வாழும் கலை மற்றும் இன்ன பிற

1.இரவு யாசகர்கள்

அதிகரித்து விட்டார்களோ என அச்சமாக இருக்கிறது. ஏன் இப்படி அகாலத்தில் கண்களில் தென்படுபவர்களைத் தேடித்தேடி பிச்சை எடுக்கிறார்கள் என்று எழுந்த கேள்விகள் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன. யாசிப்பவர்களில் மிகுதியும் இளைஞர்கள். நல்ல உடல் வலுவும் ஆரோக்கியமும் கொண்டவர்கள். பெரும்பாலும் குடித்திருக்கிறார்கள். தாடியும் மீசையும் வளர்த்து ஹிப்பிக்களை நினைவுப்படுத்துகிறார்கள். அருகில் வந்தாலே அச்சத்தை உண்டு பண்ணும் முகத் தோற்றம் கொண்டிருக்கிறார்கள்.

இரவு பன்னிரெண்டுமணிக்கு நெல்லை ஜங்சனில் நான் மட்டும் ரயிலில் இருந்து நீண்ட தனிவழியில் இரவைப் பயந்து நடந்து வரும்போது பின்னால் ஒருவர் “ சார்..சார்..”  என்று கூப்பிடுகிறார். திரும்பினால் முப்பதை ஒட்டிய இளைஞர். என்னை நோக்கி ஓடி வருகிறார். எனக்கு அங்கே இருளுக்குள் நிற்க நடுக்கம். திரும்பிப்பார்த்துவிட்டு  விறுவிறு என நடையை  வேகப்படுத்தினேன். என்னை நெருங்கி முகத்தை மட்டும் என் முகத்திற்கு அருகே கொண்டு வந்து “ சார்…சின்ன உதவி..?” என்றார்.

நான் நடையை நிறுத்தாமல் அவரைத்தாண்டிச் செல்ல முயன்றேன். உடனே அவரிடம் இருந்து கடுமையான எதிர்வினை வந்தது.

“சார், நான் ஒன்னும் பிச்சைக்காரன் இல்லை. இன்னைக்கு இப்படி ஆயிட்டு..திருவனந்த புரத்திற்கு ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துத்தாங்க” என்று விரட்டிக்கொண்டு வந்தார்.

நான் பதில் ஏதும் சொல்லாமல் மேலும் விரைந்து வந்தேன். ஜங்சன் பஸ் ஸ்டாண்டில் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக காத்திருந்தேன். அங்கேயும் ஐந்தாறு ஆண்கள்- ஆம் அவர்களும் அச்சுறுத்தும் கோலங்களில்தான் அலைந்து கொண்டிருந்தார்கள்- அருகில் வந்து நின்று முறைத்துச் சென்றார்கள். ஐயோ..ஆண்டவா…என்ன ஆனது இந்த உலகத்திற்கு..சீக்கிரம் தென்காசிக்கு பஸ் வந்து தொலையாதா?

சமீப காலங்களில் இவர்களைப் போல உரிமையோடு பிச்சையெடுப்பவர்களை அடிக்கடி காண நேரிடுகிறது. ஒருமுறை பாலக்காடு செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவர் விரட்டி விரட்டி வந்து துட்டுக்கேட்டார்.

பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தை தாண்டியதும் மொத்த ரயில் பெட்டியும் காலியானது. நான் மட்டும் கையில் வைத்திருந்த நாவலினை வாசித்துக்கொண்டிருந்தேன். பழனியில் ஒரு பழைய புத்தகக்கடையில் வாங்கிய நான்கு நுால்களில் அந்நாவலும் ஒன்று. மஞ்சுள் பதிப்பகம் வெளியிட்டுள்ள சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை – தலையணை அளவில்- காந்தியைப் பற்றி சாது ஸ்ரீராம்  எழுதிய கட்டுரைத் தொகுப்பு. பதஞ்சலி யோகம் குறித்த ஒரு துறவியின் – ஓஷோ அல்ல- கட்டுரைத் தொகுப்பும் தனியாக கையில்.

பார்த்தால் விலகிச் செல்லும் கோலம். ஆனால் அழகன். தமிழ் பேசிய  வடக்கன் உச்சரிப்பு. தனிமையில் சன்னலோரம்அமர்ந்திருந்த என்னருகில் என்னை ஒட்டிக்கொண்டு உரசியபடி அமர்ந்தார். பாலக்காடு டவுனில் இருந்து பாலக்காடு ஜங்சனுக்கு அநியாய ரயில் கட்டணம் என்று வருத்தப்பட்டார். நான் மரியாதைக்காக நிமிர்ந்து பார்த்து புன்னகைத்துவிட்டு படிப்பதாக பாவனை செய்தேன்.  அவரோ என் அனுமதியை எதிர்பாராமல் இடைவெளி இன்றி பேசத்  தொடங்கினார். அவருக்கு கொஞ்சம் பணம் வேண்டும் “முப்பது ரூபாய் இருந்தால் கொடுக்க முடியுமா?” என்பது இறுதி வேண்டுகோள்.

நான் இல்லை என்றேன். அவர் விடவில்லை. ஏன் தரவில்லை என்று என்னிடம் காரணம் கேட்க ஆரம்பித்தார். பேச்சில் இங்கிதம் குறையத் தொடங்கி கண்களில் முறைப்பு அதிகரித்தது. காலியாக அருகில் ஆட்கள் அற்ற தனிமையில் அது என்னை பயங்கரமாக அச்சம் கொள்ளவைத்தது. வண்டி தடக் தடக் என்று வேகம் கொண்டு ஓடியது. இல்லையென்றால் இறங்கியாவது விடலாம். ஒரு வாசலில் இருந்து மறுவாசலுக்கு வந்தேன். அங்கே ஒரே ஒரு சேச்சி அவரும் என்னை விட மிகவும் இளையவர் அமர்ந்திருந்தார். ஆறுதலுக்காக அவரின் அருகில் அமர்ந்துகொண்டு கடந்து செல்லும் இருள்வடிவங்களை காணும் பாசாங்கில் இருந்தேன். அவர் என்னை உரிமையோடு தேடிவந்து என் எதிரில் அமர்ந்தார் . அருகில் பெண் இருப்பதைப் பார்த்ததும் அவரால் யாசிக்க முடியாமல் போனது. நல்ல வேளை என்று வண்டி ஜங்சனை அடைந்து நிற்கத் தயங்கிய போது ஓடும்ரயிலில் இருந்து குதித்து  இறங்கினேன். எங்கே பின்தொடர்ந்து வந்துவிடுவானோ என்ற பயத்துடன்.

அதே வாரத்தில் மற்றொருநாள். பொதிகையில் தென்காசியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பதிவு செய்யப்படாத வகுப்பில். கால்மாட்டிலும் தலைமாட்டிலும் ஆண்களும் பெண்களும் லஜ்ஜை இன்று நெருக்கித்தள்ளி அமர்ந்திருக்க ஒடுங்கியபடி வந்தேன். கூட்டத்தை நீந்தி இறங்க முடியுமா என்ற அச்சத்தில் மக்களைப் பிளந்து வாசலருகே வந்து நின்றேன்.அப்போது வண்டி கொடைரோடு நிறுத்தத்தைத்தான் தாண்டியிருந்தது. என்னருகே ஒருவர் முழு போதையில். கண்கள் சிவந்து வாய்நாறி ஆடைகளின் அழுக்கு முகத்தைச் சுழிக்கச் செய்த நிலை. என் காது கூசும் அளவில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அத்தனையும்  அம்மாவின் கற்பினை சந்தேகிப்பவை. எனக்கு அருகில் பெண்களும் இருந்தார்கள். எனக்குத்தான் மிகுந்த சங்கடமாக இருந்தது. அவரை வெறுத்துப் பா ர்க்கக்கூடாத இயலாதவனாக வெளியே வெறித்துக்கொண்டு நின்றிருந்தேன். வண்டி நிலையத்தை அடைய முன்னும் பின்னும் வேகத்தள்ளாட்டத்தைக் கொண்டிருந்தது. முன்பின்னாக அவரும்நானும் உரசி ஒட்டிக்கொண்டோம். அவர் “கரூருக்குப் போனும் டிக்கட்டுக்கு காசில்ல..ஒரு நுாறு ரூபாயத் தர முடியுமா?” என்று கேட்டார்.

எப்பவும் போல நான் கேளா செவிகொண்டு சிலைத்து நின்றேன். “முட்டாக்கூதி..உங்கிட்டத்தாண்ட  கேட்கறேன்…நீ இப்ப தரப்போறீய இல்லியா?” என்ற ஆங்காரத்துடன் அவர் என்னிடம் முண்டியபோதுதான் ஒருவேளை கஞ்சா ஏதும் எடுத்திருப்பாரோ என்று ஐயம் தோன்றியது. நான் உள்ளே கிடுகிடுத்தாலும் வெளியே விறைப்பாக நின்றேன். அ ப்போதும் அவரை கண்டுகொள்ளவில்லை. யாரையோ வைதுகொண்டு இருந்தவர் அப்புறம் என்னுடைய உடல் அங்க அமைப்புக்களை குறிப்பிட்டு என் ஆடை நிறங்களை அடையாளப்படுத்தி ஏசத் தொடங்கினார்.அ வருக்கு எவரை வைதாலும் அவரின் அம்மாவைத்தான் முதல்  இலக்காக வைப்பார்  போலும். அங்கே அடித்து கட்டிப்பிடித்து உருண்டிருக்கலாம். ஆனாலும் எதுக்கு இந்த வம்பு என்று வாளாவிருந்து இறங்கினேன்.

மிலிட்டரி கட்டிங்கில் யானை அளவு பெரிய உடல்கொண்ட புல்லட்களை ஓட்டிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் கதை வேறு தினுசு.

நிறையவே பயமாக இருக்கிறது. ஒழுங்கா வீடு வந்து சேருவது முன்னோர் செய்த புண்ணியமோ அல்லது முற்பிறவியில் செய்த நற்காரியங்களால்தான் என்று இப்போது உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டேன்.

(11.07.26)

2.நாளும் இனிக்கும் மதுரம்

 

குழந்தைகள்தான். எனக்கு குழந்தைகளைப் பிடிக்காது என்கிற ஒரு நுாலின் தலைப்பினை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

இருபதாண்டுகளில் மூன்று குழந்தைகள். மூன்றும் பெண் குழந்தைகள். ஆண்டவா ஏன் சோதிக்கிற? என்று கேட்டுவிட்டுத்தான் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு சம்மதித்தது. முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் பன்னிரெண்டு ஆண்டு இடைவெளி. தகிக்கும் பாலை நில வாழ்க்கை. குடும்பத்திற்கு தேவையான சாமர்த்தியங்களை மெல்ல மெல்ல தொலைத்து குடும்பநாசம்  செய்யும் காரியங்களின் பால் தாகம் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன்.

சைதன்யா பிறந்ததும் தொடர்ந்த பரவச நாட்கள் இந்த எட்டாண்டுகளாக நீடித்துக்கொண்டே தான் இருக்கின்றன. சமகாலத்தில் தமிழினியின் அருகாமை அளிக்கும் குதுாகலம்.

ஐந்தாறு வயது வரைதான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள். மழலை பேசி நம்மை வியப்புறச் செய்கிறார்கள். புத்திக்கூர்மையான கேள்விகளும் அபிப்பிராயங்களும் பகிர்ந்து நெஞ்சம் குளிரச் செய்கிறார்கள்.

பத்து வயதுவரை துயர் நடுக்கும் இரவுகள். அம்மா தங்கையோடு குடிசைக்குள் துயில் என்றாலும் கூரைக்கிடுவுக்குள் விரட்டித்திரியும் எலிகள் நிசிகளில் பேய்களை அருகில் கொண்டுவந்துவிடும். பயந்து கொண்டேதான் விடியலை ஏங்கிக் காத்திருப்பது. பத்து வயதிற்கு மேல் ஆர்பனேஜ்ஜில் தனிமை வாழ்வு. மனித மனங்களோடு நெருக்கம் கொள்ளத் தயக்கம் ஏற்பட்ட பருவம் அது. அதன்பிறகு குழந்தைகள் வந்தார்கள். ஒரு குடும்பம் என்கிற அமைப்பினை பருப்பொருளாக உணர ஆரம்பித்தேன். நாளும்  பொழுதும் என்னைச் சுற்றி என் குழந்தைகளின் மூச்சுக்காற்று நிறைந்திருந்தது. பால்யத்தில் இருந்து நிசிகளில் பதறி எழுந்து திக் பிரமை பிடித்து இருளை வெறித்துக்கொண்டு இருந்த நாள்கள் இப்போதெல்லாம் வந்து செல்வதில்லை. யாராவது ஒருவர் என் நெஞ்சில் கால்களைத் துாக்கிப்போட்டு அருகில் துயின்று கொண்டிருப்பார்கள். சைதன்யா என்றால் களிமண் மிதிப்பதைப் போல மிதித்துத்தள்ளி விடுவாள்.

ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும்போது கண்களில் நீர்வரும் ஒரு காரியம் நடக்கும். என் ஆக்டிவாவின் சத்தம் வாசலில் கேட்ட உடன் தமிழினி ஆர்ப்பாட்டத்தோடு வீட்டிற்குள் ஓடிச் சத்தம் கொடுப்பாள். அப்பா..வந்துட்டாங்க..ஐயோ..அப்பா வந்துட்டாங்க.. தெருவில் நின்றுகொண்டிருக்கும் என் முகம் பூரித்து தளும்பும். என் வருகையை உள்ளம் பூரிக்க கொண்டாடித்தீர்க்கும் ஒரு நல்லிதயம். அடைத்த கதவுகளைப்பிடித்து ஆட்டி அவள் கொடுக்கும் வரவேற்பிற்காக நான் எங்கிருந்தாலும் உடனே வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கிற முடிவிற்கு வந்துவிடுவேன்.

சைதன்யா வளர்ந்து கொண்டிருக்கிறாள். முன்போல என்னைக் கொஞ்ச அனுமதிப்பதில்லை. அவளும் முன்போல என்னோடு ஒட்டி உறவாடுவதில்லை. முன்பெல்லாம் என் அருகில் ஒட்டிக்கொண்டு படுத்தபடி என் மார்புக்காம்புகளைச் சுவைப்பாள். அவளின் அம்மா பார்த்துவிட்டு பதறிவந்து உதடுகளில் சுண்டுவாள். அதன்பிறகு கைகளால் என் காம்புகளை வருடிக்கொண்டே நான் சொல்லும் கதைகளைக்  கேட்டு துயிலுக்குள் செல்வாள்.

இப்போது அவளிடத்தில் தமிழினி. தமிழினிக்கு வேறுவிதமான ஈடுபாடுகள். படுத்த உடன் கதை சொல்லு கதை சொல்லு என்ற வேண்டுதல். ஒரு காடு ஒரு புலி ஒரு யானை ஒரு பூனை. ஒரே கதை. ஒரே தொனி. பத்தாவது நிமிடத்தில் திரும்பிப்படுத்து உறங்கிப்போவாள். ஆனால் பத்துமணி ஆனதும் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அவளுக்கு அருகே வந்து படுத்துவிடவேண்டும்.

வீட்டில் நானிருக்கும்போதெல்லாம் என் மடியில் யார் இருப்பது. என் தோளில் யார் சாய்வது என இருவருக்கும் அடிபிடிச் சண்டைதான். சின்னவள் வந்த பிறகு மிக மெதுவாக பெரியவள் விலகிச் சென்றாள். அவளை முன்போல கொஞ்சுவதில்லை என்று சிலபோது என்னிடமே கண்ணீர் மல்க முறையிடுவாள். உன்னையும் இப்படித்தான் பாப்பா  கொஞ்சியிருக்கோம் என்றாலும் “இப்ப ஏன் இல்லை“? என்று வருத்தம் கொள்வாள்.

நெஞ்சைக் கீறிய பல இக்கட்டுகள் பணிநாட்களில் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் குழந்தைகளின் முகம் நினைவில் வந்து கடுமையான எதிர்வினை ஆற்றுவதில் இருந்து தடுத்திருக்கிறது. எத்தனை இக்கட்டுகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு கடந்துதான் ஆகவேண்டும் என்கிற வெறியினை குழந்தைகளின் முகங்கள்தான் அளித்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் அவர்களோடு இருப்பது பேரானந்தம். என் மனைவியோடு இப்போதைய என் வருத்தங்கள் அனைத்தும் குழந்தைகளின் பாற்பட்டது. திடும் திடும்மென்று அவர்கள் மேல் விழும் அடிகளைக் கண்டு என் உடம்பெல்லாம் நடுங்கும். ஆத்திரம் பீறிட்டெழும். சண்டையிட்டால் இருவரையும் நீயே பாரு என்று கதவைச் சாத்திக்கொள்வாள். அப்புறம் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் வாசிக்கவோ எழுதவோ முடியாமல் ஆகும். இரவு அவர்களை உறங்கச்  செய்தபின்னர் கிடைக்கும் நேரமும் காலையில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும் கிடைக்கும் கொஞ்ச நேரமுந்தான் ஒரு நாளை அர்த்தப் பூர்வம் கொள்ளச் செய்கின்றன.

ஒரு ஆண் தந்தைமை கொள்வது பெற்றாக  வேண்டிய வரம். குழந்தைகளின் வழியாக நம் முன்னோர்கள் நம்மை வந்து தீண்டுகிறார்கள். என் அம்மாவின் சாயலைக் கண்டு சைதன்யா மீதும் நாள் கொள்ளும் பிரியம் அலாதியானது. இதோ என் அம்மா என் அருகில் நாளும் பொழுதும் இருந்து கொண்டிருக்கிறாள் என்கிற ஆறுதலும்.

குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போனால் சீரழிந்து, பெண்ணுடலுக்காக பல குடும்பங்களைக் கெடுத்து, மனநிலைச்சிடுக்கு மேலும் அதிகரித்து குடியிலும் கூத்திகளின் காலிடுக்குளிலும் சிதைந்து போயிருக்கக்கூடும். கரூரில் வாழ்ந்த நாட்களின் அப்படித்தான் இருந்தேன்.

வேறொன்றும் உண்டு. குழந்தைகளின்  நோய்கள் அளிக்கும் மனத்துயர். தமிழினியை அவள் பிறந்தபோது ஏற்பட்ட ஆரம்பத் தடுமாற்றத்தில் அவளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற மருத்துவமனையை நான் தினந்தோறும் கடந்து செல்ல நேரிடும். அப்போதெல்லாம் அங்குள்ளவர்கள் மீது எழும் தாங்கொண்ணாத  வெறுப்பு புரிந்துகொள்ள முடியாத துயரந்தான். இதோ எழுதும்போது கூட பெருமூச்சும் கை நடுக்கமும் ஏற்படுகிறது.

இனி மதங்கொள்வது  குழந்தைகளின் பொருட்டாகத்தான் இருக்கவும் கூடும்.

(15.07.2026)

3.கல்வியின் கண்

நேற்று பள்ளிவிட்டு வீடு திரும்பிய தமிழினி தன்னிச்சையாக “ஸ்கூல் தட்டித் தந்தாங்கயே…ராமராஜர் பிறந்த நாள்…அவங்க ஸ்கூல் தட்டித் தந்தாங்கஎஎஎஏஏஎ..“ என்று திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகளில் காமராஜர் இவ்வாறு நினைவு கூரப்பட்டுள்ளார். குழந்தைகளின் உள்ளத்தில் ஒளியாக சென்று  சேர்ந்துள்ளார்.

என்னுடைய மாமானார் அமரர் பரமசிவம் பலமுறை என்னிடம் பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்று உண்டு.

ராஜபாளையத்தில் அவர் படித்த அரசுப்பள்ளி. மாணவர்கள் அனைவரும் நீண்ட நேரமாக வெளியில்  வெயிலில் ஒருவருக்காக  வரிசையாக நிற்க வைக்கப்பட்டு காத்திருக்கின்றனர். காலதாமதம் அதிகரிக்க அதிகரிக்க குழந்தைகள் சங்கடத்தில் நெளிந்துகொண்டிருக்கின்றனர். கால்கள் அந்நிச்சயமாக அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவழியாக முதலமைச்சரின் கார் வந்துவிட்டது. குழந்தைகள் பரவசத்தில் எட்டி எட்டி பார்க்கிறார்கள். காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பதறிப்போய் குற்றவுணர்ச்சியோடு ஓடி வருகிறார். கல்வி அதிகாரிகளை அழைத்து “ஏன் இவர்களை இப்படி வெயிலில் வாட விடுகிறீர்கள். என்னை இப்படி வரவேற்க வேண்டும் உங்களுக்கு யார் உத்தரவிட்டது? உடனே இவர்களைக் கலைந்து  போகச் செய்யுங்கள்” என்று கோபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். சிறுவனான பரமசிவம் முதலமைச்சரை மிக அருகில் நின்று பார்த்திருக்கிறார்.  அவரின் நெடிய உருவமும் கருத்த தேகமும் அவர் வாழ்நாள் முழுக்க நினைவில் நின்று கொண்டிருந்தது.

ஆனால் காமராஜரின் மீது எதிர்மறையான விமர்சனங்களை நான்  கேள்விப்பட்டது நவீன தமிழ் இலக்கியவாதிகளிடம் இருந்துதான். உதாரணமாக சுந்தர ராமசாமி கருத்தும் கலையும் என்கிற விமர்சன நுாலில் ராஜ் கௌதமன் எழுதியுள்ள கீழே உள்ள பத்தியைக் கவனியுங்கள்.

“சு.ரா.ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக அறவுணர்வோடு தரத்தை மேம்படச் செய்யும் அக்கறையோடு தொடர்ந்து எழுதினார். பேசினார். இடையில் அறுபதுகளில் ஆறு – ஏழு ஆண்டுகளாகத் தம் ஜவுளிக்கடை வியாபாரத்தை முடுக்கிவிடும்  உழைப்பில் மூழ்கிவிட்டார். நவீன உத்திகளைக் கையாண்டு இலாபத்தை அதிகரிக்க வழி செய்தார். இக்கால கட்டம் அவரைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்தது, சோவியத் யூனியன் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலின் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சர்வ அதிகாரங்களையும் கைவசம்  வைத்துக்கொண்டு சுமார் 20-40 மில்லியன் மக்களை அழித்து ஒழித்தார். பொது வாழ்க்கையிலிருந்து அகற்றினார். பொதுவுடைமைக் கருத்தியலில் ஈடுபாடு ஏற்படக் காரணமான ப.ஜீவனாந்தத்துடன் கொண்டிருந்து நேரடி நட்பு சு.ரா.வுக்குத் தம் 25 ஆவது வயதில் நி ன்றுபோனது. சிறுவனாக இருந்த காலந்தொட்டுப் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த சு.ரா.வுடைய ஆரம்ப கட்டக் கதைகள் “தண்ணீர்”  “உணவும் உணர்வும்”  “பொறுக்கி வர்க்கம்”  “கோவில்காளையும் உழவு மாடும்” ஆகியவை. அவை அவர் பொதுவுடைமைக் கருத்தியலில் ஈர்க்கப்பட்ட ஆரம்ப கால கட்டத்தைச் சேர்நதவை. இக்கால கட்டத்தில் ஜோசப் ஸ்டாலினுடைய சர்வாதிகாரம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லை) எல்லை மீறிச் செயல்பட்டு லட்சக் கணக்கில் மக்களை் கொ-ல்-லு-வதற்குக் காரணமாக இருந்தது. இதே காலத்தில் புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் தேசிய முதலாளிகளும், தரகு முதலாளிகளும் அமெரிக்க – பிரிட்டன் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். பட்டேலும், காமராஜரும் இந்திய கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினார்கள். இது தமிழகத்திலும் எதிரொலித்தது, முதலாளியத்தின் அராஜகங்களுக்கு எதிர்ப்புக் காட்டிய பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள்.

அம்பேத்கார் குறித்து பிரமிளும், திராவிட இயக்கம் குறித்து மு.தளையசிங்கமும் எழுதியுள்ளவையும் வாசித்த போது அதிர்ச்சியை உண்டாக்கியவை. ஆனால் அக்கால கட்டத்தில் யாரும் சொல்லத் துணியாத மாற்றுக்கோணங்கள்.

மாஸ்டர்ஸ் என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. மந்தையில் ஒருவராக நம்மையும் நிற்க விடுவதில்லை. சூளையில் இருந்து பிரிந்த தனித்த செங்கல் என்ற படிமத்தில் ஞானக்கூத்தன் சுட்டுவது இதைந்தானோ?

(16.07.25)

4.ஸரமாகோ நாவல்களின் பயணம் – எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள இந்நுால்  ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள் குறித்த வாசிப்பனுபவத்தை முன்வைக்கிறது. பதினேழு  நாவல்களின் சுருக்கப்பட்ட வடிங்களளும் அதன் மீதான ஆசிரியரின் தனித்துவம் வாய்ந்த மதிப்பீடுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் இதைப்போன்று ஒரு நுாலை- அதாவது தமிழ்ப்படைப்பாளிக்கு- நான் இதுவரை கண்டிருக்கவில்லை. ரீடர் என்கிற வழிகாட்டி நுாற்கள் – ஜெயகாந்தனுக்கு, சுந்தர ராமசாமிக்கு, அசோகமித்திரனுக்கு, லால்குடி சப்தரிஷி ராமாமிருதத்திற்கு –முன்பு கலைஞன் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த நினைவு இருக்கிறது. ஒரு படைப்பாளியின் அத்தனை நாவல்களையும் அல்லது அவரின் அத்தனைப் படைப்புகளையும் அறிமுகம் செய்யும்  பெருந்தொகை நுாலேதும் நான் வாசித்திருக்கவில்லை. அந்த வகையில் இந்நுால் பெரிய உற்சாகத்தை அளித்தது. மேலும் அதிகமாக என் வாசிப்பு ருசிக்கு ஐரோப்பிய நாவல்களும் அதன் கதைமாதிரிகளும் உவப்பானவையும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்கூறும் நல்லுலகமே கொண்டாடிவரும் ஆல்பெர் கம்யுவின் அந்நியன் என்னை ஈர்க்கவேயில்லை. பிரான்ஸ் காப்காவின் விசாரணையை ஒருமுறை கூட முழுதாக வாசிக்கவும் இயலவில்லை. அவர்களுக்கும் அவர்களின் ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பினை- அவற்றின் சாரங்களைத் தொகுத்து இதைப்போன்று நுால்கள் எழுதப்பட்டால் மிகுந்த பயனாக இருக்கும்.

மார்க்சியர்களின் அறிவுசார் உழைப்பு என்றுமே ஆச்சரியப்படத்தகுந்தளவில் நீடித்த அக்கறை கொண்டது. எஸ்.வி.ராஜதுரையும், அ.மார்க்சும் அந்தவகையில் எப்போதும் என் விருப்பத்திற்குரியவர்கள். களச் செயல்பாடு, தத்துவம் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த வலுவான பார்வைத்திறப்புகளைப் பெறுவதற்காக இவர்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  எதிர்தரப்பின் நியாயங்களையும், அவற்றின் இருப்பினையும் பொருட்படுத்தியாக வேண்டிய ஒரு கடமை வாசிப்பினை மெய்காண்முறையாகக்  கைக்கொள்பவனுக்கு அவசியம்.

ஒரு படைப்பாளியை அறிமுகம் செய்து கொள்வதன் மூலம் அவர் இந்த மனித சமூதாயத்திற்கு விட்டுச்சென்றிருக்கும் அவதானிப்புக்களையும் அறைகூவல்களையும் கண்டடைதல்களையும் அனுபவம்  கொள்ள முடியும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவர்களுக்கே உரிய தத்துவப் பின்புலமும் தரிசனக் கட்டுமானமும் அழகியல் ரசனைத் தேர்வுகளும் இருக்கும். ஒரு படைப்பாளியின் ஆன்மாவாக இவைதான் நம்மை வந்தடைகின்றன.

“நாவல் என்பது ஓர் இலக்கிய வகை அல்ல. மாறாக அது ஓர் இலக்கிய வெளி, பல ஆறுகளால் நிரப்பப்படும் கடல் போன்றது. நாவலில் அறிவியல், தத்துவ, கவிதை ஓடைகள் வந்து சேர்கின்றன. அது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அது வெறும் கதை சொல்லலல்ல“  என்று ஸரமாகோ நாவலின் உள்ளடக்கத்தை விவரிக்கிறார். இக்கருத்தோடு நம்முடைய தமிழ் நாவல்களையும் சமீபமாக எழுதப்படும் படைப்புகளையும் ஒப்பிட்டு சுய தர நிர்ணயம் செய்து கொள்ள உத்வேகம் கொள்ள மு டிகிறது.

போர்ச்சுக்கலின் ரிபாடெஜோ மாநிலத்தில் பிறந்தவர் ஸரமாகோ. ஸரமாகோ என்பது அவரின் தந்தையின் குடும்பத்திற்கு அந்தக் கிராமத்தினர் அடைத்த பட்டப்பெயர்.  காட்டு முள்ளங்கி என்பது அதன் பொருள்.  வறுமை நிறைந்த பால்யம். பல்வேறு வேலைகளுக்கு இடையில் நுாலகம்  சென்று தொடர்ந்து வாசித்தல்.  அவற்றிற்கு இடையே எழுத்துப்பணி. தன் சொந்தப் படைப்புக்களில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாக பிறரை போர்த்துக்கீசிய மொழிக்கு மொழி பெயர்ப்பதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார்.  இலக்கிய விமர்சகர், கவிஞர், களப்போராளி என்று பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியாக இருந்தவர். 1998 ஆம் ஆண்டிற்குரிய நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸரமாகோவின் பேட்டிகளில் தெரியவரும் கருத்துக்கள் என்னை வசீகரித்தன. அவற்றின் தருக்க நியாயங்கள் அரசியல் சரிநிலைகளைத் தாண்டியவை. ஒரு கலைஞனின் அரசியலை புரிந்து கொள்ள உதவக்கூடியவை.

“முதலாளித்துவம் எவரையும் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. ஏனெனில் அது வாக்குறுதிகள் எதையும் தருவதில்லை. கம்யூனிசம் எல்லோருக்கும் வாக்குறுதிகளைத் தந்தது. அதனால்தான் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஆகவே முதலாளியம்  போன்ற நரமாமிசம் தின்னும் அமைப்பு, ……முதலாளியம் நம் அனைவரையும் ஒன்றிணைத்தது. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்களானோம். அப்படியிருந்தும் முதலாளியம் மக்களை எந்திரங்களின் நிலைக்குத் தாழ்த்தியுள்ளதைப் பற்றி யாரும் புகார் கூறுவதில்லை. இதே போன்ற விஷயங்கள் கம்யூனிஸத்தின் கீழும் இருந்தன. அதுவும் மிகக் குரூரமான வகையில் என்பது உண்மைதான். ஆனால் முதலாளியம் மிக மோசமானது. நம்  எல்லோரையும் ஒன்றே ஒன்றாக – நுகர்வோர்களாக- அது குறுக்கியுள்ளது.”

மற்றொரு கேள்வி – கம்யூனிஸ்ட் ஆட்சிகளில் புரியப்பட்ட குற்றங்களைக்குறிப்பிட்டீர்கள். அது எப்போதாவது உங்களை நம்பிக்கையைச் சந்தேகிக்க இட்டுச் சென்றுள்ளதா?

ஸரமாகோவின் பதில்- இதற்கு மிகத்துரிதமான மிகப் பயனுள்ள பதில் என்னவென்றால், மதம் என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்புவதுதான். கடவுளின் பெயரால் பயங்கரமான கொ-லை-களும் படு கொ-லை-களும் செய்யப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் நாம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறோம். நாம் அதை ஏற்றுக்கொண்டு, எதுவுமே நடக்காதது போல் போய்க்கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு மத நம்பிக்கை இருப்பது எனக்குக் கவலை தருவதில்லை.  அவர்களது நம்பிக்கையின் சாராம்ச செய்திகளுடன் முரண்படும் விஸயங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதுதான் எனக்குக்க வலை தருகிறது… ஆனால் எனக்கு மாற்றுத் தேர்வுகள் என்ன? எதிலும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதா?”

ஸரமாகோ குறித்து இந்நுாலின் வழியாக துலங்கி வரும் சித்திரங்கள் வியப்பை அளிக்கின்றன. உலகம் முழுக்க படைப்பாளிகள் அரசியல் விமர்சகர்களாகவும் களப்போராளிகளாவும்  செயல்பட்டு வந்திருக்கிறார்கள். ஸரமாகோ தன்னை கடைசி வரை ஸ்டாலினிஸ்ட் என்பதை மாற்றிக்கொள்ளவில்லை.அதே நேரத்தில் கொலம்பியாவின் மலைப்பகுதிகளில் இயங்கி வந்த பார்க் என்ற இடதுசாரி கெரில்லா இயக்கத்தை கொ-லை-காரக் கும்பம்ல் என்று கண்டனம் செய்துள்ளார். அதே போல கியூபாவில் ஆட்சியாளர்களை விமர்சித்த, மாற்றுக் கருத்து கொண்டிருந்த 75 எழுத்தாளர்கள் சிறையிலடைக்கப்பட்டதன் காரணமாக பிடல் காஸ்ட்ரோவுடன் தான் கொண்டிருந்த நீண்டகால நட்பை முறித்துக்கொள்ளவும் தயங்கவில்லை.

பன்னாட்டு மூலதன  நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதே ஐரோப்பிய ஜனநாயகம் என்கிற ஸரமாகோவின் மதிப்பீடு நம்மைக் கடுமையாக கேள்விக்குள்ளாக்குவது.

நம்முடைய முற்போக்குச் செயல்பாடுகளான சுற்றுச்சூழல் அக்கறை குறித்து ஸரமாகோ கொண்டிருக்கும் பார்வை முக்கியமானது. அவர் சொல்கிறார். “சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை கொள்வது ஒரு மோஸ்தராகிவிட்டது. எனவே அது அறிவாளிகள் படைப்பாளிகள் ஆகியோரைக் கவர்ந்திழுப்பது இயல்பானதே. அது நவீன ஊடகக் கலாசாரத்தின் பகுதியாகிவிட்டது. நாம் நியாயமாகப் பேசுவோம். இந்த ஆர்ப்பாட்டங்களில் மேம்போக்கானது நிறைய இருக்கிறது. சுற்றுச்சூழல்பிரச்சினை முக்கியமானதுதான். ஆனால்நான் அக்கறைப் படுவது ஆப்பிரிக்காவில் பசியால் இறந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி, குணமாக்கப்படக்கூடிய நோய்களால் உலகெங்கும் மக்கள் இறந்து கொண்டிருப்பதைப் பற்றி. மிகவும் சரிசமமற்ற வகையில் செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவதைப் பற்றி. இந்த விஷயங்கள் எனக்கு ஆபாசமானவையாகத் தெரிகின்றன.

“மனிதன் தன் சக ஜீவராசிகளுக்குரிய மரியாதையை என்று இழந்தானோ, அன்றே அவன் தன்னைத் தானே மதிப்பதையும் நிறுத்திக்கொண்டான்”

2010-ல் இரத்தப் புற்றுநோயால் ஸரமாகோ இறந்துள்ளார். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன. பிடல் காஸ்ரோவும் ரவுல் காஸ்ட்ரோவும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த மலர்வளையங்களை அனுப்பியுள்ளனர். 20 ஆயிரம் பேர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

ஸரமாகோவின் படைப்பியக்கத்தை மிக விரிவாக அறிமுகம் செய்யும் இந்நுால் வாசிப்பின் சவாலினை வேண்டி நிற்பது.

(17.07.26)

5.வாழும் கலை

அவரவர் தேர்வினைப் பொருத்தது.

நாற்பதைத் தாண்டியதும் ஒரு  வெறுமை பீடித்தது. சாதனைகள் என்று சொல்லிக்கொள்ளவும் ஒன்றுமில்லை. நிறைவேற்ற வேண்டியவை இன்னும் கனவாகவே இருந்து கொண்டிருக்கின்றன. கையிருப்பில் உள்ள வாழ்நாட்கள் ஊகத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. பிறவிகள் பல இருக்கின்றன என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பது நிறைய பதற்றங்களை இல்லாமல் ஆக்குகிறது.

இனி வரும் காலங்களில் முடிந்தளவு பரவசமாக வாழ  வேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு எவை எனக்கு மகிழ்ச்சியை அளிப்பவை என்ற கேள்வி பிறந்தது.

அனைவரையும் போலத்தான் என்றாலும் சில காரியங்கள் பிரத்யேகமானவை. நல்ல ருசியான உணவு, அழகிய ஆடைகள், ஆரோக்கியமான உடல், சலிக்காத பயணம், கலைகளுடான அன்றாடம். இவைதான் என் விருப்பத்தேர்வுகள்

பிழைப்பின் உபாயமாக மேற்கொள்ளும் செக்குமாட்டுத்தனத்தில் உற்சாகம் கலையாமல்  செயல்புரியும் உத்வேகத்தை அளிப்பவையாகவும் இவை இருக்கின்றன.

அலுவலக நண்பர்கள் சிலர் எப்போதும் கேட்பதுண்டு. “என்னப்பா..சிரிச்சிட்டே வர்ற..?” என்று. வண்டியில் போகும்போது கூட பல சமயங்களில் உதடுகள் விரிய நான் புன்னகைத்துக்கொண்டு செல்வதுண்டு.

என்னுடைய பிரக்ஞை இரண்டாகச் செயல்புரிகிறது. ஒன்று அன்றாடத்தின் ஒரு பகுதியில் கவனம் கொள்வது. மற்றொன்று அன்று வாசித்த புத்தகத்தை அசைபோடுவது அல்லது கேட்ட இசையை திரும்ப திரும்ப இசைத்துப் பார்ப்பது அல்லது பார்த்து முடித்த நல்ல சினிமாவை மீண்டும் ஓட்டிப்பார்ப்பது. கூடவே பிறிதொன்றும் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே இறங்கியதும் ஓடி வந்து செல்லம் கொஞ்சி கிச்சு கிச்சு மூட்டும் தென்காசியின் தென்றல். கொஞ்சம் கூடுதல் பரவசம் பெறுவோமே என்று வெட்டவெளியில் வந்து ஐந்து நிமிடங்கள் நின்று தென்றல் உடலைத் தீண்டிச் சிலிர்க்க செய்தபின் திரும்புபவன் என்ன உம்மணா மூஞ்சியோடா இருப்பான்.

ஒரு விதத்தில் நாளும்  மேற்கொள்ளும் பயணங்கள் அளிக்கும் பரசவங்கள். வாசிப்பு எனக்கு அந்தரங்கமான ஒரு தொடர் அகப்பயணம். புனைவு, அ புனைவு, கவிதை, விமர்சனங்கள் என்று  வகை மாதிரிகளைத் தேர்வு செய்து  கொள்வதுண்டு. எப்போதுமே படிக்கவும் எழுதவும் வேண்டியன குறித்த நீண்ட பட்டியல்கள் இருக்கிறது. நேரம்..எங்கே..நேரம் எங்கே..என்று ஏங்கித்திரிவதுதான் இயல்பு.

போரடிக்கிறது என்று வீணாகப் பொழுதுபோக்குவது பெரிய ஆடம்பரம். சாத்தியமில்லாத ஒன்று. மூன்றாம் தர சினிமாக்களைப் பார்ப்பது வாழ்நாள் துரோகம். வெட்டியாக ஒன்றும் செய்யாமல் பொழுதைக் கழிப்பது மீட்டெடுக்க முடியாத  பேரிழப்பு. எங்கு சென்றாலும் கையில் ஏதாவது இரண்டு நுாற்களை இடுக்கித் திரிவது அதனால்தான்.

நல்ல உணவு மற்றொரு வரம். அவையும் தேடித் திரிந்த பின்னர்தான் அபூர்வமாக வாய்க்கும். ஒரே ஓட்டல் என்றாலும் எல்லா நாளும் ஒன்றல்ல. சமீபத்தில் சென்னையில் அலுவலக வேலையாக சென்றிருந்தேன். வானுயுர கட்டிடங்கள் சூழ்ந்த வளாகம். அங்கிருந்த கேண்டீனில் ஒரு வாய்ப்புதான். மீன் குழம்புச் சாப்பாடு. நுாறு ரூபாய்.  சைவ வெறியன். வேண்டா வெறுப்பாகத்தான் வாங்கினேன். ஒரு கிண்ணம் சோறு, இரண்டு சிறு கிண்ணங்களில் மீன் குழம்பு. அற்புதம் அற்புதம் என்று சொல்லியடி தட்டில் சோறு விரைவாக தீர்வதை எண்ணி வருந்தியபடி சாப்பிட்டேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மற்றொரு நுாறு ரூபாய் கொடுத்து தட்டை நீட்டினேன். பிறகு மறுபடியும் நுாறு ரூபாயை நான் தேடிய போது கேண்டீன்காரரே சிரித்துக்கொண்டு ”பணம் வேண்டாங்க..போதுங்கற அளவு சாப்பிடுங்க” என்று சோற்றை அள்ளிவைத்தார். அத்தனை ருசி மீன்குழம்பிற்கு. மீண்டும் அதே ஓட்டலில் அந்த ருசிக்கு உத்தரவாதம் இல்லை. வாழ்நாளில் ஒரே முறை. கிடைத்தவரை மகிழ்ச்சி. உண்டு உற்சாகம் கொள். இதுதான் நம் வாழ்க்கை நோக்கு.

இசை கேட்பது – ஆம். மூன்றாம்தர சினிமாவின் மூன்றாம் தர துக்கடாக்கள்தான்- மற்றொரு உற்சாக வெளி. சாஸ்திரிய சங்கீத அறிமுகம் ஏற்படாத போது விதித்தது அதுதானே. யுவன் சந்திர சேகரின் ஆறு தாரகைகள் படித்த போது விக்கித்துப்  போனேன். இசையுலகத்தின் எத்தனை வகைமாதிரிகள். ஆறு விதமான தாளவாத்தியக் கலைஞர்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாக அனுபவம் கொள்ளச் செய்த நல்ல நாவல் அது. நமக்குத்தான் எத்தனை பாமர இசை ஞானம் என்று குறுகிப்போனேன். அந்நாவலினில் சொல்லப்பட்டுள்ள இசைக்குறிப்புகளை தனியாக குறித்துக்கொண்டு தனித்தனியாக கேட்டு வருகிறேன். அதற்கே தனியாக ஒரு பிறவி வேண்டும் போலும்.

நம் ரசனையெல்லாம் ஆதி இச்சையின் ஊற்றுமுகங்களின் மீதுதான்.

நான் சிகப்பு மனிதன் என்றொரு படம்.  அதில் வரும் ஒரு பாடல் “குங்குமத்து மேனி”. நான் மறுபடி மறுபடி இந்தப் பாட்டைக் கேட்பதை அறிந்த இல்லாள் முன்தலையில் அடித்தபடி முகச்சுழித்து முறைத்துச் சென்றெதெல்லாம் எடுபடவில்லை.

வீடியோவை பார்க்கவேண்டாம் என்ற முன்நிபந்தனையோடு சொல்லிக்கொள்கிறேன்.

ஒரு நாள் முழுக்க வாயில் கற்கண்டாக இனித்த பாடல் அது. இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்.

ஆனந்தமாக இருப்பது நம் கையில். பிறர் நம்மை மகிழ்ந்திருக்க அனுமதிப்பதில்லை. கட்டிய மனைவி முதற்கொண்டு.

வாழும் கலை  நம்மைப் பொருத்தது. நம் தேர்வு முடிவு  செய்வது. ஸோர்பாவும் புத்தனும் நமக்கு நாமே.

17.07.2026

6.காந்தி – இரு நுாற்கள்

காந்தி தன் வாழ்நாள் முழுக்க எழுதியவை மலைபோல் குவிந்திருக்கின்றன. காந்தியைப் பற்றி பிறர் த ங்கள் வாழ்நாள் முழுக்க எழுதியவை இமயலை போல் வரையறைக்கு அப்பாற்பட்டு உள்ளன. ஒருவர் காந்தியை முழுவதும் அறிந்துகொள்ள அத்தனை இருக்கிறது. ஆனாலும் தேசப்பிதாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்.? பள்ளிப்பாடநுால்களைத்தாண்டி, சத்தியசோதனையை மீறி நாம் எதைக்கற்றுள்ளோம்?

காந்தி, ஓஷோ இருவரும் எதிர்நிலை ஆளுமைகள். இவர்கள் இருவரைப் பற்றித்தான் அதிகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காந்தியின் ஒட்டுமொத்த எழுத்தையும் –வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இருபதி தொகுதிகளை மதுரையில் பழைய புத்தகக் கடையில் சல்லிசான விலைக்கு வாங்கி வந்து ஆண்டுகள் கடந்துகொண்டே இருக்கின்றன-வாசித்துவிட பெரும் விருப்பம் உள்ளது. காந்தியின் களப்பணியும் எழுத்துப்பணியும் தனி மனிதர் ஒருவரால்தான் நடத்தப்பட்டனவா என்று ஐயம் எழுச் செய்பவை. எத்தனை மகத்தான வாழ்வு அவருடையது.

காந்தியைப் பற்றி எழுதிக்குவிக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான நுால்களில் எவை முக்கியமானவை என்பது குறித்து பட்டியல் இருந்தால் நல்லது. பள்ளிப் பாடநுால்களுக்காக, முதிரா மாணவர்களுக்காக எழுதிக் குவிக்கப்பட்டவை லாப நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கும். அவற்றை வாசிப்பது நேரக்கொலை. காந்தியை உள்ளும் புறமும் தெரிந்துகொள்ள பயன் தரக்கூடியவையாக அவை இருக்க  வேண்டும். சுனில் கிருஷ்ணன் போன்ற காந்திய விருப்பம் கொண்டிருப்பவர்களிடம் கேட்டுக்கொள்ளலாம்.

காந்தி- மகாத்மாவின் தியாக வாழ்க்கை –சாது ஸ்ரீராம் என்பவர் எழுதிய நுாலினை வாசித்துக்கொண்டிருக்கிறேன. மிக சுவாரசியமாக உள்ளது.

தேய்புரி கழங்கயிறு – கலைச் செல்வி எழுதிய நாவலும் காந்தியைப் பற்றிய புனைவு. இரண்டும் யதேச்சையாக இணைந்து கொண்டன.

சாது ஸ்ரீராமின் நுால் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சம்பவங்களை மிகச் சுருக்கமாகக் கூறிச்செல்கிறது.  அவருடைய பிறப்பு, பள்ளிப்படிப்பு, பாரிஸ்டர் படித்துவிட்டு  தென்னாப்பிரிக்காவில் பிழைப்புத் தேடிச் சென்றது என்கிற வரிசையினை பின்பற்றுகிறது. காந்தியின் வாழ்க்கையின் வரைபடத்தினை இந்நுால் துல்லியமாக வரலாற்று ஆதாரங்களுடம் தருகிறது.  காந்தியின் இறப்பில் இருந்து துவங்கி, காந்தியின் இறப்பிற்கு காரணமானவர்களைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது.

சாது ஸ்ரீராம் தரும் சில தகவல்கள் புதிதாக இருக்கின்றன. சாகும் தருவாயில் ஹே ராம் என காந்தி சொல்லவில்லை. அவரைப் புனிதப்படுத்த வேண்டும்எ என்பதற்காக ஆபா  கட்டிய புனைவு எனக் குறிப்பிடுகிறார். காந்தியை கோட்ஸே மூன்று முறைச் சுட்டார். இரண்டாவது குண்டு பாய்ந்ததற்கும், மூன்றாவது குண்டு பாய்ந்ததற்கும் இடையே காந்தி ஹே ராம் என்று முணுமுணுத்தாக பலரும் சொல்லிவருகிறார்கள். ஆனால் அவரின் அருகில் இருந்த  தஞ்சாவூர் தமிழன்- காந்தியின் உதவிளாயர்  கல்யாணம் என்பவர் அதை மறுத்துள்ளார். ஹா என காந்தி முணங்கினார் என்பது கோட்ஸேவின் வாக்குமூலம். ஆனால் கொலையாளி சொல்வதற்கு வரலாற்றில் இடமில்லை என்ற கருத்தும் உள்ளது.

பிழைப்பின் பொருட்டு தென்னாப்பிரிக்கா செல்லும் காந்தி அங்கே இரண்டிற்கு மேற்பட்ட முறை தாக்குதலுக்கு ஆளாகிறார்.  இனவெறி அவரை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிறது. அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இந்தியர்கள் பிழைத்து வந்திருக்கிறார்கள். காந்திக்கு மட்டுமே அது ஒரு சுய மரியாதைக்கு இழுக்கு என்று தோன்றியிருக்கிறது. சுய மரியாதையை சம உரிமையை இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற முதல் லட்சிய விதை அங்கு விழுந்திருக்கிறது. இந்தியர்களின் வாழ்க்கை அடிமைகளின் வாழ்க்கைக்கு இணையாக இருந்திருக்கிறது. அதை திருத்தி எழுதும் முதல் முயற்சியை காந்திதான் ஆரம்பித்துள்ளார்.

தமிழில் கலைச் செல்வி மட்டுமே காந்தியைக் கதாப்பாத்திரமாக்கி இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வரை உள்ள காலகட்டத்தில் அப்பாவிற்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலை அடிப்படையாகக் கொண்டது ஹரிலால் த.பெ. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதன் பிறகான வாழ்க்கையை புனைவாக்கிய நாவல் தேய்புரி பழங்கயிறு.இரண்டு நாவல்களும் முக்கியமானவை. காந்தியின் வாழ்க்கையில் ஒரு பகுதியை புனைவாக்கிய பெரும் பணிக்காகவே கலைச்செல்வியை பாராட்டலாம். காந்திக்கும் அவருடைய முதல் மகனுக்குமான தந்தை- மகன்உறவுச் சிக்கலைக் கருவாகக் கொண்டவை இரு நாவல்களும்.

காந்தியின் வாழ்க்கையை வரலாற்றுத் தகவல்களாக நாம் நிறைய வாசிக்க வாய்ப்புள்ளது. அவருடைய சீடர்கள் முதல் அவருடன் பணியாற்றிய தொண்டர்கள், வெளிநாட்டு ஆசிரியர்கள் என எக்கச் சக்கமான நுாற்கள் எழுதிப்பட்டுள்ளன. ஆனால் அவை புனைவிற்கு ஈடாகா. காந்தியின் வாழ்க்கையை புனைவாக எழுதியவர்களில் கலைச்செல்விக்கே முதலிடம். மாலனின் ஜனகன மண, தேவி பாரதியின் ஒரு குறுநாவல், சரவண கார்த்திக்கேயனின் ஆப்பிளுக்கு முன் போன்றவை சட்டென்று நினைவில் நிற்கின்றன. என் கவனத்திற்கு வராத புனைவுகள் ஏதும் இருக்கக் கூடும். ஆனால் இவை அனைத்திற்கு மத்தியில் கலைச் செல்வியின் இரு நாவல்களும் முக்கியமானவை.அவை காந்தியினைமிக நெருக்கமாக அனுபவம் கொள்ளு’ம் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கின்றன.

18.07.26

7.கசடதபற இதழ்  தொகுப்பு- முன்னோர்கள் சென்ற வழி

சா.கந்தசாமி தொகுத்து கே.எம்.ஆதிமூலத்தின் ஓவியத்தை அட்டைப்படமாக கொண்டுள்ள கசடதபற இதழ்  தொகுப்பினை கலைஞன் பதிப்பகம் 1999-ல் வெளியிட்டுள்ளது. பொது நுாலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.

சிற்றிதழ் மரபும் அதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள தமிழ்ச் சிந்தனையாளர்களையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை காத்திரமான விவாதங்கள். படைப்புகளும், விமர்சனங்களும் உண்மையில் புல்லரிக்கச் செய்கின்றன.

இத்தொகுப்பில் ஒரு கட்டுரை. மிகுந்த சிந்தனைக் கனம்  கொண்டிருக்கிறது. நுாறு பக்கங்களுக்க விவாதிக்க வேண்டிய சமாச்சாரங்களை எட்டுப்பத்து பக்கங்களுக்குள் நெருக்கியடித்துப் பேசிகிறது. கட்டுரையின் தலைப்பு ஸோல்ஸனிட்ஸின் – ஒரு பரிசீலனை எழுதியவர் பெயர் உங்கள் ஊகத்திற்கு.

கட்டுரையின் நோக்கம் ரஷ்யப் புரட்சியின் மீது கடுமையான எதிர்மறை விமர்சனங்களை வைத்த ஸோல்ஸனிட்ஸின் படைப்புகளை மார்க்சிய நோக்கில் எதிர்கொள்வது. ரஷ்யப் புரட்சியின் காரண காரியங்களை விளக்குவது. ஸ்டாலினியம்  மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுத் தருணம் என்பதை உறுதி செய்வது.

1962-ல் ரஷ்யாவிலவ் நோவிமிர் என்கிற இலக்கியப் பத்திரிகையில் ”ஐவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள்” என்ற நாவல் தொடராக வெளிவந்ததன் மூலந்தான் முதன் முதலாக ஸோல்ஸனிட்ஸின் இலக்கிய உலகத்தின் கவனத்தைப் பெறுகிறார்.  அந்நாவலினை ஸ்டாலினிசப் பனிக்கட்டியை உருக்குவதற்காக குருஷ் சேவ் இலக்கியக் கருவியாகப் பயன்படுத்தினார். அதற்கான படைப்புக் கருவியினை ஸொல்ஸனிட்ஸின் உண்டாக்கிக்கொடுத்தார் என்பது பிரதான குற்றச் சாட்டு.

தொலைவிலுள்ள எதிர்கால லட்சியங்களுக்காக நிகழ்கால உடனடி நன்மைகளை பலியிடுவது என்ற ஆல்பர்ட் காம்யூவின் குற்றச்சாட்டினை ஒத்ததாக இருக்கிறது ஸோல்ஸனிட்சின் குற்றச்சாட்டு. ஸோல்ஸனிட்ஸின் ஸ்டாலினிசத்தின் உற்பத்திப் பொருள் அதே சமயம் அவர் குருச்சேவிசத்தின் உற்பத்திப்பொருள் ஆவார்.  இந்த இடத்தில் ஒரு படைப்பாளியை புறக்காரணிகளின் எதிர்விளைவுகளால் உருவானவர் என்கிற மதிப்பீடு நம்மைஅதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஸோல்ஸனிட்ஸின் என்கிற படைப்பாளியை வரலாறே உண்டாக்குகிறது என்கிறார் கட்டுரையாளர்.

தொடர்ந்து ஸ்டாலினிசம் என்பது என்ன? அது ஏன் ரஷ்யப்புரட்சியில் தோன்றியது? அதற்காக வரலாற்றுத் தேவை என்ன ? என்பதற்கான தர்க்கங்களை மின்னல் பா ய்ச்சலில் தொடுத்துள்ளார்.

1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் கம்யூனிஷ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்தபோது நிலவிய பொருளாதார நிலைமைகளின் நேரடியான தவிர்க்க முடியாத விளைவுதான் ஸ்டாலினிசம். ஒரு சிக்கலான் தொழில்மய சமுதாயத்துக்குத் தேவையான மூலதனச் செல்வத்திரட்டல், மேலை நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தைக் கரடு முரடான திட்டமற்ற வகையில் சுரண்டுவதன் மூலம் பெறப்பட்டது. ஆனால் ரஷ்யாவிலோ மூலதனத்தின் ஆரம்பத் திரட்டலைக் கம்யூனிஸ்ட் கட்சிதான் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ரஷ்யாவில் கொடுக்கப்பட்ட விலை மேல நாடுகளினதைக்காட்டிலும் கொடூரம் குறைந்த ஒன்றுதான். ஆனால் அது உயர்ந்த விலை என்பதை மறுக்க முடியாது. ஒரு பிற்பட்ட நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டிய தேவையானது துவக்கால சோவியத் சமுதாயத்தில் ஓர் அடிப்படையான முரண்பாட்டை உருவாக்கியது. அது சோசலிச நிர்மாணத்தின் அனுகூலங்கள் பாட்டாளிவர்க்கத்தின் உடனடியான நன்மைகள் என்கிற முரண்பாடு. தொழிலாளிகளின் உயர்ந்த  வாழ்க்கைத்தரம் என்பது முதலாளி நாடுகளின் ஒரு அம்சமாகும். அவ்வுயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கான கோரிக்கை ரஷ்யாவின் சோசலிச நிர்மாணத்துக்கு இடையூறாக  இருந்தது. ஏற்கனவே தொழில்  மயமாகி இருந்த ஜெர்மனி. இங்கிலாந்து  போன்ற நாடுகளில் புரட்சி ஏற்பட்டிருக்குமானால் இந்த ஆரம்பகால சோசலிச முரண்பாடு தோன்றியிருக்காது. ரஷ்யாவின் பிற்பட்ட தன்மை சோசலிசத்தை நனவாக்கும்  முதல் நாட்டில் இம் முரண்பாட்டைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது.

நிற்க. இங்கே கட்டுரையாளர் என்ன சொல்ல வருகிறார் என்றால் இருக்கிற குடியானவர்களின் நிலங்களைப் பறித்து பொதுவுடைமை ஆக்கி அவர்களைப் பிச்சைக்காரர்களைப் போல அடிமைகளைப் போல அடிப்படைத் தேவைகளுக்காக அரசிடம் கையேந்தினார்கள்.அ வை அனைத்தும் எல்லாருக்கும் எல்லாம் என்கிற பெருங்கனவினை பொன்னுலகத்தை உருவாக்குவதற்காகத்தான். அது தவிர்க்க  முடியாத ஒன்று என்கிறார்.  மேலும் கட்டுரையாளர் ஸ்டாலின்  மேற்கொண்ட சர்வாதிகாரத்துக்கு கொடுக்கும் முட்டு பயங்கரமாக இருக்கிறது.

சோவியத் சமுதாயத்தில் பல்வேறு மட்டங்களில் இதைப் போன்ற முரண்பாடுகள் நிகழ்ந்தன.  மலிவான உணவுக்கான தொழில்துறைப்பாட்டாளி வர்க்கத்தின்   கோரிக்கைகளுக்கும்,  அதிக விலையில் தங்கள் உற்பத்திப் பண்டங்களை விற்க விரும்பிய விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் முக்கியமானது.  அந்த முரண்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரு இறுக்கமான சர்வாதிகாரம் ஒன்றாலேயே முடியும்.  ஸ்டாலினின் ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டு ஆளுமை. கட்சி பயன்படுத்திய இறுக்கமான கட்டுப்பாடு இல்லாதிருந்திருந்தால் இம் முரண்பாடு சோசலிச நிர்மாணத்தைச் சாத்தியமற்றதாக்கியிருக்கும். சர்வாதிகாரப் பழக்கமானது, கட்சித்தலைவர்களை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர ஆர்வத்தைக் குறைத்து மதிப்பிடவும்,  அவ்வர்க்கத்தை தடிகொண்டோ அல்லது ஆசை காட்டியோதான் நடத்திச் செல்ல முடியும் என்று நினைக்கவும் வைத்தது.அது விதிவிலக்கான சக்திவாய்ந்த ஒரு சர்வாதிகாரியை உண்டாக்கியது.  அந்த நபர்தான் ஸ்டாலின். ஸ்டாலினிசம் அங்குள்ள பல்வேறு முரண்பாடுகளை இல்லாமல் ஆக்கியது.அவை முறையே தொழிலாளி என்கிற தனி மனிதன்- அவன்  சோசலிச நிர்மாணத்தின் ஒரு கூறு, கட்சி அதிகார வர்க்கத்திற்கும், தொழில் நுணுக்கமறிந்தோருக்கும் இடையிலான முரண்பாடு, தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு. இவ்விதனமான பல்வேறு முரண்பாடுகளை சர்வாதிகாரம் களைந்தெடுத்தது. ஸ்டாலினிசம் என்பது சோசலிசத்திலிருந்து பாதை பிசகிய ஒரு நிலையல்ல மாறாக சூழ்நிலைகளின் சக்தியால் திணிக்கப்பட்ட ஒரு சுற்றுப்பாதை. ஸ்டாலினிசம் உருவாகக் காரணம் ரஷ்யா தொழிற்துறையில் பிற்போக்கானதாக இருந்தது மட்டுமல்ல, முதலாளியத்தை துாக்கியெறிவதில் ஐரோப்பிய பாட்டாளிவர்க்கம் தவறியதுமாகும். ஓர் விரோத உலகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சோவியத் நாடு முதலாளிய நாடுகளைப்  பொறுத்தவரை ஒரு சந்தேகம் நிறைந்த விரோத நிலைப்பாட்டையே எடுக்க  வேண்டியிருந்தது. அதே போல தொடர்ச்சியான களையெடுப்புகள் மூலம் கட்சியின் அதிகாரத்தை வரையறை செய்யவும், இரக்கமற்ற வழிமுறைகள் மூலம் எல்லா எதிர்ப்புகளையும்சமாளிக்கவும் வேண்டியிருந்தது. சார்த்தர் ரஷ்யப்புரட்சி பற்றிச் சொன்னதை கட்டுரையாளர் துணைக்கு கொண்டு வருகிறார். சார்த்தர் சொல்கிறார் “ இந்த இரத்தக்கறை படிந்த அரக்கனை சோசலிசம் என்று யாரேனும் அழைக்கலாமா?  நான் வெளிப்படையாகச் சொல்வேன். ஆம் என்று. அது ஆரம்ப கட்ட சோசலிசம்.வேறு சோசலிசம் அப்போது ஏதுமில்லை. ஒருவேளை  பிளோட்டாவின் ஆதியந்தமற்ற சாராம்சங்கள் மத்தியில் வேறு ஏதாவது சோசலிசம் இருந்திருக்கலாம்.”

ஸ்டாலினிசம் தோன்றுவதற்கான வரலாற்றுக் காரணிகளை சார்த்தர் மிக விரிவாக விளக்கியுள்ளார் என்று கட்டுரையாளர் தொடர்கிறார். ஸ்டாலினிசத்தின் தவறுகளில் ஒன்று சித்தாந்தத்தைப் புரிந்து கொண்ட முறை. முரண்பாடுகளைக் கையாளுவதில் அவர் எடுத்தக்கொண்ட முறை. இவற்றில் தவறுகள் இருந்திருக்கலாம். பாட்டாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் வெளியில் உள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கப் பயன்படுத்த கத்தி. மக்களுக்குள்ளம் கட்சிக்குள்ளும் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்க புத்தி என்று கருதாமல் இரண்டிற்கும் கத்தையையே நம்பினார். நிதானம் பொறுமை அன்பு ஆகிய அம்சங்கள் ஸ்டாலினிடம்  போதிய அளவில் இல்லை. அவையாவுமே வரலாற்றுச் சூழ்நிலைகள் அவருக்கு மறுத்தவை. ஸ்டாலின் முரட்டுத்தனமாக நடவடிக்கைகள் எடுத்தார் என்றார் என்றால் அது அவருடைய சொந்த லாபங்களைக் கருதியல்ல. பாட்டாளி வர்க்கத்தினரும், சோசலிசத்தினதும் நன்மைகளைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் மட்டுமே. தனது சொந்த வாழ்வின் நலன்களைத் து றந்து வாழ்ந்தவர் அவர். வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்திக்க வேண்டிய நேரத்திலும், மிக முக்கியமான அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்கான வேளையிலும் அணிந்து கொள்வதற்காக ஒரே ஒரு கோட்டை அவர் 30 ஆண்டுக்காலம் தொடர்ந்து பயன்படுத்தினார் என்ற ஒரு உண்மையே அவர் சர்வாதிகாரியாக இருந்து நேரத்திலும் சந்நியாசியாகவும் வாழ்ந்தார் என்பதற்குச் சான்றாகும். ஸ்டானிசம்தான் கம்யூனிசம் என்ற பூச்சாண்டியை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கம்யூனிசத்தை கேள்விக்கு உட்படுத்துவதை மாஜி கம்யூனிஸ்டுகளான ஸ்டீபன் ஸ்பெண்டர், இக்னேஷியா செலோன், ஆல்பர்ட் காம்யு, லுயிபிஷர்,  கோஸ்ய்லர் ஆகியோர் செய்துள்ளனர்.

தர்க்கம் இரு பக்கமும் கூர்முனை கொண்ட கத்தி என்பது நினைவில் வருகிறது.

தஸ்தாவ்ஸ்கியையும் விட்டுவிடவில்லை. தஸ்தாவஸ்கி தன்தைத்தானே துன்புறுத்திக்கொண்டு புரட்சியை இகழ்ந்து வந்ததைப் பார்க்கும்போது, அவர் எத்தகைய பிற்போக்கு ரொமாண்டிக் இருட்டுத் தத்துவவாதி என்று சீக்கிரம் முடிவு கட்டிவிடலாம். ஆனால் சுரண்டல் சமுதாய அமைப்பினால் அவமானப்பட்டுச் சிதைக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியவன் என்ற வகையில் அவன் ஒரு மேதை.

இறுதியாக ஒன்றைச் சொல்லி முடித்துவிடுகிறேன். கட்டுரையாளர் ஸோல்ஸனிட்சின் நோபல் உரையை கடுமையாச் சாடுகிறார். அந்த நோபல் உரை இதுதான்.

“உலகில் இன்றுள்ள அரசியல் அமைப்புகள் அனைத்தும் போலியானவை.  அரசியல்வாதிகள் அனைவரும் பொய்யர்கள். வஞ்சகர்கள். ஒரு சமூகத்திட்டத்தை அல்லது தத்துவ அமைப்பை ஒரு தவறின் அடிப்படையிலோ அல்லது ஒரு பொய்யின் அடிப்படையிலோ உருவாக்க முடியும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் மனிதனுக்கு முழுச் சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு நாடும்  தன் சுயநல நோக்கு கருதியே செயல்படுகிறது. இன்றைய உலகின் இளைஞர்கள் பெரும்பாலோர் உடலின்பத்தைத் தவிர வேறெதையும் அனுபவித்திராதவர்கள். இவர்கள் நாகரிகத்தை உலுக்கிச் சிதைக்கிறார்கள். உலக மக்களை ஒன்றிணைப்பது இலக்கியம் ஒன்றுக்கே சாத்தியம். வன்முறை பொய்மையுடன் இணைந்தது,”

மேற்கண்ட உரையின் பிறகு கட்டுரையாளருக்கு ஸொல்ஸனிட்சின் மீதிருந்த நல்லெண்ணம் இல்லாமல் ஆனதாம்.

எஸ்.வி.ராஜதுரை எழுதிய இக்கட்டுரை அரசியல் மாற்றம் விரும்பும் அத்தனைப் பேரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் எவ்வளவு வலுவான வாதப்பிரதி வாதங்களை ஒரு குறுங்குழுவிற்குள் நிகழ்த்தி முடித்திருக்கிறது. இதன் பாதிப்பு துளியும் இன்றி இன்றைய தமிழ்ச் சமுதாயம் வந்து நிற்கும் முட்டுச் சந்தினை நினைத்தால் திகைப்பாக உள்ளது.

“போ..போ…போய்..பிள்ளை குட்டிகளைப் படிக்க வை…தீவிர இலக்கியத்தை படிக்க வை…மண்ணாந்தையாக மாறிப்போறதிலிருந்து நீ தப்பிக்கணும்னா…இலக்கியத்தைப் படி”  என்று  கத்திச் சொல்லத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *