எழுத்தாளனின் நாட்குறிப்பு – நாள் -1

 

1.01.01.2024  திங்கள்

காலையில் மிக உற்சாகமாக எழுந்தேன். செல்போனில் வழக்கத்தைவிட அதிகமாக புத்தாண்டு வாழ்த்துகள் வந்து குவிந்து கிடந்தன. பல்கூட துலக்காமல் அனைவருக்கும் பதில் அளித்தேன்.   நான் மதிக்கும் எழுத்தாளர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன். ஓராண்டின் முதல் நாள் என்பதால் மிகுந்த நெகிழ்ச்சியும் பெரிய கனவுகளும் ஒரு சேர அமைந்தது. யாரின் மீதும் எனக்கு ஆயுட்காலம் முழுவதும் நீடிக்கும் பகை உணர்ச்சி இல்லை.

நேற்றிரவு பன்னிரெண்டு மணி அடித்தவுடன் என் குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி கைகுலுக்கி கன்னங்களில் முத்தங்கள் வழங்கினேன். சைதன்யா ” புத்தாண்டுனா என்னப்பா?” என்று கேட்டாள்.  ஓர் ஆண்டு, பன்னிரெண்டு மாதங்கள், ஒரு மாத்திற்கு எத்தனை நாள் என விளக்கினேன். சட்டென்று புரிந்து கொண்டாள். அவளுக்கு கேக் வெட்டி, வெடிப்போடும் ஆசை எழுந்தது. முன்னேற்பாடுகள் ஏதும் செய்திராத காரணத்தால் என்னால் அதை நிறைவேற்றித்தர இயலவில்லை.

கூட்டு விழிகள் கொண்ட மனிதன் – என்கிற தைவான் மொழி நாவல் எழுதியவர் வு மிங் –யி தமிழில் மொழி பெயர்த்தவர் யுவன் சந்திரசேகர். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். சிறிய தீவில் வசித்து வரும் இனக்குழு ஒன்றின் அன்றாடம் என கதை ஆரம்பித்தது. பத்துப்பதினைந்து பக்கங்களுக்குள் துாக்கம் வந்து  அமர்ந்துவிட அப்படியே துாங்கிப்போனேன்.

காலையில் விழித்து குடும்பக் கடமைகள் செய்து, மதியம் உண்டு, இரவு வரை குழந்தைகளுடன் விளையாடினேன். வீட்டைவிட்டு எங்கேயும் போகவில்லை. கோயில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம் என்றால் சென்ற ஆண்டு பெற்ற அனுபவங்கள் எச்சரித்தன. மேலும் இலக்கியமே என் தெய்வம் என்கிற ஆறுதலும்.  மாலையில் உள்ளுர் தொலைக்காட்சியில் ஒரு மலையாள சினிமாவைப் பாதியில் ஆரம்பித்து முழுக்கவும் பார்த்தோம். காசிக்கு சென்ற தாத்தாவைத் தேடிவரும் குடும்பம் என்பதுதான் கதை. சொல்லப்பட்ட விதமும் சினிமா மொழியும் கவர்ந்து இழுத்தது. மிக மெதுவாக நிகழ்ந்த படம் என்றாலும் ஆர்வத்திற்கும் சிரிப்பிற்கும் குறையே இல்லை. பலமுறை பார்த்திருந்தாலும் காசியின் நிலக்காட்சிகள் உற்றுக்கவனித்து நிலைக்கச் செய்தன. மலையாள சினிமாவின் இயல்பான கலைப்பாங்கு பிரமிக்கச் செய்கிறது. அதற்கு முன்னதாக ஒரு தமிழ் படம். பார்த்துக் கொண்டே துாங்கிப்போனேன். பேய் படம் என்பதால் குடும்பம் விரும்பிப் பார்த்தது. பிள்ளைகள் துாங்க இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  சினிமா என்கிற குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை பொருட்படுத்தாத சினிமாக்கள் என்னை ஈர்ப்பதில்லை. இயல்பாக துாக்கம் வந்துவிடுகிறது.

  1. ஒற்றை வரி தரிசனங்கள்

இன்றும் ஓஷோவையும் ஜெயமோகனையும் நினைத்துக் கொண்டேன். இருவருக்கும்  நிறைய கடன் பட்டிருக்கிறேன். மானசீகமாக நான் அவர்களோடு ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கிறேன். என் சிந்தனை ஓட்டத்தை வடிவமைத்ததில் இவர்களின் பங்கு அதிகம். இவர்களிடம் இருந்து பெற்ற வெளிச்சமே என் வாழ்நாள் கைவிளக்கு.

ஓஷோ ஓரிடத்தில் பேசியிருக்கிறார். ”குழந்தைகள் பெற்றோரைத் தேர்வு செய்கிறார்கள். தாங்கள் விரும்பிய பெற்றோர்கள் வரும் வரை அவர்கள் பிறவி எடுக்காமல் காத்திருக்கிறார்கள். நான் என் பெற்றோர்களுக்காக காத்திருந்தேன்” என்று. இதே சொற்களில் அல்ல என்றாலும் இந்தப் பொருள் வரும் விதத்தில் அவர் பேசிய நினைவு.

என் பிள்ளைகள் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற நினைப்பு- அது ஏற்புடையதோ மறுதலிக்க வேண்டியதோ- குழந்தைகளின் மேல் கூடுதல் பிரியத்தை ஏற்படுத்தி விடுகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தைகள் இல்லாத நெருக்கடியை கடந்து வந்தவன் என்பதால் முதல் மகளுக்கு  அதிகம் செல்லம் கொடுத்துள்ளேன். இரண்டாவது குழுந்தை நாங்கள் எதிர்பாராமல் கிடைத்த பரிசு. முதல் குழந்தைக்காக  எத்தனை வேண்டுதல்கள் எத்தனை மருத்துவமனைச் சிகிச்சைகள். இரண்டாவது குழந்தை அப்படி எளிதாக வாய்க்காது என்று இயல்பாக இருந்துவிட்டோம்.

அவள் எங்களைத்தேடி வந்திருக்கிறாள் என்று நினைக்கும்போது அவளுக்கும் முதல் குழந்தைக்கு வழங்கிய அத்தனையையும் வழங்கிட வேண்டும் என்று எண்ணினேன். கூடுதலாக அன்பையும் அரவணைப்பையும் வழங்கி வருகிறேன். இருவரும் இப்போது என் செல்லங்களாகி விட்டார்கள். வீட்டில் இருந்தால் என் தோள்மீதும் மடிமீதும் இருப்பதற்காக துவந்த யுத்தம் மேற்கொள்கிறார்கள். நான் இடதும் வலதும் இருவரையும் துாக்கிச் சுமக்கிறேன். ஐந்தும் இரண்டும் உள்ள குழுந்தைகள் ஒன்றும் பெரிய சுமை அல்ல. அவர்களோடு இருக்கும்போதெல்லாம் துாயனாக என்னை உணர்கிறோன். ஆண் என்கிற மிருகத்திற்குள் உள்ள தந்தைமை என்கிற ஆதிப்புனிதனைத் தட்டி வெளிக்கொணர்ந்த பிஞ்சுப்பாதங்கள் அவர்களுடையவை.  எனக்கு சதா பாவமோட்சம் வழங்கிக்கொண்டே இருக்கின்றன.

குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதால் என்னால் தீவிரமாக எழுதவோ வாசிக்கவோ முடியாமல் போகிறது. ஆரம்ப நாட்களில் நான் இதை எண்ணி வருந்தினேன். பின்னர் தான்  ஒரு முடிவிற்கு வந்தேன். குழந்தைமை  வாழ்வில் ஒருமுறை அமையும் வரம் என்று. கடவுள் எப்படி வாழ்வார் என்பதை அருகில் இருந்து அனுபவமாக்கிக்கொள்ளும் வாய்ப்பு. பிள்ளைகள் வளர வளர நம்மை விட்டு விலகிக்கொண்டே செல்வார்கள்.  ஒரு குழந்தைக்காக தவித்த தவிப்பென்ன?  வாராது வந்த மாமணி போல வருகை புரிந்த குழந்தையை அடிப்பதோ வைவதோ கூடாது என்று நினைப்பது இயல்பானதுதானே. எனக்கு ஓஷோவின் சொற்கள்தான் முன் மாதிரி. என் பிள்ளைகள் என்னை அப்பாவாக தேர்வு செய்திருக்கிறார்கள் எனில்  அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? நான் நல்ல அப்பாவாக அவர்களுக்கு இருப்பேன் என்பதுதானே?

செல்லம் அதிகம் என்பதால் அவர்களுக்கு ஒரு அடிமையைப் போல இருக்கிறேன். அம்மாவிடம் சாதிக்க முடியாத காரியங்களை எல்லாம் என்னிடம் அடம்  பிடித்து சாதித்து விடுகிறார்கள். அக்காவைப் பார்த்து தங்கையும் வித்தைகளை கற்று வருகிறாள். எதை ஒன்றையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லை. வேண்டும் என்றால் அடந்தான். அழுகைதான். தமிழினி கண்ணீர்விட்டு அடித்த பிள்ளைபோல் அழுவதைப் பார்க்க எனக்கு சிரிப்புதான் வருகிறது. குழந்தைகள் அழுவதை நான் எப்போதுமே வெறுப்பவன். ஒரு தகப்பனாக எனக்குள் சங்கடம் தோன்றிவிடும். இதன் பொருட்டே என் மனைவிக்கும் எனக்கும் பலநாட்கள் சண்டைகள். “யாராவது ஒருத்தர் கண்டிப்பாக வளர்க்கணும்” என்கிறார். ஏன் கண்டிப்பு? இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை நெருக்கடிகளை அவர்களுக்கு வழங்க இருக்கிறதோ? ஒரு பெற்றோராக நாம் வழங்கச் சாத்தியமுள்ள அன்பையும் அரவணைப்பையும் வழங்குவதில் என்ன கஞ்சத்தனம். தலைக்குமேல் ஏறி மேய்ந்துவிடும் என்றால் அந்த உரிமை அவர்ளுக்கு இல்லையா?

எத்தனை கோடி ஆண்கள். என் மக்கள் என்னை அல்லவா அவர்களின்  தந்தையாக தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒன்று போதாதா நான் அவர்களை விருந்தினர்களைப் போல வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்து பேணிக்காத்திட.

3.விளிம்பில் வாழும் மையம்

ஒரு நடிகரின் இறப்பினை நிகழ்காலம் எதிர்கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அந்த நடிகரின் படந்தாங்கிய கண்ணீர் அஞ்சலி பிளக்ஷ் பேனர்கள்  சென்ற இடம் எல்லாம் கண்களில் பட்டன. இமயம் சரிந்தது என்ற சொற்கள் என்னை மறுபடியும் மறுபடியும் சங்கடத்திற்கு ஆளாக்கின. சங்கடம் நான்தான் அந்த நடிகரை சரியாக தெரிந்துகொள்ளாமல் வாழ்ந்து விட்டேனோ என்பதில்.

தமிழ்சினிமாவில் அசலான கலைஞர்கள் உண்டு. ஆனால் அசலான சினிமாக்கள் இதுவரை இல்லை என்பது என் மதிப்பீடு. ஏன் அசல் கலைஞர்களால் நல்ல சினிமாக்களைத் தர முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் சினிமாவை பெரும் வணிகமாக மாற்றி   வைத்திருப்பது. இரண்டாவது தன் முனைப்பு.  சொந்த அகங்காரத் திருப்திக்காக மாசுப்படுத்துவது. ஒரு கதாப்பாத்திரம் இயல்பாக வெளிப்படுவதை இந்நோக்கு தடுக்கிறது. இயக்குநரோ நடிகரோ அந்த கதாப்பாத்திரத்தின் மீது ஏறி அமர்ந்து திரிய வைத்து விடுகிறார்கள்.

குழந்தையாக இருக்கும்போதே சினிமா எனக்கு அறிமுகம் ஆவிட்டது. என் அம்மா எல்லா அம்மாக்களையும் போல எழுபதுகளின் கதாநாயகர்களை மானசீகமாக காதலித்து வாழ்ந்து வந்தவள்தான். சிவாஜி இறந்த துக்கத்தை இரண்டு நாட்கள் மௌனவிரதம் இருந்தும், உண்ணா நோன்பு கடைபிடித்தும் அம்மா கடந்து வந்தாள். என்னால் செரித்துக்கொள்ளவே முடியவில்லை.அம்மாவின் வீம்பு தெரியும் என்பதால் நான் ஒன்றும் சொல்லிவில்லை. இத்தனைக்கும் அம்மாவிற்கு அக்கால கட்டத்தில் மனச்சிதைவு முற்றி இருந்தது. அவளின் கடைசி ஆண் சிவாஜியாக கூட இருந்திருக்கலாம். வருந்தி துக்கித்து மீண்டெழட்டும் என்று இருந்துவிட்டேன்.

உலக சினிமாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவற்றை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்த பின்னர்தான் எனக்கு தமிழ் சினிமா பிடிக்காமல் போனது. வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா போன்றோரின் சினிமா சார்ந்த எழுத்து என்னை முற்றாக ஆட்கொண்டது. ஓடிடீக்களின் வருகையினால் இன்னும் அதிகம் அர்த்தமானது. பிற மொழிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் சினிமாவின் தரம் நிரந்தரமாக மூன்றாம் தரம் என்று பிடிபட்டது.

இன்றும் தொடர்ந்து சினிமாக்கள் பார்க்கிறேன். தமிழ் சினிமாக்களைத் தவிர்த்து. என் விருப்பத்திற்கு உரிய மொழிகளாக முதலிடத்தில் மலையாளமும் இரண்டாம் இடத்தில் இந்தியும் உள்ளன. கன்னடம் தெலுங்கு போன்றவற்றில் தேர்வு செய்து.

சமீபத்தில் இறந்த நடிகரை மிகச்சிறிய வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஏன் என்பதற்கு தெளிவான காரணங்கள் ஏதும் இல்லை. அவர் புரட்சிகர வேடம் அணிந்து வலது கை முஷ்டியை காற்றில் குத்தி சிவந்த கண்களும் ஆவேசம் வெளிப்படும் முகமுமாக நான் பார்த்த அந்தப்படத்தில் நடித்திருந்தார். எனக்கு அது ஓவர் ஆக்டிங் என்றும், பம்மாத்து என்றும் ஏனோ தோன்றிற்று. அது ஒரு ஆரம்பமாக இருக்கலாம். அதன்பின்னர் அவரின் படங்கள் என்றாலே ஒவ்வாமைதான். சரியாக எண்ணிப்பார்த்தால் இருபது முதல் முப்பது படங்கள் வரை அவர் நடித்திருந்த படங்களில் நிர்ப்பந்தங்களின் காரணமாக பார்த்திருப்பேன். அவரின் சினிமாக்கள் மீது எனக்கு உயர்வான எண்ணங்கள் ஏதும் இல்லை.  அனைத்தும் மலினமான சினிமாக்கள். சினிமாவை கலை என்று நம்பக்கூடியவர்களுக்கு,  அவரின் வாழ்நாள் பங்களிப்பு என்று சொல்லிக்கொள்ள ஏதும் இல்லை. இதில் என் அறியாமை இருக்கக் கூடும் என்றாலும். கண்களுக்குச் சிக்கியவற்றை வைத்து நான் ஒரு முடிவிற்கு வந்துள்ளேன்.

சினிமா என்கிற கலை வடிவத்தின் மீது தமிழ் மக்களுக்கு இருக்கிற பெரும் விருப்பந்தான் இதில் வெளிப்படுகிறது. தமிழ் சினிமா உள் மன ஆசைகளை மூலதனமாகக் கொண்டு, ஓயாத சுரண்டலை தன் இயல்பாக கொண்டிருக்கிறது. மிகுதியும் அப்பட்டமான ஆபாசம். விடலைத்தனமான ஏக்கங்களை நுாற்றுக்கணக்கான கதைத் தருணங்களால் மெருகேற்றி மேம்பட்டு வந்த வரலாறு தமிழ் சினிமாவிற்கு உண்டு. அசலான படங்கள் தோன்றவும் இல்லை. ஜெயகாந்தன், ஜான் ஆபிரகாம் போன்றோர் ஆரம்பித்து வைத்ததோடு அவை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டன. வெகுமக்களை மகிழ்வித்தல் என்கிற நோக்கத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொழில் பண்ணி வருகிறது. அதிலும் ஒரு சில நட்சத்திர நடிகர்கள் மட்டுமே கோடிகளில் புரண்டு உருள்கிறார்கள். நாட்டை ஆளும் தன்னம்பிக்கையை அவர்கள் மட்டுமே கொண்டிருக்கிறார்கள்.

இறந்து போன நடிகரை நடிகர் என்பதால் மட்டுமே நான் அறிந்து வைத்திருக்கிறேன். ஒரு நடிகராக அவர்தன் வாழ்நாளில் கலைத்தாய்க்கு எந்தவித சேவையும் செய்ய வில்லை. தாயைப் பராமரிக்க வேண்டிய எளிய கடமைகளில் கூட அவர் கவனம் செல்லவில்லை. இந்திய சினிமா என்கிற பெருக்கில் அவரின் பங்கென ஒரு துளி வந்து சேரவில்லை. அவரின் மறைவிற்கு வழங்கப்படும் இவ்வளவு பெரிய விடையளிப்பு  என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்ன மாதிரியான ரசனையுள்ள உலகத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற பெரும் ஏமாற்றமும்.

வணிக வெற்றிக்கும் அரசியல் வாகைக்கும் சினிமாவின் பிரபலம் அவசியமாகிறது. வணிகர்களும் அரசியல் ஆளுமைகளும் சினிமாவை விரும்பி ஆதரித்து விருகிறார்கள். கலை என்றோ சேவை என்றோ பேசப்படுகிறவற்றின் பின்னால் இருப்பது இவையெல்லாந்தான். இதை சாமானியர்களும் நன்கு அறிவார்கள். அவர்களுக்கும் ஒரு கதாநாயகப் பிம்பம் இருந்தால் ஆறுதல் என்று தோன்றிவிட்டது. வாழ்க்கையை பெரும் சுமை என்று உந்தி இழுத்துச் செல்கிறவர்களுக்கு சாகசம் புரியும் ”சூபர் ஹீரோக்கள்” மருந்தாக அமையலாம் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *