மைய நூலகத்தை ஒட்டினாற்போல் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் எதற்கும் அருகதையற்றவனாய், அருவருக்கத்தக்கவனாய் அமர்ந்திருந்த நள்ளிரவு ஒன்றில்தான் அந்த ஆட்டை நான் சந்தித்தேன். இரவே இளகி கசிந்ததைப்போல் அடர்ந்த கருநிறம் கொண்ட அதன் உடலின் நெற்றிப்பகுதியில் மட்டும் சிறிதாய் ஒரு வெண்ணிற கீற்று இருந்தது. மெல்லிய மணியோசை சினுங்க சேவியர்ஸ் கல்லூரியைக் கடந்து, என்னை நோக்கி அது வருவதைக் கண்டபோது என் உள்ளங்கை இரண்டும் சில்லிட்டுப்போனது.
எழுந்து ஓடிவிட நினைத்தேன்.
ஆனால் உருவமற்ற சரடொன்றினால் கட்டப்பட்டிருப்பதைப்போல் என் உடல் அசைவற்றிருந்தது. பின்பு இது வெறும் ஆடுதான் என்றும், இதற்கு நான் உணவாக இயலாது என்றும், என்னைத் தாக்கித் துன்புறுத்துவதற்குத் தேவையான குரூரத்தையும், வலிமையையும் இயற்கை இதற்கு வழங்கியிருக்கவில்லை என்றும் யோசித்து இயல்பானேன்.
மரம் ஒன்றின் நிழலில் விழிகள் ஒளிர நின்றுகொண்டிருந்த அந்த ஆடு ஒருகணம் பற்களைக் காட்டியதைப்போல் இருந்தது. பிறகு எந்தவித சலனமும் இல்லாமல் நிதானமாக நடந்து, என் அருகே வந்து அமர்ந்துகொண்டது.
நான் இருந்த இருக்கையின் கீழே மண்டிக்கிடந்த புழுக்கைகளையும், ஆட்டின் ரோமங்களையும் நான் அப்போதே கவனித்தேன். இது அதன் இடம் என்றும், அதன் நிதானத்திற்கு காரணமும் அதுவே என்றும், ஆக்கிரமிப்பாளனாக இருந்தபோதிலும் அது என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றும் புரிந்தபோது என்னுள் மட்கிக்கிடந்த ஏதோ ஒன்று லேசாய் நெகிழ்ந்து மலர்வதைப்போல் இருந்தது. அந்த ஒரு கணம் என்னால் அதனிடம் நெடிய ஒரு உரையாடலை நிகழ்த்தி, ஆழமானதோர் உறவைக்கூட ஏற்படுத்திக்கொண்டுவிட முடியும் என்று தோன்றியது. பிறகு இதென்ன அபத்தம் என்று எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன்.
ஆழ்சிந்தனையில் இருப்பதைப்போல் சாலைமேல் விழிநட்டு அமர்ந்திருந்த ஆடு ஒருநொடி என்பக்கம் பார்த்துவிட்டு நீள்மூச்செறிந்தது.
இன்னதென்றே விளங்கியிராத இன்பம் என் நெஞ்சை நிறைக்க அருகினில் வைத்திருந்த மதுபுட்டியை எடுத்து இரண்டொரு மிடறுகள் குடித்துவிட்டு, நன்கு பொடித்துத் துகளாக்கியிருந்த கஞ்சாவினால் நிரப்பப்பட்டிருந்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன்.
பின்னால் இருந்த போத்தீஸ் விளம்பரத்தை மெருகேற்றும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த சிகப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் அவ்வப்போது மங்கி, பின் மிகைப் பொலிவுடன் எரிந்தன. ஒளியும் இருளும் ஆடிய அந்த அபத்த ஆட்டத்தின் விளைவாக, நிலத்தில் அசையாமல் வீற்றிருந்த அந்த ஆட்டின் பிரம்மாண்ட நிழல் அதிர்வதைப்போலவும், பக்கவாட்டில் பெரும்பாறையைப்போல் உருண்டையாக இருந்த எனது நிழல் நீரைப்போல் நெகிழ்ந்து அதனுடன் கலக்க முயல்வதைப்போலவும் இருந்தது.
வறண்டுபோயிருந்த தாடியினுள் ஏதோ ஊர்வதைப்போல் தோன்ற, பரட்பரட்டென்று சொரிந்தபடி லேசாய் சிரித்துக்கொண்டேன்.
சாலையின் மறுபுறம் இருந்த ATM-ஐ உபயோகிக்க வந்தவனும், மௌனத்திரையைக் கிழித்தபடி விருட்டென்று கடந்துசென்ற இரண்டொரு பைக்குகளும், பெண் நாய் ஒன்றின் புட்டத்தை முகர்ந்தபடி அலைந்த தெருநாய் கூட்டமும், ஆளில்லாமல் சென்ற பேருந்தொன்றின் ஜன்னலோரத்தில் அரைத்தூக்க நிலையில் அமர்ந்திருந்த நடத்துனரும் பொருட்டேபடுத்தாத ஒரு உலகினுள் நானும், நிபந்தனைகள் ஏதுமின்றி என்னை ஏற்றுக்கொண்ட ஒரு ஜீவனும் இருக்கிறோம் எனும் உணர்வே என்னை வெகுவாக ஆசுவாசப்படுத்தியது. போதைக்குப் பணம்வேண்டி, உடன் பணிபுரியும் வட இந்தியனான ராம்லாலிடம் அம்மாவை அடகுவைத்தபோது அடிநெஞ்சில் துளிர்த்த கடும் வலியும், நுனிநாக்கில் திரண்ட கசப்பும், சித்தத்தை அழுத்தி மூச்சடைக்கச்செய்த தற்கொலை எண்ணமும் தணிந்ததைப்போல் இருந்தது.
அப்போது திடீரென… எங்கிருந்து உதித்தான் அவன்?
முண்டா பனியனும், அழுக்கடைந்த லுங்கியும் அணிந்திருந்தான். தறிகெட்டு வளர்ந்திருந்த சடைமுடியும், செம்பட்டைத் தாடியும் அவன் முகத்தை முழுதாக மறைத்திருந்தாலும் அயல்நாட்டவனைப்போல் இருந்த அவன் சருமத்தின் வெண்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அக்கணத்தில் நான் அதிகம் வெறுத்த ராம்லாலைப்போலவே இவனது இடதுகாலும் சற்று சூம்பியிருந்தாலும் நடையில் அபரிமிதமான துரிதம் இருந்தது.
விடுவிடுவென எட்டுவைத்து அருகில் வந்தவன் அந்த ஆட்டையே வெறித்து நோக்கினான்.
ஆடு அவனை ஓரிரு நொடிகளுக்கு உற்றுப் பார்த்தது. பிறகு வலக்காலை மட்டும் உள்நோக்கி மடக்கி லேசாய் அசைந்தமர்ந்து, மீண்டும் ஒருமுறை பெருமூச்சு விட்டது.
வந்தவன் என்னைக் கண்டுகொண்டதாகவே தோன்றவில்லை. வாயில் எதையோ அதக்கியிருந்தவன், அதை மேலும் தீவிரமாக மென்றபடி அந்த ஆட்டையே நோக்கிக்கொண்டிருந்தான். பிறகு ஒருமுறை சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு , இளக்காரமாக சிரித்தபடி அந்த ஆட்டை இருகைகளால் பற்றி கவிழ்த்தி அதை மல்லாந்து படுக்கச்செய்தான். பின்பு இடக்கையால் அதன் முலையைப் பிழிந்தபடி வலக்கையை தனது லுங்கியினுள் புகுத்திக்கொண்டான். அடர்ந்த அவனது புருவங்களுக்கு அடியே இருந்த இமைகள் மெதுவாய் சரிந்தன. ஆனால் அடுத்த நொடியே ஏதோ வெறி வந்தவனைப்போல் எழுந்து நின்றவன் அருகில் இருந்த கூர்மையான கல் ஒன்றை எடுத்து ஆட்டின் முலைமேல் உக்கிரமாக வீசிவிட்டு விரைந்தோடினான்.
ஆடு ஒரே ஒரு முறை “மே!!!” என்று அலறியது. பிறகு முன்பைப்போலவே சாந்தமாய் அமர்ந்துகொண்டு சாலையை வெறிக்கத் துவங்கியது. அதன் மூச்சுக்கள் மட்டும் சற்று வேகம் பெற்றிருந்தது.
என்னால் அதன் பிறகு அங்கு அமர்ந்திருக்க முடியாமல் போனதும், செய்வதறியாமல் வண்டியைக் கிளப்பிக்கொண்டு அந்த இரவு முழுவதும் இலக்கில்லாமல் சுற்றித் திரிந்ததும் மட்டுமே இன்று என் நினைவில் இருக்கிறது. வாழ்வின் அந்த இருண்ட பக்கங்களை காலம் தனது ஈரக்கரங்களால் அழிக்கத் துவங்கிய சில நாட்களிலேயே நான் அந்த இரவையும், அந்த ஆட்டையும் அறவே மறந்துபோயிருந்தேன். உழவர் சந்தை அருகே புதிதாய் உருவாகிக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அவசர அவசரமாய், இரவோடு இரவாக டைல்ஸ் போடும் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், அதே பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரை மட்டும் நான் காணாமல் கடந்துபோயிருந்தால் இவை அனைத்தும் என் நினைவில் மீண்டிருக்க சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.
அந்த முதியவரை நான் பலமுறை, பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பூனைப்படம் போட்டிருக்கும் மஞ்சள்நிற டீ ஷர்ட்டும், காவி வேட்டியும், கிழிசல்கள் நிரம்பிய அழுக்குத் தொப்பி ஒன்றும் அணிந்தபடி உணவகங்கள் மற்றும் கோவில்களின் வாசல்களில் கையேந்தி நிற்பார்.
ஏதோ தோன்ற, கையில் இருந்த பணத்தில் ஒரு பங்கை செலவழித்து, பஸ் ஸ்டான்ட் அருகே இருந்த மெஸ்ஸில் மூன்று இட்லியும், ஒரு காபியும், இரண்டு வடையும் வாங்கிக்கொண்டு அவரை அணுகிச் சென்றேன்.
நான் வருவதை கவனித்தவர் காரியுமிழ்ந்துவிட்டு ஒருமுறை ஆழமாய் மூச்செடுத்தார். பிறகு என்னை காணாததைப்போல் சில நொடிகளுக்கு மறுபுறம் திரும்பிக்கொண்டு சாலையையே உற்றுப் பார்த்தார்.
வாங்கிவந்த உணவை அவர் முகத்தின் முன் காட்டிவிட்டு அருகே வைத்துவிட்டு, எதற்கென்றே தெரியாமல் அங்கேயே இரண்டொரு நொடிகளுக்கு நின்றேன்.
முதியவர் என் பக்கம் திரும்பினார். பிறகு லேசாய் உச்சுக்கொட்டிவிட்டு பூனைப்படம் போட்ட தனது டீ ஷர்ட்டைக் கழற்றி ஓரம் வைத்துவிட்டு, வெற்றுடம்பாய் சாய்ந்தமர்ந்து இமைகளை மூடிக்கொண்டார்.
நான் அசையாமல் நின்றேன். ஏனோ என் கைகள் இரண்டும் கிடுகிடுக்கத் துவங்கின.
ஒருநொடி கண்திறந்தவர், “ம்” என்று மெல்லிதாய் உறுமினார்.
நான் இரண்டடி பின்னால் சென்றேன்.
அப்போது சட்டென தனது தொப்பியைக் கழற்றி ஒருவித வெறியில் தூரம் வீசினார் அந்த முதியவர். கருநிறத்தில், வழுவழுவென இருந்த அவரது உச்சந்தலையின் மையப்பகுதியில் தேமலைப்போல் சின்னதாய் ஒரு வெண்ணிறக் கீற்று இருந்தது.
***
