குற்றம் மலிந்த சமூகம்

அழகிய ஆப்பிள்கள்

பிள்ளைகள் இருவருக்கும் பள்ளிக்கு கொடுத்து விடுவதற்காக எப்போதும் ஆப்பிள்கள் வாங்குவது உண்டு. சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ முந்நுாறு. கடந்த சில நாட்களாக நுாற்றி எண்பது, இருநுாறு. வழக்கமாக வாங்கும் கடையில்தான் வாங்கினேன். வாங்கி வந்த ஆப்பிள்களில் பாதி செவ்வரிகள் படிந்து உண்ணும் தகுதியின்றி இருந்தன. பாதி ஆப்பிள்கள் அடர் செம்மை நிறத்தில் திட்டுத்திட்டாக கனிந்திருந்தன. பிள்ளைகள் உண்ண மறுத்து விட்டார்கள். மனைவி  உடனே எடுத்து குப்பையில் போட்டாள். போடுவதற்கு முன்பு ஒரு ஏளனப் பார்வை. ”இதுக்கு கூட துப்பில்லையா?” என்பது அதன் உட்பொருள்.

ஒரு வாரமாக நாள்தோறும் வெவ்வேறு கடைகளில் ஆப்பிள்கள் வாங்கினேன். யாராவது நல்ல ஆப்பிள்களைக் கொடுத்து விட மாட்டார்களா என்ற ஆசையில். புதிய பேருந்து நிலையம் தான் என் வீட்டின் அருகில் இருக்கிறது. எனக்கு வேறு வழியும் இல்லை. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். ஒவ்வொருவரிடமும் “அண்ணாச்சி..பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து விடணும்..நல்ல பழமாத் தாங்க”

தேடிப் பொறுக்கிட எனக்குத் தெரியவில்லை. நன்றாக வெளித்தோற்றம் உள்ள பழங்கள் உள்ளே கன்றி அடிவாங்கியிருந்தன. நிற வேறுபாடுகள் ஏமாற்றின. ஆப்பிள் நிறம் மங்கியவை நறு நறுவென சுவையின்றி புளித்தன. நிறம் வேண்டும் என்பதற்காக சாயம் ஏதும் ஏற்றுகிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒரு வாரமாகவே ஆப்பிள்கள் என்னைப் படுத்திக்கொண்டிருந்தன. ஒரு வேளை குளிர்காலத்தில் ஆப்பிள் இவ்விதம் ஆகிவிடுகின்றனவா?

இன்றும் காலையில் பிள்ளைகள் பள்ளிகளுக்கு கிளம்பும் நேரத்தில் இரண்டு ஆப்பிள்களை எடுத்து வந்து கழுவி வெட்ட ஆரம்பித்தேன். இரண்டும் கடும் தேர்விற்குப் பிறகு எடுத்து வந்தவை. காலையில் கடையில் நான் தேடுவதைப் பார்த்து கடைக்காரர் கோபித்துக்கொண்டார். “இப்படி எடுத்தீங்கண்ணா..பழம் சரிந்திடும்” என்று என்னைத் தடுத்தார். நானும் அவருமாக ஆறு பழங்களை எடுத்து வந்து நிறுத்தோம். கூடவே நாட்டு மாதுளைப் பழங்கள் இரண்டு. வாங்கும் முன்னர் விலையைக் கேட்டுக்கொண்டேன். அவர் நிறுத்து பாலித்தீன் பையில் போட்டு முடிந்து  கொடுத்தார். பெரும்பாலும் பழங்கள் எப்போதும் முடிச்சுப் போடப்பட்டே வாடிக்கையாளர்கள் கையில் வியாபாரிகளால் வழங்கப்படுகின்றன. அது ஒரு தொழில் நுட்பம். வாடிக்கையாளர் வீடுபோய் பையைப் பிரித்துப் பார்த்து ஏமாறுவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெட்டிய இரண்டு பழங்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. எனக்கு உடனே கோபத்தில் புருவங்கள் மேலேறின. இன்றும் நான் ஏமாந்து விட்டேனா? என்று சோர்வாக இருந்தது. என்னதான் செய்வது? ஆப்பிள்களுக்குப் பதில் வேறு எந்தப்பழத்தைக் கொடுப்பது. கொய்யாப்பழத்தை குழந்தைகள் விரும்பி உண்பதில்லை.

ஐந்து நிமிடம் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தேன். என்னை ஏமாற்றிய அத்தனைக் கடைக்காரர்களின் முகங்களும் நினைவில் வந்தன. ஒவ்வொருவரின் உடல்மொழியும் கலையாமல் பதிந்துள்ளன. சிறிய வியாபாரிகள்தான் அவர்கள். மொத்த முதலீடே சில ஆயிரங்களுக்குள்தான் இருக்கும். யாருக்கும் ஏன் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் போய்விட்டது. பேருந்து நிலையங்களில் உள்ள வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. அவ்வப்போது பயணத்தின் இடையே வந்து போகும் பயணிகளை அவர்கள் நம்பி இருப்பதால் இப்படி இருக்கிறார்களா?

ஏமாறிய என் அனுபவங்கள் இவ்விதத்தில் நிறைய.  என்னால் வணிகர்களோடு போட்டி போடவே முடியவில்லை. ஒரு கனவானைப் போல அவர்களை நம்பி விடுகிறேன். அவர்களிடம் பேரம் பேசுவதே இல்லை. மிகவும் தயங்கி “நல்ல பொருளா கொடுங்க” என்று கோரிக்கை வைப்பேன். பெரும்பாலும் வியாபாரிகள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. என் முகத்தில் இளிச்சவாயன் என்று எழுதி வைத்திருப்பதை அவர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அள்ளிப்போட்டு கொடுத்து விடுகிறார்கள்.

என் மனைவி “கொண்டு போய் அவன் முகத்தில் அறைந்து விட்டு வாருங்கள்” என்றாள். “நானாக இருந்தால் அப்படித்தான் செய்வேன்”

எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை. பேருந்து நிலையம் போன்ற  போட்டி நிறைந்த சூழலில் கடை நடத்துவதற்குத் தேவையான தைரியமும் சாதுர்யமும் அங்குள்ள வியாபாரிகளிடம் அதிகமாகவே காணப்படும். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. நகராட்சி கடைகளை வாடகைக்கு பிடிப்பதற்கே தனித் திறன்கள் தேவைப்படும். காலையில் வாங்கி வந்திருந்த கடைக்காரரை பக்கத்துக் கடைக்காரர் “பாண்டியன்” என்று பிரியமாக அழைப்பதைக் கேட்டிருந்தேன். பாண்டியன்கள் உடல்மொழியே ஒரு ஆயுதந்தான். அதன்பிறகு மீசை நுனிகள். கண்பார்வைகள். முக பாவனைகள். உள்ளே உறைந்திருக்கும் வன்முறை மீதான மயக்கம்.

அசோகமித்திரன் மஞ்சள் கயிறு என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கதையின் மையம் தனி மனிதச் சுரண்டலும், சமூகம் ஒரு எளியவனை எவ்வாறெல்லாம் அவமானப்படுத்துகிறது என்பதுந்தான். பிரமிளுக்குப் பிடித்த கதை. அக்கதையில் வரும் பிராமணரை அவரின் உறவினர் ஒருவரே கடுமையாகத் திட்டி அவமானப் படுத்துவார். அவரைச் சுரண்டவும் செய்வார். கதாப்பாத்திரத்திற்கு மஞ்சள் கயிறுகள் சுற்றித்தரும் வேலை. வீட்டில் கைத்தொழில் போன்று தயாரித்துக்கொடுத்து அதில் கிடைக்கும் ஊதியத்தில் உயிர் வாழக்கூடியவர். அன்றைய தினம் கடும் பசியில் அவர் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் செல்வார். பசி கண்ணைக் கட்டி தள்ளாடி நடக்கச் செய்துவிடும். வயிறு புடைக்க சாப்பிட அவரிடம் பணம் இருப்பதில்லை. பசி மயக்கத்தில் இருப்பவர் முன்னே வடையை வைப்பார் பரிமாறுபவர்.  ஊசிப்போன தேங்காய்ச் சட்டினியை வடையின் மேல் ஊற்றிவிடுவார். பணியாளருக்கு சட்டினி ஊசி விட்டது என்பது தெரியும் .தெரிந்தாலும் ஐயர்தானே என்ன செய்துவிட முடியும் என்கிற இளக்காரம். அல்லது பசியில் களைத்த முகத்தைக் கண்டு சீண்டிப்பார்ப்போமே என்று எளியவர்களை வதைக்கும் குரூரம். எளியவன் தன்னைவிட எளிய நிலையில் உள்ளவனை சீண்ட வாய்ப்புக்கிடைத்தால் வீணாக்குவதில்லை.

அறுபதுகளில் உள்ள வாழ்க்கைச் சித்திரம் இது. ஒருவேளை அசோகமித்திரனின் சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம். பசியில் சோர்ந்து தள்ளாடி வருகிறவன் முன் இலையில் ஊசிப்போன சட்டினியைப் பரிமாற ஒருவருக்கு இருக்க வேண்டிய மனநிலையை எண்ணிப் பார்த்தால் நடுக்கமாக இருக்கிறது.

உலகம் எப்போதுமே இப்படித்தான். எளியவர்களைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம்தான். சாதிகளாக, குழுக்களாக, அதிகார அமைப்புகளாக பல்வேறு நிலைகளில் மனிதர்கள் பிறரைத் தாக்கவும் சுரண்டவும் இழிவுபடுத்தவும் தயாராக இருக்கிறார்கள். அடாவடித்தனம் அவர்களின் இயல்பாக உள்ளது. இப்படி இருந்தாத்தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும் என்பது அவர்களின் வாதம்.

இது  சிறிய அளவிலான பண விசயந்தான். ஆனால் ஒரு சமூகமாக நம் நிலையை நன்றாக விளக்கப் போதும். ஏமாறு, ஏமாற்று என மனித உறவுகளைச் சுருக்கிவிடலாம். ஒவ்வொருவரும் பிறரை எந்தவகையில் பயன்படுத்தலாம், சுரண்டிப் புடுங்கலாம் என்கிற திட்டமிடலோடுதான் இருக்கிறார்கள். மிகச் சிறுபான்மையினருக்கு மனிதாபிமானம், பிறர் நலத்தின் மீதான அக்கறை போன்றவை இருக்கத்தான் செய்கிறது.

ஐம்பது பைசாவில் இருந்து பல கோடிகள் வரை இதன் வகைமாதிரிகள் மிகப் பிரமாண்டமானது. கட்புலனாகாத மாயவலை.  நிம்மதியை, வாழ்நாள் சேமிப்பை, பாடுபட்டு ஈட்டும் பொருளை களவாடுகிறார்கள். வணிகம், மருத்துவம், கல்வி, சேவைத் துறைகள் என பெரும்பாலான மனித உறவுகளைத் தீர்மானிப்பது பேராசைதான். நுாற்றி நாற்பதும், நுாற்றி நாற்பதும் முந்நுாற்றி எண்பது என எளிதாக கூட்டிவிட முடிகிறது. வாங்கும் வாடிக்கையாளர் யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தார் என்றால் நுாறு ரூபாய் உடனடி லாபம்.

ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவலில் வரும் பண்டாரம் “நாம பிறருக்கு என்ன கெடுதல் செய்தோம். நமக்கேன் இப்படி நடந்துவிட்டது? என்று அறச்சீற்றம் கொள்ளும் ஒரு காட்சி வரும். பண்டாரம் உடல்குறைபாடு உடையவர்களை உருப்படிகள் போல கொள்முதலாக்கி பிச்சையெடுக்கப் பணித்து பொருள் ஈட்டும் கொடுங்கோலன். அவன் மகள் ஓடிப்போய் திருமணம் செய்து உருப்படாமல் போன துக்கத்தில்தான் அவன் அப்படிக் கேட்பது.

நாம் அனைவரும் அந்தப் பண்டாரத்தைப் போலத்தான்.  தொழில் தர்மம் அநேகமாக நம்மிடம் இல்லை. அல்லற்பட்டு ஆற்றாமல் அழுத கண்ணீரை  யோசிப்பதும் இல்லை.

சாபம் நிறைந்த சொற்கள் வம்சங்களை நாசமாக்கும் என்பது என் சொந்த அனுபவம்.

ஊழலும் ஏமாற்றும் மனித இயல்வு.

நேர்மையும் அறமும் காண நேரிடுவது அரிதான நிகழ்வு.

வாழ்தல் என்பதே ஏமாற்றிப் புடுங்குவது என்றாகிவிட்டது.

12.11.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *