற்று நல்ல அழிவு நடவடிக்கையில் ஈடுபடுவோம்.”

“நாம் சற்று மது அருந்துவோமா? சூரியன் அஸ்தமனமாகிறது.”

“அருந்தலாமென நீ நினைக்கிறாயா?”

“நான் ஏற்கெனவே ஒன்றை அருந்திக்கொண்டிருக்கிறேன்.”

“நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருமுறை அருந்துவோம். மோலோ, இரண்டு விஸ்கி- சோடா!” அவள் ஆணையிட்டாள்.

“நீ உனது கொசுக்கடி தடுக்கும் காலணிகளை அணிவது நல்லது,” அவன் அவளிடம் கூறினான்.

“நான் குளிப்பதுவரை காத்திருப்பேன்…”

இருளடைந்து வந்த நிலையில் அவர்கள் மதுவருந்தினர், முழுக்க இருளடையும்முன், சுடுவதற்கு போதுமான ஒளியில்லாதபோது, ஒரு கழுதைப்புலி திறந்தவெளியில் தன் வழியில் குன்றைச் சுற்றி சென்றுகொண்டிருந்தது.

“அந்த முட்டாள் அந்தவழியே ஒவ்வொரு நாள் இரவும் கடந்துசெல்கிறான்,” அவன் சொன்னான். “இரண்டு வாரங்களாக ஒவ்வொரு இரவும்.”

“இரவில் சத்தம் ஏற்படுத்துபவன் அவன்தான். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருந்தபோதிலும் அவை அழுக்குப்பிடித்த மிருகங்கள்.”

இருவரும் ஒன்றாக மதுவருந்திக் கொண்டிருக்க, ஒரே நிலையில் கிடப்பதன் அசெளகர்யத்தைத் தவிர வேறேதும் வலியில்லை, பையன்கள் நெருப்பைக் கொளுத்தினர், அதன் நிழல் கூடாரத்தின்மீது தாவியது, இனிமையைச் சரணடையும் வாழ்வின் அறிமுகம் திரும்பியதை அவனால் உணரமுடிந்தது. இன்று மதியம் நியாயமின்றியும் குரூரமாகவும் நடந்திருந்தான். அவள் ஒரு நல்ல பெண், உண்மையிலே அற்புதமானவள். அப்போது, தான் இறக்கப்போவதாக அவனுக்குத் தோன்றியது.

அது ஓர் பாய்ச்சலென வந்தது. நீர் அல்லது காற்றின் பாய்ச்சலைப் போலல்ல, மாறாக தீமையின் வாசத்துடனான திடீர் வெறுமையாக, விநோதமான விஷயம் என்னவென்றால் அந்தக் கழுதைப்புலி அங்கே விளிம்பில் நழுவிச் சென்றது.

அது என்ன, ஹாரி?” அவள் கேட்டாள்.

“ஒன்றுமில்லை,” சொன்னான். “நீ மறுபுறம் திரும்பியிருப்பது நல்லது. காற்றுவரும் திசையில்.”

“மோலோ ட்ரெஸிங்கை மாற்றினானா?”

“ஆமாம். நான் தற்போது வெறுமனே போரிக்கை பயன்படுத்துகிறேன்.”

“நீ எப்படி உணர்கிறாய்?”

“சற்றே தள்ளாட்டமாக.”

“நான் குளியலறை செல்கிறேன்,” என்றாள். “நான் சீக்கிரம் வெளியே வருவேன். உன்னுடன் நான் சாப்பிட்ட பிறகு, நாம் கட்டிலை உள்ளே போடுவோம்.”

அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான், நாம் சச்சரவிடுவதை நல்லவிதமாகத் தவிர்த்துவிட்டோம். இந்தப் பெண்ணுடன் ஒருபோதும் இந்தளவு சச்சரவு செய்தது கிடையாது. தான் நேசித்த பெண்களுடன் அவன் பெரிதும் சச்சரவிட்டிருக்கிறான், கடைசியில் எப்போதும் விவாதத்தின் விளைபயனாக, அவர்கள் ஒன்றாக இருந்ததின் நெருக்கம் அழிந்துவிடும். அவன் பெரிதும் நேசித்திருக்கிறான், பெரிதும் கோரிப்பெற்றிருக்கிறான், அவையனைத்தாலும் களைத்துப்போயிருக்கிறான்.

அவன் வெளியேறிச் செல்லும் முன் பாரிஸில் சச்சரவிட்டதைப்பற்றி கான்ஸ்டான்டிநோபிளில் தனியே நினைத்துப் பார்த்தான். மொத்த நேரமும் பயனின்றிச் செலவிட்டு முடிந்ததும், தனது தனிமையை அழிப்பதில் தோல்வியடைந்திருந்தான். ஆனால் அது அதை மோசமாக்கத்தான் செய்தது. தன்னைப் பிரிந்த முதலாமவளுக்கு கடிதம் எழுதினான், எப்படி அவன் ஒருபொழுதும் நேரத்தை அழிக்கமுடியாமல் இருந்தான், ரீஜென்ஸுக்கு வெளியே ஒருமுறை அவளைப் பார்த்ததாக நினைத்தான், அது எப்படி அவனை உள்ளுக்குள் நோய்த்தன்மையுடனும் மயமக்கமடையவும் வைத்தது. ஏதோ ஒருவிதத்தில் அவளைப்போல இருந்த ஒருத்தியை இருபுறமும் மரங்களடர்ந்த சாலையின் வழியாகப் பின்தொடர்ந்தது, அவளாக இல்லாமலாகிவிடுவோளோ என பயந்து அவள் முகத்தைப் பாராதது, அவள்தான் என்ற எண்ணம் அவனுக்கு அளித்த உணர்வை இழக்கப் பயந்தது அனைத்தையும் எழுதினான். அவன் படுத்த ஒவ்வொரு பெண்ணும், அவளை பெரிதும் இழந்ததாக உணரவைத்தாள். அவளைக் காதலிப்பதிலிருந்து தன்னைக் குணப்படுத்த முடியாது எனத் தெரிந்ததிலிருந்து, அவள் என்ன செய்தாள் என்பது ஒருபொழுதும் பொருட்டாகாமல் போனது எப்படி அனைத்தையும் எழுதினான். அவன் இந்தக் கடிதத்தை நிதானத்துடன் கிளப்பிலிருந்து எழுதினான், அதை நியுயார்க்குக்கு அனுப்பிவிட்டு, அவளை பாரிஸிலிருந்த அலுவலக முகவரிக்கு எழுதச்சொல்லி கேட்டுக்கொண்டான். அது பாதுகாப்பானதாகத் தோன்றியது. அன்று இரவு அவளைப் பெரிதும் பிரிந்திருக்கும் உணர்வு அவனை வெறுமையாகவும், உள்ளுக்குள் நோய்க்கூறாகவும் உணரச்செய்தது, மாக்சிம் உணவகத்தைத் தாண்டி திரிந்துகொண்டிருக்கையில், ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு இரவுணவுக்குச் சென்றான். அதன்பிறகு அவன் அவளுடன் நடனம் ஆடும் இடத்துக்குப் போனான், அவள் மோசமாக ஆடவே, அவனுடைய இடுப்புடன் இடுப்பை வைத்து, அது புண்ணாகுமளவுக்குச் சுழற்றிய, சூடேற்றும் ஆர்மினியன் தாசிக்காக அவளை விட்டான்.

அவளை துப்பாக்கி சுடக்கூடிய, ஒரு பிரிட்டிஷ் லெப்டினன்டிடமிருந்து, ஒரு சண்டைக்குப் பின் இழுத்துவந்திருந்தான். அந்த துப்பாக்கிக்காரன் அவனை வெளியே அழைக்க, தெருவில் அவர்கள் இருளில் துரிதமாக சண்டையிட்டுக்கொண்டனர். அவன் மற்றவனை இருமுறை பலமாகத் தாடையின் பக்கவாட்டில் தாக்கினான், ஒரு சண்டைக்காக வந்திருக்கிறான் என்பதை அறிந்திருந்ததால், அவன் தாழ்ந்து செல்லவில்லை. துப்பாக்கி வைத்திருந்தவன் அவனை உடலிலும், பின் கண்ணருகிலும் தாக்கினான். இடதுபுறமாக கையை வீசி சுழன்று தரையில் விழ, துப்பாக்கிக்காரன் அவன் மேல் விழுந்து அவனது கோட்டைப் பிடித்து இழுந்து ஒரு கைப்பகுதியைக் கிழித்தான். அவன் அவரை இருமுறை காதுக்குப் பின்புறமாக கோர்த்துப் பிடித்து தனது வலது கையாள் அறைந்து தூரத் தள்ளினான் துப்பாக்கிக்காரன் கீழே விழ, அவனது தலை முதலில் மோதியது. ராணுவ போலீஸ் வரும் சத்தத்தை அவர்கள் கேட்டதால், அவன் அந்தப் பெண்ணுடன் ஓடிப்போனான். அவர்கள் ஒரு வாடகைக் காரில் ஏறி பாஸ்போராஸ் வழியாகவும் அதைச் சுற்றியும் ரிம்மிலி ஹிஸ்ஸாவுக்குச் சென்றனர். அங்கே குளிர்ந்த இரவில் படுக்கைக்குச் சென்றனர். அவள் மென்மையாக, ரோஜா இதழைப் போல், பாகென, மென்மையான வயிற்றுடன், பெரிய மார்புகளுடன், அவளது பிருஷ்டத்துக்குக் கீழே தலையணை எதுவும் தேவையற்றவளாகத் தோன்றினாலும், தேவைக்கதிகமாக கனிந்தவளாக உணர்ந்தான். அவள் விழிக்கும்முன்னே, முதல் காலையொளியின் மங்கல் பொழுதிலேயே அவளை விட்டுவிட்டு பெரா பேலஸுக்கு கறுத்த கண்களுடனும், ஒரு கைப்பகுதி கிழிந்ததனால் கோட்டை கையில் சுமந்தபடியும் வந்துசேர்ந்தான் அவன்.

அதே இரவில்தான் அனடோலியாவை விட்டுவந்தான். பின் அந்தப் பயணத்தை நினைவுகூர்ந்தபோது, ஓபியத்துக்காக பாப்பிஸ் பயிர்செய்த வயலினூடாக நாளெல்லாம் பயணம்செய்ததையும். அது தன்னை எத்தனை விநோதமாக உணரச் செய்தது என்பதையும். கடைசியில், பயண தூரம் முழுவதும், புதிதாக வந்த எந்தவொரு பாழாய்ப்போன விஷயத்தையும் அறிந்திராத கான்ஸ்டன்டைன் ஆப் ஐஸர்ஸ் உடனான அவர்கள் தாக்குதல் தவறாகப் பட்டது, பீரங்கிகள் படைகளின்மீது சுட, பிரிட்டிஷ் பார்வையாளர்கள் குழந்தையைப்போல கத்தினர்.

அன்றுதான் அவன் முதன்முதலில் இறந்த மனிதர்கள் வெண்ணிற பாலே பாவாடையும், கம்பளி ஒப்பனைக் குஞ்சத்துடனான தலைகீழாக அணிவிக்கப்பட்ட ஷூக்கள் அணிந்திருப்பதையும் கண்டான். துருக்கியர்கள் உறுதியாகவும் கும்பலாகவும் வந்துகொண்டிருந்தனர். பாவாடையணிந்த மனிதர்கள் ஓடுவதையும் ஐஸர்ஸ் அவர்களின் மீது சுடுவதையும், பின் அவர்களும் அவனும் பிரிட்டிஷ் பார்வையாளர்களும்கூட ஓடுவதையும், அவனது நுரையீரல்கள் வலியெடுக்க, வாய் முழுக்க பென்னிக் காசுகளின் சுவையிருக்க, அவர்கள் சில பாறைகளின் பின்னே மறைந்தனர், அங்கேயும் எப்போதும்போல் துருக்கியர் கும்பலாக வந்தபடியிருந்தனர். அதன்பின் தான் ஒருபோதும் நினைத்தும் பார்த்திராத விஷயங்களை அவன் கண்டான். அதற்கும்பின் அதனினும் மோசமான விஷயங்களைக் கண்டான். எனவே அவன் பாரிஸுக்குத் திரும்பியபோது அதனைப் பற்றி அவனால் பேசவோ, அதைக் குறிப்பிடவேண்டும் என உறுதியாய் சொல்லவோ முடியவில்லை. அங்கே ஒரு கஃபேயைக் கடந்தபோது, அங்கே ஒரு அமெரிக்க கவி தனக்குமுன் தட்டுகளின் குவியல் காணப்பட, தனது உருளைக்கிழங்கு முகத்தில் மடத்தனமான தோற்றத்துடன் தன் பெயரை ட்ரிஸ்டன் ஜாரா என சொல்லிக்கொண்ட எப்போதும் ஒற்றை மூக்குக் கண்ணாடி அணியும், தலைவலி கொண்ட ரோமானியனிடம் தாதா இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். குடியிருப்புக்குத் திரும்பி, அனைத்து சச்சரவுகளுடன், அனைத்து பைத்தியக்காரத்தனங்களுடன், தனது மனைவியுடன் இப்போது வீட்டிலிருப்பதன் மகிழ்ச்சியுடன், மீண்டும் காதல் புரிந்தான். அலுவலகம் கடிதத்தை அவனது குடியிருப்புக்கு அனுப்பியது. அவன் எழுதிய கடிதமொன்றுக்குப் பதில் கடிதம் ஒரு காலையில் வந்திருந்தது. அந்தக் கையெழுத்தைப் பார்த்ததும் முழுக்க உறைந்துபோனான் அவன், அந்தக் கடிதத்தை மற்றொரு கடிதத்தின்கீழ் நழுவவிட முயன்றான். ஆனால் அவனது மனைவி, “இந்தக் கடிதம் யாரிடமிருந்து வந்திருக்கிறது, அன்பே?” எனக் கேட்க, அதுதான் அந்த தொடக்கத்தின் முடிவாக இருந்தது.

அவர்கள் அனைவருடனான நல்ல நேரங்களையும் சச்சரவுகளையும் நினைவுகூர்ந்தான், அவர்கள் சச்சரவிட அருமையான இடங்களைத் தேர்வுசெய்தனர். எப்போதும் அவன் மிகச்சிறப்பாக உணரும்போதே, அவர்கள் அனைவரும் சச்சரவிட்டது ஏன்? அவை எதையும் ஒருபோதும் எழுதவில்லை, ஏனெனில், முதலில் அவன் எவரொருவரையும் புண்படுத்த விரும்பவில்லை, பின் அவையன்றியே எழுதுவதற்கு போதுமான விஷயமிருப்பதுபோல் தோன்றியது. ஆனால் எப்போதும், அவன் அவற்றைக் கடைசியில் எழுதுவான் என நினைத்துவந்தான். எழுதுவதற்கு நிறைய இருந்தது. அவன் வெறுமனே நிகழ்வுகளை மட்டுமல்ல… உலகம் மாறுவதைக் கவனித்திருந்தான். அத்தகைய நிகழ்வுகள் பலவற்றையும் நபர்களையும் கவனித்திருந்தான், ஆனால் அவன் நுண்ணிய மாற்றங்களையும், நபர்களையும் வெவ்வேறு காலகட்டத்தில் ஆட்கள் எப்படிக் காணப்பட்டார்கள் என்பதையும் நினைவுபடுத்தமுடியும். அவன் அதில் இருந்திருந்தான், அதைக் கவனித்திருந்தான், அதனை எழுதுவது அவனது கடமை. ஆனால் இனி அவனால் ஒருபோதும் எழுதமுடியாது.

“எப்படி உணர்கிறாய்” அவள் கேட்டாள். குளியலுக்குப் பின் கூடாரத்திலிருந்து வெளியே வந்திருந்தாள்.

“நல்லபடியாக.”

“இப்போது உன்னால் சாப்பிடமுடியுமா?”

அவளுக்குப் பின்னால் மோலோ, மடிக்கக்கூடிய மேஜையுடனும் மற்ற பையன் உணவுப்பொருட்களுடன் இருப்பதைப் பார்த்தான். “நான் எழுத விரும்புகிறேன்,” என்றான்.

“நீ, உனது சக்தியை அதிகரிக்க அவசியம் கொஞ்சம் சூப் சாப்பிடவேண்டும்.”

“நான் இன்றிரவு இறக்கப் போகிறேன், நான் சக்தியை அதிகரிக்கவேண்டிய தேவையில்லை.”

“தயவுசெய்து நாடகப் பாங்காக நடந்துகொள்ளவேண்டாம், ஹாரி,” அவள் சொன்னாள்.

“உனது மூக்கை ஏன் உபயோகிக்கக்கூடாது? இப்போது என் தொடைவரை பாதியுடல் அழுகிவிட்டேன். சூப்பைப் பருகி நான் எதற்கு ஏமாற்றவேண்டும்? மோலோ விஸ்கி- சோடா கொண்டுவா.”

“தயவுசெய்து சூப்பைச் சாப்பிடுங்கள்,” நயமாகச் சொன்னாள்.

“சரி.”

சூப் மிகச் சூடாக இருந்தது. அது சாப்பிடும் சூடுடையதாக மாறும்வரை கோப்பையிலே விட்டுவிட்டு, ஆறியதும், வாயைத் திறந்து ஒரே விழுங்கில் குடித்தான்.

“நீ ஒரு நல்ல பெண்,” கூறினான். “என்மீது எந்தக் கவனமும் செலுத்தாதே.”

அவள் அவனை தனது நன்கறிந்த, நன்கு நேசித்த முகம்கொண்டு பார்த்தாள். படுக்கைக்கு மட்டுமே சற்று மோசமானது, ஆனால் டவுன் அண்ட் கண்ட்ரி ஒருபொழுதும் அந்த நல்ல மார்பகங்களை, அந்தப் பயனுள்ள தொடைகளை, சற்றே சிறிதான முதுகை, வருடும் கைகளைக் காட்டியதில்லை. அந்த நன்கறிந்த இனிய புன்னகையைப் பார்த்தபோது, அவன் மரணம் மீண்டும் வருவதை உணர்ந்தான். இம்முறை எந்த அவசரமும் இல்லை. காற்று மெழுகுவர்த்திச் சுடரை நடுங்கச் செய்து சுடரை உயரச் செய்வதுபோல, அது ஒரு அசைவாக இருந்தது.

“அவர்கள் எனது வலையை எடுத்துவந்து மரத்தில் தொங்கவிட்டு, உயரமாக நெருப்பை எரியவிடுவார்கள். நான் இன்றிரவு கூடாரத்துக்குள் போகப்போவதில்லை. போவதில் பலனில்லை. இது தெளிவான இரவு. இன்றிரவு மழை எதுவும் இருக்கப்போவதில்லை.”

ஆக நீ வெளியிடும் கிசுகிசுப்புகள் கேட்காமல், இப்படித்தான் நீ மரணிப்பாய். நல்லது, இனி சச்சரவு இருக்காது. அவன் அதை உறுதியாகச் சொல்லமுடியும். இனி ஒருபோதும் அடையவாய்ப்பில்லாத அனுபவத்தை, வீணடிக்கப்போவதில்லை. அநேகமாக அவன் வீணடிக்கவும் செய்யலாம். அனைத்தையும் வீணடித்திருக்கிறாய். ஒருவேளை அவன் வீணடிக்காமலும் இருக்கலாம்.

“உன்னால், சொல்லச் சொல்ல எழுதமுடியுமா?, உன்னால் இயலுமா?”

“நான் ஒருபோதும் கற்றுக்கொண்டதில்லை,” அவள் கூறினாள்.

“சரி.”

நிச்சயமாக, நேரமில்லை, இருந்தபோதும் சரியாகச் செய்தால் அதனை நெருக்கித் தொகுத்து அவையனைத்தையும் ஒரு பத்தியாக மாற்றமுடியும்போலத் தோன்றியது.

ஏரிக்கு மேலே குன்றொன்றின் மீது, வெண்ணிறக் காரைப் பூச்சுடைய மரவீடொன்று இருந்தது. ஆட்களை உணவுக்கு அழைக்க, கதவருகே கம்பம் ஒன்றில் மணி கட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குப் பின்னால் வயல்வெளிகளும், வயல்வெளிகளுக்குப் பின் மரங்களும் காணப்பட்டன. வீட்டிலிருந்து துறை வரைக்கும் லோம்பார்டி பாப்லர் மரங்களின் வரிசையொன்று காணப்பட்டது. அவை தவிர்த்தும் பாப்லர்கள் குறிப்பிட்ட தூரம் வரை காணப்பட்டன. மரவரிசையின் விளிம்பையொட்டி சாலையொன்று குன்று வரைக்கும் செல்ல, அந்த சாலையெங்கும் அவன் ப்ளாக்பெரிகளைப் பொறுக்கியெடுத்தான். பின் அந்த மர வீடு எரிக்கப்பட்டது. திறந்தவெளி சுடும் இடங்களுக்கு மேலாக இருந்த மான்கால் சட்டத்திலிருந்த அனைத்து துப்பாக்கிகளும், பின்பு பத்திரிகைகளுக்காக வைத்திருந்த ஈயத்துடனான பீப்பாய்களுடன் எரிக்கப்பட்டன. கையிருப்புகள் எரிக்கப்பட்டன, சாம்பல் குவியல்கள், பெரிய இரும்பாலான சோப்புக் கெட்டில்கள் வடிவமைப்பதற்கான கடுங்கார நீராகப் பயன்படுத்தப்பட்டன. அங்கே விளையாடலாமா என தாத்தாவிடம் கேட்டால், கூடாது என்பார். அவை அவரது துப்பாக்கிகள், இருந்தபோதும் அவர் அதன்பின் துப்பாக்கிகள் வாங்கவில்லை. அதன்பின்பு அவர் வேட்டையாடவும் செல்லவில்லை. அதே இடத்தில் தற்போது வீடு மறுபடி கட்டைகளால் கட்டப்பட்டு வெண்ணிற வண்ணம் அடிக்கப்பட்டது. அதன் முகப்பிலிருந்து நீங்கள் ஏரிக்கு அப்பாலிருக்கும் பாப்லர் மரங்களைக் காணலாம். ஆனால் அங்கே இனி ஒருபோதும் துப்பாக்கிகளைக் காணமுடியாது. மர வீட்டின் சுவரில் அமைந்த மான் கால் சட்டகங்களில் கிடந்த துப்பாக்கிப் பீப்பாய்களின் உருகிக் கிடந்த சாம்பல் குவியல் வடிவை, அதன்பின் எவரும் தொடவில்லை.

போருக்குப் பின், அடர் இருள் காட்டில், நாங்கள் ட்ரவுட் மீன்களுள்ள ஓடையொன்றை வாடகைக்கு எடுத்தோம். அதற்குச் செல்ல இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று ட்ரைபெர்க்கிலிருந்து பள்ளத்தாக்கிலிருந்து செல்வது, பள்ளத்தாக்கின் வெண்ணிறச் சாலையைச் சுற்றி, மரங்களின் நிழல்கள் வேலியிடப்பட்டதுபோல் காணப்பட, பின் ஒரு பக்கவாட்டுச் சாலை மேலே மலைக்குன்று வழியாகச் சென்று பல சிறு பண்ணைகளையும், பெரிய ஸ்வார்ஸ்வால்ட் வீடுகளையும் கடந்து, நீரோடையொன்றைக் கடப்பதுவரை அந்தச் சாலை சென்றது. அங்கேதான் எங்கள் மீன்பிடிப்பு தொடங்கியது

இன்னொரு பாதை வனங்களின் விளிம்பு வரை செங்குத்தாகச் ஏறிச்சென்றது, பின் குன்றின் குறுக்காக பைன் மரங்களினூடாகச் சென்று, புள்வெளியின் ஓரத்தூடாக வெளிப்பட்டு அந்த புள்வெளியூடாக இறங்கி பாலத்துக்குச் செல்வது. நீரோடையின் பக்கவாட்டில் பிர்ச்சஸ் மரங்கள் காணப்பட்டன. நீரோடை அத்தனை பெரிதாக இருக்கவில்லை, சிறிதாக, ஆனால் தெளிவாகவும் விரைந்தும் ஓடியது. எங்கெல்லாம் பிர்ச்சஸ் மரங்களின் வேர்கள் இடையிட்டதோ அங்கெல்லாம் குளமெனத் தேங்கி ஓடியது. ட்ரைபெர்க் ஹோட்டலில், அதன் உரிமையாளருக்கு தொழில் சிறப்பாகச் சென்றது. அந்த காலகட்டம் மிக இனிமையானதாகவும், நாங்கள் அனைவரும் சிறந்த நண்பர்களாகவும் இருந்தோம். அடுத்த வருடம் பணவீக்கம் வர, அவர் முந்தைய வருடம் சம்பாதித்திருந்த பணம், ஹோட்டலுக்குத் தேவையான பொருட்களை வாங்கப் போதுமானதாக இல்லாதிருக்க, அவர் தூக்கிட்டுக்கொண்டார்.

நீங்கள் வேறெங்கும் அதிகாரம்செய்யலாம். ஆனால் பூ விற்பனையாளர்கள் தெருவில் வைத்து சாயமேற்றும், பாதையெல்லாம் சாயம் வழிந்தோடும் இடமான காண்ட்ரெஸ்கார்பை அதிகாரம் செய்யமுடியாது. அங்கே தானியங்கி பேருந்து கிளம்பும், வயதான ஆண்களும் பெண்களும் ஒயினையும் மோசமான ஒயின் வண்டலையும் எப்போதும் பருகியபடி காணப்படுவர், குழந்தைகள் ஜலதோஷத்தால் மூக்குகள் ஒழுகக் காணப்படுவர். கஃபே டெஸ் அமெச்சூர்ஸில், அசிங்கமான வியர்வையின் வாசனையடிக்கும். ஏழ்மையும் குடியும் தட்டுப்பட பால் முசெட்டியின் வேசிகள் அதற்கும் மேலே வசித்தனர். கார்டே ரிபப்ளிகனின் படைவீரர்களை உள்ளரங்கத்தில் வைத்து உற்சாகப்படுத்தினர் வரவேற்பாளர்கள், வரவேற்பாளர்களது குதிரை முடியால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை நாற்காலியில் காணப்பட்டது. அந்த அரங்கில் இருந்தவளின் கணவன் மிதிவண்டி பந்தய வீரன், அன்று காலை பால் பண்ணையில் பத்திரிகையைத் திறந்தபோது, அவன் பாரிஸ் டூர் பந்தயத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருந்ததைக் கண்டாள். இது அவனது முதல் பெரிய பந்தயம். அவள் முகம்சிவந்து சிரித்தபடி, மஞ்சள்நிற ஸ்போர்ட்ஸ் பத்திரிகையைத் தூக்கிக்கொண்டு, கத்தியபடி படிகளில் ஏறினாள். பால் முசெட்டியை நடத்தும் அந்தப் பெண்ணின் கணவன், ஹாரி ஒரு அதிகாலை விமானத்தைப் பிடிக்கவேண்டிவந்தபோது காரை ஓட்டினான். அவனது வீட்டின் கதவைத் தட்டி எழுப்பி, பயணம் தொடங்கும்முன் அவர்கள் இருவரும் வெண்ணிற ஒயின் ஒரு குவளை பருகினர். அந்தப் பகுதியிலுள்ள அண்டை அயலார்கள் அனைவரையும் அவன் அறிவான். ஏனெனில் அவர்கள் அனைவருமே ஏழைகள்.

அந்த இடத்தைச் சுற்றிலும் இரு வகையானவர்கள் இருந்தனர். குடிகாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள். குடிகாரர்கள் தங்களது ஏழ்மையை குடியால் கொன்றனர். விளையாட்டு வீரர்கள் ஏழ்மையை உடற்பயிற்சியால் வெளியேற்றினர். அவர்கள் கம்யூனிஸ்டுகளின் வழிவந்தவர்களாய் இருந்தனர், தங்களது அரசியலை அறிவதற்கு அவர்கள் போராடவேண்டியிருக்கவில்லை. அவர்கள் தங்களது தந்தைகளை, உறவினர்களை, சகோதர்களை, நண்பர்களைச் சுட்டவர்கள் யார் என அறிந்திருந்தனர், வெர்சைல்ஸ் படையினர் உள்ளே நுழைந்து கம்யூனுக்கு அடுத்தபடியாக நகரை எடுத்துக்கொண்டு தொப்பி அணிந்திருந்தவர்களை, அல்லது உழைக்கும் மனிதன் என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் சுமந்தவர்களை, அவர்கள் கைப்பற்றிய எவரொருவரையும் இரக்கமற்ற கரங்களால் மரண தண்டனை நிறைவேற்றினர், அந்த ஏழ்மையில், தெருவிலிருந்து கால் பங்கு தொலைவிலிருந்த பெளச்சரே சேவலைனிலிருந்தும் ஒயின் கூட்டுறவு சாலையிலிருந்தும் அவர் தான் செய்யவேண்டிய அனைத்தின் தொடக்கத்தை எழுதியிருந்தார். விரிந்து பரந்த மரங்கள், பழைய வெண்ணிற பூச்சுடைய, கீழ்ப்புறம் பழுப்பு நிறம் பூசப்பட்ட வீடுகள், அந்த வட்டச் சதுக்கத்தில் பச்சை நிறமுள்ள நீண்ட கார்கள், பாதையின் மீதான கருநீல நிற பூச் சாயம், நதியருகே ரூ கார்டினல் லெமோயின் நிறுத்தமருகே குன்றின் திடீர் சரிவு, அதற்கு மாறான ரூ மோப் எட்டார்ட் தெருவின் குறுகிய கூட்டமிக்க உலகம் இதையன்றி, ஒருபொழுதும் பாரிஸின் பிற பகுதியை அவர் அந்தளவு நேசித்ததில்லை. சதுக்கத்தை நோக்கிச் செல்லும் அந்தத் தெருவையும் மற்றொரு தெருவையுமே அவர் எப்போதும் சைக்கிளுடன் செல்வதற்குத் தேர்ந்தெடுப்பார். சுற்றுப்புறத்தில் அது ஒன்றே தார் பூசப்பட்ட, சக்கரங்கள் இலகுவாய்ச் செல்லும் தெருக்களாகும். உயர்ந்த குறுகலான வீடுகளைக் கொண்ட, இந்தத் தெருவிலுள்ள விலைமலிவான நெடிதுயர்ந்த ஹோட்டலில்தான் பால் வெர்லைன் இறந்தது. அவர்கள் வசித்த குடியிருப்பில் இரண்டே அறைகள் மட்டும்தான் இருந்தன. அவன் அந்த ஹோட்டலின் மேல் தளத்தில் ஒரு அறையைக் கொண்டிருந்தான். அதற்கு அவனுக்கு மாதத்துக்கு அறுபது ப்ராங்குகள் செலவானது. அங்குதான் அவன் தனது எழுத்தை மேற்கொண்டிருந்தான். அங்கிருந்து கூரைகளையும் புகைப்போக்கி கூம்புகளையும், பாரிஸின் அனைத்து மலைகளையும் காணமுடியும்.

குடியிருப்பிலிருந்து நீங்கள் காடுகளையும் நிலக்கரி பணியாளர்களின் இடங்களையும் மட்டுமே பார்க்கமுடியும். அவன் ஒயினும் கூட விற்றான், மட்டமான ஒயின். பொன்னிறக் குதிரையின் தலை, பெளச்சேரி சாவலைனின் வெளிப்புறமிருந்தது, அங்கே பொன்னிற மஞ்சளாகவும். சிவப்பாகவும் திறந்த ஜன்னல்களிலிருந்து சடலங்கள் தொங்கின, பச்சை நிற வண்ணமடிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பிலிருந்துதான் அவர்கள் ஒயினை வாங்கினர். நல்ல ஒயினையும், மலிவானதையும். மிச்சமிருந்தவை காரை பூசப்பட்ட சுவர்களும் அண்டை வீட்டுக்காரர்களின் ஜன்னல்களும். இரவில், யாராவது தெருவில் மதுவருந்தி விழுந்து, நீங்கள் இல்லாததுபோல் நம்பிக்கொண்டு, வழக்கமான பிரெஞ்சு குடிமயக்கத்தில் முனகவும் உறுமவும் செய்யும்போது, அண்டைவீட்டுக்காரர்கள் தங்களது ஜன்னல்களைத் திறப்பர். பின் பேச்சின் முணுமுணுப்பு கேட்கும்.

போலீஸ்காரர் எங்கே? நீங்கள் விரும்பாதபோது அந்த குதப்புணர்ச்சி செய்பவன் எப்போதும் இங்கே இருப்பான். அவன் யாரோ ஒரு வரவேற்பாளனுடன் தூங்கிக்கிடக்கவேண்டும். முகவரைக் கூப்பிடு” ஏதோ ஒரு ஜன்னலிலிருந்து ஒரு வாளித் தண்ணீரை யாராவது ஒருவர் வீசும் வரை முனகல் நீடிக்கும். “என்ன அது? நீர். ஆ, அது புத்திசாலித்தனம்.” பின் சாளரங்கள் மூடிக்கொள்ளும். மேரி, அவனது துப்புரவுப் பெண்மணி எட்டு மணி நேர வேலைக்கு எதிராகப் எதிர்ப்பைத் தெரிவித்து, “கணவனானவன் ஆறு மணி வரை வேலை செய்தால், வீடு திரும்பும் வழியில் கொஞ்சமாக குடித்துவிட்டு அதிகளவு பணத்தை வீண்செய்ய மாட்டான். அவன் ஐந்து மணி வரை வேலைசெய்தால், ஒவ்வொரு இரவும் குடித்துவிட்டு, பணமே இல்லாமல் வருவான். வேலை நேரத்தைக் குறைப்பதால் வேலைசெய்யும் ஆணின் மனைவியே பாதிக்கப்படுகிறாள்” என்றாள்.

“இன்னும் கொஞ்சம் சூப்பை நீ விரும்புவாய்தானே?” அந்தப் பெண் அவனிடம் கேட்டாள்.

“இல்லை, மிகவும் நன்றி. இதுவே மிகவும் நன்று.”

“இன்னும் கொஞ்சம் சாப்பிட முயற்சிக்கலாமே.”

“நான் விஸ்கி- சோடா சாப்பிட விரும்புவேன்.”

“அது உனக்கு நல்லதில்லை.”

“இல்லை. அது எனக்கு மோசமானது. கோல் போர்ட்டர் அந்த வார்த்தைகளையும் இசையையும் எழுதினார். நீ வெளிக்காட்டும் இந்த அறிவு என்னை ஆத்திரமூட்டுகிறது.”

“குடிப்பதை நான் விரும்புவேன் என்பது உனக்கே தெரியும்.”

“ஆம், அது எனக்கு மட்டுமே மோசமானது.”

அவள் போகும்பொழுது, விரும்பியதனைத்தையும் நான் அடைவேன் என அவன் நினைத்தான். விரும்பியதெல்லாம் அல்ல, ஆனால் அங்கேயிருந்த அனைத்தையும். ஆம், அவன் களைப்படைந்திருந்தான். மிகவும் களைப்படைந்திருந்தான். சற்று நேரம் தூங்கப் போகிறான். அவன் அசையாமல் கிடந்தான், மரணம் அங்கில்லை. அது அவசியம் வேறொரு தெருவுக்குச் சென்றிருக்கவேண்டும். அது ஜோடியாக, மிதிவண்டிகளில், முழுக்க அமைதியாக நடைபாதைகளில் சென்றிருக்கவேண்டும்.

இல்லை, அவன் அக்கறை செலுத்திய பாரிஸைப் பற்றியே எழுதியதில்லை. ஒருபோதும் எழுதாத, மற்ற பகுதிகளைப் பற்றி என்ன சொல்வது?

பண்ணை மற்றும் சேஜ் ப்ருஷ் எனப்படும் வெள்ளிநிற சாம்பல் புதர்ச் செடி, பாசன வாய்க்கால்களில் விரைந்தோடும் தெளிந்த நீர், ஆல்ஃபால்பா செடியின் அடர் பச்சை. குன்றுகளுக்கு ஏறிச்சென்ற பாதை, கோடைகால மானைப் போன்று கூச்ச சுபாவத்துடன் காணப்பட்ட கால்நடைகள், மெதுவாக நகரும் மக்களை நீங்கள் சரிவில் இறங்கச் செய்கையில் எழும் தூசி., அலறல், நிலையான சப்தம், மலைகளுக்குப் பின்னால் மாலை வெளிச்சத்தில் சிகரத்தின் தெளிவான கூர்மை, பாதையில் கீழிறங்கி வரும் நிலவொளி, பள்ளத்தாக்கெங்கும் பளிச்சிட்டது. இப்போது அவன் மரங்களினூடாக இருளில் குதிரையின் வாலைப் பிடித்தபடி இறங்கிவருகையில் நீங்கள் கண்டிராத, அவன் எழுத நினைத்திருந்த அனைத்துக் கதைகளையும் நினைவுகூர்ந்தான்.

அந்த நேரத்தில் பண்ணையில் விட்டுச்செல்லபட்ட, புத்திக்குறைவான எடுபிடி வேலைப் பையனிடம் யாரும் தானியத்தை எடுக்கவிடக்கூடாதென சொல்லப்பட்டது. ஃபோர்க்ஸை சேர்ந்த வயதான முட்டாள், தனக்கென களஞ்சியத்திலிருந்து தானியத்தை எடுக்கமுயன்றதை பையன் தடுத்துநிறுத்தியபோது, அவன் பையனை அடித்துநொறுக்கினான். அந்தப் பையன் மறுத்தபோது, அந்த வயதானவன் தான் மீண்டும் அடிப்பேன் என்றான். அந்தக் கிழவன் களஞ்சியத்துக்குள் வர முயன்றபோது, அந்தப் பையன் சமையலறையிலிருந்து ரைஃபிளை எடுத்து அவனைச் சுட்டான். அவர்கள் திரும்ப பண்ணைக்கு வந்தபோது அவன் கொட்டகையில் இறந்து ஒரு வாரம் ஆகியிருந்தது, நாய்கள் அவனில் ஒரு பகுதியைத் தின்றிருந்தன, எஞ்சியவற்றை நீங்கள் போர்வையில் பொதிந்து, ஒரு ஸ்லெட்ஜில் கட்டி, உங்களுக்கு உதவ அந்தப் பையனையும் அழைத்துக்கொண்டு, இருவரும் அதனை ஸ்லெட்ஜில் சாலை வழியாக அறுபது மைல் கீழே நகருக்கு எடுத்துச் சென்றபோது. அவன், தான் கைதுசெய்யப்படுவோம் என்ற எந்த யோசனையும் கொண்டிருக்கவில்லை. தன் கடமையைச் செய்ததாகவும், நீங்கள் அவனது நண்பனெனவும், வெகுமதி அளிக்கப்படுவோம் எனவே அவன் எண்ணியிருந்தான். அவன் வயதான மனிதனைத் தடுத்துநிறுத்தியதாகவும், அனைவரும் வயதான மனிதன் எத்தனை மோசமாக இருந்திருக்கிறான், எப்படி அவன் தனக்குச் சொந்தமில்லாத களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் திருடமுயன்றிருக்கிறான் என்று நினைப்பர் என எண்ணியிருக்கையில், ஷெரிப் பையனுக்கு கைவிலங்கு மாட்டியபோது, பையனால் அதை நம்பமுடியவில்லை. பின் பையன் அழத் தொடங்கினான். அது அவன் எழுதுவதற்காக சேமித்துவைத்திருந்த கதைகளில் ஒன்று. குறைந்தபட்சம் அங்கிருந்து இருபது நல்ல கதைகளையாவது அறிவான், ஒன்றே ஒன்றைக்கூட ஒருபோதும் எழுதவில்லை ஏன்?

“அவர்களிடம் ஏன் என நீ சொல்,” அவன் சொன்னான்.

“ஏன் என்ன, அன்பே?”

“ஏன், ஒன்றுமில்லை.”

அவள் அவனை அடைந்ததிலிருந்து, அதிகம் குடிப்பதில்லை. ஆனால் உயிருடன் இருந்தால், ஒருபோதும் அவளைப் பற்றி அவன் எழுதப் போவதில்லை என்பதை அப்போது அறிந்திருந்தான். மேலும் அந்தப் பெண்கள் யாரைப் பற்றியும் எழுதியிருக்கமாட்டான். பணக்காரர்கள் மந்தமானவர்கள், அவர்கள் அளவுக்கதிகமாக குடித்தனர் அல்லது அளவுக்கதிகமாக பேக்காமன் ஆட்டத்தை ஆடினர். அவர்கள் மந்தமானவர்கள், ஒன்றையே திரும்பத் திரும்ப செய்பவர்கள். அவன் பாவப்பட்ட ஜூலியன் மற்றும் அவர்களது காதல் பற்றிய அவனது பிரமிப்பை நினைவுகூர்ந்தான். அவன் ஒருமுறை, “மிகவும் பணக்காரர்கள் உன்னிலிருந்தும் என்னிலிருந்தும் வேறானவர்கள்” என்ற கதையை ஒருமுறை தொடங்கினான். யாரோ ஒருவர் ஜுலியனிடம் சொல்லியிருக்கவேண்டும், ஆமாம், அவர்களிடம் அதிக பணமிருக்கிறது. ஆனால் அது ஜூலியனுக்கு நகைப்புரிக்குரியதாய்த் தோன்றவில்லை. அவன், அவர்கள் சிறப்பான, கவர்ச்சியான இனமென நினைத்தான், அவர்கள் அப்படி இல்லையென அறியவந்தபோது, பிற விஷயங்கள் எப்படி அவனைச் செயலிழக்கவைக்குமோ அதேபோல இதுவும் செயலிழக்க வைத்தது.

செயலிழந்துபோனவர்களிடம் அவன் நிந்தனையுடன் நடந்துவந்திருந்தான். நீங்கள் ஒன்றைப் புரிந்துகொண்டதனால், அதை விரும்பவேண்டும் என்றில்லை. அவன் எதையும் வெல்வான், அவன் பொருட்படுத்தாதபோது எதுவும் அவனைப் புண்படுத்தமுடியாதென அவன் நினைத்திருந்தான்.

சரி, இப்போது அவன் மரணத்தைப் பொருட்படுத்தப் போவதில்லை. அவன் எப்போதும் அச்சப்பட்டுவந்த ஒரு விஷயம் வலி. அது நீண்ட காலத்துக்குச் நீளாதவரையும், அவனை களைப்படையச் செய்யாதவரையும், எந்த ஒரு மனிதனைப் போலவும் அவனால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் இங்கே அச்சுறுத்தும்வகையில் புண்படுத்தும் ஒன்றை அவன் கொண்டிருந்தான், அது அவனை தகர்ந்துபோகச் செய்வதை உணர்ந்ததும், வலி நின்றுபோனது.

வெகுகாலத்துக்குமுன் நடந்த ஒன்றை அவன் நினைவுகூர்ந்தான், வில்லியம்சன், ஐஸர்ஸின் குண்டுவீச்சாளன், ஒருநாள் இரவு கம்பிவழியாக வந்துகொண்டிருந்தபோது ஜெர்மன் ரோந்துப் பணியிலுள்ள யாரோ ஒருவர் ஒட்டும் குண்டொன்றை வீசினர், அலறியபடி அவன் ஒவ்வொருவரிடமும் அவனைக் கொல்லும்படி இரந்தான். அவன் குண்டான மனிதன், மிகவும் தைரியமானவன், ஐஸர்களில் சிறந்தவன், என்றபோதும் அற்புதமான கண்காட்சிகளுக்கு அடிமையானவன். ஆனால் அன்றிரவு அவன் கம்பியில் சிக்கிக்கொண்டான், ஒரு வெளிச்ச மின்னல் அவன்மேல் ஒளிர்ந்தது, அவனது குடல்கள் கம்பியில் சிந்திவிழுந்தது. எனவே அவர்கள் அவனை உயிருடன் கொண்டுவந்தபோது, அவனைத் தளர்வாக்க வெட்ட வேண்டியிருந்தது. என்னைச் சுடு, ஹாரி, கிறிஸ்துவின் பெயரால் கேட்கிறேன் என்னைச் சுடு. நமது கடவுள் உன்னால் தாங்கமுடியாத எதையும் தரமாட்டார் என்ற தத்துவத்தின் பொருள், குறிப்பிட்ட காலத்தில் வலி தானாகவே கடந்துசென்றுவிடும் என்பதாகும் என அவர்கள் ஒருமுறை, தர்க்கம் செய்திருந்தனர். ஆனால் அன்றிரவு முழுவதும் அவன் வில்லியம்சனை நினைவுவைத்திருந்தான். அவன் தனக்கென பயன்படுத்த எப்போதும் சேர்த்து வைத்திருந்த தனது மார்பைன் மாத்திரைகள் அனைத்தையும் வில்லியம்சனுக்குக் கொடுத்தும், அவை அப்போது வேலைசெய்யவில்லை. வில்லியம்சனை நினைவிழக்க வைக்கவில்லை.

இதுவரை, அவன் மிகவும் ஓய்வாக இருந்தான். அப்படியே தொடர்ந்தாலும், அது மோசமில்லை. அவன் இன்னும் சிறப்பான துணையுடன் இருப்பான் என்பதைத் தவிர்த்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை..

அவன், அடையவிரும்பும் துணை குறித்து சிறிது சிந்தித்தான்.

இல்லை, நீ எது செய்தபோதும், நீண்ட காலம் செய்கிறாய், மிகவும் தாமதமாகச் செய்கிறாய், அங்கு இன்னும் ஆட்களைக் கண்டுபிடிக்க முடியுமென்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது என அவன் நினைத்தான். அனைத்து நபர்களும் போய்விட்டார்கள். விருந்து முடிந்துவிட்டது. நீ இப்போது உனது விருந்தோம்பும் பெண்ணுடன் இருக்கிறாய்.

எல்லாவற்றுடன் சலிப்படைவதுபோல, மரணம்குறித்தும் சலிப்படைந்துவருவதாக அவன் நினைத்தான்.

“இது சலிப்பானது,” அவன் சத்தமாகச் சொன்னான்.

“எது, அன்பே”

“நீங்கள் வெகுகாலத்துக்குச் செய்யும் எதுவானாலும்.”

அவனுக்கும் நெருப்புக்குமிடையே அவளது முகத்தைப் பார்த்தான். அவள் நாற்காலியில் சாய்ந்திருக்க, நெருப்பு வெளிச்சம் அவளது இனிய வரிவிழுந்த முகத்தில் ஒளிர்ந்தபடியிருக்க, தூக்கக் கலக்கத்தில் அவள் இருந்ததைக் கண்டான். அவன் நெருப்பின் எல்லைக்கு சற்று வெளியே கழுதைப்புலி ஒன்று சத்தமெழுப்புவதைக் கேட்டான். “நான் எழுதிவருகிறேன், ஆனால் சோர்வடைந்துவிட்டேன்.”

“நீ தூங்கமுடியுமென்று நினைக்கிறாயா?”

“வெகுநிச்சயமாக. ஏன் நீ படுக்கைக்குச் செல்லக்கூடாது?”

“நான் உன்னுடன் இங்கே அமர விரும்புகிறேன்.”

“நீ விநோதமாக எதனையும் உணர்கிறாயா?” அவளைக் கேட்டான்.

“இல்லை. கொஞ்சம் தூக்கமாக மட்டும் உணர்கிறேன்.”

“நான் உணர்கிறேன்,” என்றான்.

சற்றுமுன் மீண்டும் மரணம் அருகில் வருவதை அவன் உணர்ந்தான். “நான் ஒருபோதும் இழக்காத ஒரே விஷயம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும்தான்,” அவளிடம் சொன்னான்.

“நீ ஒருபோதும் எதையும் இழக்கவில்லை. நான் அறிந்ததிலே மிகவும் முழுமையான மனிதன் நீதான்.”

“இயேசுவே,” அவன் சொன்னான். “ஒரு பெண் எத்தனை குறைவாக அறிந்திருக்கிறாள். என்ன? அது உனது உள்ளுணர்வா?”

ஏனெனில், அப்போதுதான், மரணம் வந்து அதன் தலையை கட்டிலின் காலின்மேல் வைத்திருந்தது. அவனால் அதன் சுவாசத்தை நுகரமுடிந்தது.

“மரணம், மண்டைஓடு பற்றிய எதனையும் ஒருபோதும் நம்பாதே,” அவளிடம் கூறினான். “அது மிக எளிதாக மிதிவண்டியில் வரும் இரு போலீஸ்காரர்கள் போல் இருக்கும், அல்ல ஒரு பறவையாக இருக்கும். அல்லது அது கழுதைப்புலிபோல் அகன்ற மூக்கைக் கொண்டிருக்கும்.”

அது தற்போது அவன்மீது ஏறத் தொடங்கியது, ஆனால் அதற்கு இப்போது எந்த வடிவமும் இல்லை. எளிதாக வெளியை ஆக்கிரமித்தது. “அதனிடம் தூரச் செல்லும்படிச் சொல்.” அது விலகிச் செல்லவில்லை மாறாக இன்னும் நெருக்கமாக நகர்ந்தது. “நீ நரகம் போன்ற மூச்சுக்காற்றைக் கொண்டிருக்கிறாய்,” அதனிடம் சொன்னான்.

“நாற்றமடிக்கும் முட்டாளே.” அது இன்னும் அவனுக்கு நெருக்கமாக நகர்ந்தது, இப்போது அவனால் அதனிடம் பேசமுடியவில்லை, அவனால் பேசமுடியவில்லை என்பதைக் கண்டு இன்னும் சற்றே நெருக்கமாக வந்தது. இப்போது அவன் பேசாமல் அதனை தூர அனுப்ப முயன்றான், ஆனால் அது அவன்மேல் ஏறியது. எனவே அதன் எடை முழுக்க அவனது மார்பில் அழுத்தியது, அது குனிந்தபோது, அவனால் நகரவோ, அல்லது பேசவோ முடியவில்லை, அந்தப் பெண், “எஜமான் இப்போது தூக்கத்திலிருக்கிறார். அந்தக் கட்டிலை மிகவும் மெதுவாக கூடாரத்துக்குள் தூக்கிச் செல்லுங்கள்” எனச் சொல்வதைக் கேட்டான்.

அவன், அவளிடம் அதனை தூர விரட்டுமாறு சொல்ல முடியவில்லை, இப்போது அது மேலும் குனிந்தது, கனமாக, அவன் மூச்சுவிடமுடியாதவாறு. பின், அவர்கள் கட்டிலைத் தூக்கிச் செல்கையில், திடீரென அது சரியானது, அந்த கனம் அவனது மார்பிலிருந்து விலகியது.

அது காலை. விடிந்து சற்றுநேரம் ஆகியிருந்தது. அவன் விமானத்தின் ஓசையைக் கேட்டான். அது மிகச்சிறிதாகத் தெரிந்து, பின் அகன்ற வட்டமடிக்க ஆரம்பிக்க பையன்கள் வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி குவிக்கப்பட்ட புல்லின்மீது நெருப்பைப் பற்றவைத்தனர். சமமான இடத்தின் இரு முனைகளிலும் இரு பெரிய அடையாள நெருப்பு பற்ற, காலைத் தென்றல் கூடாரத்தை நோக்கி வீசியது, அந்த விமானம் இந்த முறை தாழ்வாக இன்னும் இருமுறை வட்டமடித்து, பின் தாழப்பறந்து மெதுவாக இறங்கியது. அவனை நோக்கி நடந்துவந்தது தளர்வான சட்டையும் ட்வீட் மேற்கோட்டும், பழுப்புநிற தொப்பியும் அணிந்த வயதான காம்ப்டன்.

“வயதான சேவலே, என்ன விஷயம்?” காம்ப்டன் கேட்டார்.

“காலில் பிரச்சனை,” அவரிடம் கூறினான்.  “கொஞ்சம் காலை உணவு சாப்பிடுகிறீர்களா?”

“நன்றி. நான் கொஞ்சம் தேநீர் மட்டும் சாப்பிடுவேன். இது நீங்கள் அறிந்த புஸ் மோத். நான் மேம் சாஹிப்பை உள்ளே அழைக்கமுடியாது. இங்கே ஒருவருக்கு மட்டுமே இடமிருக்கிறது. உங்களது லாரி வந்துகொண்டிருக்கிறது.”

ஹெலன், காம்ப்டனை ஓரமாக அழைத்து அவருடன் பேசிக்கொண்டிருந்தாள். காம்ப்டன் எப்போதைவிடவும் மிகவும் உற்சாகமாகத் திரும்பிவந்தார்.

“நாங்கள் உன்னை இப்போது உள்ளே கொண்டுசெல்வோம்,” அவர் சொன்னார். “நான் மேடத்துக்காக திரும்பவருவேன். எரிபொருள் நிரப்புவதற்காக அருஷாவில் நிறுத்தவேண்டிவருமோ என நான் பயப்படுகிறேன். நாம் கிளம்புவது நல்லது.”

“தேநீர் சாப்பிடவில்லையா?”

“உண்மையில் நான் அதைக்குறித்து அக்கறைப்படவில்லை, நீயே அறிவாய்.”

பையன்கள் கட்டிலைத் தூக்கிக்கொண்டு பச்சை நிற கூடாரங்களைச் சுற்றிக்கொண்டு பாறைகளைக் கடந்து சமவெளிக்குள் நுழைந்து, தற்போது பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த அடையாள நெருப்பைக் கடந்தனர். புற்கள் அனைத்தும் எரிந்துபோயிருக்க, காற்று நெருப்பை பரவச்செய்து, அந்தச் சிறிய விமானத்தை நோக்கி வர ஆரம்பித்திருந்தது. அவனை உள்ளே ஏற்றுவது சிரமமாக இருந்தது, ஆனால் அவன் தோல்சீட்டில் கிடத்தப்பட்டு, கால் காம்ப்டன் அமரும் சீட்டின் ஒருபக்கமாக மாட்டிக்கொண்டது. காம்ப்டன் எந்திரத்தை இயங்கச்செய்து உள்ளே வந்தார். எந்திரத்தின் இரைச்சல் பழைய பழகிய சத்தத்துக்கு நகர்ந்ததும், ஹெலனுக்கும் பையன்களுக்கும் கையசைத்துவிட்டு, அவர்கள் காட்டுப் பன்றிக் குழிகளை வசதியாகப் பார்க்கும்படி சுற்றிவந்தனர். நெருப்புக்கும் பன்றிக்குழிகளுக்கும் இடையில் ஊசலாடியபடி திணற, கடைசியில் விமானம் உயரத் தொடங்கியது, அவன், அவர்கள் அனைவரும் கீழே கையசைத்தபடி நிற்பதையும் குன்றுக்கு அருகிலிருந்த கூடாரம், அடர்ந்த மரங்கள், தட்டையான புதர்கள் அனைத்தையும் பார்த்தான். அதேவேளை விமானம் வறண்ட நீர்த்துளை இருந்த பாதையில் மெதுவாக ஓட, அங்கே அவன் ஒருபோதும் அறியாத புதிய நீர் நிலை காணப்பட்டது. அவர்கள் சமவெளியில் உயரப் பறக்கத் தொடங்கியபோது, சிறிய வட்டமான பின்பகுதிகளைக் கொண்ட வரிக்குதிரைகளும், பெருந்தலையுடனான காட்டெருமைகளும் தொற்றி ஏறிவருவதுபோலத் தெரிந்தன. இப்போது அவை மிகச்சிறியவைகளாக மாறியிருந்தன. அவற்றின் இயக்கத்தில் எந்த அசைவும் தெரியவில்லை. சமவெளியில் உங்களால் பார்க்கமுடிந்த தூரம் வரைக்கும் சாம்பல் மஞ்சள் நிறமாகத் தெரிய, முன்னால் வயதான காம்பியணிந்த ட்வீட்டின் பின்பகுதியும், பழுப்பு தொப்பியும் தெரிந்தன. பின் அவர்கள் முதல் குன்றின் உச்சியின் மேலாக இருந்தனர். காட்டெருமைகள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்துகொண்டிருந்தன. அவர்கள் மேலே செல்ல, பசுமையடர்ந்த காட்டின் திடீர் அடர்த்தியும், உறுதியான மூங்கில் சரிவுகளும் தென்பட்ட மலைகளைக் கடந்தனர், பின் அடர்த்தியான காடுகள் மீண்டும் தெரிய, அதன் மரங்களடர்ந்த உச்சிகளும் வெறுமையும் மாறி மாறி வந்தன. பின் குன்றின் சரிவுகள், மற்றொரு சமவெளி, இப்போது வெட்கையாக இருக்க, கருநீல பழுப்பான சமவெளி காணப்பட்டது. காம்பி தான் எப்படி பறக்கிறோம் என பார்க்க பின்னே திரும்பிப் பார்த்தார். அங்கே இதர மலைகள் கறுப்பாக முன்னால் எதிர்ப்பட்டன.

பின் அவர்கள் அருஷா செல்வதற்குப் பதில் இடப் பக்கம் திரும்பினர், வெளிப்படையாகவே அவர்களிடம் கேஸ் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்துகொண்டான், பனிப்புயலில் முதல் பனிபோல, கீழே இளம்சிவப்பு மேகம், நிலத்துக்கு மேலே எங்கிருந்து வருகிறதென்று தெரியாமலே காற்றில் நகர்வதைக் கண்டான். வெட்டுக்கிளிகள் தெற்கிலிருந்து வருகின்றன என அறிந்திருந்தான். பின் அவர்கள் அவர்கள் உயரே செல்லத் தொடங்கினர், கிழக்கே செல்வதுபோலத் தோன்றியது, பின் இருட்டத்தொடங்கியது, அவர்கள் புயலுக்குள் இருந்தனர், மழை மிகக் கனமாக இருக்க, நீர்வீழ்ச்சிக்குள் பறப்பதுபோலத் தொன்றியது, பின் அதிலிருந்து வெளியேறினர். காம்பி அவரது தலையைத் திருப்பி, புன்னகைத்தபடி சுட்டிக்காட்டினார், அங்கே அவனால் பார்க்கமுடிந்ததெல்லாம், உலகமளவுக்கே அகன்ற, மகத்தான, உயரமான, சூரியனின் கீழ் நம்பமுடியாத அளவுக்கு வெண்மையாகத் தெரிந்த கிளிமாஞ்சரோவின் உச்சிச் சதுக்கம். பின்பே தான் எங்கே சென்றுகொண்டிருந்தோம் என அவன் உணர்ந்தான்.

இரவில் கழுதைப்புலி சிணுக்கமிடுவதை நிறுத்தி, கிட்டத்தட்ட மனிதன் அழும் சத்தம்போல விநோதமான சத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பெண் அதைக் கேட்டு அமைதியின்றிப் புரண்டாள். அவள் எழுந்திருக்கவில்லை. அவளது கனவில் அவள் லாங் தீவிலிருக்க, அது அவளது மகளின் அறிமுகத்திற்கு முந்தைய இரவாயிருந்தது. எப்படியோ அவளது தந்தை அங்கேயிருக்க, அவர் மிகவும் முரட்டுத்தனமாயிருந்தார். பின் கழுதைப்புலியின் சத்தம் மிகவும் சத்தமாக எழ விழித்துக்கொண்டாள். சில கணங்களுக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்பது விளங்கவில்லை, மிகவும் பயந்தாள். பின் அவள் ஃப்ளாஷ்லைட்டை எடுத்து, ஹாரி தூங்கியபின் அவர்கள் சுமந்துவந்த மற்ற கட்டிலின்மீது அடித்தாள். அவளால் அவனது கொசு சட்டத்துக்கு உள்ளே அவனை கனமாகக் காணமுடிந்தது. எப்படியோ தனது காலை வெளியே நகர்த்தியிருக்க அவனது கால் கட்டிலின் பக்கவாட்டில் தொங்கியது. கட்டு முழுவதும் அவிழ்ந்து நழுவியிருக்க, அவளால் அதைப் பார்க்கமுடியவில்லை.

“மோலோ,” அவள் அழைத்தாள், “மோலோ! மோலோ!”

பின் அவள், “ஹாரி, ஹாரி” என அழைத்தாள், அவளது குரல் உயர்ந்தது, “ஹாரி, ப்ளீஸ். ஓ ஹாரி!” பதில் இல்லை, அவள் அவன் மூச்சுவிடுவதைக் கேட்கவில்லை.

கூடாரத்துக்கு வெளியே கழுதைப்புலி அவள் எழக் காரணமான அதே விநோத சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தது. ஆனால் தனது இதயம் துடிக்கும் ஓசையால் அவள் அதைக் கேட்கவில்லை.

நன்றி

எர்னெஸ்ட் ஹெமிங்கே

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

இக்கதையை க.சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார். கவிஞரும் பத்தி எழுத்தாளருமான க.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பில் நீண்ட அனுபவமுள்ளவர். முரகாமியின் நார்வீஜியன் வுட் , பாவ்லோ கோலோவின் பதினோரு நிமிடங்கள் போன்ற நாவல்கள் இவரின் மொழிபெயர்ப்பில் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *