சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 1

பாட்டு

அப்போது கள்ளுக்கடைகளும் சாராயக் கடைகளும் இருந்தன. நானும் என் நண்பன் ஒருவனும் சாராயம் வாங்கிக் குடித்தோம். பெரிய திறந்தவெளி. தரையில் ஆற்று மணலைப் பரப்பியிருந்தார்கள். மேலே கொட்டகை. ஆங்காங்கே தரையில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரைச் சுற்றி சிலர் அமர்ந்திருந்தார்கள். வழக்கமாக வருபவர்கள் போல் இருந்தார்கள்.

அந்த ஒருவர் திடீரெனப் பாட்டுப் பாடினார். டி. எம். எஸ்.  பாட்டு. ‘நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்’ என்று அந்தப் பாட்டு ஆரம்பிக்கும். அருமையாக உருக்கமாகப் பாடினார். நண்பன் பரோட்டா கடைக்குச் செல்ல அழைத்துக்கொண்டே இருந்தான். பாட்டு முடியும்வரை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு நாங்கள் பரோட்டா கடைக்குக் கிளம்பினோம்.

அந்தப் பாட்டு வரும் படத்தை நான் பார்த்திருக்கிறேன். தாயை இழந்த குழந்தையைத் தொட்டிலில் ஆட்டிக்கொண்டே சிவாஜி கணேசன் அந்தப் பாட்டைப் பாடுவார். என் மனைவி இறந்துவிட்டாள். என் மகனை என் விதவைத் தாயார் பார்த்துக்கொண்டிருக்கிறார். எனக்கு என் மகன் நினைவு வந்துவிட்டது. என் தாயாருக்குத் திடீரென்று ஏதாவது ஆகிவிட்டால் என் மகனின் கதி என்ன ஆகும் என்று யோசிக்கும்போது எனக்கு மனம் கலங்கியது. குடித்துவிட்டு ஜாலியாக இருக்கலாம் என்று வந்த இடத்தில் ஒரு படுபாவி இந்தப் பாட்டைப் பாடி என் மனதை நிலைகுலைய வைத்துவிட்டான்.

நாங்கள் பரோட்டா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்தப் பாட்டுப் பாடியவர் ஒரு நண்பருடன் பரோட்டாக் கடைக்குச் சாப்பிட வந்து அடுத்து இருந்த மேஜையில் உட்கார்ந்தார். நன்றாக கவனித்துப் பார்த்தேன். நாடக நடிகர் போல் இருந்தார். மேஜையிலிருந்து எழுந்து என் முன் நின்றார். “நான் உங்களைக் கவனித்தேன். அந்தப் பாட்டு உங்களைத் தொந்தரவு செய்ததா” என்றார். “ஆம்” என்றேன். “உங்கள் பையன் நன்றாக வருவான். கவலைப்படாதீர்கள்” என்று சொல்லிவிட்டு அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றுவிட்டார்.

நாங்கள் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றோம். என் வீட்டின் வாசலில் நின்றேன். ஜன்னல் வழி பார்த்தேன். தாயார் என் மகனைத் தொட்டிலில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்தார். “நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்” என்ற பாட்டை அவர் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டேன்.


குதிரை

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும்போதுதான் அவள் நினைவு வந்தது. நான் அவளைத் தொட்டபோது என் கையை அவள் தள்ளிவிடுவாள் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அவளோ ஒன்றும் செய்யாமல் மௌனமாக இருந்தாள். இதை எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்று கருதினேன். அவள் கூறினாள், “எனக்கு இப்போது வயதாகிவிட்டது. நாம் இருவரும் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வேலை பார்த்தோமே. அப்போதே என்னை நீங்கள் தொட்டிருக்கலாமே. இப்போது என் தோற்றம் மாறிவிட்டது.”

ஒழுக்கக் குறைவான நான், “அப்போதே நினைத்தேன். ஆனால், தொடத் தைரியம் வரவில்லை. நாம் இப்போது போல அப்போது தனி அறையில் வேலை செய்யவில்லை. பலரும் பார்க்கும் வகையில்தான் நமது சீட்கள் இருந்தன. அது ஒரு காரணமாக இருக்கும். அப்போது நீங்கள் வாளிப்பான குதிரை போல இருப்பீர்கள்” என்றேன்.

“குதிரையா, குதிரை போல என்றால் என்ன அர்த்தம்” என்றாள்.

இதென்ன சோதனை. நான் சொதப்புகிறேன் என்று உணர்ந்தேன். குதிரையின் வலுவோடும் வாளிப்போடும் ஒப்பிடுகிறேன் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“குதிரை போல அழகாகவும் ஸ்ட்ராங்காகவும் இருந்தீர்கள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்” என்றேன்.

“ஸ்ட்ராங்னா நான் பளு தூக்குறவ போல இருந்தேனா. குதிரை அழகா இருக்குமா” என்றாள்.

நான் மேலும் சொதப்பிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். “தவறுதான். கிளி போல இருந்தீர்கள் என்று நான் சொல்லியிருந்திருக்க வேண்டும்” என்றேன்.

“என் மூக்கு என்ன வளைந்தா இருக்கிறது. என்ன பேச்சு பேசுகிறீர்கள். நீங்கள் என்னைக் கேவலப்படுத்துகிறீர்கள்.”

இந்த உரையாடல் வரை என் கையை அவள் தொடை மீது வைத்திருந்தேன். இப்போது நான் கையை எடுத்துவிட்டேன். பிறகு அவளை நான் தொடவில்லை. என்னைப் பார்க்கும்போது அவள் முகத்தில் முறைப்போ விறைப்போ தோன்றுவதையும் பார்த்தேன்.

குதிரை என்ற படிமம் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *