[1]

உப்புக்காக புதிய அரசாங்கத்துறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, கடவுள் அருளிய வஸ்தாகியது தடை செய்யப்பட்டபின், உப்பை வாங்குவதும் விற்பதுவும் ஒரு களவைப்போல செய்யவேண்டியதாகி விட்டது. பலவகையான சட்டத்திற்குப் புறம்பான பழக்கங்கள் பிறந்தன. சிலர் லஞ்சத்தின் வழிக்கு சென்றனர், சிலர் புத்திசாலித்தனமான உடன்படிக்கைகளுக்கு. அரசு அலுவலர்கள்தான் ஏகப்பட்ட பணம் சம்பாதித்தனர். பிறதுறைகளில் வேலைபார்த்த பலரும் – உயரிய பதவிகளைக்கூட விட்டுவிட்டு – உப்பு விவகாரத் துறையில் வேலையில் சேர முண்டியடித்தனர். வக்கீல் பிரபுக்கள் கூட உப்பு பரிசோதகராகப் பணியில் சேர விருப்பப்பட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த சமயத்தில்தான் ஆங்கில அறிவும் கிறிஸ்தவ மதமும் மிக உதவிகரமானவை என்னும் எண்ணம் மக்கள் பலருக்கு ஏற்பட்டது. பாரசீகமும் நல்ல செல்வாக்குடன் இருந்தது. பாரசீகக் காவியங்களையும் கவிதைகளையும் படித்த இந்தியர்கள் மிக உயரிய பதவிகளில் அமர்ந்தனர். அவர்களுள் ஒருவரான முன்ஷி வன்ஷிதாரும் ‘சுலேகா தன் காதலனிடம் இருந்து பிரிந்த’ கதையையும் ‘ஷிரீனின் காதல் கதையையும்’ ஐயம்திரிபற கற்றபின் வேலைதேடி வீட்டுவாசலைவிட்டு வெளியே காலை வைத்தார். அப்போது உலக ஞானம் மிக்க வன்ஷிதாரின் அப்பா, தன்மகனுக்கு உலகைப் புரியவைக்க ஒரு பிரசங்கத்தை ஆரம்பித்தார். “மகனே, உனக்கு நமது வீட்டின் நிலைமை புரியும்னு நினைக்கிறேன். நமது குடும்பத்த போட்டு கடன்சுமை நசுக்குது. உன்னோட சகோதரிகளோ காட்டுப்புல்லை போல தடிச்சும் ஒசரமாவும் வளருதுங்க. நானோ ஒரு பழைய மரத்தப் போல எப்ப ஒடிஞ்சு விழுவேனோன்னு காத்துகிட்டு இருக்கேன். அதுனால நீதான் இந்த குடும்பத்தை காப்பாத்தனும். என்ன வேலை, வேலையோட தராதரம் என்னன்னுலாம் பாக்காத. அது சமாதிக்கோயில் மாதிரி. நீ கோயிலோட உண்டியலை மட்டும் பாத்தா போதும். எந்த வேலையில மேல்வரும்படி அதிகமோ அதுல சேரு. மாசச் சம்பளங்கிறது பவுர்ணமி நிலா மாதிரி. ஒருநாள்தான் முழுசா இருக்கும். மறுநாள்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா கொரஞ்சு இல்லாம போயிடும். ஆனா, மேல்வரும்படி அப்படியில்ல. அது ஒரு வத்தாத ஓடை. என்னிக்கும் நம்மள அது தாகத்தோட இருக்கவிடாது. சம்பளங்கிறது மனுசன் தர்றது. அதுனாலதான் அது காலங்காலமா கூடாம அப்படியே இருக்கு. ஆனா சைடுவருமானம் கடவுள் தர்றது. அதுனாலேயே நம்ம தேவைக்கு அதிகமா அது கிடச்சுட்டே இருக்கும். உனக்கு வேற என்ன சொல்றது? நீயும் நல்லா படிச்சவன். இதை செய்ய அறிவு அதிகமா வேணும். எல்லா மக்களையும் நல்லா கவனி. அவங்களுக்கு எது தேவைப்படுத்துன்னு பாரு. உன்னால பண்ணமுடியுறத அவங்களுக்குப் பண்ணு. பிரச்னையில மாட்டிக்கிட்டு இருக்குறவனுக்கு வேண்டியதைப் பண்ணி பணம் கறக்கலாம். ஆனா, நம்மளோட உதவி தேவைப்படாதவன்கிட்ட இருந்து சல்லி பைசா வாங்க முடியாது. நான் சொன்னதெல்லாம் நல்லா ஞாபகம் வச்சுக்கோ. இந்த வார்த்தகைள்தான் நான் வாழ்க்கை முழுக்க சாம்பாதிச்ச சொத்து.”

ஒருவழியாக அப்பா சொல்லி முடித்து ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கினார். கடமையில் தவறாத வன்ஷிதாரும் கவனமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பினார். பெரிய பரந்த உலகத்தில் வன்ஷிதாருக்கு பொறுமையே நண்பனாக இருந்தது; அறிவு வழிகாட்டவும், தன்னம்பிக்கை உதவியாகவும். வன்ஷிதார் வீட்டைவிட்டு வெளியேறிய பொழுது சுபதினத்தின் சுபயோகமாகவே இருக்க வேண்டும். உடனடியாக அவர் உப்பு பரிசோதகராக பணியில் அமர்த்தப்பட்டார். நல்ல சம்பளம்; கிம்பளத்திற்கு வானமே எல்லை. சேதி தெரியவந்தவுடன் அப்பாவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. கடன்கொடுத்த கனவான்கள் அன்பையும் கொடுத்தனர். புதிய நம்பிக்கைகள் மலர்ந்தன. பக்கத்து வீடுகள் எங்கும் பொறாமையின் முட்கள்.

[2]

அது ஒரு குளிர்காலத்தின் இரவு. உப்பு விவகாரத் துறையின் பணியாளர்களும் காவலர்களும் குடித்துவிட்டு உறங்கும் காலம். பணியில் சேர்ந்து ஆறுமாதம் மட்டுமே ஆன நிலையிலும் கடமையாலும் கண்ணியத்தாலும் முன்ஷி வன்ஷிதாருக்கு பேர்பட்ட மரியாதை. எல்லா உயரதிகாரிகளுக்கும் அவர் நம்பிக்கைக்கு உரியவர்.

உப்பு அலுவலகத்திற்கு ஒரு கல் தொலைவில் யமுனை ஆறு ஓடுகிறது. ஆற்றின் மேலே படகுகளை வைத்துப் பாலம் கட்டியிருந்தனர். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த வன்ஷிதார் பாலத்தின்மீது வண்டிகள் ஓடும் சத்ததையும் வண்டிக்காரர்களும் படகோட்டிகளும் போடும் கூச்சலையும் கேட்டார். இந்த இரவில் வண்டிகள் ஆற்றைக் கடக்க வேண்டிய காரணம் என்ன? என்று வன்ஷிதாருக்கு ஆச்சரியம். நடக்கக்கூடாத சம்பவம் இது என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. உடனடியாக சீருடையையும் துப்பாக்கியையும் அணிந்து குதிரையில் புறப்பட்டார். ஓரிரு நிமிடங்களில் ஆற்றங்கரைக்கு வந்துவிட்டார். பாலத்தின் வழியாக மாட்டுவண்டிகளின் பெரிய வரிசை ஒன்று வந்துகொண்டிருந்தது. 

“யாரோட வண்டிகள் இது?” வன்ஷிதார் கத்திக் கேட்டார்.

அமைதிதான் அவருக்குக் கிடைத்த பதில். வண்டிக்காரர்கள் முணுமுணுத்தது அவருக்குக் கேட்கவில்லை.

“கேக்குறேன்ல சொல்லுங்கடா”

“எல்லாம் அலோபிதீன் பண்டிட்டோட வண்டிங்க ஐயா!” முன்வரிசையில் இருந்த ஒருவன் சொன்னான்.

“யார் அது?” கேட்டது வன்ஷிதார்.

“அவர் தத்தாகஞ்சின் ஜமீன்தார் ஐயா”

முன்ஷி வன்ஷிதாருக்கு ஆச்சரியம். அந்த பகுதியிலேயே அதிகம் மதிக்கப்படும் ஜமீன்தார் அவர். அவரின் வரவு செலவு லட்சங்களில் போகும். சாதாரண ஜனங்களில் இருந்து பெரிய பணக்கரர்கள்வரை அவருக்கு ஏதோ ஒருவகையில் கடன்படாதவர்களே அந்த பகுதியில் இல்லை. அவர் நல்ல புத்திசாலி. செய்யாத வியாபாரமே கிடையாது. ஆங்கிலேய அதிகாரிகள் எல்லாம் வேட்டைக்கு அவரோட எஸ்டேட்டுக்கு வருவார்கள்; விருந்தோம்பலில் மகிழ்ந்து திரும்புவார்கள். எல்லா மாதங்களிலும் அவரின் வீட்டில் விருந்துகளும் கொண்டாட்டங்களும் நடக்கும். 

இந்த வண்டிகள் எங்கே போகின்றன என வன்ஷிதார் கேட்டதற்குப் பதிலாக கான்பூர் என்னும் நகரம் அமைந்திருந்தது. ஆனால் வண்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு பதில் ஒன்றும் பெயரவில்லை. வன்ஷிதாருக்கு சந்தேகம் அதிகரித்தது. “நீங்க எல்லாம் செவிடா? உங்களத்தான் கேக்குறேன். வண்டியில என்ன இருக்கு?”

அப்பவும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. குதிரையை வண்டிப்பக்கமாக ஓட்டிச் சென்றபின் ஒரு மூட்டையைத் தடவிப் பார்த்தார். வன்ஷிதாருக்குப் புரிந்துவிட்டது. எல்லாம் உப்பு. மூட்டை மூட்டையாக வண்டி வண்டியாக உப்பு.

[3]

அரைத்தூக்கத்தில் அலோபிதீன் பண்டிட் தன்னுடைய அழகிய வண்டியில் அமர்ந்திருந்தார். திடீரென்று சில வண்டிக்காரர்கள் பதற்றத்துடன் வந்து அவரை எழுப்பினர். வண்டிக்காரர்கள் சொன்னார்கள் “எஜமான் ஐயா, உப்பு போலீஸ் ஒருத்தர் நம்ம வண்டிகளை நிப்பட்டிட்டார். உங்களை கையோட ஆத்தங்கரைக்கு கூட்டிட்டு வரச்சொல்றார்.”

பண்டிட்ஜிக்கு நம்பிக்கை எல்லாம் லக்ஷ்மிதேவி மேல் தான். அவரைப் பொருத்தவரை இந்த உலகத்தில் மட்டும் அல்ல சுவர்க்கத்திலும் லக்ஷ்மியம்மாளின் அரசாட்சிதான். ஒருவேளை அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். நீதியும் அரசாங்கமும் அவளின் விளையாட்டுப் பொம்மை போல இயங்குவது நமக்கும் தெரியும் அல்லவா? தனது சாரட் வண்டியின் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறே வெற்றிலையை மடித்து போட்டுக்கொண்டார். சாவகாசமாக ஒரு சால்வையை எடுத்து மேலில் போட்டுக்கொண்டு உப்பு பரிசோதகர் முன்ஷி வன்ஷிதாரை நோக்கிச் சென்றார்.

பண்டிட் அலோபிதீன்ஜி சிரித்தபடியே சொன்னார், “எனக்கு அரசாங்கமோ அது போடும் சட்டங்களோ தெரியாது. என்ன பொருத்தவரைக்கும் நீ தான் என்னோட அரசாங்கம். உனக்கும் எனக்கும் நடுவுல எல்லாமே குடும்ப விவகாரம் மாதிரி. நீயும் நானும் என்ன நாலாம் மனுஷங்களா? நீ இங்க வரைக்கும் வந்து ஏன் சிரமப்படணும்? இந்த பாதையோட காவல் தெய்வமான உனக்கு கப்பம் கொடுக்காம நான் போயிடுவேனா? நானே உன்ன வந்து பாக்கணும்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்”

இந்த இனிய வார்த்தைகள் எல்லாம் வன்ஷிதாரை ஒன்றும் செய்யவில்லை. நேர்மையை ஒரு வாள்போல சுழற்றுவது இன்னும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. கடுமையுடன் வன்ஷிதார் சொன்னார், “கொஞ்சம் பணத்துக்காக தங்களோட ஆன்மாவை விக்கும் நேர்மையில்லாதவன் இல்லை நானு. நீங்க பண்றது தப்பு. உங்களை கைது பண்ணப்போறேன் நான். சட்டப்படி என்ன பண்ணணுமோ அதையே பண்ண போறேன். சும்மா வெட்டிக்கதை பேச எனக்கு நேரமில்லை. ஜமாதார் பட்லூசிங், இவரை கைது பண்ணுங்க!”

பண்டிட்ஜிக்கு பேயறைந்தது போல ஆகிவிட்டது. வண்டிக்காரர்களுக்கும் பயம் கிளம்பியது. வாழ்விலே முதல் முறையாக பண்டிட்ஜி இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது. பட்லூசிங் சில அடிகள் முன்னே வைத்தார். ஆனால் அவருக்கு பண்டிட்ஜியின் கைகளில் விலங்கிட துணிவு வரவில்லை. செல்வத்தை அவமதிக்கும் வகையில் கடமை நடப்பதை பண்டிட்ஜி இதுவரையில் பார்த்ததில்லை. ‘பரிசோதகர் சின்னப்பையன்; அனுபவமில்லாதவன்’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மிகுந்த பணிவுடன் சொன்னார், “பாபு சாஹிப், தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க! அப்புறம் என்னோட மானம் மரியாதை எல்லாம் போயிடும். கவுரவம் இல்லாட்டி நான் அழிஞ்சுடுவேன். என்ன அவமானப்படுத்தி நீங்க என்ன அடையப்போறீங்க? எல்லாத்துக்கும் மேல, நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு”. இதற்கு வன்ஷிதார் கடுமையான குரலில் சொன்னார், “இது மாதிரி நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுக்கிட்டு தலையாட்ட முடியாது”. 

எப்படியும் வேலை செய்யும் என நினைத்து செய்த எல்லா செயல்களும் பண்டிட்ஜிக்கு எதிராகவே முடிந்தன. பண்டிட்ஜியின் மேட்டிமை உணர்வும் சுயமரியாதையும் நொறுங்கின. இருந்தாலும் பணத்தின் சக்திமீது இன்னும் நம்பிக்கை இருந்தது. “பாபு சாஹிபுக்கு ஆயிரம் ரூபாய எண்ணிக்குடு. அவர் இப்போ பசியோட இருக்குற சிங்கம் மாதிரி இருக்கார்” பண்டிட்ஜி தன் கணக்குப்பிள்ளையிடம் சொன்னார்.

வன்ஷிதாருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “வெறும் ஆயிரம் ரூபாய விடுங்க. நீங்க ஒரு லச்சம் ரூபா கொடுத்தாலும் என்ன உங்களால விலைக்கு வாங்க முடியாது”. கொஞ்சமும் அறிவில்லாத வீம்பும் கடமை உணர்ச்சியால் செய்யும் தியாகமும் பண்டிட்ஜிக்கு எரிச்சலைத் தந்தன. இரண்டு அதிகாரங்களும் அப்பொழுது நேருக்கு நேர் நின்றன. பணம் கடமையை வெல்வதற்காக மேலும் மேலும் பாய்ந்தது. ஓர் ஆயிரம் ஐந்தானது, பத்தானது. பதினைந்தும் இருபதும் ஆனபின்பு கூட ஒன்றும் பெயரவில்லை. ஆயிரங்களின் படை முன்பு மாவீரத்துடன் நின்ற கடமை, ஒரு மலையைப்போல் அசையாமல் இருந்தது.

கடைசியில் பண்டிட்ஜி நம்பிக்கையே இல்லாமல் சொன்னார் “என்னால இதுக்கு மேல கொடுக்க முடியாது. உன்னால பண்ண முடிஞ்சதை பண்ணிக்கோ!”.

முன்ஷி வன்ஷிதார் மறுபடியும் ஜமாதாரிடம் சொன்னார். மனதுக்குள் முன்ஷியைத் திட்டினாலும், பட்லூசிங் பண்டிட்ஜியை நோக்கிச் சென்றார். பண்டிட்ஜி நடுக்கத்துடன் சில அடிகள் பின்னே வைத்தார். மிகுந்த பணிவுடன் “பாபு சாஹிப், தயவு செஞ்சு, கடவுளுக்காக, என்மேல கருணை காட்டுங்க! நான் உங்களுக்கு இருபத்தஞ்சாயிரம் தரவும் தயாரா இருக்கேன்”

“முடியாது”

“முப்பது கொடுத்தால்?”

“முடியவே முடியாது”

“நாப்பதாயிரம் கொடுத்தால் கூட பண்ண மாட்டீங்களா?”

“நாப்பதாயிரம் கொடுத்தா மட்டுமில்ல. நாப்பது லச்சம் கொடுத்தாலும் முடியாது! பட்லூசிங் இந்த ஆளை கைது பண்ணு. இன்னும் ஒரு வார்த்தைய கேக்க முடியாது.” 

கடமை பணத்தைத் தன் காலில் போட்டு மிதித்தது. பண்டிட்ஜி வாட்டசாட்டமான ஒருவன் கைவிலங்கொடு தன்னை நோக்கி வருவதைப் பார்த்தார். இறுதியாக நம்பிக்கை இல்லாத கண்கள் சுற்றிலும் பார்த்தன. மயங்கி விழுந்தார்.

[4] 

உலகம் ஒருவேளை தூங்கிக்கொண்டு இருந்திருக்கலாம், ஆனால் அதன் நாக்கு பேசிக்கொண்டே இருந்தது. காலையில் சிறுவர்களும் முதியவர்களும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். எல்லாருக்கும் பண்டிட்ஜி பற்றி சொல்ல ஏதேனும் இருந்தது. எல்லாரும் அவரைத் திட்டிக்கொண்டிருந்தனர் – ஏதோ அவர் சிறையில் வைக்கப்பட்டதும் சமூகத்தில் குற்றங்களே இல்லாமல் போய்விட்டது போல. தண்ணீர் விற்றுக்கொண்டிருந்த பால்காரன், போலிக் கணக்கு கொடுத்து காசு பார்த்த அதிகாரிகள், பயணசீட்டு இல்லாமல் பயணித்த குமாஸ்தாக்கள், மோசடிப் பத்திரங்களை வைத்து வியாபாரம் பார்த்தவர்கள் எல்லாரும் ஏதோ அவர்கள் எல்லாரும் தேவர்கள் போல பேசிக்கொண்டிருந்தனர். மறுநாள், கையில் விலங்கிடப்பட்ட அலோபிதீன் பண்டிட்ஜி – வருத்ததாலும் துக்கத்தாலும் இதயம் கனக்க, அவமானத்தில் குனிந்த தலையுடன் – நீதிமன்றத்திற்கு வந்தபோது மொத்த நகரும் அங்கு இருந்தது. இதுவரைக்கும் திருவிழாக்களில் கூட திரளாத கூட்டம் அன்று ஆர்வத்துடன் அங்கு கூடியது. நீதிமன்ற அறையின் சுவர்களைக்கூட மறைக்கும் அளவிற்கு அன்று கூட்டம் பிதுங்கியது.

நீதிமன்ற அறைக்குள் பண்டிட்ஜி நுழைந்ததும் விஷயம் தலைகீழானது. பண்டிட்ஜி சிங்கம் போல மாறினார். நீதிமன்ற அலுவலர்கள் எல்லாருக்கும் பண்டிட்ஜி வேண்டப்பட்டவர் ஆனார். குமாஸ்தாக்கள் எல்லாம் அவரின் பணியாளர்கள் ஆயினர்; வக்கீல்கள் எல்லாம் அவரின் அடிமைகள்; மற்றவர்கள் எல்லாம் அவரின் கைப்பைக்குள் அடங்கினர். எல்லாரும் அவரை நோக்கி ஓடினர். எல்லாருக்கும் ஆச்சரியம் – அவர் செய்த செயலுக்காக இல்லை, அவர் சட்டத்தினால் பிடிக்கப்பட்டதற்காக. எப்படி இவரைப் போன்ற ஒருவர் – எல்லா சிக்கல்களைத் தீர்க்க பணமும் எல்லா சூழ்நிலைகளைச் சமாளிக்க வழவழப்பான பேச்சும் கொண்ட – இதுபோல் மாட்டிக்கொண்டார்? எல்லாரும் அவரிடம் சென்று தங்கள் வருத்ததைப் பதிவு செய்தனர். கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வக்கீல்களால் ஆன ஒரு படை அமைக்கப்பட்டது. சட்டத்தின் போர்க்களத்தில் மறுபடியும் கடமையும் பணமும் மோத தயாராக இருந்தன. முன்ஷி வன்ஷிதார் அமைதியாக நின்றார். உண்மை மட்டுமே அவரின் பலம்; தெளிவான பேச்சு மட்டுமே அவரின் ஒரே ஆயுதம். ஆமாம், சில சாட்சிகள் இருந்தனர் – ஆனால் அவர்கள் பேராசையினால் ஆட்டுவிக்கப்படுபவர்கள்.

சட்டம் அவரிடம் நீதியுடன் நடக்கும் என்ற நம்பிக்கை முன்ஷி வன்ஷிதாருக்கு இல்லாமல் ஆகியது. இது சட்டத்திற்கான நீதிமன்றம் தான். ஆனால் இதன் பணியாளர்கள் அனைவருக்கும் நல்ல பாரபட்சம் இருந்தது. சட்டத்திற்கும் பாரபட்சத்திற்கும் பொதுவாக என்ன உள்ளது? ஒன்றும் இல்லை. வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பில் எழுதினார்: “பண்டிட்ஜி அலோபிதீன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஆதாரங்கள் எல்லாமே பொய்யானவை; ஜோடிக்கப்பட்டவை. அவர் மிக உயர்ந்த நபர். ஒருவரின் கற்பனையில் மட்டுமே இவரைப்போன்ற உயர்ந்த மனிதர்கள், சிறிய ஆதாயத்திற்காக, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவர். இருந்தாலும், இது மொத்தமும் பரிசோதகர் முன்ஷி வன்ஷிதாரின் தவறும் இல்லை. பரிசோதகரின் பிடிவாதத்தாலும் அவரது யோசனையின்மையாலும் ஒரு நல்ல மனிதருக்கு இந்த சிக்கல் ஏற்பட்டுவிட்டது. பரிசோதகர் தன் வேலையில் மனசாட்சிக்கு விரோதமல்லாமல் நடந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சியே! உப்பு விவகாரத் துறையில் உள்ள ஊழலே இவ்வாறு அவரை நடந்துகொள்ளத் தூண்டியுள்ளது. இனிமேல் அவர் அதிக கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்.”

தீர்ப்பைக் கேட்ட வக்கீல்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். பண்டிட்ஜி சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தார். வள்ளல்தனத்தின் ஓர் அலை வந்தது; நீதி அடிக்கற்கள் அசைந்து கொடுத்தன. நீதிமன்றத்தை விட்டு வன்ஷிதார் வந்தவுடன் அவர்மேல் கேலிகளின் மழை பெய்தது. நீதிமன்றச் சேவகர்கள் பகடியாக முதுகை வளைத்து வணக்கம் செய்தனர். அந்த நேரத்தின் ஒவ்வொரு கடுஞ்சொல்லும் ஒவ்வொரு புண்படுத்தும் அசைவும் வன்ஷிதாரின் உள்ளத்தில் எரிந்த பெருமித்திற்கு உணவாயின. ஒருவேளை முன்ஷியார் இந்த வழக்கில் ஜெயித்திருந்தால், இப்பொழுது அவர் கொண்டுள்ள பெருமிதம் இல்லாமல்கூட போயிருக்கும். சட்டமும் அறிவும் பெருமை கொள்ள வேண்டிய பட்டங்களும் பெரிய தாடிகளும் நீண்ட அங்கிகளும் உண்மையான மரியாதைக்கு தகுதி இல்லாதவை என அவருக்குத் தோன்றியது.

பணத்திற்கு எதிரான போரை வன்ஷிதார் நடத்தினார்; எனவே அதற்கான விலையை அவர் கொடுக்க நேரிட்டது. ஒரு வாரத்திற்கும் உள்ளாகவே அவர் வேளையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடமையைச் சரியாக செய்ததன் தண்டனை. துயரமும் வருத்தமும் கொண்டு மனம் ஒடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பினார். 

ஏற்கனவே அப்பா நாட்கணக்காக முணுமுணுத்துக் கொண்டிருந்தார்: “நிறைய புத்திமதி சொல்லியும் இந்த பையன் உருப்படலயே! இந்த பையன் சம்பளம் மட்டும் வாங்கி வாழும்போது, இந்த தள்ளாத வயசுல, நான்ல கடன் கொடுத்தவன்டையும் மளிகக்காரன்டையும் பேச்சு கேக்குறேன். நானும் வேலை பாத்துட்டு இருக்கேன் வேற. இவன் அளவுக்கு பெரிய பதவி இல்லாட்டியும் ஏதோ என்னால முடிஞ்சது. ஏதோ பெரிய நேர்மையா இருக்கானாம். வீடு இருண்டு கெடக்கும்போது போய் மசூதியில வெளக்கு வைக்குற லச்சனம் இது. இவனை படிக்க வைக்க செலவு செஞ்சதெல்லாம் வீணாப்போச்சே ” 

வேலையை இழந்து வன்ஷிதார் வீட்டுக்கு வந்தபோது அப்பாவுக்கும் முதலில் வருத்தம்தான். பிறகு பலவாறு வன்ஷியைத் திட்ட ஆரம்பித்தார். வன்ஷி எதுவும் பேசாமல் இடத்தை காலி செய்யாமல் மட்டும் இருந்தால், கோபத்தில் அவர் என்ன செய்திருப்பார் என்றே தெரியவில்லை. வன்ஷியின் அம்மாவுக்கும் மிகுந்த வருத்தம். புரிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போக எண்ணியிருந்த யாத்திரை கெட்டுவிட்ட துக்கம்.

ஒரு வாரம் முடிந்தது. மாலைவேளையில் வன்ஷிதாரின் அப்பா ஜெபமாலையை உருட்டி கடவுளின் பெயர்களை எண்ணிக்கொண்டிருந்த பொழுது, வீட்டு வாசலில் நன்கு அலங்கரிக்கப்பட்ட சாரட் ஒன்று வந்து நின்றது. அந்த வண்டிக்கு பச்சையிலும் இளஞ்சிவப்பிலும் சாளரச் சீலைகள்; இழுத்த மாடுகளின் கொம்பு செம்பினால் முலாமிடப்பட்டு இருந்தன. உடன் பல கோலேந்திய சேவகர்கள் வந்தனர். வண்டியில் இருந்து இறங்கி அலோபிதீன் பண்டிட்ஜி வந்தார். வன்ஷிதாரின் அப்பா  அவரை வரவேற்க ஓடினார். நன்றாக வணங்கி “எங்க வீட்ட்டுக்கு நீங்க வந்ததே பெரிய பாக்கியம். உங்க மொகத்த நேருக்குநேர் பாக்கமுடியாதபடிக்கு என் பையன் அப்பிடிப்பட்ட காரியத்தை செஞ்சுபோட்டான். எங்களால என்ன பண்ண முடியும்? அந்த உதவாக்கரைய வச்சுக்கிட்டு நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். இவனுக்கு பதிலா கடவுள் எங்களுக்கு பிள்ளைய கொடுக்காமலே இருந்திருக்கலாம்”

பண்டிட்ஜி சொன்னார், “இல்லை சகோதரா, இந்த மாதிரிலாம் சொல்லாதீங்க”

வன்ஷியின் அப்பாவிற்கு ஆச்சரியம். “இந்தமாதிரி பையனைப்பத்தி வேற என்ன சொல்ல முடியும்?”. அன்பான குரலில் பண்டிட்ஜி சொன்னார் “இந்த உலகத்துல குடும்பத்தோட நல்ல பேருக்காக எல்லா தியாகங்களையும் செய்றவங்க ரெம்ப கொஞ்சமாத்தான் இருக்காங்க. உங்க பையனும் அதில ஒருத்தன்”

பண்டிட்ஜி தொடர்ந்து முன்ஷி வன்ஷிதாரைப் பார்த்து சொன்னார், “நான் சும்மா உங்களை சந்தோசப்படுத்தணும்னு சொல்றேன்னு நினைக்காதீங்க. உங்கள சந்தோஷப்படுத்த நான் இவ்வளவு கஷ்டப்படனும்னு அவசியமில்ல. அன்னிக்கு ராத்திரி நீங்க என்ன கைது பண்ணும்போது உங்க பக்கம்தான் நியாயம் இருந்துச்சு. இன்னிக்கு நானே இஷ்டப்பட்டுத்தான் உங்களப் பாக்க வந்திருக்கேன். நான் எவ்வளவோ பேரைப் பாத்து இருக்கேன். பல அதிகாரிகளை சந்திச்சு இருக்கேன். என்னோட பணத்தை வச்சு எல்லாரையும் என்னோட அடிமையா நடத்தியிருக்கேன். ஆனா நீங்க மட்டும் என்னை ஜெயிச்சுட்டீங்க. உங்களுக்கு ஒன்னு கொடுக்க என்ன அனுமதிங்க ”

பண்டிட்ஜி வருவதைப் பார்த்தவுடனேயே வன்ஷிதார் வணக்கம் சொல்லுவதற்கு எழுந்தார். பண்டிட் வந்ததே தன்னை மிரட்டவும் அவமதிக்கவும் என்றே நினைத்தார். எனவே, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. ஆனால் பண்டிட்ஜியின் முகத்தில் கண்ணியம் தெரிந்தது. அப்பா பண்டிட்ஜியிடம் உளறியதை வன்ஷியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பண்டிட்ஜியின் முகத்தில் நல்ல எண்ணம் மட்டுமே இருப்பதுபோல தெரிந்தது. பண்டிட்ஜி பேசி முடித்தபின்பு பெருமிதம் இருந்த இடத்தை கவலை எடுத்துக்கொண்டது. வெட்கத்துடன் வன்ஷி, “உங்களோட பெருந்தன்மையால இப்பிடி சொல்றீங்க. அன்னிக்கு நான் பண்ணத்துக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கு கடமை என் முன்னாடி வந்து நின்னுச்சு. இல்லாட்டி நானும் உங்க அடிமைதான். நீங்க என்ன நினைக்குறீங்களோ அதுவே என்னோட செயலா இருக்கும்.” என்றார்.

பண்டிட்ஜி பணிவுடன் சொன்னார், “அன்னிக்கு ஆத்தங்கரையில நான் சொன்னதை நீங்க கேக்கலை. ஆனா இன்னிக்கு கண்டிப்பா கேக்கணும்”.

வன்ஷிதார் சொன்னார், “என்னால பெரிய உபயோகம் எதுவும் உங்களுக்கு இப்போ இருக்க முடியாது. இருந்தாலும், என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்றேன்”

பண்டிட்ஜி முத்திரைத்தாள் ஒன்றை எடுத்து வன்ஷிதாரிடம் நீட்டினார். “தயவு செஞ்சு இதை ஏத்துக்கிட்டு இந்த காகிதத்துல கையெழுத்து போடுங்க. நான் ஒரு பிராமணன். நீங்க கையெழுத்து போடுறவரைக்கும் உங்க வீட்டு வாசலைவிட்டு போகமாட்டேன்”. வன்ஷிதார் அதைப் படிக்க படிக்க அவர் கண்ணில் நன்றியின் நீர் நிரம்பியது. பண்டிட்ஜி அலோபிதீன் அவரின் அனைத்துச் சொத்துகளுக்கும் மேலாளராக வன்ஷிதாரை நியமிக்க எழுதிய பணி ஆணை அது. வருடச் சம்பளம் ஆறாயிரம் ரூபாய், தினப்படி தனியாக, போகவர ஒரு குதிரை, வசிக்க ஒரு மாளிகை, மாளிகைக்கு வேலைக்காரர்கள். உடைந்த குரலில் வன்ஷிதார், “பண்டிட்ஜி, உங்க பெருந்தன்மைக்கு அளவே இல்ல. ஆனா இவ்வளவு பெரிய பதவியை ஏத்துக்குற அளவுக்கு எனக்கு தகுதி எதுவும் இல்ல” என்றார்.

பண்டிட்ஜி சிரித்துவிட்டுச் சொன்னார், “இப்போதைக்கு எனக்கு உங்கள மாதிரி ஒரு தகுதி இல்லாதவங்கதான் வேணும்”

வன்ஷிதார் தீவிரத்துடன் சொன்னார், “நான் உங்களோட உண்மையான வேலைக்காரன். உங்களை மாதிரி ஊரறிஞ்ச நல்ல மனுசனிடம் வேலை பாக்க கொடுத்து வச்சிருக்கணும். ஆனா எனக்கு அதுக்கான அறிவோ, படிப்போ, குணமோ இல்லன்னு நினைக்குறேன். இந்த மாதிரி முக்கியமான வேலைக்கு நல்ல அனுபவமுள்ள ஆளுதான் வேணுமில்லையா?”.

பண்டிட்ஜி வன்ஷிதாரின் கையில் பேனாவைக் கொடுத்தபடி சொன்னார், “எனக்கு புஸ்தகங்கள்ல இருக்குறத மனப்பாடம் பண்ணுற படிப்போ, அனுபவமோ, திறமையோ தேவையில்ல. இந்த தகுதிகள்லாம் இருக்கிறவங்க என்ன பண்ணுறாங்கன்னு நல்லா பாத்துட்டேன். என்னோட நல்ல நேரம், எதுக்கு முன்னாடி படிப்பு, திறமை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆகுமோ அதப் பாத்துட்டேன். இன்னும் ஒரு வார்த்தை பேசாம இதுல கையெழுத்து போடுங்க. நான் கடவுள்ட்ட வேண்டுறதுலாம் ஒன்னுதான். அன்னிக்கு ஆத்தங்கரையில இருந்த மாதிரியே நீங்க கடுமையோட, துடுக்கோட, நேர்மையோட இருக்கணுங்கிறது மட்டுந்தான்”. வன்ஷிதாரின் கண்களில் கண்ணீர் பெருகியது. மறுபடியும் பண்டிட்ஜியை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார். நடுங்கும் கைகளுடன் அந்த பணி நியமன ஆணையை ஏற்கிறேன் என கையெழுத்திட்டார்.

மகிழ்ச்சியுடன் பண்டிட்ஜி வன்ஷிதாரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *