மதார் கவிதைகள்

1.

முதல் முறையாக
கிறிஸ்துமஸ் ஸ்டார் பார்க்கும்
சிறுமியை
பெரும் கவலை ஆட்கொள்கிறது
வானிலிருந்து தவறி விழுந்த
விண்மீனை
வானுக்கு எப்படித் திருப்பி அனுப்புவதென்று
கலங்கும் விழியோடு
கர்த்தரிடம் ஜெபிக்கிறாள்
கர்த்தர் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவை
பணிக்கமர்த்தி
அவளது பிரச்சினையை தீர்க்கச் சொல்கிறார்
நள்ளிரவில் பூமி குதிக்கும்
கிறிஸ்துமஸ் தாத்தா
சிறுமியை தன் தோள்களில் அமர்த்தி
தெருவெங்கும் காட்டுகிறார்
அதிசயம் தாங்காத சிறுமி
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் தெருவை
கண்ணாரக் காண்கிறாள்
எல்லா விண்மீன்களையும் எப்படி
வானகம் அனுப்ப என்று
இயலாமையோடு கேட்கும் சிறுமிக்கு
எல்லா விண்மீன்களோடும்
வானம் தரையிறங்கிவிட்டதாக
ஒரு நற்செய்தியை அறிவிக்கிறார்
இயேசு கிறிஸ்து அனுப்பிய
கிறிஸ்துமஸ் தாத்தா

2.

வசியம்

வானம் பார்த்தவாறு சமைக்கிறான்
ஒரு சமையல்காரனுக்கு
அவ்வளவு எளிதில் வாய்க்காது
வானம் மேற்பார்வையாளராய்
அவன் தயாரித்த உணவை
டேபிள் நம்பர் ஏழுக்கு
எடுத்துச் செல்கிறான் வெயிட்டர்
அப்போது பெய்த மழையில்
தொப்பலாக நனைந்திருந்தவன்
ஏழில் காத்திருக்கிறான்

3.

துவட்டுநன்

குத்தாலப் பாறையில்
காயும் துண்டு
கண்ணீர் மல்க
அருவியைப் பார்க்கிறது
முதலாளி தன் மேல் வைத்திருக்கும்
அபார நம்பிக்கையில் அசந்து
குளியலறையில் காத்திருப்பதை விடவும்
அதிக தயாரிப்போடு காத்திருக்கிறது
மணிக்கொரு முறை மலைப்போடு
அருவியைப் பார்த்துப் பார்த்து.
பெருமிதம், பயம், பொறுப்பு
மூன்று புள்ளிகளை வெட்டி
மனதிற்குள் ஒரு வரைபடம் போட்டுவிட்டது
இறுதிப் போரில் கலந்துகொள்ளும்
வீரனின் முகக்களையோடு
காற்றில் சடசடத்து சேனை பிடிக்கிறது தன்னை.
அருவியறைக் கதவு திறந்து
நடந்து வருகிறான்
துவட்டுநன்

4.

சமையல்

1
நீரைச் சமைப்பவன் மறதிக்காரன்
மழையாய் விழும்போது
ஞாபகத்தில் இல்லை
நதியாய் ஆனபோதும்
நினைவுக்கு வரவில்லை
கடல் தருணத்தில்
சேர்க்கிறான் உப்பை
பதட்டத்தில் அதீத உப்பை

2
சமைக்கும்போது
சன்னலைத் திறந்துவிடுவேன்

மேகம் பார்த்தபடி எண்ணெய் ஊற்றுவேன்
வானம் பார்த்தபடி கடுகு, பருப்பு தாளிப்பேன்
குருவிக் கூவலினூடே வெங்காய வதங்கல்

வானத்தின் மேற்பார்வையில் சமையல்
வாழ்க்கை கழிகிறது அழகாக
மிக ருசியாக

 

5.

உன்னைத் திருமணம் செய்து
கூட்டிப் போவது
தாயின் கருவறையிலிருந்து
வெளிவந்த உன்னை
தோளில் தூக்கிப் போட்டு
போவது போலத்தான்
நீ அழுது தூங்கி
முழிக்கும்போது
நான் உனக்கு தாயாகியிருப்பேன்
தந்தையுமாகியிருப்பேன்
தொட்டிலில் உன்னைப் போட்டு ஆட்டுவேன்
பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *